எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Monday, November 28, 2011

சேஷாத்ரி ஸ்வாமிகள் 2


1870-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 22-ஆம் நாள், சனிக்கிழமை, ஹஸ்த நக்ஷத்திரம் கூடிய நல்ல நாளில் மரகதத்திற்கு காமாட்சி தேவியின் அருட்பிரசாதமாக ஆண் மகவு பிறந்தது. குழந்தைக்கு சேஷாத்ரி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். பராசக்தியின் அருளால் பிறந்த அந்தக் குழந்தை இயற்கையாகவே தெய்வசிந்தனையோடும், இறைவழிபாட்டில் ஆர்வத்தோடும் காணப்பட்டது. தாயாரும் குழந்தைக்குப் பல ஸ்லோகங்களைச் சொல்லிக்கொடுத்தார். தாய் பாடுவதைக் கேட்டுக் கேட்டு மகனுக்கும் இசையில் ஆர்வம் மிகுந்தது. நான்காம் வயதிலேயே கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம், மூக பஞ்சசதி, குரு ஸ்துதி போன்றவற்றைக் கற்றுக்கொண்டு சொல்ல ஆரம்பித்தான். வரதராஜ ஜோசியருக்கோ தன் மகனின் புத்தி கூர்மையைக் கண்டும், வித்வத்தைக் கண்டும் ஆனந்தம் அதிகம் ஆனது. தன் சீடர்களுக்குப்பாடம் சொல்லிக் கொடுக்கையில் மகனைத் தன் மடியில் வைத்துக்கொண்டே சொல்லிக் கொடுத்துவந்தார். ஆகவே குழந்தைக்கு நாளாவட்டத்தில் அந்த வேதாந்தப் பாடங்களும் அத்துபடியாயின.

தந்தையோடு தானும் தியானத்தில் அமருவான். தாயோடு தினம் தினம் எல்லாக் கோயில்களுக்கும் போவான். ஒருநாள் தாயுடன் ஶ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்றார் சேஷாத்ரி. அங்கே ஒருவர் வரப்போகும் திருவிழாவில் விற்பனை செய்ய வேண்டி ஒரு மூட்டை நிறைய பாலகிருஷ்ணனின் விக்ரஹங்களை எடுத்து வந்திருந்தார். அதைக் கண்டு சேஷாத்ரியாகிய குழந்தை தனக்கும் ஒரு பொம்மை விளையாட வேண்டுமென்று தாயிடம் கெஞ்சிக் கேட்டது. தாயோ அதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. குழந்தை மேலும் மேலும் கெஞ்ச, பொம்மை விற்பவர் குழந்தையின் அழகிலும், அது கெஞ்சும் விதத்திலும் மனம் கவரப்பட்டுக் குழந்தைக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார். அதன் தாயைப் பார்த்து, “தாயே, உங்கள் குழந்தையே ஒரு கிருஷ்ண விக்ரஹம். நடமாடும் விக்ரஹம். ஆனாலும் அது ஆசைப்பட்டு ஒரு விக்ரஹம் கேட்குது. நீ வாங்கித் தர வேண்டாம். நானே தருகிறேன். ஒரு விக்ரஹத்தை எடுத்துக்கொள்ளச் சொல்!” என்ற வண்ணம் மூட்டையைப் பிரித்துக் குழந்தையைத் தன் கையாலேயே ஒரு பொம்மையை எடுக்கச் சொன்னார். குழந்தையும் மூட்டைக்குள் கைவிட்டு ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டது. மரகதம் எவ்வளவோ கெஞ்சியும் பொம்மை விற்பவர் பொம்மைக்குரிய காசை வாங்க மறுத்துவிட்டார்.

ஆச்சரியவசமாக அவருக்கு அன்று மாலைக்குள்ளாக எல்லா பொம்மைகளும் விற்றுப் போக அவர் இது அத்தனையும் சேஷாத்ரியின் மகிமையே என்பதைப் புரிந்து கொண்டார். மறுநாள் குழந்தையுடன் கோயிலுக்கு வந்த மரகதத்தைப் பார்த்துவிட்டுப் பரவசமடைந்து ஓடோடி வந்து சேஷாத்ரியின் தாயார் மரகதம் கால்களில் விழுந்து வணங்கினார். அவள் ஒன்றும் புரியாமல் விழிக்க, வியாபாரி, அவளைப் பார்த்து அவள் மகன் சாதாரணக் குழந்தை அல்ல என்றும் அதிருஷ்டக்குழந்தை எனவும் கூறினார். மேலும் தான் கொண்டு வந்த பொம்மைகள் எல்லாமே ஒரே நாளைக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், எத்தனையோ திருவிழாவுக்குப் போயிருக்கும் தான் நூறு பொம்மை கூட விற்க முடியாமல் திண்டாடி இருப்பதாகவும் சேஷாத்ரி கை வைத்த வேளை அமோகமான விற்பனை எனவும் கூறிவிட்டு, குழந்தைக்குத் தங்கக்கை என்று கூறியவண்ணம் அந்தக் கைகளைத் தொட்டுக் கண்களில் ஒத்திக்கொண்டார். குழந்தைக்கு முத்தமாரி பொழிந்தார். அன்றிலிருந்து சேஷாத்ரிக்கு “தங்கக்கை சேஷாத்ரி” என்ற பெயர் ஏற்பட்டது. அந்தக் கிருஷ்ண விக்ரஹம் பின்னாட்களில் அவரின் தம்பியின் வாரிசுகளிடம் இருந்ததாயும், பின்னர் காஞ்சி ஶ்ரீபரமாசாரியாரிடம் சேர்ப்பிக்கப்பட்டதாயும் தெரிய வருகிறது.
சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு ஐந்தாவது வயதில் வித்யாரம்பம் நடந்தது. தாத்தா காமகோடி சாஸ்திரியாரும் ஸாரஸ்வத மஹாபீஜ மந்திரத்தை தர்ப்பையினால் பேரப்பிள்ளையின் நாவில் எழுதி, பஞ்சாக்ஷரத்தையும் அஷ்டாக்ஷரத்தையும் உபதேசம் செய்வித்தார். அம்பிகையின் இன்னருளால் பிறந்த தவப் புதல்வனாம் சேஷாத்ரியிடம் கலைமகள் கைகட்டிச் சேவகம் புரிந்தாள். வயதுக்கு மீறிய அறிவோடு அனைத்துப் பாடங்களையும் திறம்படக் கற்றார். கம்பராமாயணம், திருக்குறள், நன்னூல், நைடதம் அனைத்தையும் கற்றதோடு அன்னையிடம் முறைப்படி சங்கீதமும் கற்றுக் கொண்டார். எழாம் வயதில் உபநயனம் செய்வித்தனர். தாத்தா காமகோடி சாஸ்திரிகள் காயத்ரி மந்திர மகிமை குறித்தும், சந்தியாவந்தனத்தின் அவசியம் குறித்தும் பேரனின் மனதில் பதியும்படி எடுத்துக்கூறினார். வேதபாடசாலையில் முறைப்படி சேர்த்து வேதாத்யயனமும் கற்க வைத்தார். தர்க்கம், வியாகரணம் அனைத்தையும் பயின்றபின்னர் தனக்குத் தெரிந்த அத்யாத்ம வித்தையையும், மந்திர ரகசியங்களையும் பேரப்பிள்ளைக்குக் கற்றுக்கொள்ள வைத்தார். அனைத்தும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தன. ஒருநாள் வழக்கம்போல் பாடசாலைக்குச் செல்லும் முன்னர் தந்தையை நமஸ்கரித்த சேஷாத்ரியைக் கட்டிக்கொண்டு தந்தை கண்ணீர் வடித்தார். அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

Friday, November 25, 2011

ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்-- பகுதி ஒன்று

சேஷாத்ரி ஸ்வாமிகள்:
காஞ்சி நகரின் காமாட்சி அன்னையை ஆராதிப்பதற்காக ஆதி சங்கரர் சில உபாசனா முறைகளைத் தோற்றுவித்ததோடு அல்லாமல் அவற்றைச் சரிவர நடத்துவதற்காக, நர்மதா நதிக்கரையில் இருந்து தேவி உபாசகர்களான முப்பது பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு காஞ்சிக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஶ்ரீ காமாட்சி தேவியைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு ஶ்ரீவித்யையைப் பரப்பி வந்தனர். அவர்கள் காலத்திலிருந்து தேவி பக்தியும், ஶ்ரீவித்யை உபாசனையும் செழித்து வளரத் தொடங்கியது. மக்கள் அவர்களைக் காமகோடியார் என அழைக்க ஆரம்பித்தனர். ஏனெனில் காஞ்சியின் காமாட்சி அம்மன் மட்டுமின்றி காஞ்சி நகரமே ஶ்ரீபராசக்தியின் ஶ்ரீசக்ரபீடத்தின் உருவாகவும் அம்மன் குடி கொண்டிருக்கும் காமகோடி பீடம் ஶ்ரீசக்கரத்தின் பிந்துவாகவும் கருதப்படுகிறது. அதை வழிபட்டு வந்த குலத்தவர்களைக் காமகோடியார் என்பது சரிதானே! இவர்கள் வேத அத்யயனம் செய்தவர்கள் மட்டுமல்லாமல், இதிகாசப் புராணங்களையும் நன்கறிந்தவர்கள். ஒரு சிலர் ஜோசிய சாத்திரத்திலும் வல்லவர்களாய் இருந்தனர். காமாட்சி கோயிலில் மட்டுமில்லாமல் ஶ்ரீவரதராஜர் கோயிலிலும் பஞ்சாங்கம் வாசிக்கும் உரிமையும், மான்யங்களும் பெற்றிருந்தனர்.

இந்தக் காமகோடியார் மரபில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காமகோடி சாஸ்திரிகள் என்ற பெயரில் ஒரு மகான் அவதரித்தார். ஆசாரசீலரான அவர் அம்பிகையின் வழிபாடு மட்டுமின்றி, ஈசனையும் துதித்துப் பல பாடல்கள வடமொழியிலும், தெலுங்கிலும் இயற்றி இருக்கிறார் அபாரமான சங்கீத ஞானம் உடைய இவர் கல்லும் கரையும் வண்ணம் பாடல்களைப் பாடிவருவார். இவர் வீடே ஒரு பர்ணசாலை போல் அமைதியும், எழிலும் நிறைந்து காணப்படும். அவர் சிலரின் வேண்டுகோளின்படி அருகிலுள்ள வழூர் என்னும் சிற்றூருக்குச் சென்று தங்கினார். ஆனால் அவருக்கு ஆண் குழந்தைப்பேறில்லாமல் மனம் வருந்தினார். ஒரே ஒரு மகளைப் பெற்றிருந்த அவர் தம் அண்ணனான சிதம்பர சாஸ்திரிகளின் இரு பெண் குழந்தைகளையும் தம் சொந்தப் பெண்களாகவே வளர்த்து வந்தார். அவர்கள் இருவரில் கடைக்குட்டியான மரகதம் சிறு வயதிலேயே அபார புலமையோடும், அழகும், நற்குணங்களும் வாய்க்கப் பெற்றிருந்தாள். சாஸ்திரிகளும் அவளுக்குப் புராணக்கதைகள், தர்ம சாத்திரங்களைக் கற்பித்ததோடு இசையோடு பாடவும் கற்றுத் தந்தார். நாளடைவில் தனது பனிரண்டாம் வயதிலேயே மரகதம், “சாகித்ய சங்கீத கலாநிதி” என்ற பட்டத்தப் பெற்றாள்.

அவளுக்குத் திருமணப்பருவம் வந்துவிட்டதை அறிந்த காமகோடி சாஸ்திரிகள் தக்கமணாளன் தனது மாணவனும், சீடனும் ஆன வரதராஜனே என முடிவு செய்து அவர் தந்தையோடு கலந்து பேசித் திருமணம் நிச்சயித்தார். ஒரு நல்ல முகூர்த்தத்தில் இருவருக்கும் திருமணம் செய்வித்தார். மரகதமும், வரதராஜனும் அருமையாகவும், பெருமையாகவும், சீரோடும், சிறப்போடும் தாம்பத்தியம் நடத்தி வந்தனர். இன்முகத்தோடு அனைவரையும் உபசரித்த தம்பதிகள் இருவரும் தர்ம நூல்களையும், புராணக்கதைகளையும் படித்து மகிழ்ந்ததோடு, மாலை வேளைகளில் வரதராஜப் பெருமாளையும், ஶ்ரீகாமாட்சி அன்னையையும் தரிசனம் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தனர். எல்லாம் இருந்தும் இருவருக்கும் குழந்தைப்பேறே இல்லை. பல விரதங்கள் இருந்தனர். தானங்கள் செய்தனர். திருத்தல யாத்திரைகள் சென்றனர். காமகோடி சாஸ்திரிகளின் மனமும் வருந்தியது. காமாட்சி அன்னையிடம் சென்று அவள் சந்நிதியில் மனமுருகப் பிரார்த்தித்தார். தான் ஏதோ தவறு செய்திருந்தாலும் அதற்காகத் தன் அருமை மகளைத் தண்டிக்க வேண்டாம் என்றும் அம்பிகையின் கடைக்கண் கடாட்சத்தைக் காட்டி ஒரு குழந்தையைக் கொடுத்தருளும்படியும் வேண்டினார். அன்றிரவே காமகோடி சாஸ்திரியாரின் கனவில் அன்னை தோன்றி சாஸ்திரியாரைத் தம்பதிகளுக்கு வெண்ணெய் கொடுக்கும்படி கூறிவிட்டு அந்த வெண்ணெயை உண்ட தம்பதிகளுக்குச் சிறப்பான ஞானக்குழந்தை பிறக்கும் எனவும் கூறி மறைந்தாள்.

மறுநாள் காலை நீராடி அநுஷ்டானங்களை முடித்த காமகோடி சாஸ்திரியார் தம்பதிகளிடம் தாம் கண்ட கனவைக் கூறிவிட்டுப் பராசக்தியை வேண்டிக்கொண்டு, அவளுக்குப் படைத்த பிரசாதமாக வெண்ணெயை இருவருக்கும் கொடுத்தார். மந்திரங்கள், துதிகள், ஜபங்கள் செய்யப்பட்டுப் புனிதமடைந்திருந்த வெண்ணெயை இருவரும் உண்டனர். சில நாட்களில் மரகதம் கருத்தரித்தாள்.

Wednesday, November 16, 2011

வேண்டுகோள்

கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பக்கத்தில் பதிவிட இயலாது. குறிப்புப் புத்தகங்கள் எல்லாம் இந்தியாவில். சிரமத்துக்கு மன்னிக்கவும். இயன்றபோது நினைவில் இருப்பதை எழுதுகிறேன். நன்றி.