எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Thursday, January 19, 2012

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம் 11 தொடர்ச்சி

அம்பிகையின் பரிபூரண சாந்நித்யம் ஶ்ரீவித்யா தேவதையாக இருக்கும் யந்த்ர ரூபத்திலேயே சிறப்பாகக் காணப்படும். ஆகவே இதற்கெனச் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகிறது. அடுத்து இவற்றில் காணப்படும் எட்டுத்தளங்கள் வஸுதல: வஸுக்கள் எனப்படும். அஷ்டவஸுக்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? ஆகையால் இங்கேயும் எட்டு என்னும் எண்ணையே இந்த வஸு தல: என்னும் சொல் குறிக்கும். அடுத்து வரும் பதினாறு தளங்கள் பதினாறு கலைகளையும் குறிக்கின்றன. இவற்றோடு பிந்துவையும் சேர்த்துக்கொண்டு நாற்பத்து நான்கு கோணங்கள் என்று சொல்வார்கள். இந்த ஶ்ரீசக்ரமும் பூப்ரஸ்தார்ம், மேரு ப்ரஸ்தாரம் என இருவகைப்படும். மேரு என்பதையும் அனைவரும் பார்த்திருப்போம். மேருவும் பூர்ண மேரு, அர்த்த மேரு என இருவகைப்படும். ஆகவே அவற்றுக்கு உரிய முறையில் வழிபடவேண்டும்.

அம்பாளின் இந்த வாசஸ்தலத்துக்கு ஶ்ரீநகரம், ஶ்ரீபுரம் என்றே பெயர். இதை எல்லாம் குருமுகமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். மேலோட்டமாகச் சொல்லியதை வைத்து எதுவும் செய்யக் கூடாது. சக்கரங்கள் வழிபடுபவரின் எந்தப்பக்கமாக இருக்கவேண்டும் என்பதில் இருந்து கணக்கு உண்டு. அம்பிகையை வழிபடுவதும் இருவிதமான முறைகளில் வழிபடுவது உண்டு. ஒரு வழிபாட்டு முறையில் சக்கரத்தின் நடு முக்கோணம் மேல் நோக்கியும், இன்னொரு முறையில் நடு முக்கோணம் கீழ் நோக்கியும் காணப்படவேண்டும். ஆகவே மிகவும் கவனத்தோடு செய்யப்பட்டு, அதைவிடக்கவனத்தோடு பூஜையில் வைத்து, ஆசாரம் தப்பாமல் குரு மூலம் உபதேசம் பெற்ற பின்னரே இந்த வழிபாடுகளைச் செய்யலாம். அதுவரைக்கும் ஸ்லோகம் மட்டும் சொல்லுவோம்.

இப்படியான தேவியைத் துதித்த பட்டரோ தான் அழிவற்ற இன்பத்திலே வாழும்படியான ஒரு பரம்பொருளே அவள் எனக் கூறுகின்றார். ஶ்ரீசக்ர ராஜ்யத்தில் வசிக்கும் தேவியைத் தன் மனக்கண்ணால் தரிசித்தவர், இந்லழகை வாயினால் உரைக்கவும் முடியுமோ என்கிறார். ஏழு கடல்களாலேயும், ஏழு உலகங்களாலேயும், பெரிய அட்ட குலாசலங்களாலேயும் அணுக முடியாத தேவியானவள் சூரிய, சந்திரர்க்கு நடுவே அவர்களின் சுடரை விடப் பிரகாசமாகக் கோடி சூரியப் பிரகாசமாக நித்தியசூரியாக விளங்குகிறாள் என்கிறார்.

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

மனதாலும் வாக்காலும் அணுகுவதற்கு அரியவளான தேவியை நம் பேரின்ப வாழ்க்கைக்குப் பற்றுக்கோடானவள் என்பதைப் புரிந்து கொண்டு, அவளே கதி எனச் சரணடைந்து, நாம் செய்யும் அனைத்துத் தவறுகளையும், அவள் விலக்கும் காரியங்களைச் செய்தாலும் பொறுக்கும் தன்மையையும் கொண்டவள் அம்பிகை. அந்த உரிமையிலும், தைரியத்திலுமே தாம் அவளை வாழ்த்தித் துதிப்பதாக பட்டர் கூறுகிறார்.

No comments:

Post a Comment