எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Tuesday, December 20, 2011

சேஷாத்ரி ஸ்வாமிகள் இறுதிப் பகுதி!

வேறொரு சமயம் வள்ளிமலை சுவாமிகளிடம் வயதானவர் உருவில் வந்து பசிக்கு உணவு கேட்டார சேஷாத்ரி சுவாமிகள். உணவும் அளித்தார் சுவாமிகள். பசியால் வாடிய வயதானவர் ஒரே மூச்சில் மூன்றுபடிக் கஞ்சியையும் குடித்துவிட்டார். அன்றுமுதல் தினமும் பெரியவருக்காக உணவு காத்திருக்கும். ஆனால் அந்த உணவை ஒரு கீரிப்பிள்ளை வந்து சாப்பிட்டுவிட்டுப் போய்விடும். சில நாட்களில் கீரிப்பிள்ளையும், பெரியவர் உருவில் வந்தவரும் சேஷாத்ரி சுவாமிகள் எனப் புரிந்துகொண்டார் வள்ளிமலை சுவாமிகள். திருவண்ணாமலையில் இருந்தபோது மயானத்திலேயே பொழுதைக்கழிக்கும் வழக்கம் உள்ள சேஷாத்ரி சுவாமிகளுக்கு அங்கிருந்த வெட்டியான் பழக்கம் ஆனான். அவன் சுவாமிகளிடம் மிகவும் மரியாதை காட்டுவான். சுவாமிகளும் அவனிடம் அன்போடு இருப்பார். தனக்குக்கொடுக்கும் புதுத்துணிகளை வெட்டியானுக்குக் கொடுத்துவிட்டு அவனுடைய கந்தல் துணிகளைத் தான் அணிந்து செல்வார். சுவாமிகள் மகாசமாதியடைந்த போது பிரிவு தாங்காமல் துயரமடைந்த வெட்டியான் மிகவும் வருத்தமாய் இருந்தான்.

அவன் கனவில் ஒருநாள் சுவாமிகள் தோன்றி வள்ளிமலைக்குச் செல்லுமாறும் அங்கே தான் தரிசனம் தருவதாகவும் கூறினார். வெட்டியானும் வள்ளிமலை கிளம்பிச் சென்று வள்ளிமலை சுவாமிகளிடம் தான் வந்த காரியத்தைச் சொன்னான். சேஷாத்ரி சுவாமிகளுக்காகக் காத்திருந்தான். மாலையில் பாறையின் மீது பெரியவருக்கு உணவு வைப்பதைப் பார்த்தான். அப்போது அங்கே வந்த ஒரு கீரிப் பிள்ளை அந்த அன்னத்தை ருசித்துச் சாப்பிட்டது. அடுத்த கணம் வெட்டியான் கண்களில் கீரிப்பிள்ளை மறைந்து சேஷாத்ரி சுவாமிகள் காட்சி அளித்தார். வெட்டியான் பக்திப் பரவசத்தில் உடல் நடுங்க அவரை வழிபட்டுத் தனக்காக அவர் தரிசனம் கொடுத்ததை நினைத்து நினைத்து பூரித்துப் போனான். சேஷாத்ரி சுவாமிகள் திருவண்ணாமலை வந்துகிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிவிட்டன. சுவாமிகளுக்குத் தான் வந்த வேலை முடிந்துவிட்டது எனத் தோன்றியது போலும். 1928-ஆம் வருடம் கார்த்திகை மாதம் ஒருநாள் தன் பக்தையான சுப்பலக்ஷ்மியிடம் “இந்த வீட்டை விட்டுவிட்டுப் புதியதோர் வீட்டிற்குப் போக நினைக்கிறேன்,” என்று கூறினாராம். அந்த அம்மா முதலில்மிகவும் குழம்பிப் போய்விட்டார். சுவாமிகள் ஏதோ விளையாட்டாய்ப் பேசுவதாய் நினைத்துள்ளார். ஆனால் திரும்பத் திரும்ப சுவாமிகள் இந்தக் கேள்வியையே கேட்கவும், “ஆம், புதியதோர் வீடுகட்டி அங்கே யோகப் பயிற்சிகள் செய்யலாம்.” என்றாராம். சுப்புலக்ஷ்மி அம்மாவின் வார்த்தைகளைப் பராசக்தியின் கட்டளையாக ஏற்றார் சுவாமிகள். “சரி. சரி, அப்படியே செய்வோம்.” என்றார். சில நாட்களில் அவரின் சில பக்தர்களுக்கு சேஷாத்ரி சுவாமிகளை ஃபோட்டோப் படம் பிடித்து வைக்கவேண்டும் எனத் தோன்றியது. ஆகவே துணி மாற்றாமல், குளிக்காமல் அழுக்கோடு இருந்த சுவாமிகளை எப்பாடு பட்டாவது குளிக்க வைத்துப் புதுத்துணி உடுத்த வைக்கவேண்டும் என அவருடைய சில சீடர்கள் நினைத்தனர். தலையில் எண்ணெய் வைத்துத் தேய்த்துக் குளிப்பாட்டினார்கள்.

சுவாமிகள் வேண்டாம் என மறுத்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. எண்ணெய் தேய்த்துக்குளிப்பாட்டி, புதுத் துணி அணிவித்து, மாலைகள் போட்டுப் படமும் பிடித்தார்கள். ஆனால் சேஷாத்ரி சுவாமிகளுக்கு அதன் பின்னர் உடல்நலம் மொத்தமாய்க் கெட்டுப் போய் நல்ல காய்ச்சல் வந்துவிட்டது. கிட்டத்தட்ட 40 நாட்கள் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்தது. 41-ஆம் நாள் அருணாசலேஸ்வரரைத் தரிசிக்கச் சென்றார் சுவாமிகள். அதுவே அவருடைய கடைசி தரிசனமாகும். திரும்பும்போது தேங்கி இருந்த நீரில் அப்படியே உட்கார்ந்து கொண்டு வீட்டுக்குள் வர மறுத்தார். மெல்ல மெல்ல உடல்நிலை மேலும் மோசமாகி 1929-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 4-ஆம் தேதி சேஷாத்ரி சுவாமிகளின் உடலில் இருந்து உயிர்ப்பறவை பறந்து சென்றது. திருவண்ணாமலையே சோகத்தில் ஆழ்ந்தது. மக்கள் கூட்டம் தாங்கமுடியாமல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. திருவண்ணாமலைக் கடைகளில் இருந்த கற்பூரம் அனைத்தும் வாங்கப்பட்டு எரிக்கப்பட்டுக் காணக்கிடைத்த ஜோதியில் இரவே பகலாய் மாறிவிட்டது. வெளியூர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் கடைசி தரிசனத்திற்கு வந்து குவிந்தார்கள்.

அனைவரும் ஸ்லோகங்களைப் பாடிக்கொண்டும், பஜனைப்பாடல்களைப் பாடிக்கொண்டும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அக்னி தீர்த்தக்கரையில் ஶ்ரீரமண பகவானும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். சிறிது தூரத்தில் ஒரு சமாதிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதிக்கோயிலும் கட்டப்பட்டு, திருவண்ணாமலை, செங்கம் ரோடில் தற்போது சேஷாத்ரி சுவாமிகளின் ஆசிரமமாக நிலவி வருகிறது. அருணாசல மலையை அவர் எவ்வளவு ஆழமாக நேசித்தார் என்பதும், அதன் தத்துவத்தைப் புரிந்து கொண்டார் என்பதும் கீழ்க்கண்ட வரிகளின் மூலம் தெரிய வருகிறது.

“ஏ, ஜீவன்களே, இந்த மலையின் காந்த சக்தியைப் புரிந்துகொள்ளுங்கள். இது இவ்வுலகின் அனைத்து ஜீவராசிகளையும் கவர்ந்து இழுக்கிறது. இதை நினைக்கும் அந்தக் கணத்திலேயே நம்முடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, காம, க்ரோத, மத, மாச்சரியங்களை வெல்லும் வல்லமை ஒருவனுக்கு வருகிறது. இந்த மலையை நோக்கி அவன் இழுக்கப்படுகிறான். இது மனிதனைத் தன் பக்கம் இழுப்பது மட்டுமில்லை; அவனை நிர்குணம் படைத்தவனாகவும் ஆக்குகிறது. இதனுடைய சக்தி அளப்பரியது. இது யுகம் யுகமாக இங்கே நின்று கொண்டு பலருடைய ஒப்பற்ற தியாகங்களையும் பார்த்துக்கொண்டு ஒரு மெளன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. ஏ, மானுடர்களே, இதன் உண்மையான தத்துவத்தைப் புரிந்து கொண்டு இதனோடு ஐக்கியமாகி விடுதலை பெறுங்கள்.

Sunday, December 18, 2011

சேஷாத்ரி ஸ்வாமிகள் பகுதி 6

ஒரு முறை சேஷாத்ரி சுவாமிகளைப் பார்க்க சேலத்தில் இருந்து அன்பர் ஒருவர் நிறையப் பழங்கள், இனிப்புகள் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். ஆனால் சுவாமிகளைக் காணமுடியவில்லை. சுவாமிகள் காஞ்சிபுரம் போயிருக்கலாமென எவரோ சொல்லக் கேட்டு அங்கு பயணம் ஆகவேண்டி வண்டியில் ஏறி அமர்ந்தார். அப்போது சுவாமிகள் எங்கிருந்தோ ஓடோடியும் வந்து, இந்த வண்டி காஞ்சிபுரத்துக்குப் போகுமா எனக் கேட்கவும் இருவரும் விதிர்விதிர்த்துப் போனார்களாம். பின்னர் கீழே இறங்கி சேஷாத்ரி சுவாமிகளை வணங்கினார்கள். அதே போல் படிக்கமுடியா ஏழைப்பையன் ஒருவன் சேஷாத்ரி சுவாமிகள் அருளால் தேர்வில் தேர்ச்சி அடைந்தான். ஆனால் சுவாமிகளோ பார்க்கப் பைத்தியம் போலவே இருப்பார். தன்னுடைய பெயரைக் கூட மறந்து, தனக்கெனத் தனியான பக்தர் கூட்டமும் இல்லாமல், இருக்க இடமில்லாமல், உண்ண உணவுக்கெனத் தனியாக எதுவும் இல்லாமல் கிடைப்பது போதும் என உண்டு கொண்டு, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பனியைப் பொறுத்துக்கொண்டு அண்ணாமலையில் அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்.

அவர் அங்கிருக்கும் கடைத்தெருவில் எந்தக் கடைக்குள் நுழைந்தாலும் கடைக்காரர்கள் தாங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என எண்ணினார்கள். அவர் கைபட்டால் தங்கள் பணப்பெட்டி நிரம்பி வழியும் எனத் திட்டமாக நினைத்தார்கள். பணக்காரர்கள் அளிக்கும் எந்தப் பொருளையும் ஏற்றதில்லை. ஏழை அளிக்கும் பொருள் எளிமையாக இருந்தாலும் ஏற்பார். சில சமயம் பலநாட்கள் தொடர்ந்து உண்ண உணவு கிடைக்காது. சிலசமயம் உணவு நிறையக் கிடைக்கும். அதற்கேற்றாற்போல் அவரும் சில நாட்கள் சேர்ந்தாற்போல் சாப்பிடுவார். சில சமயம் எதுவும் சாப்பிடவே மாட்டார். அவருக்குக் கிடைக்கும் புதுத்துணிகளை ஏழை, பாழைகளுக்கு அளித்துவிடுவார். அப்படி ஏழை, பாழைகள் கிடைக்கவில்லை எனில் துணியைக் கிழித்துப் போட்டுவிடுவார். அவர் உடுத்தமாட்டார். கந்தல் துணிதான் கட்டி இருப்பார். எப்போது அமர்ந்தாலும் ஸ்வஸ்திக ஆசனத்திலேயே அமர்வார்.

ரமணரைச் சந்தித்து உபதேசம் பெற வேண்டித் திருவண்ணாமலைக்கு வந்த மைசூர் சுவாமிகள் என ஆரம்பகாலத்தில் அழைக்கப்பட்ட வள்ளிமலை சுவாமிகள் ரமணரிடம் உபதேசம் கிட்டாமல் வடநாடெல்லாம் சென்று திரும்பி வந்து ரமணரிடம்சென்றபோது ரமணரோ அவரைக் கண்டு ஒருநாள், “போ, போ, இங்கே நிற்காதே, கீழே போ” என்று விரட்டிவிட, திருப்புகழ் ஸ்வாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் தான் மனதால் குருவாக வரித்தவர், குருவின் வார்த்தையை மீறுவது எப்படி? மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டார். என்ன ஆச்சரியம்?? அங்கே இவரை வரவேற்று அழைத்தவரோ ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். ரமணரின் தீர்க்க தரிசனம் அப்போது தான் புரிந்தது ஸ்ரீவள்ளிமலை ஸ்வாமிகளுக்கு. திருப்புகழ் ஸ்வாமிகளைத் தன்னருகே அழைத்து அமர வைத்துக்கொண்டு அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். சிவமானஸ ஸ்தோத்திரத்தின் நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி அதன் பொருளையும் விளக்கிச் சொன்னார். அதற்கு ஈடான திருப்புகழை வள்ளிமலை ஸ்வாமிகளைக் கூறச் சொல்லிக் கேட்டுத் தானும் மகிழ்ந்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். பின்னர் அவரிடம், “திருப்புகழே உனக்குத் தாரக மந்திரம். உன் சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் இந்தத் திருப்புகழுக்கே அர்ப்பணம் செய்து தவ வாழ்க்கை வாழவேண்டும் நீ. வேறு எந்தவிதமான மந்திரங்களோ நூல்களோ உனக்குத் தேவையில்லை. திருப்புகழ்தான் உனக்கு மகாமந்திரம். நீ செல்லுமிடமெல்லாம் இனி திருப்புகழ் ஒலிக்கட்டும். இப்போது நீ வள்ளிமலைக்குச் சென்று தவம் மேற்கொள்வாயாக. விரைவில் நாமும் அங்கே வருவோம்.” என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.

தன்னை நாடி வரும் பக்தர்களின் உடல்நிலைக்கு ஏற்றபடி தன் ஸ்பரிசத்தால் குணப்படுத்திக்காட்டியதும் உண்டு. ஒரு நாள் காலை ஆறு மணிக்கு ஆகாயத்தைப் பார்த்த சுவாமிகள், “அதோ, விட்டோபா! விட்டோபா போகிறார்!” என்று கூறச் சுற்றிலும் இருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை. சற்று நேரத்தில் போளூரில் இருந்த விட்டோபா சுவாமிகள் மஹாசமாதி அடைந்த தகவல் கிட்டிற்று. சுவாமிகளின் சூக்ஷ்ம திருஷ்டி இதிலிருந்து புலனாயிற்று. வேறொரு நாள் ஒரு பதினைந்து வயதுப் பையனுக்குக் கம்பத்து இளையனார் சந்நிதியில் அம்பாள் உண்ணாமுலை அம்மனின் தரிசனத்தைச் செய்துவைத்துப் பின்னர் அம்மன் சந்நிதிக்குச் சென்று பார்த்த அந்தச் சிறுவன் தனக்கு சேஷாத்ரி சுவாமிகள் காட்டிய அதே கோலத்தில் அம்பாள் அதே புடைவை, அதே மாலைகள் போன்ற அலங்காரத்தில் காட்சி கொடுப்பதைக் கண்டு வியந்து போனான். சாக்தரான சேஷாத்ரி சுவாமிகளுக்கு இதை நிகழ்த்துவது ஒன்றும் அதிசயமல்லவே!

இன்னொரு பக்தரின் மகனுக்கு வந்த ஜுரத்தில் அவன் கண்கள் தெரியாமல் போனது. பக்தர் மகனை அழைத்துக்கொண்டு சேஷாத்ரி சுவாமிகளைச் சரணடைந்தார். சுவாமிகள் அவரை மகனைத் தன்னிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லச் சொன்னார். அப்படியே பக்தர் சுவாமிகளிடம் மகனை ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அன்றிரவு அந்தப் பையனை சுவாமிகள் அம்பாளின் சந்நிதியில் சென்று படுக்கச் சொன்னார். பையன் தயங்கிக்கொண்டே கோயிலுக்குச் சென்று குருக்களிடம் சொல்ல அவர்களும் சுவாமிகள் பேச்சைத் தட்டக்கூடாதென்று அப்படியே அவனை சந்நிதியில் விட்டுப் பூட்டிச் சென்றனர். மறுநாள் காலையில் கோயில் கதவைத் திறந்த போது அந்தப் பையன் தானாகவே உள்ளே இருந்து ஓடி வந்தான். கண்கள் தெரிய ஆரம்பித்தன. அருணாசலம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது.

சரீரத்தில் இருக்கையிலேயே யோகசித்தியுடன் வேறொரு உருவத்தையும் சேஷாத்ரி சுவாமிகள் எடுத்திருப்பதாயும் கூறப்படுகிறது. வள்ளிமலை சுவாமிகள் சேஷாத்ரி சுவாமிகளிடம் உபதேசம் பெற்றபின்னர் ஒருமுறை அவரைக் காண வந்தார். அப்போது அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு மறுநாள் வள்ளிமலை செல்லவேண்டும் என உத்தரவு கேட்க சேஷாத்ரி சுவாமிகள் தானும் வருவதாய்க் கூறவே சரி என மகிழ்வோடு ஒத்துக்கொண்டார் வள்ளிமலை சுவாமிகள். இருவரும் ரயிலில் கிளம்பினார்கள். ரயில் கிளம்பவும் சேஷாத்ரி சுவாமிகள் அதிலிருந்து குதித்துவிட்டார். வள்ளிமலை சுவாமிகள் ஏமாற்றத்துடன் வள்ளிமலை சென்றார். ஆனால் சேஷாத்ரி சுவாமிகளோ அவரைப் பார்த்து உரத்த குரலில், “நீ வள்ளிமலைக்குப் போ! பின்னாலேயே நானும் வருகிறேன்.” என்று கூற வள்ளிமலை சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. வள்ளிமலைக்கு வந்ததும் பொங்கித்தாய்க்கு வழிபாடுகளை முடித்துக்கொண்டு வந்த வள்ளிமலை சுவாமிகள் எதிரே சேஷாத்ரி சுவாமிகள் சிரித்த வண்ணம் நின்றார். உடனே கீழே விழுந்து வள்ளிமலை சுவாமிகள் வணங்கிவிட்டு எழுந்து பார்க்கையில் ஓர் அணில் பிள்ளை ஓடுவதைக் கண்டார். அணில் பிள்ளை உருவத்தில் சுவாமிகள் வந்திருப்பதை அறிந்து கொண்டார்.

Friday, December 16, 2011

சேஷாத்ரி சுவாமிகள் - 5

பூட்டி இருந்த வீட்டிலிருந்து மாயமாய் மறைந்த சேஷாத்ரி ஸ்வாமிகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சித்தப்பாவும், சித்தியும் துடித்துப் போனார்கள். சிலநாட்களில் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் சேஷாத்ரி இருப்பதாய்த் தகவல் கிட்டி அங்கு சென்று பார்த்தால் அங்குள்ள முக்தீஸ்வரர் கோயிலில் தங்கி இருந்தார் சேஷாத்ரி சுவாமிகள். வீட்டுக்கு வர மறுத்துவிட்டார். தம்பி தினமும் உணவு கொண்டு கொடுத்து வந்தார். கோயிலில் இருந்த பாம்பு அவர் கழுத்தில் மாலையாகத் தலைக்கு மேல் குடையாக ஏறிக்கொண்டு படம் பிடித்துக்கொண்டு நிற்கும். அனைவரும் பயந்து அலறுவார்கள். ஆனால் சேஷாத்ரி வாயைத் திறக்க மாட்டார். தானாகவே வந்தது போல் அந்தப் பாம்பு போய்விடும். தமக்கு உண்பதற்கு அளிக்கப்படும் உணவை லிங்கமாகச் செய்து அர்ச்சனை செய்து கோயில் குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று தம் இருப்பார். அவருக்கு மனதில் பாசபந்தங்கள் அகன்று வைராக்கியம் வந்துவிட்டதை அவர் முகம் காட்டியது. சித்தப்பா அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தார்.

அவருடைய தவ வலிமை பிரபலமடைய நாளாவட்டத்தில் அக்கம்பக்கமிருந்து எல்லாம் மக்கள் தரிசிக்க வந்து கொண்டிருந்தனர். கூட்டம் அதிகரிக்கவே அங்கிருந்து ஒருவருக்கும் தெரியாமல் கிளம்பிவிட்டார். நாளவட்டத்தில் பேச்சையும் குறைத்துவிட்டார். முக்கியமான விஷயங்களாக இருந்தால் எழுதிக்காட்டுவார். மெளன சுவாமிகள் என்ற பெயரை மக்கள் சூட்டினார்கள். திண்டிவனம் கோயிலின் யாகசாலையில் தவம் இருக்கவேண்டும் என உள்ளே சென்று அமர்ந்து நான்கு நாட்களாகியும் வெளியே வராமல் போகவே குருக்கள் பயந்து போய்க் கதவைத் திறந்து பார்த்தார். குருக்களுக்கு அவர் கோயிலில் சமாதி நிலையில் தவம் இருந்தது பிடிக்காமல் சேஷாத்ரி சுவாமிகளை வேறெங்காவது போகச் சொன்னார். அங்கிருந்து கிளம்பிய சேஷாத்ரி தான் திருவண்ணாமலைக்குச் செல்வதாக எழுதிக்காட்டிவிட்டுக் கிளம்பி விட்டார். சில மாதங்கள் அங்கேயும் இங்கேயுமாகச் சுற்றினார். படவேடு ரேணுகாம்பாளைத் தரிசித்து அவள் அருளாட்சியில் மூழ்கித் திளைத்தார். வழியில் சந்நியாசிப்பாறையைத் தரிசித்துவிட்டு அருணையம்பதி வந்து சேர்ந்தார் சேஷாத்ரி சுவாமிகள்.

தாம் கடைசியில் வந்து சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம் எனப் புரிந்து கொண்டார். தன்னிலை மறந்து தான் என்பது கரைந்து தானும் அதுவும் ஒன்றாகி அதில் கரைந்தார். இவ்வுலகைத் துறந்து, தன் உடலையும் மறந்து கிட்டத்தட்ட உன்மத்தராய், ஒரு பித்தராய்த் தெருக்களில் அலைந்து திரிந்தார். சித்தப்பா ராமசாமி ஜோசியருக்குத் திருவண்ணாமலையில் சேஷாத்ரி இருப்பது தெரிய வந்து கிளம்பி வந்தார். எப்படியேனும் பிள்ளையை அழைத்துப் போகவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்திருந்தார். இங்கு வந்து சேஷாத்ரி சுவாமிகள் ஒரு பிச்சைக்காரனைப் போல் பரட்டைத்தலையோடும், ஒட்டிய கன்னங்களோடும், குழி விழுந்த கண்களோடும், வாடிய வயிற்றோடு தனக்குத் தானே பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். அங்கேயே தங்கி சேஷாத்ரியைத் தன்னுடன் அழைத்துச் செல்லப் பலவகையிலும் முயன்றார். முடியவில்லை. கடைசியில் அங்கிருந்த அன்னச் சத்திரக்காரரிடம் சேஷாத்ரிக்கு வயிறு நிரம்பச் சாப்பாடு போடச் சொல்லி வேண்டுகோள் விடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.

சேஷாத்ரி சுவாமிகள் கம்பத்து இளையனார் சந்நிதியிலோ, அல்லது திரெளபதி அம்மன் கோயிலிலோ அல்லது ஈசான்ய மடம், துர்கை அம்மன் கோயில் ஆகிய இடங்களிலேயே அமர்ந்து தவத்தில் ஈடுபடுவார். மலை மேல் ஏறிச் சென்று தவம் செய்யப் போனதில்லை. மலை அடிவாரத்திலேயோ பாதாள லிங்க சந்நிதியிலேயோ அமர்வார். தமது பத்தொன்பதாவது வயதில் 1889-ஆம் ஆண்டில் அருணாசலத்திற்கு வந்து சேர்ந்தார் சேஷாத்ரி சுவாமிகள். அருணாசல க்ஷேத்திரத்தைக் குறித்து சேஷாத்ரி சுவாமிகள் கூறுவதாவது, “இந்த க்ஷேத்திரத்தில் தான் அம்மையும், அப்பனும் இணைந்து இவ்வுலகத்து மாந்தர் அனைவரையும் அழைத்து முக்தி கொடுக்கின்றனர். அந்தக் கிருஷ்ணனோ தன் சுதர்சனச் சக்கரத்தைக் கூட வைத்துவிட்டுப் புல்லாங்குழலில் இசைக்கும் கீதங்களுக்கு ஈசன் வெளியே வந்து நடனமாடுகிறான்.” என்பாராம். சேஷாத்ரி சுவாமிகள் வந்து சேர்ந்து சரியாக ஆறு வருடங்களுக்குப் பின்னர் அங்கே இன்னொருவரும் வந்து சேர்ந்தார். அவர் ரமண மஹரிஷி. ரமண மஹரிஷியைப் பாதாள லிங்க சந்நிதி குகைகளில் தவம் செய்கையில் முதலில் கண்டவர் சேஷாத்ரி சுவாமியே தான். அவரைச் சின்ன சாமி என்று அழைப்பாராம். மேலும் ரமணரைக் குறித்து உலகுக்கு அறிவித்தவரும் சேஷாத்ரி சுவாமிகளே ஆகும்.

ரமணரைப் பலவிதங்களிலும் சேஷாத்ரி சுவாமிகள் பாதுகாத்து வந்ததைக் கண்ட மக்கள், சேஷாத்ரி சுவாமிகளை அம்பாள் எனவும், ரமணரை சுப்ரமணியர் அவதாரம் எனவும் அழைத்தனர். அல்லது சேஷாத்ரி சுவாமிகளைப் பெரிய சேஷாத்ரி எனவும், ரமணரைச் சின்ன சேஷாத்ரி எனவும் அழைத்தனர். சேஷாத்ரி சுவாமிகளை அனைவரும் பைத்தியம் எனச் சொல்வதைக் கேட்ட ரமணர் சிரித்துக்கொண்டே இந்த அருணாசலத்தில் மூன்று பைத்தியங்கள். ஒன்று இந்த அருணாசலேஸ்வரர், இரண்டாவது சேஷாத்ரி சுவாமிகள், மூன்றாவது தாம் என்று கூறுவாராம். சில பக்தர்களோ அருணாசலத்தில் மூன்று லிங்கங்கள். ஒன்று அருணாசலமலை, இன்னொன்று சேஷாத்ரி சுவாமிகள், மூன்றாவது ரமணர் என்பார்களாம்.

Wednesday, December 7, 2011

சேஷாத்ரி ஸ்வாமிகள் 4

சேஷாத்ரியின் அத்தை பெண்ணான காகினிக்கும் வேறொரு பையனோடு திருமணம் முடிந்துவிட்டது. இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் துச்சமாய்க் கருதிய சேஷாத்ரிக்கோ இவை எல்லாம் பெரிய விஷயமாய்த் தோன்றவில்லை. எந்நேரமும் பேரருளின் துணையை நாடினார். பூஜையறையில் வழிபட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்த அருணாசல மலையின் சித்திரம் மனதில் பதிந்தது. அவர் அருணாசலத்தை நேரில் கண்டதில்லை. அன்ன ஆகாரமில்லாமல் உறக்கமும் இல்லாமல் நெடுநேரம் துர்கா ஸூக்தம் ஜபித்துக்கொண்டே தன்னை மறந்து இருப்பார். சித்தப்பாவும், சித்தியும் அவரைக் கோபித்தும் பலனில்லை. தொந்திரவு அதிகமாவதாக எண்ணிக் கோயிலுக்குச் சென்றுவிடுவார். வரதராஜர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நிதியிலேயோ அல்லது காமாட்சி கோயிலிலோ அமர்ந்து கொண்டிருப்பார். அம்பாளுக்கு நமஸ்காரம் செய்தவண்ணம் இருப்பார். வீட்டுக்குச் செல்லும் எண்ணமே வராது. சித்தப்பா ராமசாமி அங்குமிங்கும் அலைந்து திரிந்து அவரைக் கண்டுபிடித்து வீட்டில் கொண்டு சேர்ப்பார். சித்தப்பாவின் கட்டளைக்காக ஒரு நாள் இரண்டு நாள் இருந்துவிட்டு மீண்டும் கிளம்பி விடுவார் சேஷாத்ரி ஸ்வாமிகள். அவரைக் கண்டாலே சித்தபிரமை பிடித்தவர் போல் காணப்படுவார். இவர் நிலையைக் கண்டு, பொறுக்க முடியாமல் சித்திக்கும், சித்தப்பாவுக்கும் வயிறு எரிந்தது.

அதோடு சேஷாத்ரியின் கண்களுக்கு இறையின் உயர்தன்மை தவிர வேறெதுவும் தெரியவில்லை; புரியவில்லை. தானே மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் சொல்லுவதும், ஆன்ம தரிசனம் கிட்டியதற்கு ஆனந்திப்பதுமாக இருந்தார். பார்க்கிறவர்களுக்கு இது புரியவில்லை. சேஷாத்ரிக்கு மனநலம் கெட்டுவிட்டதாய் நினைத்துக்கொண்டனர். அவரிடம் பேச்சுக் கொடுத்தனர். ஆனால் அவரோ அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலைச் சரியாகக் கொடுத்ததோடு தெளிவான ஞான விளக்கமும் கொடுப்பார். அனைவரும் திகைத்துப் போவார்கள். “காமோ கார்ஷீத்” மந்திரத்தை மட்டுமே ஒன்றரை லக்ஷம் முறை ஜபித்ததாய்ச் சொல்லுவார்கள். சில நாட்களில் கோயிலுக்குச் செல்வதையும் நிறுத்திய சேஷாத்ரி காலையிலும் மாலையும் வீட்டில் இருந்துவிட்டு இரவில் மட்டும் மயானம் சென்று ஜபித்து வந்தார். வீட்டிலுள்ளவர்களுக்குப் பலநாட்கள் கழித்தே இது தெரிய வந்தது. ஆகவே அவர்கள் தடுத்தனர். ஆனால் சேஷாத்ரியோ தாம் ருத்ர ஜபம் செய்வதாகவும், ருத்ரபூமியிலேயே அதைச் செய்யவேண்டும் என்பதாகவும் கூறவே சித்தப்பா அவரை ஒரு அறையில் அடைத்துப் பூட்டிவிட்டார். தன்னை அறையில் அடைத்துப் பூட்டியதும் நன்மையே எனக் கருதிய சேஷாத்ரி உள்ளுக்குள்ளே தானும் தாழைப் போட்டுவிட்டு அன்ன, ஆகாரமின்றி ஜபம், தியானம் போன்றவற்றில் ஆழ்ந்துவிட்டார். வெளியே வரவே இல்லை. நான்கு தினங்கள் சென்றுவிட்டன.

பயந்து போன ராமசாமி ஜோசியர் கதவைத் திறந்து சேஷாத்ரியை வெளியே விட்டார். அவரோ மீண்டும் ருத்ர ஜபத்தை ருத்ர பூமியிலேயே செய்ய ஆரம்பித்தார். கடுமையாக உபவாசம் இருந்து உடலை வருத்தி ஜபம் செய்து வந்தார். ஜபம் செய்யச் செய்ய அவர் உள்ளத்தில் பிறந்த ஒளியானது முகத்திலும் தெரிய ஆரம்பித்தது. ஆனால் ராமசாமி ஜோசியரோ கவலை அதிகமாகி சேஷாத்ரியைக் கோவிக்க ஆரம்பித்தார். மயானத்துக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் சேஷாத்ரியோ வீட்டில் ஏதேனும் வேலை கொடுத்தால் கூட அதைச் செய்கையில் திடீரென வீட்டிற்கு வெளியே சென்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு வருவார். என்னவென்று காரணம் கேட்டால் தேவதைகள் பாடிக்கொண்டு போவதாயும், கந்தர்வர்களும் காணப்படுவதாயும் கந்தர்வ கானம் காதுகளில் கேட்பதாயும் கூறுவார். சேஷாத்ரிக்குப் பைத்தியம் என்றே சித்தப்பா நினைத்து வந்தார். ஆனால் சேஷாத்ரியோ இதைக் கண்டு சிறிதும் கலங்காமல் உலகப்பந்தத்தில் சிக்கித் தவிக்கும் கர்மாக்களைச் செய்து வரும் கர்மிகளுக்கு இவை கஅதில் விழாது என்று கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

சித்தப்பாவோ சேஷாத்ரியின் ஜாதகம் பற்றித் தெரிந்திருந்தும் அவருக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்தார். உள்ளூரில் இருந்த உறவினரும், நண்பர்களும் இதையே கூறி வலியுறுத்தினார்கள். ஆனால் அவருடைய சுபாவமும், ஜபம், தவம், ருத்ரபூமியில் வாசம் போன்றவை தெரிந்த பெண் வீட்டுக்காரர்கள் கண்டிப்பாகப் பெண் தர மறுத்துவிட்டனர். சித்தப்பா மனம் உடைந்து போய் சேஷாத்ரியிடம் புலம்ப ஆரம்பித்தார். சேஷாத்ரியோ சித்தப்பாவைத் தேற்றி சமாதானம் செய்தார். கல்யாணம் என்ற பேச்சை ஆரம்பித்தால் தான் வீட்டை விட்டுப் போய்விடுவதாகவும் கூறினார். அதோடு கல்யாணப்பேச்சு நின்று போக உறவினரான பரசுராம சாஸ்திரிகள் என்பவர் சுடுகாட்டிற்குச் சென்று ஜபம் செய்துவிட்டுப் பின்னர் வீட்டிற்குள் நுழைவதை ஏற்கவே இயலாது என்று அடித்துச் சொன்னார். அன்று முதல் சேஷாத்ரி வீட்டினுள் நுழைவதையும் நிறுத்திவிட்டுக்கோயில்கள், குளக்கரைகள், மரத்தடி எனப் பொழுதைக் கழித்தார். அப்போது காஞ்சீபுரத்திற்கு ஹரித்வாரில் இருந்து பாலாஜி சுவாமிகள் என்பவர் தம் நான்கு சீடர்களோடு வந்திருந்தார். அவர் சர்வதீர்த்தக்கரையில் இருந்த விஸ்வநாத ஸ்வாமி ஆலயத்தில் தங்கி இருந்தார். அவரைக் கண்டதும் சேஷாத்ரி உணர்ச்சி வசப்பட்டுக்கால்களில் விழுந்து வணங்கினார். அவரை சாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தியாகவே கருதி தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தைக் கூறி அவர் கால்களில் விழுந்து வணங்கினார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் மாலையென வழிந்து கொண்டிருந்தது. பாலாஜி சுவாமிகள் சேஷாத்ரியைச் சாந்தம் செய்து அமைதியுடன் இருக்கும்படி கூறித் தம் அருகே அமர வைத்துக்கொண்டார். சேஷாத்ரியும் அவரும் சாஸ்திர சம்பந்தமாகப் பேசி தங்களுக்குள் மகிழ்ச்சி அடைந்தனர். தம் பார்வையாலேயே சேஷாத்ரிக்கு நயன தீக்ஷை கொடுத்துவிட்டார் பாலாஜி சுவாமிகள். சேஷாத்ரி அவருக்கு ஐந்தாவது சீடராக மாறி அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார்.

சுவாமிகள் சேஷாத்ரியின் மனம் இவ்வுலக பந்தங்களைப் பொருட்டாகக் கருதவில்லை என்பதைப் புரிந்து கொண்டார். மனதளவில் அவர் ஒரு சந்நியாசியாகவே இருப்பதையும் தெரிந்து கொண்டார். ஆகவே சேஷாத்ரி ஞான சந்நியாசத்துக்கு ஏற்றவர் என்பதைப் புரிந்து கொண்டு அவருக்குச் சந்நியாசிரமம் வழங்கி மஹா வாக்கியங்களையும் உபதேசம் செய்தருளினார். முறைப்படி சந்நியாசம் வாங்கிக் கொண்ட சேஷாத்ரி அந்த பிரம்மானந்தத்தில் தன்னை மறந்து திளைத்தார். அப்போது சேஷாத்ரியின் தகப்பனார் வரதராஜ ஜோசியரின் சிராத்தம் வரவே சித்தப்பா ராமசாமி ஜோசியர் இரண்டு வலிமையான நபர்களின் உதவியோடு தெருவில் அலைந்து திரிந்து கொண்டிருந்த சேஷாத்ரியைக் கட்டிப் பிடித்து வீட்டுக்கு இழுத்து வந்து சேர்த்து ஓர் அறையிலும் போட்டுப் பூட்டினார். சேஷாத்ரியோ தாம் சந்நியாசி எனவும் கர்மங்களுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை எனவும் வாதாடினார். ஆனால் சித்தப்பா விடாமல் அறையைப் பூட்டிச் சாவியைத் தம்மிடமே வைத்திருந்தார். சிராத்தம் முடிந்ததும் புரோகிதர்களை வணங்கி ஆசிகள் பெற வேண்டிய நேரம் வந்தபோது அறையைத் திறந்து சேஷாத்ரியை அழைத்தால் அறை காலி. சேஷாத்ரி அறையில் இல்லை.

Sunday, December 4, 2011

சேஷாத்ரி ஸ்வாமிகள் - 3

அங்கிருந்த சேஷாத்ரியும், மரகதமும் பயந்து போனார்கள். மரகதத்தின் மனதில் கவலை புகுந்தது. கணவரிடம் காரணம் கேட்க அவர் ஆனந்தக் கண்ணீர் எனச் சமாளித்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். சேஷாத்ரியும் மேலே எதுவும் பேசாமல் பாடசாலைக்குச் சென்று விட்டார். மகன் சென்ற பின்னர் வரதராஜ ஜோசியர் மனைவியை அருகில் அழைத்து, “மரகதம், நான் சொல்வதைக் கேட்டு உன் மனதைத் திடமாக வைத்துக்கொள். காமாட்சி என்னை அழைக்கிறாள். நாளை சூரியோதயத்திற்கு முன்னர் நான் கிளம்பிவிடுவேன். நம் மகன் சேஷாத்ரி காமாட்சி அருளால் பிறந்தவன் பெரும்புகழோடு வாழப் போகிறான். ஆனால் அதைக் காண நான் இருக்கப் போவதில்லை. நீ இன்னும் சிறிது காலம் இருந்து சேஷாத்ரியின் புகழைக் கண்களால் கண்டு காதுகளால் கேட்டு இன்புற்றுப் பின்னர் வந்து சேர்வாய்.” என்றார். இதைக் கேட்ட மரகதம் மூர்ச்சை அடந்து விழுந்தாள். வரதராஜ ஜோசியர் ஞானம் அதிகம் உள்ளவராகையால் அவருக்கு இதைச் சொல்கையில் எந்தவிதமான வருத்தமும் தெரியவில்லை. ஆனால் மரகதமோ துடிதுடித்துப் போனாள்.

வரதராஜ ஜோசியர் அன்று முழுதும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும், காமாட்சி கோயிலிலும் தியானம் செய்து கொண்டே அமர்ந்திருந்தார். இரவு வெகுநேரம் கழித்தே வீடு வந்தார். உணவே உட்கொள்ளாமல் படுக்கச் சென்றார். இரவு திடீரென அவர் உடல்நலம் குன்றியது. நாடி தளர்ந்து போக விடியற்காலை நேரம், தன் அருமை மகன் சேஷாத்ரியைப் பார்த்து அருகே அழைத்து இறுகத் தழுவிக்கொண்டார். மகனிடம் எத்தனை சாஸ்திரங்கள் கற்றாலும் அனுபவம் ஒன்றே பெரியது என்று வற்புறுத்திக் கூறிவிட்டுத் தன்கண்களை மூடினார். அதன் பின்னர் வரதராஜ ஜோசியர் கண்களைத் திறந்தே பார்க்கவில்லை. மரகதம் மனம் வருந்தி நொந்து போய் அழுது கொண்டே இருந்தாள். நினைவிலும்,கனவிலும் கணவர் நினைவே அவரோடு குடித்தனம் நடத்திய நிகழ்வுகளே முன் வந்து நின்றது. மனவேதனை அதிகமாக அதிகமாக இனி தான் அதிகநாட்கள் உயிரோடு இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு தன் உணவைக் குறைத்துக்கொண்டு சந்நியாசினி போல் எந்நேரமும் தியானமும், ஜபமும் செய்ய ஆரம்பித்தாள். சேஷாத்ரியும், அவர் தம்பியும் தாயின் வேதனையைக் குறைக்க முயல்வார்கள். காமகோடி சாஸ்திரிகள் தாம் அருமையாக வளர்த்த பெண் படும் கஷ்டங்களைக்கண்டு மனம் வருந்தி இடம் மாறினால் சரியாகும் என என்ணிக் காஞ்சீபுரத்திலிருந்தவர்களை வழூர் என்னும் ஊருக்கு அழைத்துச் சென்றார்.

சேஷாத்ரிக்குப் பதினான்கு வயது ஆகிவிட்டபடியால் அவனுக்கு பிரும்ம சூத்திரங்கள், பகவத்கீதை, உபநிடதம் ஆகியவற்றைப் போதித்தார் பாட்டனார் காமகோடி சாஸ்திரிகள். தன் வம்சத்திற்கே உரிய மந்திர உபதேசங்களும் செய்து வைத்தார். தனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். பதினைந்து வயதில் திருவாங்கூர் திவானாக இருந்த சர் சி.பி.ராமசாமி ஐயரின் தாய்வழிப்பாட்டனார் ஆன வெங்கடசுப்பையர் வீட்டில் ஶ்ரீமத் பாகவதமும், ராமாயணமும் பிரவச்னம் செய்தார் சேஷாத்ரி. சிறுவன் இவ்வளவு அழகாய் ஸ்லோகங்களைக் கூறிப் பொருளும் கூறுவதைக் கண்ட அனைவரும் வியந்தனர். இதன் நடுவில் காமகோடி சாஸ்திரிகள் தாம் வயதாகிவிட்டதால் சந்நியாசம் வாங்கிக்கொள்ள நினைத்து சந்நியாசம் வாங்கிக்கொண்டு காஞ்சியிலேயே வரதராஜர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நிதியிலேயே தங்கினார். மரகதம் தினமும் அங்கே பிள்ளைகளுடன் சென்று பிக்ஷை அளித்து வந்தாள். பின்னர் அவரின் சகோதரர் வந்து அவரை அழைத்துச் சென்றுவிட சேஷாத்ரி தம் தாய், தம்பியோடு மீண்டும் காஞ்சிபுரத்தில் சித்தப்பா ராமசுவாமி ஜோசியரின் பாதுகாப்பில் இருந்து வரலாயினார். அப்போது காஞ்சிக்கு மேற்கே இருக்கும் தாமல் என்னும் ஊரில் அவரின் அத்தை வெங்கடலக்ஷ்மி என்பவர் வசித்து வந்தார்.

வெங்கடலக்ஷ்மிக்கு காகினி என்னும் பெயருள்ள பெண் ஒருத்தி கல்யாணத்துக்குத் தயாராக இருந்தாள். அவளை சேஷாத்ரிக்கு மணமுடிக்கவேண்டுமென அத்தையார் எண்ணம். சேஷாத்ரி புத்தி கூர்மையோடு அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்ததோடு, தன் அன்னையிடம் கற்ற சங்கீதப் பயிற்சி மூலம் தன் தாத்தாவான காமகோடி சாஸ்திரிகள் இயற்றிய தேவி கீர்த்தனங்களை நன்கு பாடவும் செய்வார். ஆகவே அவரின் தேஜஸும், அழகும் மனதையும், கவர அத்தையார் தன் சகோதரரிடம் வந்து சேஷாத்ரிக்கும், காகினிக்கும் திருமணம் முடிப்பது குறித்துப் பேச்சைத் தொடங்கினாள். ஆனால் ராமசுவாமி ஐயரோ திட்டவட்டமாக அதை மறுத்தார். வெங்கடலக்ஷ்மிக்கு துக்கம் ஒருபுறம்,கவலை மறுபுறம். அண்ணனிடம் வற்புறுத்திக் கேட்க, ராமசுவாமி ஜோசியர், சேஷாத்ரியின் ஜாதகத்தை அவர் ஆழமாக அலசிப் பார்த்ததாயும், அது சந்நியாச யோக ஜாதகம் எனவும் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதில்லை; குடும்ப வாழ்க்கையே கிட்டையாது என்றும் கூறினார். அண்ணனும், தங்கையும் பேசிக்கொண்டிருந்தது அங்கே ஓரமாக முற்றத்தில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்த மரகதத்தின் காதுகளிலும் விழுந்து அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படியே மயங்கிக் கீழே விழுந்தாள். சேஷாத்ரி பலவிதங்களிலும் தாயைத் தேற்றினார். சகல சாத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவருக்குத் தன் எதிர்காலம் குறித்தும் ஓரளவு தெரியும். அவர் மனமும் அதிலேயே நாட்டத்தைச் செலுத்தி வந்தது. என்றாலும் தாய்க்கு அத்தனை வெளிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டாம் என்றே நினைத்தார்.

மரகதத்துக்கு அன்றிலிருந்து தேக ஆரோக்கியம் குன்றிப் போக ஆரம்பித்தது. தன் அருமை மூத்தமகனை, காமாட்சியின் அனுகிரஹத்தால் பிறந்தவனை சந்நியாசிக் கோலத்தில் எப்படிக் காண்பது எனத் துடித்துப்போனாள். நினைத்து நினைத்து உருகிய மரகதம் படுத்த படுக்கையாகவே ஆனாள். மருந்து உட்கொள்ளவும் திடமாக மறுத்துவிட்டாள். சேஷாத்ரியும் தாயின் அன்பையும் அவளின் தற்போதைய நிலையையும் எண்ணி எண்ணி மனம் வருந்தினார். ஒரு ஏகாதசி தினத்தன்று ஷேசாத்ரியைத் தன்னருகே அழைத்த மரகதம் “அம்ப சிவே” என்னும் தன் பெரியப்பாவும், தன்னை வளர்த்தவருமான காமகோடி சாஸ்திரிகளின் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டாள். இயன்றவரை தானும் பாடினாள். பின்னர் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தில் இருந்து
“ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நிஸ்சலதத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி” என்ற ஸ்லோகத்தை சேஷாத்ரியின் மார்பில் அடித்து மும்முறை கூறினாள். இப்படியாக அன்னை மூலமே சேஷாத்ரி பிரம்ம ஞான தத்துவத்தை உபதேசம் பெற்றார். இதன் பின்னர் அருணாசல, அருணாசல, அருணாசல என்று மும்முறை வாய்விட்டுக் கூறினாள். அருணாசல மகிமையைக்கூறும் ஸ்லோகத்தையும் தன் மைந்தன் நெஞ்சில் கை வைத்துக் கூறினாள். அதோடு அவள் உயிர் பிரிந்தது. தாயும் இன்றித் தகப்பனும் இன்றிச் சித்தப்பாவின் ஆதரவோடு வாழ ஆரம்பித்தனர் சகோதரர் இருவரும். அவர்களுக்கும் குழந்தைகள் இல்லாமையால் அண்ணன் குழந்தைகளைத் தம் கண்மணி போல் பாவித்து வளர்த்து வந்தார் ராமசுவாமி ஜோசியர்.

Monday, November 28, 2011

சேஷாத்ரி ஸ்வாமிகள் 2


1870-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 22-ஆம் நாள், சனிக்கிழமை, ஹஸ்த நக்ஷத்திரம் கூடிய நல்ல நாளில் மரகதத்திற்கு காமாட்சி தேவியின் அருட்பிரசாதமாக ஆண் மகவு பிறந்தது. குழந்தைக்கு சேஷாத்ரி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். பராசக்தியின் அருளால் பிறந்த அந்தக் குழந்தை இயற்கையாகவே தெய்வசிந்தனையோடும், இறைவழிபாட்டில் ஆர்வத்தோடும் காணப்பட்டது. தாயாரும் குழந்தைக்குப் பல ஸ்லோகங்களைச் சொல்லிக்கொடுத்தார். தாய் பாடுவதைக் கேட்டுக் கேட்டு மகனுக்கும் இசையில் ஆர்வம் மிகுந்தது. நான்காம் வயதிலேயே கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம், மூக பஞ்சசதி, குரு ஸ்துதி போன்றவற்றைக் கற்றுக்கொண்டு சொல்ல ஆரம்பித்தான். வரதராஜ ஜோசியருக்கோ தன் மகனின் புத்தி கூர்மையைக் கண்டும், வித்வத்தைக் கண்டும் ஆனந்தம் அதிகம் ஆனது. தன் சீடர்களுக்குப்பாடம் சொல்லிக் கொடுக்கையில் மகனைத் தன் மடியில் வைத்துக்கொண்டே சொல்லிக் கொடுத்துவந்தார். ஆகவே குழந்தைக்கு நாளாவட்டத்தில் அந்த வேதாந்தப் பாடங்களும் அத்துபடியாயின.

தந்தையோடு தானும் தியானத்தில் அமருவான். தாயோடு தினம் தினம் எல்லாக் கோயில்களுக்கும் போவான். ஒருநாள் தாயுடன் ஶ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்றார் சேஷாத்ரி. அங்கே ஒருவர் வரப்போகும் திருவிழாவில் விற்பனை செய்ய வேண்டி ஒரு மூட்டை நிறைய பாலகிருஷ்ணனின் விக்ரஹங்களை எடுத்து வந்திருந்தார். அதைக் கண்டு சேஷாத்ரியாகிய குழந்தை தனக்கும் ஒரு பொம்மை விளையாட வேண்டுமென்று தாயிடம் கெஞ்சிக் கேட்டது. தாயோ அதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. குழந்தை மேலும் மேலும் கெஞ்ச, பொம்மை விற்பவர் குழந்தையின் அழகிலும், அது கெஞ்சும் விதத்திலும் மனம் கவரப்பட்டுக் குழந்தைக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார். அதன் தாயைப் பார்த்து, “தாயே, உங்கள் குழந்தையே ஒரு கிருஷ்ண விக்ரஹம். நடமாடும் விக்ரஹம். ஆனாலும் அது ஆசைப்பட்டு ஒரு விக்ரஹம் கேட்குது. நீ வாங்கித் தர வேண்டாம். நானே தருகிறேன். ஒரு விக்ரஹத்தை எடுத்துக்கொள்ளச் சொல்!” என்ற வண்ணம் மூட்டையைப் பிரித்துக் குழந்தையைத் தன் கையாலேயே ஒரு பொம்மையை எடுக்கச் சொன்னார். குழந்தையும் மூட்டைக்குள் கைவிட்டு ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டது. மரகதம் எவ்வளவோ கெஞ்சியும் பொம்மை விற்பவர் பொம்மைக்குரிய காசை வாங்க மறுத்துவிட்டார்.

ஆச்சரியவசமாக அவருக்கு அன்று மாலைக்குள்ளாக எல்லா பொம்மைகளும் விற்றுப் போக அவர் இது அத்தனையும் சேஷாத்ரியின் மகிமையே என்பதைப் புரிந்து கொண்டார். மறுநாள் குழந்தையுடன் கோயிலுக்கு வந்த மரகதத்தைப் பார்த்துவிட்டுப் பரவசமடைந்து ஓடோடி வந்து சேஷாத்ரியின் தாயார் மரகதம் கால்களில் விழுந்து வணங்கினார். அவள் ஒன்றும் புரியாமல் விழிக்க, வியாபாரி, அவளைப் பார்த்து அவள் மகன் சாதாரணக் குழந்தை அல்ல என்றும் அதிருஷ்டக்குழந்தை எனவும் கூறினார். மேலும் தான் கொண்டு வந்த பொம்மைகள் எல்லாமே ஒரே நாளைக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், எத்தனையோ திருவிழாவுக்குப் போயிருக்கும் தான் நூறு பொம்மை கூட விற்க முடியாமல் திண்டாடி இருப்பதாகவும் சேஷாத்ரி கை வைத்த வேளை அமோகமான விற்பனை எனவும் கூறிவிட்டு, குழந்தைக்குத் தங்கக்கை என்று கூறியவண்ணம் அந்தக் கைகளைத் தொட்டுக் கண்களில் ஒத்திக்கொண்டார். குழந்தைக்கு முத்தமாரி பொழிந்தார். அன்றிலிருந்து சேஷாத்ரிக்கு “தங்கக்கை சேஷாத்ரி” என்ற பெயர் ஏற்பட்டது. அந்தக் கிருஷ்ண விக்ரஹம் பின்னாட்களில் அவரின் தம்பியின் வாரிசுகளிடம் இருந்ததாயும், பின்னர் காஞ்சி ஶ்ரீபரமாசாரியாரிடம் சேர்ப்பிக்கப்பட்டதாயும் தெரிய வருகிறது.
சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு ஐந்தாவது வயதில் வித்யாரம்பம் நடந்தது. தாத்தா காமகோடி சாஸ்திரியாரும் ஸாரஸ்வத மஹாபீஜ மந்திரத்தை தர்ப்பையினால் பேரப்பிள்ளையின் நாவில் எழுதி, பஞ்சாக்ஷரத்தையும் அஷ்டாக்ஷரத்தையும் உபதேசம் செய்வித்தார். அம்பிகையின் இன்னருளால் பிறந்த தவப் புதல்வனாம் சேஷாத்ரியிடம் கலைமகள் கைகட்டிச் சேவகம் புரிந்தாள். வயதுக்கு மீறிய அறிவோடு அனைத்துப் பாடங்களையும் திறம்படக் கற்றார். கம்பராமாயணம், திருக்குறள், நன்னூல், நைடதம் அனைத்தையும் கற்றதோடு அன்னையிடம் முறைப்படி சங்கீதமும் கற்றுக் கொண்டார். எழாம் வயதில் உபநயனம் செய்வித்தனர். தாத்தா காமகோடி சாஸ்திரிகள் காயத்ரி மந்திர மகிமை குறித்தும், சந்தியாவந்தனத்தின் அவசியம் குறித்தும் பேரனின் மனதில் பதியும்படி எடுத்துக்கூறினார். வேதபாடசாலையில் முறைப்படி சேர்த்து வேதாத்யயனமும் கற்க வைத்தார். தர்க்கம், வியாகரணம் அனைத்தையும் பயின்றபின்னர் தனக்குத் தெரிந்த அத்யாத்ம வித்தையையும், மந்திர ரகசியங்களையும் பேரப்பிள்ளைக்குக் கற்றுக்கொள்ள வைத்தார். அனைத்தும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தன. ஒருநாள் வழக்கம்போல் பாடசாலைக்குச் செல்லும் முன்னர் தந்தையை நமஸ்கரித்த சேஷாத்ரியைக் கட்டிக்கொண்டு தந்தை கண்ணீர் வடித்தார். அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

Friday, November 25, 2011

ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்-- பகுதி ஒன்று

சேஷாத்ரி ஸ்வாமிகள்:
காஞ்சி நகரின் காமாட்சி அன்னையை ஆராதிப்பதற்காக ஆதி சங்கரர் சில உபாசனா முறைகளைத் தோற்றுவித்ததோடு அல்லாமல் அவற்றைச் சரிவர நடத்துவதற்காக, நர்மதா நதிக்கரையில் இருந்து தேவி உபாசகர்களான முப்பது பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு காஞ்சிக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஶ்ரீ காமாட்சி தேவியைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு ஶ்ரீவித்யையைப் பரப்பி வந்தனர். அவர்கள் காலத்திலிருந்து தேவி பக்தியும், ஶ்ரீவித்யை உபாசனையும் செழித்து வளரத் தொடங்கியது. மக்கள் அவர்களைக் காமகோடியார் என அழைக்க ஆரம்பித்தனர். ஏனெனில் காஞ்சியின் காமாட்சி அம்மன் மட்டுமின்றி காஞ்சி நகரமே ஶ்ரீபராசக்தியின் ஶ்ரீசக்ரபீடத்தின் உருவாகவும் அம்மன் குடி கொண்டிருக்கும் காமகோடி பீடம் ஶ்ரீசக்கரத்தின் பிந்துவாகவும் கருதப்படுகிறது. அதை வழிபட்டு வந்த குலத்தவர்களைக் காமகோடியார் என்பது சரிதானே! இவர்கள் வேத அத்யயனம் செய்தவர்கள் மட்டுமல்லாமல், இதிகாசப் புராணங்களையும் நன்கறிந்தவர்கள். ஒரு சிலர் ஜோசிய சாத்திரத்திலும் வல்லவர்களாய் இருந்தனர். காமாட்சி கோயிலில் மட்டுமில்லாமல் ஶ்ரீவரதராஜர் கோயிலிலும் பஞ்சாங்கம் வாசிக்கும் உரிமையும், மான்யங்களும் பெற்றிருந்தனர்.

இந்தக் காமகோடியார் மரபில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காமகோடி சாஸ்திரிகள் என்ற பெயரில் ஒரு மகான் அவதரித்தார். ஆசாரசீலரான அவர் அம்பிகையின் வழிபாடு மட்டுமின்றி, ஈசனையும் துதித்துப் பல பாடல்கள வடமொழியிலும், தெலுங்கிலும் இயற்றி இருக்கிறார் அபாரமான சங்கீத ஞானம் உடைய இவர் கல்லும் கரையும் வண்ணம் பாடல்களைப் பாடிவருவார். இவர் வீடே ஒரு பர்ணசாலை போல் அமைதியும், எழிலும் நிறைந்து காணப்படும். அவர் சிலரின் வேண்டுகோளின்படி அருகிலுள்ள வழூர் என்னும் சிற்றூருக்குச் சென்று தங்கினார். ஆனால் அவருக்கு ஆண் குழந்தைப்பேறில்லாமல் மனம் வருந்தினார். ஒரே ஒரு மகளைப் பெற்றிருந்த அவர் தம் அண்ணனான சிதம்பர சாஸ்திரிகளின் இரு பெண் குழந்தைகளையும் தம் சொந்தப் பெண்களாகவே வளர்த்து வந்தார். அவர்கள் இருவரில் கடைக்குட்டியான மரகதம் சிறு வயதிலேயே அபார புலமையோடும், அழகும், நற்குணங்களும் வாய்க்கப் பெற்றிருந்தாள். சாஸ்திரிகளும் அவளுக்குப் புராணக்கதைகள், தர்ம சாத்திரங்களைக் கற்பித்ததோடு இசையோடு பாடவும் கற்றுத் தந்தார். நாளடைவில் தனது பனிரண்டாம் வயதிலேயே மரகதம், “சாகித்ய சங்கீத கலாநிதி” என்ற பட்டத்தப் பெற்றாள்.

அவளுக்குத் திருமணப்பருவம் வந்துவிட்டதை அறிந்த காமகோடி சாஸ்திரிகள் தக்கமணாளன் தனது மாணவனும், சீடனும் ஆன வரதராஜனே என முடிவு செய்து அவர் தந்தையோடு கலந்து பேசித் திருமணம் நிச்சயித்தார். ஒரு நல்ல முகூர்த்தத்தில் இருவருக்கும் திருமணம் செய்வித்தார். மரகதமும், வரதராஜனும் அருமையாகவும், பெருமையாகவும், சீரோடும், சிறப்போடும் தாம்பத்தியம் நடத்தி வந்தனர். இன்முகத்தோடு அனைவரையும் உபசரித்த தம்பதிகள் இருவரும் தர்ம நூல்களையும், புராணக்கதைகளையும் படித்து மகிழ்ந்ததோடு, மாலை வேளைகளில் வரதராஜப் பெருமாளையும், ஶ்ரீகாமாட்சி அன்னையையும் தரிசனம் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தனர். எல்லாம் இருந்தும் இருவருக்கும் குழந்தைப்பேறே இல்லை. பல விரதங்கள் இருந்தனர். தானங்கள் செய்தனர். திருத்தல யாத்திரைகள் சென்றனர். காமகோடி சாஸ்திரிகளின் மனமும் வருந்தியது. காமாட்சி அன்னையிடம் சென்று அவள் சந்நிதியில் மனமுருகப் பிரார்த்தித்தார். தான் ஏதோ தவறு செய்திருந்தாலும் அதற்காகத் தன் அருமை மகளைத் தண்டிக்க வேண்டாம் என்றும் அம்பிகையின் கடைக்கண் கடாட்சத்தைக் காட்டி ஒரு குழந்தையைக் கொடுத்தருளும்படியும் வேண்டினார். அன்றிரவே காமகோடி சாஸ்திரியாரின் கனவில் அன்னை தோன்றி சாஸ்திரியாரைத் தம்பதிகளுக்கு வெண்ணெய் கொடுக்கும்படி கூறிவிட்டு அந்த வெண்ணெயை உண்ட தம்பதிகளுக்குச் சிறப்பான ஞானக்குழந்தை பிறக்கும் எனவும் கூறி மறைந்தாள்.

மறுநாள் காலை நீராடி அநுஷ்டானங்களை முடித்த காமகோடி சாஸ்திரியார் தம்பதிகளிடம் தாம் கண்ட கனவைக் கூறிவிட்டுப் பராசக்தியை வேண்டிக்கொண்டு, அவளுக்குப் படைத்த பிரசாதமாக வெண்ணெயை இருவருக்கும் கொடுத்தார். மந்திரங்கள், துதிகள், ஜபங்கள் செய்யப்பட்டுப் புனிதமடைந்திருந்த வெண்ணெயை இருவரும் உண்டனர். சில நாட்களில் மரகதம் கருத்தரித்தாள்.

Wednesday, November 16, 2011

வேண்டுகோள்

கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பக்கத்தில் பதிவிட இயலாது. குறிப்புப் புத்தகங்கள் எல்லாம் இந்தியாவில். சிரமத்துக்கு மன்னிக்கவும். இயன்றபோது நினைவில் இருப்பதை எழுதுகிறேன். நன்றி.

Saturday, August 20, 2011

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!

சொல்லின் செல்வனான அனுமன் பேசி முடித்ததும் ராமர் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்தோம். அதோடு இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் சிறு வயதிலேயே அறிந்தவர்கள் எனவும் பார்த்தோம் அல்லவா? ஒருவருக்கென மற்றவர் பிறந்திருக்கிறார்கள். அதை இப்போதே அறிந்து கொள்ளவும் போகின்றனர். நடுவில் மாயை இருவரையும் சேர விடாமல் தடுத்தது எனலாமா? அல்லது சரியான நேரத்தில் தான் ராமனை அடையவேண்டும் என அனுமன் எண்ணியதாய்க் கொள்ளலாமா? எது எவ்வாறாயினும் அனுமனின் தூது நன்மையாகவே முடிந்தது. ராமரின் பேச்சைக்கேட்ட லக்ஷ்மணனும் மகிழ்வோடு அனுமனைப் பார்த்து, தாங்கள் இருவரும் சுக்ரீவனின் நட்பை நாடியே வந்திருப்பதாய்க் கூறினான். சுக்ரீவனின் ஆணையை ஏற்று எங்களைக் காண இங்கே வந்திருக்கும் அனுமனின் விருப்பம்போல் நடப்போம் என்றும் கூறினான். அனுமனுக்கோ மட்டில்லா மகிழ்ச்சி. ‘என் அரசனான சுக்ரீவனுக்கு அரசாட்சி மீண்டும் கிடைக்கும் நேரம் வந்துவிட்டது போலும். அதனாலேயே இவ்வளவு உயர்ந்த மனிதர்களின் நட்பு கிடைக்கிறது. ‘என்றெல்லாம் எண்ணி மகிழ்ந்த அனுமன் ராமரிடம் காட்டுக்கு வந்த காரணத்தை வினவினான்.

லக்ஷ்மணன் ராமரின் கதையை மீண்டும் ஒரு முறை அனுமனிடம் கூறுகிறான். ராமன் தகப்பன் சொல்லுக்காகப் பட்டத்தைத் துறந்ததில் இருந்து இப்போது ஸீதை அபகரிக்கப்பட்டது வரையிலும் அனைத்தையும் சொல்லி முடித்தான். ராமாயணத்தில் இவ்வாறு பலமுறை ராமாயணம் பலராலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும். பின்னர் சுக்ரீவனைப் பற்றிக் கபந்தன் என்னும் கந்தர்வன் சொன்ன விஷயங்களைக் கூறிய லக்ஷ்மணன் அவன் சொன்னதாலேயே சுக்ரீவனை நாடி தாங்கள் வந்திருப்பதாயும், உலகத்தைப் பாதுகாக்கும் வல்லமை படைத்த ராமன் இப்போது சுக்ரீவனின் உதவியை நாடி அவனிடம் அடைக்கலம் நாடி வந்திருப்பதைக் கூறுகிறான். மனைவியை இழந்து ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கி இருக்கும் ராமருக்கு வேண்டிய உதவிகளை சுக்ரீவன் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறான். அவ்வளவில் அனுமன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது தங்கள் அதிர்ஷ்டம் எனவும், வாலியினால் துன்புற்று மனைவியை இழந்து, ராஜ்யத்தையும் இழந்து ஒவ்வொரு இடமாக அலையும்சுக்ரீவனுக்கு உங்கள் உதவி தேவைப்படும். எனக்கூறிவிட்டு அவர்களைத் தன் தோளில் சுமந்த வண்ணம் சுக்ரீவன் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் அனுமன்.

சுக்ரீவனிடம் ராமரின் பெருமையை எடுத்துக்கூறி அத்தகைய பெருமை வாய்ந்த ராமர் இப்போது சுக்ரீவனின் உதவியை நாடி வந்திருப்பதையும் கூறுகிறான். சுக்ரீவனோ தர்மத்தின் பாதையில் இருந்து தவறாத ஸ்ரீராமர் தன் நட்பை நாடி வந்திருப்பது தனக்குச் செய்த கெளரவம் எனக் கூறி விட்டுத் தன் கையை நீட்டி ராமரைப் பிடிக்கச் சொல்லி தனது நட்பை ராமருடன் உறுதி செய்து கொள்கிறான். ராமரும் அவ்வாறே சுக்ரீவனின் கையை இறுகப் பற்ற அனுமன் அக்னியை மூட்ட, இருவரும் அக்னியை வலம் வந்து வணங்கி, இனித் தங்கள் இன்பம், துன்பம் அனைத்தும் ஒன்றே எனக்கூறி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இதைக்கம்பர் கூறுகையில்

"மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார் தீயேரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல்
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர்த்துணைவன் என்றான்.

என்று கூறுகிறார்.

Wednesday, July 27, 2011

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!

கிஷ்கிந்தையை சுக்ரீவன் ஆண்ட சமயத்தில் தான் அநுமன் சூரியனின் வேண்டுகோளின்படியும் அவனுக்குத் தான் அளிக்கவிருந்த குருதக்ஷிணைக்காகவும் சுக்ரீவனிடம் மந்திரியாக வந்து சேர்ந்தான். அவனுக்கு உண்மையாக சேவை செய்தும் வந்தான். ஆகவே வாலி மீண்டும் திரும்ப வந்து சுக்ரீவனை நாட்டை விட்டு விரட்டியபோது அவனுடன் அநுமனும், ஜாம்பவான் என்னும் கரடித் தலைவனும், சுக்ரீவனின் பிள்ளை அங்கதனும் சேர்ந்தே வந்திருந்தார்கள். இங்கே ரிஸ்யமூக பர்வதத்தை வந்தடைந்து அங்கே ஒளிந்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் தான் ஸ்ரீராமரும், லக்ஷ்மணனும் சீதை சென்ற திக்கு நோக்கிப் பிரயாணித்து வந்து சேர்ந்தனர். பம்பை நதிக்கரைக்கு வந்த ஸ்ரீராம, லக்ஷ்மணர்கள் ஏற்கெனவே சுக்ரீவனைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்ததால் அவனைத் தேடி நடந்தார்கள். மலையின் உச்சியில் இருந்து அவர்கள் இருவரையும் கண்ட சுக்ரீவனோ வாலியால் அனுப்பப் பட்டவர்களோ என எண்ணி அஞ்சினான். சந்தேகத்தோடு அவன் தன் நண்பர்களைக்கலந்து ஆலோசிக்க அவர்களில் அனுமன், “வாலியையே நினைத்துக் கவலைப்படுவதை விட்டொழியுங்கள். இவர்கள் யாரோ, எவரோ, அறிய மாட்டோம். இந்த மலையில் வாலியைப் பற்றிய கவலையை விட்டொழியுங்கள். ஓர் அரசனான நீர் அதை மறந்து ஒரு சாதாரண வானரமாக சஞ்சலம் அடைதல் உமக்குத் தகுதியானதன்று. இப்போது அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பதை ஆலோசிக்கலாம்.” என்று கூறினான். ஒரு மந்திரி மன்னனிடம் தக்க நேரத்தில் கூற வேண்டிய ஆலோசனையைக் கூறியதன் மூலம் தன்னுடைய தகுதியை நிரூபித்தான் ஆஞ்சநேயன்.

ஆனாலும்சுக்ரீவனோ, “மாறுவேடத்தில் ஒற்றர்களை அனுப்பி நம்மை வேவு பார்த்து வரச் சொல்லி இருப்பான் வாலி. எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதுதானே. அநுமனே, நீ சென்று அவர்கள் யார், எவர், எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் நோக்கம் என்ன என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு வா. இந்தக் காட்டை நோக்கி அவர்கள் ஏன் பயணப்பட்டார்கள் என்பதையும் கேட்டு அறிந்து வா.” என்று அநுமனை அனுப்பி வைத்தான். அநுமனும் தன் சுய உருவை மறைத்துக்கொண்டு ஒரு சந்நியாசியாக மாறினான். ராம, லக்ஷ்மணர்கள் இருக்குமிடம் சென்று அவர்களை வணங்கி, “இந்தக் காட்டில் அங்குமிங்கும் அலைந்து யாரை அல்லது எதைத் தேடுகிறீர்கள்? உங்களைப் பார்த்தால் அரசர்கள் போலவும், அரசகுமாரர்கள் போலவும் காண்கிறீர்கள். ஆனால் ரிஷிகளுக்குரிய மரவுரி தரித்துள்ளீர்கள். நீங்கள் யார்?? ராஜரிஷிகளா? அல்லது விண்ணிலிருந்து பூமிக்கு வந்த தேவர்களில் இருவரா? இங்கு என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்?” என்று விநயமாக வினவினான்.

மேலும், “ரிஷிகள்போன்ற உடைகளை அணிந்திருந்தாலும் கூடவே போர்க்கோலமும் பூண்டிருக்கின்றீர்களே? உங்கள் இருவரது உடைவாட்களும்நீண்டு இப்போதுதான் தீட்டப்பட்டது போல் மின்னுகின்றன. வில்லை ஏந்தி வந்திருக்கும் வில்லாளிகளான உங்கள் அம்புறாத்தூணிகளோ கூர்மையான அம்புகளால் நிறைந்துள்ளன. இங்கு எவருக்கேனும் பாதுகாப்புக் கொடுக்க வந்துள்ளீர்களா? ஏன் ஒன்றுமே பதில் கொடுக்காமல் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று வினவினான். சற்று யோசனை செய்த அனுமன் மேலும் பேசுவான்: வானரங்களின் நிகரற்ற தலைவனும், தர்மத்தைக் கடைப்பிடிப்பவனுமான சுக்ரீவன் என்னும் வானரத் தலைவனே என் அரசன். அவன் அண்ணனான வாலி என்பவனால் நாடு கடத்தப்பட்டு ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருக்கும் சுக்ரீவனின் முக்கிய மந்திரி நான். இந்த ரிஷ்யமூக பர்வதத்திற்குள் வாலி நுழைய முடியாது என்பதால் சுக்ரீவன் தற்சமயம் இங்கே தங்கி உள்ளார். நானும் ஒரு வானரனே. என் பெயர் அனுமன். சுக்ரீவன் உம்மோடு தனது நட்பை விரும்புகிறார். அந்த நட்பை உறுதி செய்ய வேண்டி என்னை இங்கே அனுப்பி வைத்துள்ளார். நான் இப்போது வந்திருக்கும் இந்த சந்நியாசிக்கோலம் நான் வேண்டி எடுத்துக்கொண்டிருப்பது ஆகும். நினைத்த நேரம், நினைத்த உருவை எடுக்கும் வல்லமை பெற்றவர்கள் நாங்கள். ஆகவே என்னை சுக்ரீவனின் அமைச்சனாக அறிந்து கொண்டு என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொண்டு என் தலைவரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.”

சொல்லின் செல்வனான அனுமனின் பேச்சைக் கேட்ட ஸ்ரீராமர் முகமலர்ச்சியுடன் லக்ஷ்மணனைப்பார்த்து, " நாம் தேடிவந்த சுக்ரீவனின் அமைச்சன் ஆன இவன் நம்பிக்கைக்கு உரியவனாய்த் தெரிகின்றான். மேலும் இவனுடைய இந்தப் பேச்சுக்களில் இருந்து இவன் அனைத்து சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவன் என்று புரிகிறது. இவன் நடத்தையிலோ, சொற்களிலோ காணப்படும் தெளிவில் இருந்து இவன் மிக உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவன் என்பதும், அருமையான ஒரு தூதுவனாகப் பரிமளிக்கிறான் என்பதும் புலனாகிறது. இவனைப் போன்ற ஒருவனை மந்திரியாகப் பெற்ற அந்த சுக்ரீவனின் காரியம் எவ்வாறேனும் கைகூடும். ஆகவே நமக்கும் நாம் வந்த காரியம் வெற்றியடையும் என்று தோன்றுகிறது.” என்றார்.

Sunday, May 1, 2011

ஜெய் ஆஞ்சநேயா! வாலி, சுக்ரீவன்!

 
Posted by Picasa
திருப்பனந்தாள் மடத்துத் தூணில் காணப்பட்ட வாலி, சுக்ரீவன் சிற்பம்.


சற்று நேரத்தில் வாலியின் குரலைப் போல் ஓர் குரலும் கேட்டதும், அதைத் தொடர்ந்து அந்த அசுரனின் அசுர கர்ஜனையும் கேட்டதும். உடனே வெளியே நின்ற சுக்ரீவன் வாலி இறந்துவிட்டான்; அசுரன் அவனைக் கொன்றுவிட்டான் என்ற ஓர் முடிவுக்கு வந்தான். ஆகையால் அசுரன் வெளியே வராதபடிக்குப் பாறையைத் தள்ளிக் குகையின் வாயிலை அடைத்தான். பின்னர் வாலிக்கு நீத்தார் கடன்களை முறைப்படி செய்தான்; அங்கிருந்து கிளம்பி கிஷ்கிந்தை வந்து நாடு மக்களிடமும், மந்திரி, பிரதானிகளிடமும் நடந்ததை சொன்னான். அவனுடைய முயற்சிகளையும் என்ன நடந்தது என்பதை சுக்ரீவனை வற்புறுத்தியும் கேட்டுத் தெரிந்து கொண்ட மந்திரிகள் ஆலோசனைகள் பலவும் செய்து சுக்ரீவனுக்கு முடி சூட்டினார்கள். சுக்ரீவன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் வாலி திடீரெனத் திரும்பி வந்தான். தன்னுடைய சிம்மாதனத்தில் தம்பி ஏறி அமர்ந்து ஆட்சி நடத்துவதையும், தன்னுடைய மந்திரி, பிரதானிகள் அதற்கு ஒத்திசைத்ததையும் பார்த்துக் கோபம் கொண்டான். அமைச்சர்களைச் சிறையில் தள்ளினான். சுக்ரீவன் அண்ணனைக் கண்டதும் உண்மையிலேயே மகிழ்ந்து தன் அரச கிரீடத்தைக் கழற்றி அண்ணன் காலடியில் சமர்ப்பித்து, “அண்ணா, உங்களால் மாயாவியான துந்துபி கொல்லப் பட்டது கண்டு மகிழ்ந்தேன். நாட்டுமக்களுக்கு நன்மை செய்தீர்கள். நீங்கள் வராத காலத்தில் உங்களுக்குப் பதிலாக நாட்டை நான் ஆண்டேன். இனி நீரே எமக்குத் தலைவர். ஒருவருட காலம் அந்தக் குகையின் வாயிலில் பள்ளத்தில் காத்திருந்த நான் பெருகி வந்த ரத்த வெள்ளத்தைக் கண்டு நீங்களே இறந்துவிட்டதாய்த் தவறான முடிவுக்கு வந்துவிட்டேன். ஆகையால் பள்ளத்தை மூடிவிட்டுக் கிஷ்கிந்தை வந்தேன்; இங்கே நான் மந்திரி, பிரதானிகளிடம் நடந்த எதையும் கூறவில்லை. பட்டம் சூட்டிக்கொண்டு அரசாள விருப்பமும் தெரிவிக்க வில்லை. மக்களும், மந்திரிகளுமே ராஜ்யம் அரசனில்லாமல் இருத்தல் கூடாது என்பதால் எனக்கு முடி சூட்டினார்கள்.”

“ஆனால் இப்போது நீங்கள் வந்துவிட்டீர்கள். நான் செய்தது தவறெனில் மன்னிக்கவும். நீங்கள் இல்லாத நேரத்தில் முறையாகவே ஆண்டு உங்கள் நாட்டைக் காத்து வந்திருக்கிறேன். அதை இப்போது உம்மிடம் ஒப்படைக்கிறேன். கோபம் கொள்ளாதீர்கள்.” என்று தயவாகக் கூறித் தன் நாட்டையும், கிரீடத்தையும் வாலியிடம் ஒப்படைத்தான். ஆனால் வாலிக்கோ கோபம் அடங்கவே இல்லை. மிகவும் கொடுமையான வார்த்தைகளால் சுக்ரீவனைத் திட்டினான். மற்றவர்களைப் பார்த்து, “கொடியவனான மாயாவி துந்துபி என்னை சண்டைக்கு அழைத்தபோது வேறு வழியில்லாமல் நான் போனேன். இதோ, இந்த என் தம்பி சுக்ரீவனும் உடன் வந்தான். அந்த மாயாவி ஒரு பள்ளத்தினுள் மறைந்தான். அவனைக் கொல்லாமல் திரும்பக் கூடாது என்பதால் நானும் அந்தப் பள்ளத்தினுள் புகுந்தேன். இவனை வெளியே காவல்தான் இருக்கச் சொல்லி இருந்தேன். அங்கே அவனைத் தேடிக் கொல்ல எனக்கு ஒரு வருடமாயிற்று. என்னால் கொல்லப் பட்ட அவன் கக்கிய ரத்தத்தால் அந்தப் பள்ளம் நிரம்பி ரத்தம் வெளியே ஓடி வரலாயிற்று. நான் பள்ளத்திலிருந்து வெளியே வர முயற்சித்த போது இந்த என் தம்பி பள்ளத்தை மூடிவிட்டிருந்தான். என்னால் வர இயலவில்லை. சுக்ரீவா, சுக்ரீவா, எனப் பல முறை கூவிக் கூவி அழைத்துப் பார்த்தேன். பதிலே இல்லை.”

“அதன் பின்னர் மிகச் சிரமப் பட்டுக் காலினாலும், வாலினாலும் பள்ளத்தை மூடியிருந்த பாறையை நகர்த்தியும், மெள்ள மெள்ள நொறுக்கியும் பள்ளத்திலிருந்து வெளியே வந்தேன். வந்தால், இந்தக் கொடியவன் என் நாட்டை என்னிடமிருந்து அபகரித்திருக்கிறான். அண்ணன் என்ற அன்பைக் காட்டாமல் என் நாட்டை அபகரிக்க வேண்டி வஞ்சகமாய்ச் சூழ்ச்சிகள் செய்திருக்கிறான். இவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.” இவ்வாறு கூறிய வாலி அணிய மாற்றுத் துணி கூட இல்லாமல் சுக்ரீவனை அந்தக் கணமே நாட்டை விட்டுத் துரத்தினான். தன் மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல எண்ணிய சுக்ரீவனிடமிருந்து அவன் மனைவியையும் பறித்துக் கொண்டான். வாலியிடமிருந்த பயத்தால் எங்கேயுமே தங்க இயலாமல் தவித்த சுக்ரீவன் கடைசியில் ரிஷ்யமுக பர்வதத்தினுள் வாலி நுழையத் தடை என்பதை அறிந்து அங்கே வந்து தங்கினான். ஆனால் வாலியின் தொல்லைகள் அவனுக்குக் குறையவே இல்லை.

Wednesday, April 13, 2011

ஜெய் ஆஞ்சநேயா, ஆஞ்சநேயப் பிரபாவம், வாலி, சுக்ரீவர்கள்!

வால்மீகியின் ராமாயணத்திலே இந்த வாநரர்கள் பற்றிய வர்ணனையைப்பார்த்தால் அவர்கள் சாதாரணக் குரங்கினம் அல்ல என்பது நன்கு புலனாகும். அப்படி ஒரு வாநரன் ஆன அநுமனின் வீரதீரம் பற்றியே பார்க்கிறோம். அந்த அநுமன் எப்படிக் கிஷ்கிந்தை வந்து சேர்ந்தான் என்பதையும் பார்த்தோம். தன்னுடைய அம்சத்தின் மூலம் பிறந்த தன் மகன் ஆன சுக்ரீவனுக்குத் தக்க துணையாக அநுமன் இருப்பான் என நம்பியே அவனை சுக்ரீவன் இருக்குமிடம் அனுப்புகிறான் சூரியன். இதுவே அநுமன் தனக்குத் தரும் குரு தக்ஷிணை எனவும் கூறுகிறான் அல்லவா? சுக்ரீவனுக்கு அப்படி என்ன கஷ்டம் நேர்ந்தது என்று பார்க்கும் முன்னர் வாலியைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அருணி என்னும் வாநர ஸ்த்ரீக்குப் பிறந்த வாலியும், சுக்ரீவனும் ரிக்ஷரஜஸ் என்னும் வாநர அரசனால் வளர்க்கப் பட்டனர். மூத்தவன் ஆன வாலிக்குப் பட்டம் கட்டினான் ரிக்ஷரஜஸ். சுக்ரீவன் அவனுக்கு இளையவன் ஆதலால் அண்ணனுடன் கூட உதவிகள் செய்து கொண்டு வந்தான். வாநரர்களின் அரண்மனைகள் கூட பிரமிப்பூட்டும்படியாக அமைந்திருந்ததாக வால்மீகி வர்ணிக்கிறார். அழகான வாநரப் பெண்கள் இருந்ததோடு அற்புதமான ஆடை ஆபரணங்கள் பூண்டும் இருந்திருக்கின்றனர். நடத்தை, அறிவு, பழக்க வழக்கம் போன்றவற்றில் மனிதர்களை ஒத்திருந்தாலும் உணர்ச்சி வசப்பட்டு கோபத்திலோ, மகிழ்ச்சியிலோ அறிவை இழப்பவர்களாக இருந்தனர். ஆகவே இவர்களை வெறும் வாநரங்களாக நினக்காமல் மேலே படிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

வாலி மிகுந்த புத்திசாலியாகவும் திறமை உள்ளவனாகவும் இருந்ததோடு வீரனாகவும் இருந்தான். அவனுக்கும் மாயாவி என்னும் ஒரு அரக்கனுக்கும் ஒரு பெண்ணின் காரணமாகச் சண்டை மூண்டது. மாயாவி ஒரு நாள் நள்ளிரவில் கிஷ்கிந்தை வந்து வாலியைச் சண்டைக்கு அழைத்தான். வாலியும் உடனே சண்டைக்குப் போனான். அவன் மனைவிமார்களும், சுக்ரீவனும் எவ்வளவோ முயற்சி எடுத்துத் தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. வாலியை அவர்களால் தடுக்க முடியவில்லை. வாலியின் பலம் அசாத்தியமானது. அனைவரையும் உதறித் தள்ளிவிட்டு விட்டு மாயவியுடன் சண்டைக்குப் போனான் வாலி.

உக்கிரமாகச் சண்டை நடக்கப்போகிறது என்ற கவலையோடு சுக்ரீவன் அண்ணனைத் தொடர்ந்தான். அண்ணனும், தம்பியும் வருவதைக் கண்ட மாயாவியோ ஓட்டமாக ஓடினான். வாலி தொடர்ந்தான். பின்னாலேயே சுக்ரீவனும் தொடர, அந்த அசுரன் பூமிக்குள் இருந்த ஒரு பெரும் பள்ளத்தில் இறங்க, வாலியும் இறங்க யத்தனித்தான். சுக்ரீவன் தடுக்க, வாலி விடாப்பிடியாக, " நான் உள்ளே இறங்கிச் சென்று அவனைக் கொன்றுவிட்டுத் திரும்பி வருகிறேன். நீ இங்கே காவலுக்கு இருப்பாயாக." என்று கூறி சுக்ரீவனைக் காவலுக்கு வைத்துவிட்டுப் பள்ளத்தில் இறங்கி மறைந்து போனான். வாலி உள்ளே நுழைந்ததுமே மறைந்திருந்ஹ மாயாவி பள்ளத்தையும் மூடிவிடவே, சுக்ரீவனுக்குக் கலக்கம் ஆரம்பமாயிற்று. அப்படியும் ஒரு வருஷத்துக்கும் மேல் அங்கேயே சுக்ரீவன் காத்திருந்தான். வாலி என்ன ஆனான் என்றே தெரியவில்லை. அப்போது அந்தப் பள்ளத்திலிருந்து ஓர் அசுர கர்ஜனை கேட்க, ரத்தமும் பிரவாகமாகப் பொங்கிக்கொண்டு வெளிவரலாயிற்று.

Thursday, February 24, 2011

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!

அநுமன் தன் வித்தைகளை சூரியனின் மூலம் நன்கு கற்றுத் தேர்ந்ததோடு அல்லாமல் மாபெரும் பண்டிதனாகவும் ஆனான். சூரியன் செல்லும் திசையெல்லாம் கூடவே சென்று ஒரு காலைக் கிழக்கேயும், மற்றொரு காலை மேற்கேயும் வைத்துக்கொண்டு தன்னுடைய பிரயாணத்துக்கு இடையூறு நேராவண்ணம் கற்ற இந்த அதிசய மாணாக்கனின் திறமையைக் கண்டு சூரியனும் மகிழ்வும், பெருமையும் கொண்டான். சூரியன் முன்னேற முன்னேற அநுமன் அவனைப் பாரத்தவண்ணமே பின்னே பின்னே சென்று அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான். மேலும் இசையிலும் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றான் அநுமன். முதலில் ஒரு வானரமான உனக்கெல்லாம் இசையைப் பற்றி என்ன தெரியும் என அனுமனைப் பார்த்துக் கேலி செய்த நாரதரே வியக்கும் வண்ணம் அநுமன் வீணை இசைத்தால் கல்லான மலையே உருகும் வண்ணம் அவன் இசைத் திறனும் அமைந்தது. இப்போது குருகுலவாசம் முடிந்து விடைபெறும் நாள் வந்துவிட்டது. குரு தக்ஷிணை கொடுக்கவேண்டும்.

குரு தக்ஷிணையாக எதைத் தருவது என்று சூரியனிடமே கேட்டான் அநுமன். சூரியனோ இப்படி ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடும் குரு பக்தியும் நிறைந்த சீடனுக்குக் கற்றுக்கொடுத்ததே தனக்குக் கிடைத்த மாபெரும் தக்ஷிணை என மறுத்தான். ஆனால் அநுமன் சமாதானம் அடையவில்லை. வெகு நேரம் யோசித்த சூரியன் தன்னுடைய மானஸ புத்திரன் ஆன சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தை சென்று உதவிகள் செய்யுமாறும், ஆலோசனைகள் கூறுமாறும் அநுமனிடம் கேட்க அநுமனும் அதற்கு ஒத்துக்கொண்டு கிஷ்கிந்தை நோக்கிப் பிரயாணமாகிறான். இவ்வளவு படித்தும்,, இத்தனை வித்தைகள் கற்றுக்கொண்டும் அநுமனுக்கு அவை எதுவும் நினைவில் இல்லாதவாறு தன் பலம் தனக்கே தெரியாதவாறு ஒரு சாபம் இருந்து கொண்டிருந்தது. சின்ன வயதுக் குறும்போடு அநுமன் காட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை தவத்தைத் கலைத்து விளையாட, கோபம் கொண்ட ரிஷிகள் அனைவரும் சேர்ந்து அநுமனின் இந்தச் செயலைத் தடுக்க நினைத்தனர். அவன் அதீத பலம் அவர்களுக்குத் தயக்கத்தை அளித்தது. அப்போது முக்காலமும் உணர்ந்த ஞாநியான அகத்தியர் தாம் இதற்கு ஒரு முடிவு கட்டுவதாய்க் கூறினார். ஒரு நாள் தங்கள் வழிபாட்டுக்கு வேண்டிய மலர்கள், கனிகளைப் பறித்து வரும்படி அநுமனிடம் கூற அவனோ மலர்ச்செடிகளையும், கொடிகளையும், பழமரங்களையும் வேரோடு கொண்டுவந்துவிட்டான். இது தான் சமயம் என்று நினைத்த அகத்தியர்அநுமனுக்கு அவன் கற்ற வித்தைகள் மறந்து போகக்கடவது என்று சாபம் கொடுத்தார். என்றாலும் அநுமன் அவதரித்த முக்கிய காரியம் பூர்த்தி அடையவேண்டும் என்பதையும் மனதில் எண்ணி ராமகாரியத்திற்காக அநுமன் பிறப்பெடுத்ததைக் கூறி சாபத்தைத் திரும்ப வாங்கச் சொல்ல, இட்ட சாபம் திரும்ப வாங்க இயலாது என்பதால் சாபத்தை அநுமன் அநுபவித்தே ஆகவேண்டும் எனவும், சரியான நேரம் வருகையில் ஒரு மூத்த வயோதிகரால் அவர் பலம் அவருக்கு எடுத்துச் சொல்லப் படும் எனவும் விமோசனமும் கொடுத்தார். அவ்வளவிலேயே அநுமன் கிஷ்கிந்தை நோக்கி வருகிறான்.

இங்கே கிஷ்கிந்தையிலே வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இடையிலே கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள். வாலியின் பலம் மிக அளவிடமுடியாமல் இருந்தது. அந்த பலத்தை வைத்து அவன் அனைவரையும் வென்றான். கிஷ்கிந்தையை ஆண்டு வந்தான். அவன் மனைவி தாரை இருக்கையிலேயே தம்பி மனைவியான ருமையையும் பலவந்தம் செய்தான். தடுத்துக் கேட்ட சுக்ரீவனை மதிக்கவில்லை. அவனைக் கண்டு லங்காபுரி அரசன் ஆன ராவணனும் பயந்தான். அவனோடு சமரசம் செய்து கொண்டு சமாதானமாகப் போகவே நினைத்து அப்படியே வாலியைத் தனது நண்பனாகவும் ஆக்கிக்கொண்டான். அப்படிப் பட்ட வாலியின் கதை அடுத்துப் பார்க்கலாம்.