எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Wednesday, January 18, 2012

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம்!

வழக்கம் போலப் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு இதை ஆரம்பிக்கிறேன். ஏதோ எனக்குத் தெரிந்ததை நான் புரிந்து கொண்டதை மட்டும் இங்கே சொல்கிறேன். குற்றம், குறைகளைப் பொறுத்தருள வேண்டும். நம் அனைவருக்கும் குருவாக இருந்து இந்த ஜகத்துக்கே குருவாக விளங்கிய ஆசாரியருக்கு நம்முடைய நமஸ்காரங்களைச் சமர்ப்பிப்போம்.

ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா
கதி:ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனாத்யாஹூதி-விதி:
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம்

நம்முடைய ஆன்மாவையே இறைவனுக்கும், இறைவிக்கும் சமர்ப்பணம் செய்கிறோம். இதுவே அதி உந்நதமானதொரு நிலை. ஆனால் எல்லாராலும் இது இயலுமா? என்றாலும் அத்தகையதொரு முயற்சியை அம்பிகை வழிபாட்டின் மூலம் தொடங்க வேண்டும். இந்த நிலையால் இந்த சமர்ப்பணத்தால் நம்முடைய ஒவ்வொரு பேச்சுமே அம்பிகைக்குரிய ஜபமாகவும், நாம் செய்யும் அனைத்துத் தொழில்களும் அவளுக்குச் சமர்ப்பணம் செய்யும் முத்திரைகளின் விளக்கமாயும், நம் ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு நடையும் அம்பாளுக்குச் செய்யப் படும் பிரதக்ஷிணமாகவும், நாம் உட்கொள்ளும் உணவு, போன்றவை ஹோமத்தின் ஆஹுதியாகவும், நாம் ஓய்வெடுக்கப் படுப்பது அவளுக்குச் செய்யும் நமஸ்காரமாகவும், இன்னும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு செய்கையும் அம்பிகைக்குச் சமர்ப்பிக்கிறோம். எப்போதும் இந்த நினைப்போடு இருந்தோமானால் நம்மைத் துன்பங்கள் அண்டாது. அவமானங்கள் தகிக்காது; துயரங்கள் சூழாது. அனைத்தும் அவள் செயலே என நினைப்போம்.

இது சமர்ப்பண ஸ்லோகத்தின் பொருள்.

அடுத்து ஆநந்த லஹரி முதல் ஸ்லோகம் ஆரம்பம்:

சிவ:சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய:ப்ரபவதி

ஶிவ: ஶக்₁த்₁யா யுக்₁தோ₂ யதி₃ ப₄வதி₁ ஶக்₁த₁: ப்₁ரப₄விது₁ம்ʼ
ந சே₁தே₁வம்ʼ தே₃வோ ந க₂லு கு₁ஶல:ஸ்ப₁ந்தி₃து₂-மபி₁
அத₁ஸ்த்₁வா -மாராத்₄யாம்ʼ ஹரி -ஹர - விரின்சா₁தி₃பி₄ -ரபி₁
ப்₁ரணந்து₁ம்ʼ ஸ்தோ₁து₁ம்ʼ வா க₁த₂-மக்₁ருத₁பு₁ண்ய: ப்₁ரப₄வதி₁


शिव: शक्त्या युक्थो यदि भवति शक्त: प्रभवितुं
न चेतेवं देवो न खलु कुशल:स्पन्दिथु-मपि
अतस्त्वा -माराध्यां हरि -हर - विरिऩ्चादिभि -रपि
प्रणन्तुं स्तोतुं वा कथ-मक्रुतपुण्य: प्रभवति


சிவம் எனும் பொருளும் ஆதி சத்தியொடு
சேரின் எத்தொழிலும் வல்லதாம்
இவள் பிரிந்திடில் இயங்குதற்கும் அரிது
அரிதெனா மறை இரைக்குமாம்
நவபெரும் புவனம் எவ்வகைத் தொழில்
நடத்தி யாவரும் வழுத்து தாள்
அவனியின்கண் ஒரு தவம் இலார் பணியல்
ஆவதோ பரவல் ஆவதோ

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

சிவ சக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது. சிவனோடு சக்தி சேர்ந்தாலே சிவன் சீவன் ஆகிறான். சக்தி இல்லை எனில் சிவன் பயனற்று சவம் ஆவான். சிவனுக்கும் மங்களத்தைச் செய்து அவனை விட்டுப் பிரியாத சக்தி நமக்கும் மங்களத்தை உண்டாக்கட்டும். தக்ஷிணாமூர்த்தியாக யோகநிலையில் இருக்கையில் ஈசன் தன் சக்தியை உள்ளூர அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறான். அந்த சித்சக்தி தான் அம்பாள். அவள் உள்ளே அடங்கிக்கிடக்காமல் வெளியே வந்தால் தான் உலகம் இயங்கும். எந்தக் காரியமுமே பண்ணாமல் ப்ரம்மமாய் சிவன் அமர்ந்திருந்தால் சிருஷ்டிகள் நடைபெறுவது எங்கனம்! சித்சக்தி சேர்ந்தாலேயே பிரபஞ்சம் நடைபெறும்.

ஆகையால் சகலத்தையும் நடத்தும் சக்தியே அம்பாள் ஸ்வரூபம். அவளே அனைத்தையும் படைத்துக்காத்து ரக்ஷிக்கிறாள். மும்மூர்த்திகள் மூலமாக அவள் இந்தத் தொழிலைச் செய்து வருவதாக ஐதீகம். இதையே அபிராமி பட்டரும்,

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

அபிராமி அந்தாதி 7

இப்படி விஷ்ணு, பிரம்மா, ருத்ரன் மூவராலும் அம்பிகை வழிபடப் படுகிறாள். இவ்வளவு பெருமை வாய்ந்த அம்பிகையை நாமும் வழிபடுவதெனில் இது முன் ஜென்மப் புண்ணியம் அன்றி வேறென்ன இருக்க முடியும். பிறவிப் பெருங்கடலாகிய மாபெரும் சுழலில் சிக்கித் தயிர் கடையும் மத்தைப் போல் நாம் அலையாமல் நம்மைத் தடுத்தாட்கொள்ள அந்தச் சுழலில் இருந்து நம்மை விடுவிக்க அம்பிகையின் சேவடிகளைப் பற்றினாலே இயலும். நம்மால் அதாவது நம் போன்ற சாமானியர்களால் நிர்குணமான பிரம்மத்தை வழிபடுவது என்பது அவ்வளவு எளிதில் முடியாத ஒன்று. புரிந்து கொள்ளவும் இயலாது. அதனால் ரூபஸ்வரூபமாக அம்பாளை ஸ்தாபித்து வழிபட்டு வந்தோமானால் நம் மனதை அந்த அம்பாளின் ரூபத்தில், பக்தி மார்க்கத்தில் திருப்பினால் அது தானாகவே நம்மை ஞான மார்க்கத்துக்கு அழைத்துச் செல்லும். நம்முடைய தேவதை ஆராதனைகளின் தாத்பரியமும் இதுவே.

சிவனை விட்டு ஒரு கணமும் பிரியாத இந்தச் சக்தியை நாம் வழிபட்டு வந்தால் ஸர்வ விக்னங்களும் நாசம் அடைந்து, நாம் எடுக்கும் அனைத்துக் காரியங்களும் ஸித்தி அடையும் என்பது ஆன்றோர் வாக்கு.

இதை அபிராமி பட்டர்,

கண்ணியதுன் புகழ் கற்பதுன் நாமங்கசிந்து பத்தி
பண்ணியதுன்னிரு பாதாம்புயத்திற் பகலிரவா
நண்ணியதுன்னை நயந்தோர் வையத்து நான் முன்செய்த
புண்ணியமேது என்னம்மே புவியேழையும் பூத்தவளே.

அபிராமி அந்தாதி 12.

என்று கூறுகிறார். ஊனும், உடலும் உருக உருக, அபிராமி அன்னையின் திருவருள் வேண்டிப் பாடிய இந்த அந்தாதித் தொகுப்பில் மேற்கண்ட பாடலுக்குப் பொருள் காண்கையில்,

புவி ஏழையும் பெற்றெடுத்த அம்மா, என் தாயே, அபிராமி அன்னையே, உன் புகழையே நான் நினைந்து நினைந்து பாடி வருகிறேன், உன் திருநாமம் தவிர மற்ற நாமங்களைக் கற்றேன் அல்ல; எப்போதும், எந்த நேரமும் உன்னையே நினைந்து பக்தி செய்தும் வருகிறேன். அம்மா, உன்னை நினைத்துக்கொண்டே இருந்ததால் அன்றோ, உன் பூரண நிலவு போன்ற முகத்தை நினைத்த காரணத்தால் அன்றோ அமாவாசையைப் பெளர்ணமி எனக் கூறினேன். இப்படி நான் என்னையே மறக்கும் அளவுக்கு பக்தி செய்து வந்திருக்கிறேன் என்கிறார் பட்டர். பகலும், இரவும் உன்னை நெருங்கி எந்நேரமும் உன் புகழ் பாடும் அடியார் கூட்டத்தை அல்லவோ நான் எப்போதும் நாடுகிறேன். இவை எல்லாம் உன் திருவருளால் அன்றோ நடைபெறுகிறது! என் தாயே, நான் முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனாலேயே இப்பிறவியில் எனக்கு இவை எல்லாம் கிடைக்கப் பண்ணி இருக்கிறாய்.

எண்ணங்கள் பதிவில் இருந்து இங்கே மாற்றி உள்ளேன். அதில் பல விஷயங்களைக் குறித்தும் பதிவு போட வேண்டி ஆகிறது. ஆகையால் செளந்தரிய லஹரி போன்ற கனமான விஷயங்களைப் போடும் பதிவுப் பக்கங்களில் இம்மாதிரியான பதிவுகளையும் போடுவது சரியாகத் தோன்றவில்லை. ஆகையால் மாற்றிவிட்டேன். பழைய பதிவுகளை இங்கே மாற்றியதும் தொடர்ந்து எழுத வேண்டும். அதுவரை பொறுத்திருக்கவும்.

1 comment:

  1. நண்பரே, எனக்கு அபிராமி பதிகங்கள்[கலையாத கல்வியும்,கங்கையோடு தும்பையும்] இரண்டிற்கும் விளக்கவுரை இருப்பின் அதை பதிப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete