எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Wednesday, February 15, 2012

செளந்தர்ய லஹரியின் எளிய விளக்கம் 12

त्वदीयं सौन्दर्यं तुहिनागीरिकन्ये तुलयितुम
कवीन्द्रा: कल्पन्ते कथमपि विरिंची -प्रभ्रुतय:
यदालोकौत्सुक्या - दमरललना यन्ति मनसा
तपोभी -र्दुष्प्रापमापी गिरीश -सायुज्य -पदवीम

த்₁வதீ₃யம்ʼ ஸௌந்த₃ர்யம்ʼ து₁ஹினாகீ₃ரிக₁ன்யே து₁லயிது₁ம
க₁வீந்த்₃ரா: க₁ல்ப₁ந்தே₁ க₁த₂மபி₁ விரிஞ்சீ₁ -ப்₁ரப்₄ருத₁ய:
யதா₃லோகௌ₁த்₁ஸுக்₁யா - த₃மரலலனா யந்தி₁ மனஸா
த₁போ₁பீ₄ -ர்து₃ஷ்ப்₁ராப₁மாபீ₁ கி₃ரீஶ -ஸாயுஜ்₁ய -ப₁த₃வீம

வீரைக் கவிராஜரின் செளந்தர்ய லஹரி தமிழாக்கம்:

ஆதி சுந்தரி வடிவினை யயன் முதற்புலவோர்
ஏது கண்டு அளவிடுவது தமை இகழ் இமையோர்
மாதர் இங்கு இவள் மகிழ்நரோடு உறைகுவன் எனின் ஓர்
பேதை கொங்கைகள் பெறுகுவம் என மருகுவரால்.

இங்கே அம்பிகையின் செளந்தரியத்தின் சக்தியைப் பற்றிக் கூறப்படுகிறது. அம்பாளின் செளந்தர்யத்தை எவராலும் விவரிக்க முடியவில்லையாம். விரிஞ்சீ ப்ரப்ருதய: அதாவது பிரம்மா முதலானோர்களால் கூட விவரிக்கவொண்ணா அழகு படைத்தவள் அம்பிகை. அவர்கள் அம்பிகையைப் பார்க்கவில்லையா என்ன? பார்த்திருக்கிறார்கள்; பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனாலும் அம்பிகையின் செளந்தர்யத்தை விவரித்துச் சொல்லும்படியான திறமை அவர்களிடம் இல்லை. முழுமதி போன்ற முகம், முத்துப் போன்ற பற்கள், ஒளிவீசும் கண்கள், என்றெல்லாம் உவமைகளைச் சுட்டுவது எல்லாம் அம்பிகையின் முழு அழகையும் நமக்குக் காட்டுவதில்லை. அவை வெறும் உவமைகளே. அவ்வளவு அழகு வாய்ந்த அம்பிகை தன் முழு அழகையும் ஈசனிடம் மட்டுமே காட்டுகிறாள்.

மற்றப் பேர் அவளின் அழகில் ஒரு துளியைத் தான் காணமுடிகிறது. அப்படி மின்னலைப் போல அவள் ஒளிவீசிப் பிரகாசித்துவிட்டு முகச் சந்திரமண்டலத்தைக் காட்டிவிட்டு மறைந்துவிடுகிறாள். அந்தப் பிரகாசத்தையே எவராலும் தாங்க முடியவில்லை. இன்னும் தன் முழு அழகைக் காட்டிவிட்டாள் எனில்! நாம் தாங்கமாட்டோம் என்பதாலேயே அம்பிகை தன் அழகை முழுதும் ஈசனிடம் மட்டுமே காட்டுகிறாள். இங்கே ஒரு சின்ன உதாரணம் சொல்லலாம். எந்தக் குழந்தையும் தன் அன்னையிடம் அவள் அழகா, கறுப்பா, சிவப்பா, வெளுப்பா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அவளுடைய அன்பும், கருணையும், பாசமுமே தெரியும்; புரியும். வேறெதுவும் தெரியாது. மேலும் குழந்தை கண்களுக்குத் தான் அழகாய்த் தெரியவேண்டும் என எந்தத் தாயும் நினைக்கவும் மாட்டாள். ஆகவே அம்பாளின் குழந்தைகளான நமக்கு அவளுடைய கருணைப் பிரவாஹமே கண்களுக்குத் தெரிகிறதே தவிர அவளுடைய பூரண செளந்தரியம் நம் கண்களில் தெரியவருவதில்லை. ஆனால் துளிப் போல் தெரிகிற அந்த செளந்தர்யத்தையே நம்மால் வர்ணிக்க முடியவில்லை; வார்த்தைகள் கிடைப்பதில்லை.

இங்கே ஆசாரியரும் அம்பாளின் குழந்தையான தனக்கு அவளுடைய பரிபூரண அழகை வர்ணித்துப் பாடும் அளவுக்குச் சொற்கள் கிடைக்கவில்லை என்கிறார். ஆனாலும் அம்பாளின் அதி தேவதைகள் அம்பாளின் சொரூப லக்ஷணத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஈசனோடு தாங்களும் எவ்வாறு ஐக்கியமடைகின்றனரோ, அவ்வாறே நாமும் சிவ சாயுஜ்யத்தைப் பெற்றால் அம்பாளின் செளந்தர்யத்தைத் தெரிந்து கொள்வதோடு அல்லாமல், நம்முடைய முடிவான லக்ஷ்யத்தையும் அடைவோம் என்கிறார். நாம் ஒவ்வொருவரும் அடைய நினைப்பது சச்சிதானந்தமே ஆகும்; சிவலோக சாயுஜ்யப் பதவியை அடையவே நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். அதன் மூலம் அம்பாளின் கருணா கடாக்ஷத்துக்குப் பாத்திரமாவதோடு அவளின் திவ்ய செளந்தரியத்தையும் கண்டு அனுபவித்து இன்புறலாம்.

இதையே அபிராமி பட்டர்,

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!

அழகுக்கு ஒருவரும் உவமை சொல்ல முடியாத அளவுக்குச் சிறந்தவள் என்கிறார். நம் மனத்தில் ஆயிரம் குறைகள், குற்றங்கள், துன்பங்கள். இத்தனை இருந்தாலும் வேறு எவராலும் உவமை சொல்லமுடியாத அளவுக்கு அழகும், கருணையும் நிரம்பி இருக்கும் அம்பிகை இருக்கையில் நமக்கு என்ன குறை வந்துவிடும் என்கிறார். மேலும் அருமறைகளான வேதங்கள் நான்கும் அம்பிகையின் திருப்பாதங்களில் அடி, முடி, நடு என எங்கும் காணப்பட்டதாலும் அவள் திருவடிகளும் கன்றிச் சிவந்து தாமரை மலரின் நிறத்தை ஒத்திருந்ததாம். பாத அம்புயத்தாள் என்கிறார் பட்டர். யாமளையாகிய இந்தக் கற்பகவல்லி ஒரு பூங்கொம்பைப் போல் காட்சி அளிக்கிறாள். இவள் இருக்கையில் நமக்கு என்ன குறைதான் வந்துவிடும்? ஒரு குறையும் வராது. அம்பிகையின் கருணை நம்மைக் காத்து ரக்ஷிக்கும்.

Thursday, January 19, 2012

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம் 11 தொடர்ச்சி

அம்பிகையின் பரிபூரண சாந்நித்யம் ஶ்ரீவித்யா தேவதையாக இருக்கும் யந்த்ர ரூபத்திலேயே சிறப்பாகக் காணப்படும். ஆகவே இதற்கெனச் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகிறது. அடுத்து இவற்றில் காணப்படும் எட்டுத்தளங்கள் வஸுதல: வஸுக்கள் எனப்படும். அஷ்டவஸுக்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? ஆகையால் இங்கேயும் எட்டு என்னும் எண்ணையே இந்த வஸு தல: என்னும் சொல் குறிக்கும். அடுத்து வரும் பதினாறு தளங்கள் பதினாறு கலைகளையும் குறிக்கின்றன. இவற்றோடு பிந்துவையும் சேர்த்துக்கொண்டு நாற்பத்து நான்கு கோணங்கள் என்று சொல்வார்கள். இந்த ஶ்ரீசக்ரமும் பூப்ரஸ்தார்ம், மேரு ப்ரஸ்தாரம் என இருவகைப்படும். மேரு என்பதையும் அனைவரும் பார்த்திருப்போம். மேருவும் பூர்ண மேரு, அர்த்த மேரு என இருவகைப்படும். ஆகவே அவற்றுக்கு உரிய முறையில் வழிபடவேண்டும்.

அம்பாளின் இந்த வாசஸ்தலத்துக்கு ஶ்ரீநகரம், ஶ்ரீபுரம் என்றே பெயர். இதை எல்லாம் குருமுகமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். மேலோட்டமாகச் சொல்லியதை வைத்து எதுவும் செய்யக் கூடாது. சக்கரங்கள் வழிபடுபவரின் எந்தப்பக்கமாக இருக்கவேண்டும் என்பதில் இருந்து கணக்கு உண்டு. அம்பிகையை வழிபடுவதும் இருவிதமான முறைகளில் வழிபடுவது உண்டு. ஒரு வழிபாட்டு முறையில் சக்கரத்தின் நடு முக்கோணம் மேல் நோக்கியும், இன்னொரு முறையில் நடு முக்கோணம் கீழ் நோக்கியும் காணப்படவேண்டும். ஆகவே மிகவும் கவனத்தோடு செய்யப்பட்டு, அதைவிடக்கவனத்தோடு பூஜையில் வைத்து, ஆசாரம் தப்பாமல் குரு மூலம் உபதேசம் பெற்ற பின்னரே இந்த வழிபாடுகளைச் செய்யலாம். அதுவரைக்கும் ஸ்லோகம் மட்டும் சொல்லுவோம்.

இப்படியான தேவியைத் துதித்த பட்டரோ தான் அழிவற்ற இன்பத்திலே வாழும்படியான ஒரு பரம்பொருளே அவள் எனக் கூறுகின்றார். ஶ்ரீசக்ர ராஜ்யத்தில் வசிக்கும் தேவியைத் தன் மனக்கண்ணால் தரிசித்தவர், இந்லழகை வாயினால் உரைக்கவும் முடியுமோ என்கிறார். ஏழு கடல்களாலேயும், ஏழு உலகங்களாலேயும், பெரிய அட்ட குலாசலங்களாலேயும் அணுக முடியாத தேவியானவள் சூரிய, சந்திரர்க்கு நடுவே அவர்களின் சுடரை விடப் பிரகாசமாகக் கோடி சூரியப் பிரகாசமாக நித்தியசூரியாக விளங்குகிறாள் என்கிறார்.

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

மனதாலும் வாக்காலும் அணுகுவதற்கு அரியவளான தேவியை நம் பேரின்ப வாழ்க்கைக்குப் பற்றுக்கோடானவள் என்பதைப் புரிந்து கொண்டு, அவளே கதி எனச் சரணடைந்து, நாம் செய்யும் அனைத்துத் தவறுகளையும், அவள் விலக்கும் காரியங்களைச் செய்தாலும் பொறுக்கும் தன்மையையும் கொண்டவள் அம்பிகை. அந்த உரிமையிலும், தைரியத்திலுமே தாம் அவளை வாழ்த்தித் துதிப்பதாக பட்டர் கூறுகிறார்.

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம் 11

ஶ்ரீ சக்ரராஜ சிம்மாசனேஸ்வரி!
चातुर्भि: : श्रीकण्टै: शिव व्युवतिभि: पञ्चभिरपि
प्र्भिन्नभि: श्म्भोर्णव्भिरापि मुलप्र्क्रुतिभि:
चतुश्चात्वारिम्शद -वसुदल -कलाश्र -त्रिवलय -
त्रिरेखाभि; सार्धं तव शरणकोणा: परिणता:


சா₁து₁ர்பி₄: : ஶ்ரீக₁ண்டை₁: ஶிவ வ்யுவதி₁பி₄: ப₁ஞ்ச₁பி₄ரபி₁
ப்₁ர்பி₄ன்னபி₄: ஶ்ம்போ₄ர்ணவ்பி₄ராபி₁ முலப்₁ர்க்₁ருதி₁பி₄:
ச₁து₁ஶ்சா₁த்₁வாரிம்ஶத₃ -வஸுத₃ல -க₁லாஶ்ர -த்₁ரிவலய -
த்₁ரிரேகா₂பி₄; ஸார்த₄ம்ʼ த₁வ ஶரணகோ₁ணா: ப₁ரிணதா₁:

சதுர்ப்பி: ஶ்ரீகண்டை: சிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபின்னாபி: சம்போர் -நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாச்ர-த்ரிவலய-
திரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:


சிவகோணம் முற்பகர்வது ஒருநாலு சத்திநெறி
செறிகோணம் அத்தொடரும் மருவுகோள்
நவகோணமும் உட்படுவது எழுமூ விரட்டி ஒரு
நவில் கோணமுற்றதுவும் வலயமா
யிவரா நிரைத்த தளம் இருநாலும் எட்டிணையும்
எழிலாய வட்டமொடு சதுரமாய்
உவமானம் அற்றதணி தனி மூவகைக்கணும்
உமைபாதம் உற்ற சிறுவரைகளே

வீரை ராஜக்கவிராயரின் தமிழாக்கம்.

சென்ற ஸ்லோகத்தில் குண்டலினி ஏறுவதையும், ஸஹஸ்ராரத்தில் காட்சி கொடுத்துவிட்டு மீண்டும் யதாஸ்தானம் வருவதையும் பார்த்தோம். இப்போது ஶ்ரீசக்கரத்தின் வர்ணனையைப் பார்ப்போம். அம்பாளின் நாம ஸ்வரூபம் மட்டுமின்றி யந்திர ஸ்வரூபமும் உள்ளது. யந்திர ஸ்வரூபமே ஶ்ரீசக்கரம் எனப்படும். இந்த ஶ்ரீ சக்கரம் ஒன்பது முக்கோணங்களால் ஆனது.இந்த யந்திரமானது அபார சக்தி கொண்டது. ஒவ்வொரு தேவதைக்கும் அக்ஷரக் கூட்டங்கள் ஒரு ரூபம் எனில், சப்தரூபம், மந்திர ரூபம், யந்திர ரூபம் என்றும் உண்டு. கோடுகள், கோணங்கள், வட்டங்கள், கட்டங்களால் ஆன அந்த யந்திர ரூபத்தின் அர்த்தங்கள் குரு மூலமே அறியத் தக்கவை. அம்பிகைக்கு உரிய மந்திரத்தை மனதில் ஜபித்தவண்ணம் யந்திரத்திலும் வழிபாடுகள் செய்வதுண்டு. கோணங்கள், தளங்கள் ஆகியவற்றில் அவை அவைக்கு உரிய மந்திர அக்ஷரங்களைப் பொறித்து வழிபாடு செய்வார்கள். அம்பாளுக்கு இருக்கக் கூடிய அநேக ரூபங்களுள் இந்த ஶ்ரீசக்கர வழிபாடே பிரபலமாக இருக்கிறது.

மந்திரங்களில் சப்தம் மாறுபட்டால் எவ்வாறு அதன் மூலம் தோஷங்கள் ஏற்படுமோ அப்படியே ஶ்ரீசக்கரத்தின் அமைப்பிலும், அதற்கென உண்டான அளவுகளிலும் சிறு மாறுபாடு கூட இருக்காமல் என்ன பரிமாணத்தில் இருக்கவேண்டுமோ அவ்வாறே இருக்க வேண்டும். அதோடு கூட வழிபாட்டுக்கென உள்ள நியமங்களையும், ஆசாரங்களையும் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அம்பாளின் செளந்தரிய விக்ரஹ வடிவை விட இந்த ஶ்ரீசக்ர வடிவுக்கே அதிகம் சிறப்பும் உண்டு. இந்த மந்திரங்களிலும் நாமம் என்பதே கிடையாது. பீஜாக்ஷரங்களே காணப்படும். அதோடு ஶ்ரீவித்யா தேவதையை திரிபுரசுந்தரி என அழைத்தாலும் உருவம் அமைக்காமல் யந்திர ரூபமாகவே வழிபடுவார்கள். இதற்கான காரணம் எவரும் கூறவில்லை. ஆகையால் அது முறையாக சாக்த வழிபாட்டைச் செய்பவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று.

ஒன்பது கோணங்களால் ஆன இந்த ஶ்ரீசக்கரத்தில் கீழ் நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் சக்தி சக்கரங்கள் எனப்படும். மேல் நோக்கிய நான்கும் சிவ சக்கரங்கள் எனப்படும். கொடிய விஷத்தைத் தன் கழுத்தில் வைத்திருக்கும் ஶ்ரீகண்டனாகிய ஈசனின் பத்தினியான பராசக்தியைக் குறிக்கும் இந்த சக்கரத்தின் வர்ணனை மேலும் வருமாறு:

ஒன்பது சக்கரங்களும் அண்டம் எனப்படும் இவ்வுலகின் மூலகாரணங்கள், அதே போல் பிண்டமாகிய இவ்வுடலின் மூலகாரணங்கள் ஆகியவற்றின் தத்துவங்களைக் குறிக்கும். ஆகவே மூலப்ரக்ருதி எனப்படும். சிவாம்சம் கொண்ட மூலப் ப்ரக்ருதி பிண்டமாகிய உடலில் மஜ்ஜை, சுக்கிலம், பிராணன், ஜீவன் ஆகிய நான்காகும். அதே அண்டமாகிய உலகில் மாயை, சுத்தவித்தை, மகேசுவரன், ஸதாசிவன் ஆகிய நான்காகும்.

சக்தி அம்சமோ எனில் தோல், ரத்தம், மாமிசம், மேதை எனப்படும் மூளை, அஸ்தி எனப்படும் எலும்பு ஆகிய ஐந்தும் ஆகும். அதே அண்டமாகிய உலகில் ப்ருத்வி, அப்பு, வாயு, தேயு, ஆகாசம் ஆகிய ஐந்தாகும்.


தொடரும்.

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம் 10

सुधाधारासारै-श्रणयुगलान्त -विर्गालितै:
प्र्प्नचं सिञ्चन्ति पुनरपि रसाम्नाय -महस:
अवाप्य स्वां भूमिं भुजगनिभ् -मध्युष्ट -वलयं
स्वमात्मानं कृत्वा स्वपिषि कुलकुण्डे कुहरिणि ஸ்லோகம் 10

ஸுதா₄தா₄ராஸாரை-ஶ்ரணயுக₃லாந்த₁ -விர்கா₃லிதை₁:
ப்₁ர்ப்₁னச₁ம்ʼ ஸிஞ்ச₁ந்தி₁ பு₁னரபி₁ ரஸாம்னாய -மஹஸ:
அவாப்₁ய ஸ்வாம்ʼ பூ₄மிம்ʼ பு₄ஜ₁க₃னிப்₄ -மத்₄யுஷ்ட₁ -வலயம்ʼ
ஸ்வமாத்₁மானம்ʼ க்₁ருʼத்₁வா ஸ்வபி₁ஷி கு₁லகு₁ண்டே₃ கு₁ஹரிணி

கவிராயரின் தமிழாக்கம்

தாளிணைக் கமலம் ஊறித்
தரும் அமிழ்து உடல் மூழ்க
மீள அப் பதங்கள் யாவும்
விட்டு முன் பழைய மூலம்
வாளரவு என்ன ஆகம்
வளைத்து உயர் பணத்தினோடு
நாள் உமைக் கயற்கண் துஞ்சு
ஞான ஆனந்தம் மின்னே!

நம் உடலின் மூலாதாரம் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டோம் அல்லவா? அந்த மூலாதாரத்தில் இருந்தே சக்தி பிறக்கிறது. நம் உடலுக்கு ஆதாரமும் அதுவே. அந்த மூலாதாரம் இல்லை எனில் நம் தேகம் கீழே விழுந்து விடும்; அல்லது உடல் மேலே செல்லும் என்று ஆன்றோர் கூறுகின்றனர். ஆகவே நம்மைத்தாங்கிப் பிடிப்பதே அந்த மூலாதாரம் தான். இவ்வுலகிலும் எல்லாவற்றிற்கு ஆதாரமாக பூமியே உள்ளதே. ஆகவே பூமி தத்துவத்தைச் சுட்டிக்காட்டும் நம் உடலின் அந்த மூலாதாரத்தில் அம்பிகை ஒரு சின்ன குண்டலம் போல் சுருட்டிக் கொண்டு காணப்படுகிறாள்.

நம் அனைவரின் உடலிலும் இந்த சக்தி இருக்கிறது. இதுவே பரப்ரம்ம சக்தி என்றும் கூறுவார்கள். இதை எழுப்பவெனச் செய்யும் வழிபாடுகளையே சாக்தத்திலும், யோக முறையிலும் சொல்லப்படும் வழிபாடுகள். இந்த சக்தியை யோக சாதனை மூலம் எழுப்ப வேண்டும். அதற்கெனத் தனியான மந்திரம் உள்ளது. முதலில் மனம் பக்குவம் அடைய வேண்டும். மனச் சஞ்சலம் கூடாது. பின்னர் தக்க குரு மூலம் உபதேசம் பெற்று மந்திர ஜபம் செய்து யோக சாதனை செய்தோமானால் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்பு அடைந்து மேலுள்ள சக்கரங்களையெல்லாம் ஊடுருவிக்கொண்டு மெல்ல மெல்ல மேலே சென்று ஆக்ஞா சக்கரத்தில் பராசக்தியாகக் காட்சி கொடுத்து சஹஸ்ராரத்தில் பரப்ரும்மம் எனப்படும் சதாசிவத்தோடு ஐக்கியம் ஆகிப் பின்னர் மீண்டும் தனது இருப்பிடமான மூலாதாரத்திற்கே வந்தடைந்து மறுபடியும் ஒரு பாம்பைப் போல் குண்டல வடிவில் சுருட்டிக்கொண்டு மூலாதாரத்தில் அம்பிகை உறங்குகிறாள்.

மேலுள்ள ஸ்லோகத்தின் பொதுவான பொருள் இதுவே. ஆனால் இந்த சாதனை சாதாரணமாகச் செய்யக் கூடியது இல்லை. எங்கேயோ லக்ஷத்தில் ஒருத்தர் செய்தால் பெரிய விஷயம். என்றாலும் சில விஷயங்களை ஸ்லோகங்களிலும், சித்தர் பாடல்களிலும், மற்ற அம்பிகை பாடல்களிலும் சொல்லி இருப்பது இம்மாதிரியான மனிதர்கள் இருந்து அனுபவித்துச் சொல்லி இருப்பதை நாம தெரிந்து கொள்ளத்தான்.

அம்பிகையின் திருவடிகளிலிருந்து அமிருத தாரை பெருகுகிறதாம். அந்த அமிருததாரையால் பக்தனின் ஐம்பூதங்களால் ஆன உடலிலுள்ள அனைத்து நாடிகளையும் நனைத்துக்கொண்டு மேலே சென்று பக்தனுக்குத் தன் பூர்ண சந்திரப் பிரவாகமான அமிர்தத்தைக் காட்டி அங்கிருந்து கீழிறங்கி வந்து மீண்டும் மூலாதாரத்துக்கு வந்து தன் உறக்கத்தைத் தொடங்குகிறாள். யோகம் என்பது இப்படி பரிபூரணமாக இருத்தல் வேண்டும். இப்படி மேலே போய்விட்டு ஏன் கீழே இறங்க வேண்டும்? யோகியானவன் தன் யோகசாதனையைப் பூர்த்தி செய்ய மட்டுமல்ல. இப்படியான யோகிகளையும் நினைத்தால் அம்பிகை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடலாம் அல்லவா? அதற்காகவே எவ்வளவு உயரம் போனாலும் கடைசியில் கீழே இறங்கித்தான் ஆகவேண்டும்; நீயே கதி தாயே எனச் சரணாகதி அடைகின்றன.ர்.


அம்பாளின் திருவடித்தாமரைகளைப் பற்றிக் கூறுகையில் பட்டரும் இவ்வாறு கூறுகின்றார்.

சென்னியதுன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னிய துன் திருமந்திரம் சிந்தூர வண்ணப்பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியதென்றும் உன்றன் பரமாகம பத்ததியே.

சிந்தூரம் போல் செந்நிறம் வாய்ந்த தேவியின் திருவடித்தாமரை என் சிரத்தின் மேல் முடி போல் திகழ்கின்றது. அழகு வாய்ந்த தாமரை மலரால் செய்யப்பட்ட
திருமுடியைப் போல் காண்கின்றன அம்பிகையின் திருவடித்தாமரைகள். என் நெஞ்சிலோ நிலையாது என்றும் இருப்பது அம்பிகையின் திருமந்திரமாகும். அந்த மந்திரங்களைச் சொல்லி நான் அவளையே தியானிக்கிறேன். என் மனம், சொல்/வாக்கு, காயம்/உடல் ஆகிய அனைத்தாலும் நான் அவளைத்தவிர வேறு எவரையும் நினைப்பதில்லை. இவை அனைத்தையும் கொண்டு நான் பரம ஆகமங்களிலும் சொல்லப்பட்ட பத்ததிகளால் அம்பிகையை வழிபட்டு வருகின்றேன்.

அபிராமி அந்தாதி ஓரளவுக்குத் தான் பொருந்தி வருகிறது. கூடியவரை பொதுவான பொருள் இருக்கும் செய்யுளையே தேர்ந்தெடுக்கிறேன்.

வீரைக்கவிராஜ பண்டிதரின் செளந்தரிய லஹரி தமிழாக்கம் ! ஒரு முன்னுரை

வீரைக்கவிராஜ பண்டிதரின் செளந்தர்ய லகரி தமிழாக்கம்
முதலில் பாயிரச் செய்யுள்களை மட்டும் இங்கே இடுகிறேன். அதன் பின்னர் அந்த அந்த ஸ்லோகத்துக்கு உரிய செய்யுட்களைக் குறிப்பிட்ட பகுதியில் சேர்த்துவிடுகிறேன். சிரமம் பார்க்காமல் போய்ப் படிக்கவும் சுட்டி தந்துவிடுகிறேன். நன்றி. இதை அனுப்பித்தந்த திரு அப்பாதுரைக்கு என் நன்றி.

பாயிரம்

மொழிந்த மறை நூல் இயற்று முகபடாம்
அணிந்து முதுஞான தானம்
பொழிந்து தனது இணைமணி என்று இருசுடரும்
ப்ணைகளிற்றைப் போற்றல் செய்வாம்
வழிந்து பெரும்புனல் பரந்து வடவரையில்
உலகு ஏழும் ஏழும் ஒக்க
வழிந்திடினும் அழியாத அபிராமி
பாடல் வளம் அளிக்க என்றே.

இத்தனை நாள் நீயிருக்க வாயிருக்க
இயல் இருக்க அருள்பாடாமல்
மத்தனை ஆளுங்கொடியை இப்போது என்
வழுத்துகின்றவாறு என்பீரேல்
பித்தனை யார் ஏவல் கொள்வார் பித்து ஒழிந்தால்
உரியவர்கள் அடிமை ஓலைக்
கொத்தனை யார் ஏவல் கொள்வார் கொள்ளும்போது
எவனாலே குழப்பலாமே.

யாமளைதன் பெரும்புகழை ஆதிமறை
நாலில் வடித்தெடுத்த நூலை
நாமகள் தன் பாடல் இது என்று அரனார்க்கு
நவிலவ்வர் நகை செய்தன்றே
பாமகளை அருகழைத்துப் பருப்பதத்திற்
பொறித்திருந்த பரிசு காட்டும்
சேமநிதிப்பாடலை என் புன்கவியால்
கொள்வது அவ்வடிமை அன்றே.

அரன் கயிலைப் புறத்து எழுதப்படு நூலை
அருந்தவத்துப் புட்பதந்தன்
பரந்த வடவரை அழுத்த அதைக் கவுட
பாதர் உளம்பதித்து முற்றும்
தரம் பெறு சொல் அமுது எனப் பின் சங்கரமா
முனிக்கு அருள அந்த மேகம்
சுரந்து உலகில் வாடும் உயிர்ப் பயிர் தழைப்பச்
சொரிந்தது எனச் சொல்வர் நல்லோர்.

இன்ன தன்மைய நூலினைக் கவி
ராசராச வரோதய
மன்னன் நம் பிரமாதராயன்
வடித்து அரும்பொருள் கூறவே
கன்னல் அம்சிலை வேள் எனுங் கவி\
ராசபண்டிதன் வீரையான்
சொல் நயம்பெறு காவியக்கவி
சொல்ல என்று தொடங்குவான்

வடமொழி எனும் பழைய விரிகடல் பிறந்து இறைவர்
மணையிடை இருந்து சிலைமேல்
இடமொடு தவழ்ந்து தனது இடுபெயர் சவுந்தரிய
லகரி என நின்று வளர்மாது
அடலரசு முன்பினுள் பல மத ப்ரபந்தம் எனும்
அடுபகை துரந்து என் மணிநா
நடம் இடு பெருங்கவிதை மதகரியொடும் புவியை
நகர் வலம் வந்தது இதுவே.

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம் 9

महीं मूलाधारे कमपि मणिपुरे हुतवहं
स्थित स्वाधिष्टाने हृदि मरुत -माकाश -मुपरी
मनोस्पी भ्रूमध्ये सकलमपि मितवा कुलपथं
सहस्रारे पध्मे सह रहसि पत्या विहरसे


மஹீம்ʼ மூலாதா₄ரே க₁மபி₁ மணிபு₁ரே ஹுத₁வஹம்ʼ
ஸ்தி₂த₁ ஸ்வாதி₄ஷ்டா₁னே ஹ்ருʼதி₃ மருத₁ -மாகா₁ஶ -முப₁ரீ
மனோஸ்பீ₁ ப்₄ரூமத்₄யே ஸக₁லமபி₁ மித₁வா கு₁லப₁த₂ம்ʼ
ஸஹஸ்ராரே ப₁த்₄மே ஸஹ ரஹஸி ப₁த்₁யா விஹரஸே


மூல மணிபூரகத்தோடு இலிங்க மார்பு
முதுகளம் விற்-புருவ நடு மொழிவது ஆறு
ஞாலமும் மென்புனலும் அனல் பிழம்பும் காலும்
நாதம் உறு பெருவெளியும் மனமும் ஆக
மேல் அணுகிக் குளபதத்தைப் பின்னிட்டு அப்பால்
மென்கமலத்து ஆயிரம் தோட்டு அருண பீடத்து
ஆலவிடம் பருகிய தன் மைழ்நரோடும்
ஆனந்தம் உறும் பொருளை அறியலாமே

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

நம்முள்ளே உறைந்து கிடக்கும் சக்தியை எழுப்புவதே மூலாதரத்தில் உறங்குவதை எழுப்புவது என்பார்கள். இது சாதாரணமான விஷயம் இல்லை. இதைக் குறித்து எழுதுவதாலேயே எனக்குப் புரிந்துவிடவும் இல்லை. இங்கே கூறி இருப்பது அம்பிகையானவள் மூலாதாரத்தின் ப்ருத்வி தத்துவத்தில் இருந்து எழுந்து ஒவ்வொரு படியாக மேலேறிச் சென்றுக் கடசியில் ஆயிரம் இதழ் கொண்ட சஹஸ்ராரச் சக்கரத்தில் அதிரகசியமான இடத்தில் இருக்கும் சிவத்தோடு ஐக்கியமாகிறாள் என்பதே பொதுவான அர்த்தம்.

தற்காலங்களில் இந்தக் குண்டலினி யோகம் படும்பாடு சொல்லி முடியாது. சிம்பிள் குண்டலினி யோகா என்றெல்லாம் வந்து இருக்கிறது. பல குருமார்கள் சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால் இந்தக் குண்டலினியை எளிதில் அடைய முடியுமா? அந்த குருமார்கள் சொல்லித் தருவது போல் எதுவும் நடக்கிறதா? யாருக்கானும் அது குறித்து சரியாகச் சொல்ல முடியுமா? இல்லை என்பதே பதில். சாதாரணமாக தியானம் அல்லது பிராணாயாமம் பண்ணுகையிலேயே உடலில் ஒருவித உணர்ச்சி ஊடுருவும். இது அனைவரும் அறிந்திருப்போம். இம்மாதிரியாக ஏதோ தோன்றுவதைத் தான் குண்டலினி எழுந்துவிட்டதாக அனைவரும் நினைக்கலாம். உண்மையில் இதற்குக் கடுமையான பயிற்சி வேண்டும். அதோடு இப்படி அனைவரும் அறியும்படியெல்லாம் குண்டலினி எழுந்து கொள்ளவும் செய்யாது.

எப்படி மின்சாரக் கம்பிகளின் இணைப்பில் கண்ணுக்குத் தெரியாதபடிக்கு மின்சாரம் பாய்கிறதோ, அப்படி நமக்கும் சரியான குரு என்னும் இணைப்பின் மூலம் மந்த்ரோபதேசம் நடைபெற வேண்டும். அதிலும் ஒவ்வொரு ஆதாரத்துக்கும் உரிய மந்திரங்கள் உள்ளன. மின்சாரம் கண்ணுக்குத் தெரியாமல் வருவது போல் ஆதாரங்களுக்குரிய மந்திரத்தையும் ரஹஸ்யமாகவே கற்க வேண்டும். இதற்குச் சரியான குரு தேவை. குண்டலினி விழித்துக்கொள்வதை எல்லாம் உணர்ந்து தான் தெரிந்து கொள்ள இயலும். உணர்ந்தவர் யாரும் அது குறித்துச் சொல்ல மாட்டார்கள்.

இப்போ அம்பிகையைப் பார்ப்போம். மூலாதாரம் என்பது நம் உடலில் முதுகெலும்பின் கீழ் மலத்துவாரத்துக்குச் சற்று மேலே உள்ளது. நான்கு இதழ் தாமரை போல் காணப்படும் இது பூமிக்குச் சமமாகச் சொல்லப்படும். இதற்கெனத் தனியான குணங்கள் உண்டு. இந்த மூலாதாரத்துக்கு அடுத்து இரண்டு விரல் கடை மேலே ப்யூபிக் எலும்பில் உள்ளது ஸ்வாதிஷ்டானம். ஆறு இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்பில் உள்ள இது உருக்கி வாரத்த வெள்ளியின் நிறம் கொண்டு நீருடன் சம்பந்தம் கொண்டது. இந்த மூலாதாரமும், ஸ்வாதிஷ்டானமும் சேர்ந்தே அக்னிகண்டம் என்பார்கள். இதற்கு மேலே பிரம்மக்ரந்தி என்னும் முடிச்சு. இந்த இடம் ச்ருஷ்டிக்கும் காரணமாக அமைந்தது. ஆகவே பிரம்மக்ரந்தி என்பது பொருத்தம் அல்லவா?

அதற்கு அடுத்து மணிபூரகம். நாபிக்கமலம் அல்லது தொப்புள் இதன் இருப்பிடம். பத்து இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்புக் கொண்ட இது நெருப்போடு சம்பந்தப்பட்டது. சிவந்த நிறம் கொண்டது. நம்முடைய அனைத்து உணர்வுகளையும் பசியைத் தூண்டும் சக்தியும், ஜீரணசக்தியை ஏற்படுத்தும் சக்தியும் உள்ளது. இதற்கு அடுத்து அநாஹதம். உடலின் மத்தியில் இருதய பாகத்தைக் குறிக்கும் இது 12 இதழ் தாமரைப்பூ வடிவில் காணப்படும். பச்சை நிறம் கொண்ட இதற்குக் காற்றின் சக்தி. காற்று நமக்கு எவ்வளவு தேவை என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. காற்றுத்தான் நம்மைக் காக்கவும் செய்கிறது. சரியான உணவும், மூச்சுக்காற்றும், நீருமே நம்மைக் காக்கிறது. மணிபூரகமும், அநாஹதமும் சேர்ந்து சூரிய கண்டம். இதற்கு மேல் விஷ்ணுக்ரந்தி என்னும் முடிச்சு காணப்படும்.

அடுத்து விசுத்திச் சக்கரம். இது நம் கழுத்துப்பாகம். நஞ்சுண்ட கண்டர் அந்தக் கொடிய விஷத்தைத் தான் உண்டதாலும் கண்டத்தில் நிறுத்திக்கொண்டதாலுமே ப்ரபஞ்சம் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆகவே ஒவ்வொருத்தருக்கும் இந்த கண்டம் எனப்படும் கழுத்துப்பாகம் முக்கியமானது. குரல்வளையைப் பிடித்தால் நம்மால் மூச்சுவிட முடியுமா? 16 இதழ் தாமரைப்பூப் போன்ற அமைப்புக் கொண்ட இது நிறமற்றது நம்முடைய சுயம் வெளிப்படும் இடம் இதுவே. பிந்துச் சக்கரத்திற்கு அருகே இருக்கும் இங்கே விஷமும் தயார் நிலையில். அமிர்தமும் தயார் நிலையில். அதனாலேயே சில சமயம் விஷம்போல் பேசுவதும், சில சமயம் இனிக்க இனிக்கப் பேசுவதும் நடக்கிறது, இது திறந்து கொண்டாலே நமக்கு முக்தி எனப்படும் அதி அற்புத சித்தி கிடைக்கும். மாறாக இது மூடிக்கொண்டால் மரணம். இதற்கு மேல் ஆக்ஞா சக்கரம். நம்முடைய இருபுருவங்களுக்கிடையே உள்ளது. நெற்றிப்பொட்டு வைக்கும் இடத்தின் பின்னே உள்ள இதைத்தான் பிந்து என்றும் சொல்வோம். நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வதை பிந்து, பிந்தி என்றெல்லாம் சொல்வோம் அல்லவா? இங்கே தான் நம் உடலின் இடநாடியும் பிங்கள நாடியும் சூக்ஷ்ம நாடியோடு சேர்ந்து இங்கே வரும் குண்டலினியை மேலே அனுப்பும். இந்த விசுத்தி சக்கரமும், ஆக்ஞா சக்கரமும் சேர்ந்தது ஸோமகுண்டம் அதற்கு மேலே உள்ளது ருத்ரக்ரந்தி எனப்படும் முடிச்சு.

இந்த க்ரந்தி என்பது நம் நாடிகளில் காணப்படும் முடிச்சை மட்டும் குறிக்காது நம் எண்ணங்களில் ஏற்படும் பூர்வவாசனையால் ஏற்படும் சிக்கல்களையும் குறிக்கும். ஆகவே இவை அனைத்தையும் பிளந்து கொண்டே அம்பிகை மேலேறுவாள். எனில் எவ்வளவு முயற்சி வேண்டும் என்பதை நினைத்துப் பார்ப்போமாக! இங்கே அம்பிகையை மூலாதாரத்திலிருந்து எழுப்பி சஹஸ்ராரத்துக்குக் கொண்டு போய் சதாசிவத்தோடு சேர்த்து மீண்டும் மூலாதாரத்துக்கு அம்பிகை எழுந்தருளும் தருணத்திற்குக் காத்திருப்பதைக் குறிக்கும்.

நம்முள்ளே தினம் தினம் நாம் செய்யவேண்டிய வேள்வியை இது குறிக்கும். நம்முள்ளே உறைந்து கிடக்கும் சக்தியை எழுப்பி நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த சகல சித்திகளையும் தரும் தேவியை அபிராமி பட்டர்,

சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே."

என்கிறார். ஆதிபராசக்தி அட்டமாசித்திகளை மட்டுமில்லாமல் சக்தியைத்தம்மிடத்தே தழைக்கச் செய்யப் பரசிவனோடும் ஐக்கியமாகி, தவம்புரிவார்க்கு மோக்ஷ ஆனந்தத்தைத் தருகிறாள்.. அந்த முத்தியைப் பெற அடியிடும் மூலமும், மூலமாகித் தோன்றி எழும் ஞானம் ஆகிய எல்லாமாக இருப்பவள் மாதா திரிபுரசுந்தரியே.

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம் 8

முழு உண்மை, சத்தியம், இங்கே பிரம்மம் என்று சொல்வது தகுமா தெரியலை; அது வெளிப்படையான இருமைத் தத்துவத்திலிருந்து ஒன்றாக ஆவதே ஆகும். இதற்குத் தான் அம்பிகை வழிபாடு. இங்கே நம் உள்ளத்தில் இடைவிடாது நடக்கும் போரையே உதாரணமாகச் சுட்டுகிறோம். ஆகவே நம்முடைய மனசாட்சியையே அம்பிகையாக நினைத்துக் கொண்டால், போதுமானது. என்ன பெயரில் இருந்தால் என்ன! இருப்பது ஒரே பரம்பொருளே; எந்தப் பெயரிட்டு அழைத்தும், அம்பிகையை வணங்கி அவள் அருளைப் பெறலாம்.

அந்த தேவி இருக்குமிடமோ சிந்தாமணி க்ருஹம் ஆகும். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அம்பிகையின் சிந்தாமணி க்ருஹம் அனைத்துக்கும் அப்பால் அமிருத ஸாகரத்தின் மத்தியில் ரத்தினத் தீவில் அமைந்துள்ளது.

सुधसिन्धो -र्मध्ये सुरविटपि- वाटी-परिवृते
मणिद्वीपे नीपोबनवति चिन्तामणि -गृहे
शिवाकारे मञ्जे परमशिव -पर्यङ्कनिलयां
भजन्ति त्वां धन्या: कतिचन चिदानन्द -लहरीम्

ஸுத₄ஸிந்தோ₄ -ர்மத்₄யே ஸுரவிட₁பி₁- வாடீ₁-ப₁ரிவ்ருʼதே₁
மணித்₃வீபே₁ நீபோ₁ப₃னவதி₁ சி₁ந்தா₁மணி -க்₃ருʼஹே
ஶிவாகா₁ரே மஞ்ஜே₁ ப₁ரமஶிவ -ப₁ர்யங்க₁னிலயாம்ʼ
ப₄ஜ₁ந்தி₁ த்₁வாம்ʼ த₄ன்யா: க₁தி₁ச₁ன சி₁தா₃னந்த₃ -லஹரீம்

ஆரமுதின் கடல் வேலி செழும் தரு
வாய் மணி பம்பிய தீவூடே
பாரகடம்பு அடர் கானில் அரும் கொடை
பாய் மணி மண்டப வீடுளே
கோரசிவன் பரமேசன் உன் மஞ்சம் ஓர்
கூர் பர்யங்கமெனா மேலே
சீர் அடரும் பரஞானம் உறும் களி
தேவர் அருந்துவர் பூமாதே.
கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

லலிதா சஹஸ்ரநாமாவளியில் அம்பிகையின் இருப்பிடம் ஆன ஸ்ரீ நகரம் குறித்த வர்ணனையில் “ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர நாயிகா, சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸனஸ்திதா” என்று வரும். ஈசனுக்குக்கைலையும், விஷ்ணுவுக்கு வைகுண்டமும் போல ஸ்ரீலலிதைக்கு ஸ்ரீநகரம். ஆனாலும் இன்னொரு வாசஸ்தலமும் உண்டு அம்பிகைக்கு. அது தான் மேலே சொன்ன மேருவில் செய்யும் வாசம். பிரம்ம லோகம், விஷ்ணு லோகம், சிவலோகம் ஆகியவற்றுக்கு நடுநாயகமாக பிரதானமாய் இருக்கும் சிகரத்திலே அம்பிகையின் வாசஸ்தலமான மேரு எனக் குறிப்பிட்டிருக்கிறது. இதைத் தவிரவும் ஸ்ரீநகரம் எனப்படும் ஸ்ரீநகர வாசியாவாள் அம்பிகை. அந்த ஸ்ரீநகரத்தின் வர்ணனையைத் தான் இப்போது பார்க்கிறோம். மேருவில் இருக்கும் ஸ்ரீநகரம் அம்பாளின் ஆக்ஞையின் பேரில் விஸ்வகர்மா நிர்மாணித்தான் எனில் இது அம்பிகையே தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டது. இது அமிருத சாகரத்தின் மத்தியில் ஒரு தீவில் உள்ளது.

இந்த ஸ்ரீநகரத்தில் இருபத்தைந்து கோட்டைகள்,ஆவரணங்கள் எனப்படும் வெளிப்பிரகாரங்கள் இருபத்தைந்து. இவற்றில் இரும்பு, தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் ஆகியவற்றாலும், பின்னர் மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றாலும்சூரியன், சந்திரன், மன்மதன் ஆகியவர்களின் தேஜஸால் ஆன கோட்டை என உண்டு. இங்கே உள்ள கடம்ப வனத்தைத் தாண்டிச் சென்றால் பத்மங்கள் எனப்படும் தாமரை பூத்த தடாகத்திலே சிந்தாமணிக்கற்களைப் படியாகக் கொண்ட அரண்மனையிலே பஞ்ச பிரம்மங்களை (பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன்) நான்கு கால்களாகவும், சதாசிவனை மேல் பலகையாகவும் கொண்ட சிம்ஹாசனத்தில் காமேச்வரன் மடியில் அமர்ந்து கொண்டு லலிதாம்பிகை தர்பார் நடத்துகிறாள். இதுவே ஓங்கார மஞ்சம் அர்த்தம், மாத்திரை, பிந்து அ+உ+ம.

இந்தச் சிந்தாமணி க்ருஹம் என்பது என்ன?? சிந்தா என்பதெல்லாம் நம்முடைய சிந்தைகளே ஆகும். மணி நம்முடைய சிந்தை துர் சிந்தையாக இல்லாமல் பொறுக்கி எடுத்த முத்துக்களைப் போல மணியாக அமையப்பெற்று எப்போதும் அவள் நாமத்தையே ஓங்கார ஸ்வரூபத்தையே நம் சிந்தைக்குள்ளே குடி கொள்ளுமாறு பண்ணுவதே ஆகும். இதை யோக முறையில் சிந்தித்தால் நன்கு புரியும். வெளியே இருந்து இப்படிப் பட்டகிருஹத்திலா அம்பிகை வாசம் செய்கிறாள் எனக் கேள்வி கேட்பது சரியில்லை. இதை உள்ளார்ந்து கூர்ந்து கவனித்துக்கொண்டு பார்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் உடலை, நம்முள்ளே உறையும் சிந்தனைகளை, நம் உள்முக வழிபாட்டையே குறிக்கும். அங்கே சுத்தி, இங்கே சுத்திக் கடைசியில் நம்முள்ளே உறையும் அம்பாளை நாம் காணவேண்டும். இதைத் தான் அபிராமி பட்டர் கூறுகிறார்.


ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.

ஆதிசக்தி ஏகப் பரம்பொருள். இந்த ஏகப்பரம்பொருளானது, முதலில் ஒரே பொருளாகிய பராசக்தியாகத் தோன்றிப் பின்னர் பல்வேறு சக்திகளாய் விரிந்து இவ்வுலகத்தின் அனைத்திலும் நிறைந்து, பின்னர் அவற்றினின்றும் நீங்கியும் நிற்பாள். ஆனாலும் சக்தியானவள் ஒன்றே தான். இந்த ஒரே சக்தி என் நெஞ்சில் நீங்காது நிலை பெற்று நின்றிருக்கிறாளே, என் அம்மே, இது என்ன அதிசயமானதாய் இருக்கிறதே. இந்தப்பேருண்மையை உணர்ந்தவர்கள் வேறுயாரென்றால் இவ்வுலகம் அழியுங்கால் ஆலிலையில் துயின்றானே அந்தத் திருமாலும், உன் அருமைக்கணவன் ஆன என் ஐயன் ஈசனும் தான். இவர்கள் இருவருமே அறிவார்கள்.