எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Sunday, May 31, 2009

ராமா நீ சமானமெவரு!

ராமனுக்கு யாரும் நிகரில்லை. தன்னுடைய தந்தையின் ஒரு சொல்லுக்காகத் தனக்கு உரிமையுள்ள நாட்டையே விட்டு விட்டுக் காட்டிற்குச் சென்றான். காட்டிலும் க்ஷத்ரிய தர்மத்தின்படி அனைவரையும் காப்பது தன் கடமை என ஒரு ரக்ஷகனாய் இருந்தான். மனைவியைப் பறி கொடுத்து அவன் ஒரு அன்பான உண்மைக் கணவனாய் துடிதுடித்து அழுதான். அவன் யார் சாக்ஷாத் ப்ரப்ரும்மமே அவன் தான். என்றாலும் சாக்ஷாத் ப்ரப்ரும்மமாகவே அவன் இருந்தாலும், அந்த ப்ரும்மமே துடிதுடித்து அழுதது மனைவியைக் காணோம் என.

3574 ஓடி வந்தனன், சாலையின்
சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூஞ் சுரிக் குழலாள்
தனை காணான்,
கூடு தன்னுடையது பிரிந்தாருயிர்,
குறியா,
நேடி வந்து, அது கண்டிலது என
நின்றான். 158


3575 கைத்த சிந்தையன், கணம் குழை
அணங்கினைக் காணாது,
உய்த்து வாழ்தர வேறு ஒரு
பொருள் இலான், உதவ
வைத்த மா நிதி, மண்ணொடு
மறைந்தன, வாங்கிப்
பொய்த்து உளோர் கொளத் திகைத்து
நின்றானையும் போன்றான். 159


எதுக்கு? கட்டிய மனைவியின் மேல் ஓர் கணவன் வைக்கும் பாசமும், அன்பும் எத்தகையது என நாம் புரிந்து கொள்வதற்காக. ஓர் சாதாரணக் கணவனைப் போல் அழுது புலம்பினான். ராம நாமத்தின் மஹிமை பற்றிப் பலரும் சொல்கின்றனர். ஆனால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டே, ஓர் அவதார புருஷனாக இருந்து கொண்டே ராமன் அழுகின்றானே? இவன் எப்படிக் கடவுளின் அவதாரம் ஆவான்? சாதாரண மனிதன் போல் அல்லவா மனைவியைக் காணோம், ராக்ஷஸன் தூக்கிப் போனானே எனக் கதறுகின்றானே? தன் மனைவியைக் காக்கத் தெரியாதவன் கடவுளின் அவதாரமா எனக் கேட்கின்றனர்.

3577 “அறத்தைச் சீறுங்கொல்? அருளையே
சீறுங்கொல்? அமரர்
திறத்தைச் சீறுங்கொல்? முனிவரைச்
சீறுங்கொல்? தீயோர்
மறத்தைச் சீறுங்கொல்? ‘என் கொலோ
முடிவு? ‘என்று மறையின்
நிறத்தைச் சீறுங்கொல்? நெடுந்தகையோன் ‘‘
என நடுங்கா. 161


ஆம், அவன் கடவுளின் அவதாரம் தான். ஆனால் இந்த அவதாரத்தில் அவன் ஒரு பூரண மனிதனாக அல்லவோ வாழ்ந்து காட்டினான். மனிதர்கள் அதிலும் ஓர் அரசன் கடைப்பிடிக்க வேண்டிய நீதிநெறிகள், தர்மம் போன்றவற்றை எப்போது எந்த வகையில் கடைப்பிடிக்கணுமோ அப்படியல்லவோ கடைப்பிடித்து வாழ்ந்து வந்தான். அனைவருக்கும் ஓர் முன்மாதிரியாக அல்லவோ வாழ்ந்து காட்டினான். அவன் வாழ்ந்தது என்னமோ சாதாரண அரசகுமாரனின் வாழ்க்கையைத் தானே? ஒரு அரசகுமாரன் வாழ்க்கையில் தோன்றும் காதல், வீரம், சோகம், பெற்றோர் மேல் பாசம், சகோதரர் பாசம், சண்டைகள், குடும்பக் குழப்பங்கள், சமாதானங்கள், அதீத ஆசைகள், காமங்கள் என எல்லாமும் நிரம்பிய ஒன்றே அவன் வாழ்ந்த வாழ்க்கை. அதனாலேயே கடைசிவரையில் தான் யார் எனக் காட்டிக் கொள்ளாமலேயே சாதாரண மனிதனைப் போலவே மனைவியை மாற்றான் தூக்கிச் செல்லக் கொடுத்துவிட்டுத் தேடித் தேடி அலைந்து திரிந்தான். இதெல்லாம் அவன் எதுக்குச் செய்தான்? நம் போன்ற சாமானியர்கள் அதைப் பார்த்து ஓரளவேனும் கற்றுக் கொள்ளவேண்டும் என்றே. ராமனைப் போல் நாம் வாழவேண்டும் என்பதற்காகவே. எத்தனை கஷ்டம் அடைந்தாலும் தன் தர்மம் என எது கடைப்பிடிக்கப் படுகின்றதோ, அதிலிருந்து சற்றும் வழுவாமல், தன் குடிமக்களைத் தன் பெற்ற மக்கள் போல் ஓர் அரசன் நினைக்கவேண்டும் என்பதை சொல்லாலும், செயலாலும் கடைப்பிடித்தான். இன்றைய ஆள்வோருக்கும், இன்றைய நாகரீக வாழ்க்கையை மேற்கொள்வோருக்கும் மட்டுமே ராமன் செய்தது அநியாயம், மனைவியைத் துன்புறுத்தினான் என்று எல்லாம் தோன்றும்.

ஆனால் உற்று நோக்கினால் தன் அன்பு மனைவியுடன் நடத்தும் குடும்ப வாழ்க்கையை விடத் தன் குடிமக்களின் நல்வாழ்வும், தன் ராஜ்ஜியத்தின் மேன்மையுமே அவனுக்கு மிக மிக முக்கியமாய்ப் பட்டது. அதனாலேயே அவன் குடும்ப வாழ்க்கையைத் துறந்தான். மனைவியைப் பிரிந்த அவன் அதனால் உடனேயே வேறு பெண்ணையும் நாடிப் போகவில்லை. மனைவியுடன் கூடி வாழ்ந்த இன்ப நினைவுகளிலேயே காலத்தைக் கழித்தான். எத்தனை பேரால் இது முடியும்? ஓர் ஆதர்ஸ புருஷனாக வாழ்ந்த ராமனைக் குற்றம் சொல்லுபவர்கள், சீதையைத் துன்புறுத்தினான் என்று சொல்லுபவர்கள் வெறும் விவாதத்துக்காகவே சொல்லுகின்றனர். அரசனுடைய, ஆட்சியாளனுடைய தர்மம் எது என்பதைத் தன் நடத்தையின் மூலம் சுட்டிக் காட்டினான். தனக்கென உரிமையானதைக் கூடத் துறந்தான். பதவியைத் தேடி அலையவில்லை. தன் மக்களுக்கெனச் சொத்து, சுகம் சேர்க்கவில்லை. ஆட்சியில் இருந்தும், அனைத்தையும் துறந்து ஓர் துறவி போலவே வாழ்ந்தான். ராமா உனக்கு நிகர் ஏது? நீ மட்டுமே தான். உன்னைப் போல் மீண்டும் ஓர் ராமன் தோன்றுவானோ?

ராமனின் கல்யாண குணங்கள் ஒன்றொன்றாய்ப் பார்க்கலாமா??

Tuesday, May 5, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!


ஸ்ரீராமனையும், அவன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் நினைத்தாலே தன்னை மறந்து அழுதுவிடுவார் ஸ்ரீ ஸ்வாமிகள். பெற்றோர் அவர் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என விரும்ப அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஜானகி என்னும் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். நாடெங்கும் பாத யாத்திரையாகவே சென்று ராமநாமத்தின் மகிமையைப் பாடியும், ஆடியும், பஜனைகள் செய்தும் அற்புதமாய் நடத்தி வந்தார். உஞ்சவிருத்தி, பூஜை, உபந்யாஸம், பஜனை என்று பாகவத தர்மத்தை விடாமல் கடைப்பிடித்தார். ஏராளமான சீடர்கள் இவருடைய யாத்திரையில் இவருடன் பங்கு கொண்டனர். ராமநாம ஜபம் செய்து ஆனந்தத்தை அனுபவித்தனர். ஒரு முறை ராம ஜன்ம பூமியான அயோத்திக்குச் சென்று கொண்டிருந்தபோது, இவருடைய தூக்கத்தில் ஒரு கனவு. அந்தக் கனவில் தோன்றியவர் யார்? ஸ்ரீஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் அவர்களே தான் கனவில் தோன்றினார். ஸ்ரீ சத்குரு ஸ்வாமிகளைத் தென் திசைக்குப் போகச் சொல்லி, அங்கே ஒரு நற்காரியம் இவர் மூலம் நிகழப் போவதாய்ச் சூசகமாய்ச் சொல்லி மறைந்தார்.

குருவின் கட்டளைப்படி தெற்கே வந்த ஸ்வாமிகள் தஞ்சை ஜில்லா மருதாநல்லூர் என்னும் ஊருக்கு வந்தார் . அங்கே வசித்து வந்த வெங்கடராம ஐயர் என்னும் தனவான் ஸ்வாமிகளை அழைத்துத் தம் இல்லத்திலேயே வைத்து உபசரித்தார். அங்கே சில நாட்கள் தங்கிய ஸ்வாமிகள் அந்த ஊரிலேயே தம் தாயாருடனும், மனைவியுடனும் தங்கி உஞ்சவிருத்தி, நாம ஜபம் போன்றவற்றைத் தொடங்கினார். ஆனால் குருநாதர் சொன்ன வேலையைச் செய்ய வில்லையே என்ற தாபமும் இருந்தது. குருநாதர் அதிஷ்டானம் அப்போது காவிரிக்குள் மறைந்து முழுகி இருந்தது. அதைக் கண்டு பிடித்து பக்தர்களுக்குத் தெரியப் படுத்துவதே தம் முதல் கடமை என உணர்ந்த ஸ்ரீஸ்வாமிகள் அப்போதைய தஞ்சை மகாராஜாவின் விருப்பத்தைக் கேட்டறிந்தார். அதன்படி காவிரி நதியைச் சற்றே திசை திருப்பி வடப்பக்கம் திருப்பி, போதேந்திராளின் அதிஷ்டானம் கண்டுபிடிக்கப் பட்டதும் அதற்கு எதிர்காலத்தில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படா வண்ணம் தடுப்பு வேலைகளைத் திறம்படச் செய்து முடித்தார். எல்லாம் சரி, அதிஷ்டானத்தை எப்படிக் கண்டு பிடிப்பது?

காவிரிக்குள் முழுகி இருக்கும் அதிஷ்டானத்தைக் கண்டறிய ஒரு வழியைக் கண்டறிந்தார் ஸ்ரீ சத்குரு ஸ்வாமிகள். தம் கால்களில் துணியைச் சுற்றிக் கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் காவிரி நதியின் மணலில் படுத்து உருண்டு செல்வார். ஏன்? நடந்து சென்று பார்க்கக் கூடாதா? பார்க்கலாம். ஆனால் அதிஷ்டானம் இருக்கும் இடத்தில் தம்முடைய கால்கள் பட்டுவிட்டால்??? அதற்காகவே உருண்டு சென்றார் ஸ்ரீ ஸ்வாமிகள். உருண்டு செல்லும்போதே ஒவ்வொரு இடத்திலும் தம் காதுகளை வைத்து உன்னிப்பாய்க் கவனித்தபடி செல்வார் ஸ்ரீஸ்வாமிகள். ஒருநாள் ஒரு இடம் வந்ததும், “இதோ, ஸ்ரீ போதேந்திராளின் அதிஷ்டானம் இருக்குமிடம். அவருடைய ஜீவன் இங்கே தான் உறங்கிக் கொண்டிருக்கிறது.” என்று சொல்லிவிட்டு ஆனந்தத்தில் குதித்து ஆடிப் பாடினார். சுற்றி நின்றவர்களுக்கும், கூட இருந்தவர்களுக்கும் ஒரே ஆச்சரியம்! இது எங்கனம் நடந்தது?

ஸ்ரீஸ்வாமிகள் சொன்னார்: உருளும்போதே என் காதுகளை வைத்துக் கவனித்துக் கொண்டு வந்தேன் அல்லவா? அப்போது மற்ற இடங்களில் எல்லாம் அமைதி நிலவ, இந்த ஒரு இடத்தில் மட்டும் “ராம” நாமம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே இங்கு தான் அதிஷ்டானம் இருக்கவேண்டும்.” என்று சர்வ நிச்சயமாய்ச் சொன்னார்.
அனைவரும் மகிழ்ந்ததோடு அல்லாமல் சத்குருவின் யோக சக்தியையும் கண்டு வியந்தனர். அனைவரும் அங்கேயே விழுந்து நமஸ்கரிக்க, மன்னனுக்குத் தகவல் சொல்லப் பட்டு, அதிஷ்டானத்துக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் காவிரி திருப்பி விடப் பட்டு, அதிஷ்டானமும் புனர் நிர்மாணம் செய்யப் பட்டது.

அரசன் சத்ரபதி சிவாஜியின் வழித் தோன்றல் ஆவான். இயல்பாகவே இறைவழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன். இப்போது ஸத்குரு ஸ்வாமிகளின் பிரதம சிஷ்யனாகவும் ஆனான். ஸத்குரு ஸ்வாமிகளுக்கு மட்டுமில்லாமல் அவரைப் பின்பற்றும் அவரது சிஷ்யர்கள் அனைவருக்கும் ஏதேனும் செய்ய விரும்பினான் மன்னன். ஸத்குரு ஸ்வாமிகளைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு ராமநாம ஜபம் ஜபிக்கும் இந்த பாகவதர்கள் அனைவரும் நிரந்தரமாய்த் தங்கும் வண்ணம் ஒரு கிராமத்தையே, மான்யம் அளித்தான். ஸத்குரு ஸ்வாமிகள் மனம் மகிழ்ந்து மன்னனிடம் அந்த கிராமத்தை பாகவதர்கள் பெயரிலேயே மான்யம் செய்து கொடுக்கச் சொல்ல திருவிசநல்லூருக்கு அடுத்து இருக்கும் ஒரு கிராமம் ஒன்றையே பாகவதபுரம் என்ற பெயரில் மான்யமாய்க் கொடுத்தான் மன்னன். இன்றும் அந்தக் கிராமம் பாகவதபுரம் என்ற பெயராலேயே வழங்கப் படுகின்றது.

Sunday, May 3, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

வேஷ்டியையும், பணத்தையும் பார்த்து ஒரு கணம் திகைத்தாலும், மனதிற்குள் ஏதோ ஒன்று உத்தரவிட அவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார் வேங்கடராமன். பார்த்தால், அந்தி மயங்க ஆரம்பித்திருந்தது. சூரியன் மறையப் போகின்றான். ஆஹா, போச்சே! அப்பா சிராத்தம் செய்து வைக்க அல்லவோ நம்மை அனுப்பி வைத்தார்? இப்போப் பொழுது சாய்ந்துவிட்டதே. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பார்கள். நாமோ அவருக்குக் கொடுத்த வாக்கை மீறிவிட்டோமே. நாம் வரலைனு அங்கே காத்திருப்பாங்களே? மதியமானாலும் பரவாயில்லை. இந்த மாலையில் சிராத்தம் செய்ய முடியாதே? காலம் கடந்து போச்சே! நம்மால் ஒருத்தர் வீட்டு முக்கியமான காரியத்துக்கு பங்கம் நேரிட்டு விட்டதே? மனக்கலக்கத்துடன் யோசித்த ஸ்வாமிகள் இனிமேல் சிராத்தம் நடக்கும் வீட்டிற்குப் போவதை விடத் தந்தையைப் போய்ப் பார்த்து நடந்ததைச் சொல்லி விடவேண்டியதே முறை என நினைத்தார்.

அவ்வாறே மணஞ்சேரியில் இருந்து திருவிசநல்லூருக்குத் தன் வீடு திரும்பிய அவர் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டு, தாம் ஆஞ்சநேயர் கோயிலில் தியான ஜபம் செய்ததையும், அங்கே பலிபீடத்தில் இந்த ஜோடி வேஷ்டியும், ஐந்து ரூபாய் பணமும் இருந்ததையும் சொல்லிவிட்டுத் தாம் சிராத்தம் செய்து வைக்காமல் கோயிலிலேயே நாம ஜபத்தில் ஈடுபட்டதையும் சொல்லி வருந்தினார் ஸ்வாமிகள். தந்தை என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்பது என்ற மன உறுதியுடனும் காத்திருந்தார். வேங்கட சுப்ரமணிய ஐயருக்கோ இதைக் கேட்டதும், முகம் வாடிவிட்டது. மனம் வருந்திப் போன அவர், தாமே போய் சிராத்தத்தை நிறைவேற்றி இருக்காமல் போனதற்கும் மனம் நொந்து போனார். அந்த அந்தணரும் சிராத்தம் நடத்தி வைக்க யாரும் வராமல் போனதுக்கு நம்மைக் கடிந்து கொள்ளப் போகின்றாரே என்றும் மன வருத்தம் ஏற்பட்டது அவருக்கு. ஒரு கணம் யோசித்த அவர் தாமே நேரில் மணஞ்சேரிக்கே சென்று அந்த அந்தணரிடமே நடந்ததைக் கூறி மன்னிப்பும் கேட்டுவிடலாம் என நினைத்துக் கொண்டு தெருவில் இறங்கினார். வேகமாய் நடைபோட்டு மணஞ்சேரிக்குள் நுழைந்தார். இருட்ட ஆரம்பித்துவிட்டது. சிராத்தம் நடந்திருக்க வேண்டிய வீட்டை அடைந்தார். தயக்கமும், பயமும் முட்டித் தள்ள கொஞ்சம் கலக்கத்துடனேயே அந்த வீட்டை அடைந்தார் வேங்கடசுப்ரமணிய ஐயர் அவர்கள்.

உள்ளே நுழையும் வேங்கட சுப்ரமணிய ஐயரைப் பார்த்ததுமே அந்த அந்தணரோ ஓடோடியும் வந்து வரவேற்றார். அகமும், முகமும் மலர்ந்து இருந்த அவரைக் கண்ட வேங்கடசுப்ரமணிய ஐயர் தயக்கத்துடன் அவரைப் பார்த்து, “ இன்னிக்குக் காலையிலே என் பையன் இங்கே வந்து,” என்று மெதுவாய் ஆரம்பித்தார். அவரோ மிக மிக சந்தோஷத்துடனேயே , “ இருங்க, இருங்க, நான் சொல்றேனே!” என்று ரொம்பக் கண்டிப்பாயும், நிச்சயமாயும் சொல்ல ஆரம்பிக்க வேங்கடசுப்ரமணிய ஐயர் கலங்கியே போனார். என்ன சொல்லப் போகிறாரோ எனக் கதிகலக்கத்துடன் அவர் இருக்க, அந்த அந்தணரோ, “ சொன்ன நேரத்துக்குத் தப்பாமல் உங்க பிள்ளை வந்து சேர்ந்தான். சிராத்தத்தை ரொம்பவும் திருப்தியா நன்னாவும் செய்து வைத்தான். எனக்கும் மனசுக்குத் திருப்தியாவே அமைந்தது. ஒரு ஜோடி வேஷ்டியும், ஐந்து ரூபாய் பணமும் தட்சணையாக் கொடுத்தேனே? கொண்டு வந்து கொடுத்தானா? சொல்றேனேனு தப்பா நினைக்காதீங்க. நீங்க கூட இவ்வளவு திருப்தியா சிராத்தம் செய்து வைத்ததில்லை. உங்க பிள்ளை உங்களை மிஞ்சிவிட்டான். ரொம்ப நன்றி.” என்று இரு கரமும் கூப்பி வணங்கினார் அவர். வேங்கட சுப்ரமணிய ஐயருக்கோ ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துப் போனார். அப்படியே திருவிசநல்லூருக்குத் திரும்பினார்.

வீட்டுக்கு வந்ததும் பையனைப் பார்த்து, “நீ தான் மணஞ்சேரி போய் சிராத்தம் செய்து வைத்தாய்னு அவர் சொல்றாரே? தட்சணையாக் கூட ஐந்து ரூபாயும், ஒரு ஜோடி வேஷ்டியும் கொடுத்தாராமே?” என்று மகனிடம் கேட்க, மகனோ, அதிர்ந்து போய் நின்றார். “என்ன நானா? அங்கே போனேனா? சிராத்தம் செய்து வைத்தேனா? ஆஞ்சநேயர் கோயிலில் உட்கார்ந்து கொண்டு அனுமன் சந்நிதியில் ராமநாமத்தை அல்லவோ ஜபித்துக் கொண்டிருந்தேன். அப்போ, அப்போ, அப்போ எனக்காக அந்த ஸ்ரீராமனே போய் சிராத்தம் செய்து வைச்சிருக்கானா?” என்று விதிர்விதிர்த்துப் போய் நின்றார் ஸ்வாமிகள். ஆஹா, அந்த ராமனே போய் சிராத்தம் பண்ணி வச்சதோடல்லாமல் சம்பாவனையாய்க் கிடைத்த வேஷ்டியையும், பணத்தையுமே தம்மிடமே கொண்டும் சேர்த்துவிட்டானே? என்று உருகிப் போனார் ஸ்வாமிகள். செய்தி ஊரெங்கும் பரவ ஊரே வியந்தது இந்த அற்புதத்தைக் கண்டு.

Saturday, May 2, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

குழந்தையைப் பார்த்த துறவி வேங்கடசுப்ரமணிய ஐயரைப் பார்த்து, “ இவனா ஊமை? இவன் தெய்வாம்சம் பொருந்தியவன். இவன் உங்கள் மகனாய்ப் பிறந்தது நீங்கள் பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம் ஆகும். வருந்தாதீர்கள். இவன் நன்றாய்ப் பேசுவான்.” என்று சொல்லிவிட்டு ஆசிகளை அளித்துவிட்டுச் சென்றார். எனினும் இன்னும் குழந்தை பேச ஆரம்பிக்கவில்லை. அருகில் உள்ள மணஞ்சேரி என்னும் ஊரில் கோபால ஸ்வாமிகள் என்ற பாகவதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சதா சர்வதா ராம நாமத்தையே ஜபிக்கும் இவரின் மகிமையையும், பெருமையையும் உணர்ந்த வேங்கடசுப்ரமணிய ஐயர் மகனை அழைத்துக் கொண்டு அவரைச் சந்தித்தார். குழந்தையின் அழகிலும்,முக காந்தியிலும் மனதைப் பறி கொடுத்தார் கோபால ஸ்வாமிகள் பாகவதர். குழந்தையின் காதில். “ராம” என்னும் நாமத்தை ஓதி, குழந்தையைப் பார்த்து, “எங்கே இதைத் திரும்பச் சொல்லு பார்ப்போம்?” என்று சொன்னார். குழந்தையோ அதுவரையில் பேசாமல் இருந்தவன் அப்போது திடீரென,” ராம, ராம, ராம, “ என இறைவனது திருநாமத்தை உச்சரித்தான். வந்தவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம். பெற்றோரோ மகிழ்ந்தனர். பிள்ளை பேசிவிட்டானே, அதுவும் ராமநாமத்தை உச்சரித்து!

ஏழு வயதில் வேங்கடராமனுக்கு உபநயனம் செய்து வைக்கப் பட்டது. தந்தையாரே குருவாக அனைத்து சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களைப் பிள்ளைக்குக்கற்றுக் கொடுத்தார். ஆன்மீகக் கதைகளையும், அதில் பொதிந்துள்ள அருமையான தத்துவங்களையும் தாயின் மூலம் அறிய வந்தது. பகவானின் நாமாவைப் பாடி ஆட வசதியாக சங்கீதமும் கற்றார். இவ்வாறு பேசவே முடியாமல் இருந்த வேங்கடராமன் சகல கலைகளிலும் வல்லவனாக மாறினார். வேங்கடசுப்ரமணிய ஐயர் பக்கத்து கிராமங்களுக்கு வைதீக காரியங்களுக்கும் சென்று வருவது வழக்கம். திருமணம், உபநயனம் போன்றவை மட்டுமின்றி சிராத்தம் போன்ற காரியங்களுக்கும் சென்று வருவார். ஒருநாள் மணஞ்சேரி கிராமத்தில் ஒருவரது வீட்டில் சிராத்தம் வந்தது. வழக்கம்போல் வேங்கடசுப்ரமணிய ஐயரை அழைத்தார். அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் சிராத்தம் செய்து வைக்க வேங்கடசுப்ரமணிய ஐயரால் செல்ல முடியாமல் ஏதோ நிர்ப்பந்தம் ஏற்படவே தன் குமாரன் வேங்கடராமனை அனுப்பி வைத்தார். சிராத்தம் செய்து வைக்க அதிகப் பழக்கம் இல்லை எனினும் வேங்கடராமன் தந்தை சொல் தட்ட முடியாமல் சிராத்தம் செய்யத் தேவையான ஏற்பாடுகளுடனும், தந்தையை எவ்வாறு என்ன என்ன செய்யவேண்டும் என்று கேட்டறிந்து கொண்டும் புறப்பட்டார்.

கோபாலஸ்வாமி பாகவதாரால் ராம நாமம் உபதேசிக்கப் பட்ட நாளில் இருந்து அன்று வரையிலும் தினமும் ஒரு லக்ஷத்து எட்டாயிரம் முறைகள் ராம நாமம் ஜபிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார் வேங்கடராமன் என்னும் மருதாநல்லூர் ஸ்வாமிகள். அன்றும் அதே போல் ஜபித்துக் கொண்டே மணஞ்சேரியை நோக்கிச் சென்றார். இன்று சிராத்தம் செய்யச் சென்றால் ராம நாமம் ஜபிப்பதில் இடையூறு ஏற்படுமோ என எண்ணிக் கலங்கினார். எனினும் தந்தையாரின் ஆணையையும் மீற முடியாது என்பதால் அவர் நாமஜபம் ஜபித்த வண்ணமே மணஞ்சேரி நோக்கிச் சென்றார். இவர் ஒன்று நினைக்க ராமன் வேறு விதமாய் நினைத்தான். மணஞ்சேரி ஊருக்குள் நுழைந்ததுமே அங்கே இருந்த ஆஞ்சநேயரின் ஆலயத்தைக் கண்ட வேங்கடராமன் உள்ளே நுழைந்து அனுமனைத் தரிசிக்கலாம் என எண்ணிச் சென்றார். ஒரு ஓரமாய்க் கொண்டு வந்த பைகள், சாமான்களை வைத்துவிட்டு அனுமனைத் தரிசிக்கச் சென்றார்ல். வாயுகுமாரன், வானர வீரனைக் கண்டதும் தாம் வந்த பணியை மறந்தார். தந்தையார் தமக்கு இட்ட கட்டளையையும் மறந்தார். அங்கேயே யோக நிஷ்டையில் அமர்ந்தார். ராமநாம ஜபத்தை ஆரம்பித்தார். மெல்ல மெல்ல காலை போய் மதியம் வந்து மாலையும் வந்தது. ஒரு லக்ஷத்து எட்டாயிரம் நாம ஜபமும் பூர்த்தியானது. மெல்லக் கண்களைத் திறந்தார் வேங்கடராமன். என்ன ஆச்சரியம்? அவர் கண்ணெதிரே ஒரு ஜோடி வேஷ்டியும் ஐந்து ரூபாயும் இருந்தது.

ராம நாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகளைப் பற்றிக் கொஞ்ச நாட்கள் முன்னாலே தான் படிக்க நேர்ந்தது. சக்தி விகடனில் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு ஆன்மீகப் பெரியவர்களைப் பற்றி திருவடி தரிசனம் என்ற பெயரில் வருகின்றது. அதிலே படிக்க நேர்ந்தது. கல்யாணத்துக்கு முன்னாலே இப்படி ஒரு ஸ்வாமிகள் இருந்தது தெரியாது. அப்புறமும் அடிக்கடி என் மாமியார் இவரைப் பத்திச் சொல்லுவாங்க. அதுதான் தெரியும் அவ்வளவு விபரமாய்த் தெரியாது. இப்போ திரு தேவ் அவர்கள் ஸ்வாமிகளின் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி எழுத ஆரம்பிச்சதும் மறுபடியும் மருதாநல்லூர் ஸ்வாமிகள் பற்றித் தேடி எடுத்துப் படிச்சேன். இந்தப் பதிவை ராமநவமியை ஒட்டியே போட்டிருக்கணும். முடியலை. இப்போவாவது போட முடிஞ்சதேனு சந்தோஷம் அடைகிறேன்.

நாம சங்கீர்த்தனமும், நாம ஜபமும் மட்டுமே கலியுகத்தில் இறை அருள் பெற்று உய்ய மிகச் சிறந்த வழியாகச் சொல்லப் படுகின்றது. தேவரிஷியான நாரதரில் இருந்து ஆரம்பித்து, இன்றைக்கும் பல்வேறு மஹான்களும், ரிஷி, முனிகளும் நாம ஜபத்தையும் நாம சங்கீர்த்தனத்தையும் நாடெங்கிலும் பரப்பி வந்திருக்கின்றனர். அனைத்திலும் சிறந்த நாமம் “ராம” என்ற தாரக மந்திரமே. அனைவருக்கும் உயிர்நாடியாக விளங்கும் இந்த ராம நாம ஜபத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவர்கள் கோவிந்தபுரத்தில் அதிஷ்டானம் கண்டிருக்கும் ஸ்ரீஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள், திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் போன்றவர்கள் ஆவார்கள். இவர்களில் ஸ்ரீஸ்ரீ போதேந்திரரும், ஸ்ரீதர ஐயாவாள் அவர்களும் சமகாலத்தவர்கள். இவர்களுக்குப் பின்னர் ஏறக் குறைய நூறு வருஷங்கள் சென்ற பின்னர் தோன்றியவரே மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள்.

ராமநாம ஜபத்தின் மகிமையை நாடெங்கும் பரப்பிய இவர் பிறந்ததும் சில வருஷங்கள் பேசவே இல்லை, தெரியுமா? ஸ்வாமிகளின் அவதாரம் பற்றிக் காண்போமா இப்போது? தஞ்சை ஜில்லாவில் திருவிச நல்லூர் கிராமத்தில் கி.பி.1777-ம் ஆண்டில் வேங்கடசுப்ரமணிய ஐயருக்கும் அவர் மனைவிக்கும்(தாயார் பெயர் தெரியவில்லை) மகனாய்ப் பிறந்தார் ஸத்குரு ஸ்வாமிகள். இவருடைய இயற்பெயர் வேங்கடராமன் என்பதாகும். பிறந்து மூன்று வருஷங்கள் ஆகியும் பிள்ளை வாயில் இருந்து ஒரு சொல் முத்துக் கூட உதிரவில்லை. தாயும், தந்தையும் ஏங்கித் தவித்து உருகிப் போனார்கள். வேண்டாத தெய்வம் இல்லை. மணி, மந்திர, ஒளஷதங்கள் அனைத்தும் பலிக்கவில்லை. குழந்தை வாயே திறக்கவில்லை. முத்துப் போல் பேசுவான் என நினைத்திருக்க “அம்மா” என்று கூட அழைக்க மாட்டேன் என்கின்றானே அருமை மகன் எனத் தாயார் மனம் வெதும்பிப் போனாள்.

அப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்திருந்தார். பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று புனித நீராடி, யாத்திரை சென்று வரும் வழியில் அந்த ஊருக்கும் வந்திருந்தார் துறவி. துறவிக்கு பிக்ஷை அளித்து அவரிடம் ஆசிகளைப் பெற விரும்பிய வேங்கடசுப்ரமணிய ஐயரும், அவரின் மனைவியும் அவரைத் தங்கள் இல்லத்துக்கு வந்தருளுமாறு வேண்ட துறவியும் அவ்வாறே வந்தார். இருவரும் துறவியை நமஸ்கரித்துவிட்டுத் தங்கள் பிள்ளையையும் அவருக்குக் காட்டி நமஸ்கரிக்கச் சொன்னார்கள். பிள்ளை சும்மா நின்றது. மனம் வருந்திய பெற்றோர் துறவியிடம் பிள்ளை இன்னும் பேசவே இல்லை என்பதையும் துயரத்துடன் தெரிவித்தார்கள். குழந்தையைக் கூர்ந்து கவனித்தார் துறவி. அவர் முகம் மலர்ந்தது.

ஸ்வாமிகளின் படம் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் மெயிலில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.