எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Thursday, January 19, 2012

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம் 8

முழு உண்மை, சத்தியம், இங்கே பிரம்மம் என்று சொல்வது தகுமா தெரியலை; அது வெளிப்படையான இருமைத் தத்துவத்திலிருந்து ஒன்றாக ஆவதே ஆகும். இதற்குத் தான் அம்பிகை வழிபாடு. இங்கே நம் உள்ளத்தில் இடைவிடாது நடக்கும் போரையே உதாரணமாகச் சுட்டுகிறோம். ஆகவே நம்முடைய மனசாட்சியையே அம்பிகையாக நினைத்துக் கொண்டால், போதுமானது. என்ன பெயரில் இருந்தால் என்ன! இருப்பது ஒரே பரம்பொருளே; எந்தப் பெயரிட்டு அழைத்தும், அம்பிகையை வணங்கி அவள் அருளைப் பெறலாம்.

அந்த தேவி இருக்குமிடமோ சிந்தாமணி க்ருஹம் ஆகும். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அம்பிகையின் சிந்தாமணி க்ருஹம் அனைத்துக்கும் அப்பால் அமிருத ஸாகரத்தின் மத்தியில் ரத்தினத் தீவில் அமைந்துள்ளது.

सुधसिन्धो -र्मध्ये सुरविटपि- वाटी-परिवृते
मणिद्वीपे नीपोबनवति चिन्तामणि -गृहे
शिवाकारे मञ्जे परमशिव -पर्यङ्कनिलयां
भजन्ति त्वां धन्या: कतिचन चिदानन्द -लहरीम्

ஸுத₄ஸிந்தோ₄ -ர்மத்₄யே ஸுரவிட₁பி₁- வாடீ₁-ப₁ரிவ்ருʼதே₁
மணித்₃வீபே₁ நீபோ₁ப₃னவதி₁ சி₁ந்தா₁மணி -க்₃ருʼஹே
ஶிவாகா₁ரே மஞ்ஜே₁ ப₁ரமஶிவ -ப₁ர்யங்க₁னிலயாம்ʼ
ப₄ஜ₁ந்தி₁ த்₁வாம்ʼ த₄ன்யா: க₁தி₁ச₁ன சி₁தா₃னந்த₃ -லஹரீம்

ஆரமுதின் கடல் வேலி செழும் தரு
வாய் மணி பம்பிய தீவூடே
பாரகடம்பு அடர் கானில் அரும் கொடை
பாய் மணி மண்டப வீடுளே
கோரசிவன் பரமேசன் உன் மஞ்சம் ஓர்
கூர் பர்யங்கமெனா மேலே
சீர் அடரும் பரஞானம் உறும் களி
தேவர் அருந்துவர் பூமாதே.
கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

லலிதா சஹஸ்ரநாமாவளியில் அம்பிகையின் இருப்பிடம் ஆன ஸ்ரீ நகரம் குறித்த வர்ணனையில் “ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர நாயிகா, சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸனஸ்திதா” என்று வரும். ஈசனுக்குக்கைலையும், விஷ்ணுவுக்கு வைகுண்டமும் போல ஸ்ரீலலிதைக்கு ஸ்ரீநகரம். ஆனாலும் இன்னொரு வாசஸ்தலமும் உண்டு அம்பிகைக்கு. அது தான் மேலே சொன்ன மேருவில் செய்யும் வாசம். பிரம்ம லோகம், விஷ்ணு லோகம், சிவலோகம் ஆகியவற்றுக்கு நடுநாயகமாக பிரதானமாய் இருக்கும் சிகரத்திலே அம்பிகையின் வாசஸ்தலமான மேரு எனக் குறிப்பிட்டிருக்கிறது. இதைத் தவிரவும் ஸ்ரீநகரம் எனப்படும் ஸ்ரீநகர வாசியாவாள் அம்பிகை. அந்த ஸ்ரீநகரத்தின் வர்ணனையைத் தான் இப்போது பார்க்கிறோம். மேருவில் இருக்கும் ஸ்ரீநகரம் அம்பாளின் ஆக்ஞையின் பேரில் விஸ்வகர்மா நிர்மாணித்தான் எனில் இது அம்பிகையே தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டது. இது அமிருத சாகரத்தின் மத்தியில் ஒரு தீவில் உள்ளது.

இந்த ஸ்ரீநகரத்தில் இருபத்தைந்து கோட்டைகள்,ஆவரணங்கள் எனப்படும் வெளிப்பிரகாரங்கள் இருபத்தைந்து. இவற்றில் இரும்பு, தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் ஆகியவற்றாலும், பின்னர் மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றாலும்சூரியன், சந்திரன், மன்மதன் ஆகியவர்களின் தேஜஸால் ஆன கோட்டை என உண்டு. இங்கே உள்ள கடம்ப வனத்தைத் தாண்டிச் சென்றால் பத்மங்கள் எனப்படும் தாமரை பூத்த தடாகத்திலே சிந்தாமணிக்கற்களைப் படியாகக் கொண்ட அரண்மனையிலே பஞ்ச பிரம்மங்களை (பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன்) நான்கு கால்களாகவும், சதாசிவனை மேல் பலகையாகவும் கொண்ட சிம்ஹாசனத்தில் காமேச்வரன் மடியில் அமர்ந்து கொண்டு லலிதாம்பிகை தர்பார் நடத்துகிறாள். இதுவே ஓங்கார மஞ்சம் அர்த்தம், மாத்திரை, பிந்து அ+உ+ம.

இந்தச் சிந்தாமணி க்ருஹம் என்பது என்ன?? சிந்தா என்பதெல்லாம் நம்முடைய சிந்தைகளே ஆகும். மணி நம்முடைய சிந்தை துர் சிந்தையாக இல்லாமல் பொறுக்கி எடுத்த முத்துக்களைப் போல மணியாக அமையப்பெற்று எப்போதும் அவள் நாமத்தையே ஓங்கார ஸ்வரூபத்தையே நம் சிந்தைக்குள்ளே குடி கொள்ளுமாறு பண்ணுவதே ஆகும். இதை யோக முறையில் சிந்தித்தால் நன்கு புரியும். வெளியே இருந்து இப்படிப் பட்டகிருஹத்திலா அம்பிகை வாசம் செய்கிறாள் எனக் கேள்வி கேட்பது சரியில்லை. இதை உள்ளார்ந்து கூர்ந்து கவனித்துக்கொண்டு பார்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் உடலை, நம்முள்ளே உறையும் சிந்தனைகளை, நம் உள்முக வழிபாட்டையே குறிக்கும். அங்கே சுத்தி, இங்கே சுத்திக் கடைசியில் நம்முள்ளே உறையும் அம்பாளை நாம் காணவேண்டும். இதைத் தான் அபிராமி பட்டர் கூறுகிறார்.


ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.

ஆதிசக்தி ஏகப் பரம்பொருள். இந்த ஏகப்பரம்பொருளானது, முதலில் ஒரே பொருளாகிய பராசக்தியாகத் தோன்றிப் பின்னர் பல்வேறு சக்திகளாய் விரிந்து இவ்வுலகத்தின் அனைத்திலும் நிறைந்து, பின்னர் அவற்றினின்றும் நீங்கியும் நிற்பாள். ஆனாலும் சக்தியானவள் ஒன்றே தான். இந்த ஒரே சக்தி என் நெஞ்சில் நீங்காது நிலை பெற்று நின்றிருக்கிறாளே, என் அம்மே, இது என்ன அதிசயமானதாய் இருக்கிறதே. இந்தப்பேருண்மையை உணர்ந்தவர்கள் வேறுயாரென்றால் இவ்வுலகம் அழியுங்கால் ஆலிலையில் துயின்றானே அந்தத் திருமாலும், உன் அருமைக்கணவன் ஆன என் ஐயன் ஈசனும் தான். இவர்கள் இருவருமே அறிவார்கள்.

No comments:

Post a Comment