எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Sunday, December 18, 2011

சேஷாத்ரி ஸ்வாமிகள் பகுதி 6

ஒரு முறை சேஷாத்ரி சுவாமிகளைப் பார்க்க சேலத்தில் இருந்து அன்பர் ஒருவர் நிறையப் பழங்கள், இனிப்புகள் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். ஆனால் சுவாமிகளைக் காணமுடியவில்லை. சுவாமிகள் காஞ்சிபுரம் போயிருக்கலாமென எவரோ சொல்லக் கேட்டு அங்கு பயணம் ஆகவேண்டி வண்டியில் ஏறி அமர்ந்தார். அப்போது சுவாமிகள் எங்கிருந்தோ ஓடோடியும் வந்து, இந்த வண்டி காஞ்சிபுரத்துக்குப் போகுமா எனக் கேட்கவும் இருவரும் விதிர்விதிர்த்துப் போனார்களாம். பின்னர் கீழே இறங்கி சேஷாத்ரி சுவாமிகளை வணங்கினார்கள். அதே போல் படிக்கமுடியா ஏழைப்பையன் ஒருவன் சேஷாத்ரி சுவாமிகள் அருளால் தேர்வில் தேர்ச்சி அடைந்தான். ஆனால் சுவாமிகளோ பார்க்கப் பைத்தியம் போலவே இருப்பார். தன்னுடைய பெயரைக் கூட மறந்து, தனக்கெனத் தனியான பக்தர் கூட்டமும் இல்லாமல், இருக்க இடமில்லாமல், உண்ண உணவுக்கெனத் தனியாக எதுவும் இல்லாமல் கிடைப்பது போதும் என உண்டு கொண்டு, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பனியைப் பொறுத்துக்கொண்டு அண்ணாமலையில் அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்.

அவர் அங்கிருக்கும் கடைத்தெருவில் எந்தக் கடைக்குள் நுழைந்தாலும் கடைக்காரர்கள் தாங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என எண்ணினார்கள். அவர் கைபட்டால் தங்கள் பணப்பெட்டி நிரம்பி வழியும் எனத் திட்டமாக நினைத்தார்கள். பணக்காரர்கள் அளிக்கும் எந்தப் பொருளையும் ஏற்றதில்லை. ஏழை அளிக்கும் பொருள் எளிமையாக இருந்தாலும் ஏற்பார். சில சமயம் பலநாட்கள் தொடர்ந்து உண்ண உணவு கிடைக்காது. சிலசமயம் உணவு நிறையக் கிடைக்கும். அதற்கேற்றாற்போல் அவரும் சில நாட்கள் சேர்ந்தாற்போல் சாப்பிடுவார். சில சமயம் எதுவும் சாப்பிடவே மாட்டார். அவருக்குக் கிடைக்கும் புதுத்துணிகளை ஏழை, பாழைகளுக்கு அளித்துவிடுவார். அப்படி ஏழை, பாழைகள் கிடைக்கவில்லை எனில் துணியைக் கிழித்துப் போட்டுவிடுவார். அவர் உடுத்தமாட்டார். கந்தல் துணிதான் கட்டி இருப்பார். எப்போது அமர்ந்தாலும் ஸ்வஸ்திக ஆசனத்திலேயே அமர்வார்.

ரமணரைச் சந்தித்து உபதேசம் பெற வேண்டித் திருவண்ணாமலைக்கு வந்த மைசூர் சுவாமிகள் என ஆரம்பகாலத்தில் அழைக்கப்பட்ட வள்ளிமலை சுவாமிகள் ரமணரிடம் உபதேசம் கிட்டாமல் வடநாடெல்லாம் சென்று திரும்பி வந்து ரமணரிடம்சென்றபோது ரமணரோ அவரைக் கண்டு ஒருநாள், “போ, போ, இங்கே நிற்காதே, கீழே போ” என்று விரட்டிவிட, திருப்புகழ் ஸ்வாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் தான் மனதால் குருவாக வரித்தவர், குருவின் வார்த்தையை மீறுவது எப்படி? மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டார். என்ன ஆச்சரியம்?? அங்கே இவரை வரவேற்று அழைத்தவரோ ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். ரமணரின் தீர்க்க தரிசனம் அப்போது தான் புரிந்தது ஸ்ரீவள்ளிமலை ஸ்வாமிகளுக்கு. திருப்புகழ் ஸ்வாமிகளைத் தன்னருகே அழைத்து அமர வைத்துக்கொண்டு அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். சிவமானஸ ஸ்தோத்திரத்தின் நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி அதன் பொருளையும் விளக்கிச் சொன்னார். அதற்கு ஈடான திருப்புகழை வள்ளிமலை ஸ்வாமிகளைக் கூறச் சொல்லிக் கேட்டுத் தானும் மகிழ்ந்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். பின்னர் அவரிடம், “திருப்புகழே உனக்குத் தாரக மந்திரம். உன் சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் இந்தத் திருப்புகழுக்கே அர்ப்பணம் செய்து தவ வாழ்க்கை வாழவேண்டும் நீ. வேறு எந்தவிதமான மந்திரங்களோ நூல்களோ உனக்குத் தேவையில்லை. திருப்புகழ்தான் உனக்கு மகாமந்திரம். நீ செல்லுமிடமெல்லாம் இனி திருப்புகழ் ஒலிக்கட்டும். இப்போது நீ வள்ளிமலைக்குச் சென்று தவம் மேற்கொள்வாயாக. விரைவில் நாமும் அங்கே வருவோம்.” என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.

தன்னை நாடி வரும் பக்தர்களின் உடல்நிலைக்கு ஏற்றபடி தன் ஸ்பரிசத்தால் குணப்படுத்திக்காட்டியதும் உண்டு. ஒரு நாள் காலை ஆறு மணிக்கு ஆகாயத்தைப் பார்த்த சுவாமிகள், “அதோ, விட்டோபா! விட்டோபா போகிறார்!” என்று கூறச் சுற்றிலும் இருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை. சற்று நேரத்தில் போளூரில் இருந்த விட்டோபா சுவாமிகள் மஹாசமாதி அடைந்த தகவல் கிட்டிற்று. சுவாமிகளின் சூக்ஷ்ம திருஷ்டி இதிலிருந்து புலனாயிற்று. வேறொரு நாள் ஒரு பதினைந்து வயதுப் பையனுக்குக் கம்பத்து இளையனார் சந்நிதியில் அம்பாள் உண்ணாமுலை அம்மனின் தரிசனத்தைச் செய்துவைத்துப் பின்னர் அம்மன் சந்நிதிக்குச் சென்று பார்த்த அந்தச் சிறுவன் தனக்கு சேஷாத்ரி சுவாமிகள் காட்டிய அதே கோலத்தில் அம்பாள் அதே புடைவை, அதே மாலைகள் போன்ற அலங்காரத்தில் காட்சி கொடுப்பதைக் கண்டு வியந்து போனான். சாக்தரான சேஷாத்ரி சுவாமிகளுக்கு இதை நிகழ்த்துவது ஒன்றும் அதிசயமல்லவே!

இன்னொரு பக்தரின் மகனுக்கு வந்த ஜுரத்தில் அவன் கண்கள் தெரியாமல் போனது. பக்தர் மகனை அழைத்துக்கொண்டு சேஷாத்ரி சுவாமிகளைச் சரணடைந்தார். சுவாமிகள் அவரை மகனைத் தன்னிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லச் சொன்னார். அப்படியே பக்தர் சுவாமிகளிடம் மகனை ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அன்றிரவு அந்தப் பையனை சுவாமிகள் அம்பாளின் சந்நிதியில் சென்று படுக்கச் சொன்னார். பையன் தயங்கிக்கொண்டே கோயிலுக்குச் சென்று குருக்களிடம் சொல்ல அவர்களும் சுவாமிகள் பேச்சைத் தட்டக்கூடாதென்று அப்படியே அவனை சந்நிதியில் விட்டுப் பூட்டிச் சென்றனர். மறுநாள் காலையில் கோயில் கதவைத் திறந்த போது அந்தப் பையன் தானாகவே உள்ளே இருந்து ஓடி வந்தான். கண்கள் தெரிய ஆரம்பித்தன. அருணாசலம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது.

சரீரத்தில் இருக்கையிலேயே யோகசித்தியுடன் வேறொரு உருவத்தையும் சேஷாத்ரி சுவாமிகள் எடுத்திருப்பதாயும் கூறப்படுகிறது. வள்ளிமலை சுவாமிகள் சேஷாத்ரி சுவாமிகளிடம் உபதேசம் பெற்றபின்னர் ஒருமுறை அவரைக் காண வந்தார். அப்போது அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு மறுநாள் வள்ளிமலை செல்லவேண்டும் என உத்தரவு கேட்க சேஷாத்ரி சுவாமிகள் தானும் வருவதாய்க் கூறவே சரி என மகிழ்வோடு ஒத்துக்கொண்டார் வள்ளிமலை சுவாமிகள். இருவரும் ரயிலில் கிளம்பினார்கள். ரயில் கிளம்பவும் சேஷாத்ரி சுவாமிகள் அதிலிருந்து குதித்துவிட்டார். வள்ளிமலை சுவாமிகள் ஏமாற்றத்துடன் வள்ளிமலை சென்றார். ஆனால் சேஷாத்ரி சுவாமிகளோ அவரைப் பார்த்து உரத்த குரலில், “நீ வள்ளிமலைக்குப் போ! பின்னாலேயே நானும் வருகிறேன்.” என்று கூற வள்ளிமலை சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. வள்ளிமலைக்கு வந்ததும் பொங்கித்தாய்க்கு வழிபாடுகளை முடித்துக்கொண்டு வந்த வள்ளிமலை சுவாமிகள் எதிரே சேஷாத்ரி சுவாமிகள் சிரித்த வண்ணம் நின்றார். உடனே கீழே விழுந்து வள்ளிமலை சுவாமிகள் வணங்கிவிட்டு எழுந்து பார்க்கையில் ஓர் அணில் பிள்ளை ஓடுவதைக் கண்டார். அணில் பிள்ளை உருவத்தில் சுவாமிகள் வந்திருப்பதை அறிந்து கொண்டார்.

No comments:

Post a Comment