எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Wednesday, December 23, 2009

ஜெய ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!

மநோஜவம் மாருத துல்யவேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

அஞ்சனாதேவிக்கு வாயுவின் உதவியால் சிவாம்சமாய் ஆஞ்சநேயர் பிறந்தார். அவர் பிறக்கும் முன்னரே தேவர்களின் ஆசிகளால் கர்ப்பத்திலேயே பூணூல், கோவணம் மற்றும் குண்டலங்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டதாய்ச் சொல்லுவார்கள். அஞ்சனை பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போது உள்ளே இருந்த ஆஞ்சநேயர் உருவம் பெரியதாக இருந்ததால் பிரசம் நடக்கக் கஷ்டப் பட்டது. அஞ்சனையோ வலியால் துடித்தாள். கேசரிக்கோ என்ன செய்வது எனப் புரியவில்லை. அஞ்சனைக்கு வரமளித்த ஈசனையும், அந்த வரத்தை நிறைவேற்றிய வாயுவையும் இருவருமே துதித்தனர். வாயு பகவான் மும்மூர்த்திகளையும் அண்டிப் பிரார்த்திக்க அவர்கள் விஸ்வகர்மாவை அனுப்பினார்களாம். விஸ்வகர்மா பிரசவவலியோடு துடித்துக் கொண்டிருந்த அஞ்சனையின் வயிற்றில் இருந்த குழந்தையிடம் தாய்க்குச் சிரமம் கொடுக்காமல் வெளியே வரும்படியும், பராக்கிரமசாலியாக விளங்கப் போகும் அந்தக் குழந்தை பிறக்கச் சரியான தருணம் வந்துவிட்டதாகவும், தானே வெளியே வரும்படியும் சொன்னாராம். அந்தக் குழந்தையோ விஸ்வகர்மாவைப் பார்த்து, தன் பருமனான உடல்காரணமாய் வெளியே வரமுடியவில்லை என்றும், உடல் சிறிதாக ஆக அருளவேண்டும் எனவும், மேலும் தனக்குத் தேவையான பொற்கோவணம், பொன் பூணூல், பொற்குண்டலங்களைக் கொடுத்து அருளவேண்டும் எனவும் கேட்க அவ்விதமே விஸ்வகர்மா கொடுத்ததாக ஒரு புராணக் கதை சொல்கிறது. இந்த அஞ்சனா தேவி தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் காட்சியை ஹரித்வாரில் சண்டி கோயிலுக்கு எதிரே இருக்கும் அஞ்சனை மலையில் காணமுடியும்.அழகான சுதைச் சிற்பங்கள். அஞ்சனை மடியில் பால ஆஞ்சநேயன். அவரை அணைத்த வண்ணம் தன் இன்னமுதை ஊட்டும் அஞ்சனை. காணக் கிடைக்காத காட்சி இது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ஹநுமத் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நக்ஷத்திரத்தில் அனுசரிக்கப் படுகிறது. வடக்கே உள்ள ஆந்திர மாநிலத்தில் இருந்து மற்ற வட மாநிலங்களில் எல்லாம் சித்திரை மாதம் பெளர்ணமி அன்றே ஹநுமத் ஜெயந்தி அநுசரிக்கப் படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் வைசாக பெளர்ணமிக்கு மறுநாள் அநுமத் ஜெயந்தி அனுசரிக்கப் படுகிறது. ஆஞ்சநேயர் சிறு குழந்தையாக இருக்கும் போது சூரியனைக் கண்டு பழம் எனப் பறந்து சென்று உண்டதாகவும், உலகு இருண்டதாகவும், பின்னர் இந்திரனின் வஜ்ராயுதத்தால் அடி பட்டு மயங்கி விழுந்ததாகவும் சில புராணக்கதைகள் கூறுகின்றன. ஆனால் எனக்குத் தெரிந்த தர்க்க நியாயப் படி ஆஞ்சநேயர் சூரியனின் சீடர். சூரியனைச் சுற்றி வந்து அவரின் வேகத்துக்கு ஏற்ப அவருடன் சென்று பாடங்களைக் கற்று நவவியாகரணபண்டிதன் என்னும் பட்டத்தைப் பெற்றவர். சூரியனையே மிஞ்சும் அளவுக்கு ஞானம் அடைந்தவர். இப்படிச் சூரியனையே விழுங்கும் அளவுக்கு ஞானம் பெற்றதாலே இம்மாதிரியான ஒரு கதை வந்திருக்கலாமோ??? பொதுவாய் குருவை சீடன் மிஞ்சி விட்டால் அவனையே விழுங்கிச் சாப்பிட்டுடுவான், அவ்வளவு புத்தி என வழக்குச் சொல்லாகச் சொல்லுவதுண்டு அல்லவா? அப்படி இருக்கலாமோ?? இது என்னோட கருத்து மட்டுமே. மேல் அதிகத் தகவல்கள் சொல்லுபவர்களுக்குக் காத்திருக்கேன்.

Monday, December 21, 2009

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!

"புத்திர் பலம் யசோதைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹநுமத் ஸ்மரணாத் பவேத்"

இந்த ஸ்லோகத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. அநுமனை எந்நாளும் துதிப்பவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதைச் சொல்லுகிறது இது. புத்தி என்பது ஞானத்தை அடைய வேண்டிய புத்தியையும் குறிக்கும். பலம், இங்கே மனோபலம், தேகபலம் இரண்டையும் சொல்கிறது. யசஸ்=நல்ல புகழைத் தரும், தைரியம்= தைரியமாய் இருத்தலையும், நிர்பயத்வம், எதற்கும், எப்போதும் அஞ்சாமையையும் குறிக்கும். தைரியம் என்பது மனோதிடத்தையும் குறிக்கும். அரோகதா என்பது நல்ல ஆரோக்கியத்தைக் குறிக்கும். அஜாட்யம்= ஜாட்யம் என்பது ஜடத் தன்மை. அஜாட்யம் என்றால் ஜடமற்ற தன்மை. முக்கியமாய்த் தேவையான விஷயங்களில் ஈடுபாடைக் காட்டுவதையும், தேவையற்றவற்றை விலக்குவதையும் குறிக்கும். வாக் படுத்வம்= அநுமனைத் தியானிப்பவர்களுக்கு வாக்கு வன்மை அதிகரிக்கும். சொல்லின் செல்வன் ஆன அநுமன் நம்மையும் சொல்லின் செல்வர்களாக மாற்றுவான். அத்தகைய ஆஞ்சநேயனின் சரித்திரத்தைச் சொல்லவும் முடியுமா? அநுமத் பிரபாவம் என்பது எளிதன்று. என்றாலும் இது ஒரு சிறு முயற்சி. ரொம்பச் சுருக்கமாய்ச் சொல்ல முயல்கிறேன். அப்புறம் மான், மழுவோடு இருக்கும் ஆஞ்சநேயர் பத்தின தகவல் தெரிந்தவர்கள் உதவ வேண்டுகிறேன். படம் மேலே பார்க்கலாம். இனி ஆஞ்சநேயரின் சரித்திரம்.


ஆஞ்சநேயர் சரித்திரம் தெரிஞ்சுக்கறதுக்கு முன்னால் கொஞ்சம் பூர்வ கதையையும் தெரிஞ்சுக்கணும். வருணனின் பெண்ணான புஞ்சிதஸ்கலை என்பவளைக் கண்ட ராவணன் அவள் அழகில் மயங்கி வலுக்கட்டாயமாய் அவளைத் தன் விருப்பத்திற்கு இணங்கச் செய்கிறான். ராவணனால் வஞ்சிக்கப் பட்ட புஞ்சிதஸ்கலை ராவணனைப் பழி வாங்க வேண்டும் என எண்ணுகிறாள். ஆனால் ராவணனால் கெடுக்கப் பட்ட இந்த உடலோடு அவனைப் பழிவாங்க அவள் மனம் ஒப்பவில்லை. இப்படிப் பட்டதொரு காமத்தை உடைய ராவணனைத் தண்டிக்க காமனை எரித்த அந்த மஹாதேவனால் தான் முடியும் எனவும் தோன்றியது அவளுக்கு. ஆகையால் ஈசனை நினைத்து எப்போவும் பஞ்சாட்சரத்தை ஜபித்தவண்ணம் காமதகனரின் அருளுக்காகத் தவம் இருக்க அரம்பித்தாள். வரம்பு மீறிய ராவணனின் காமத்தையும் சுட்டுப் பொசுக்க ஈசனாலேயே முடியும் என மனதார நம்பினாள். அவள் இந்தப் பிறவியை விட்டொழிக்க எண்ணியதால் ஈசனும் அவளுக்கு அவ்விதமே இந்த வருணனின்மகள் என்ற பிறவியை விட்டு விட்டு வேறொரு பெண்ணின் வயிற்றில் பிறக்க வைப்பதாகவும், ஆனால் அந்தப் பிறவியில் தாமே அவளுக்கு மகனாய்ப் பிறந்து ராவணனின் காமத்தை மட்டுமல்லாமல் அவன் அழிவுக்கும் காரணகர்த்தாவாய் அமையப் போவதாயும் உறுதி அளித்தார்.

புஞ்சிதஸ்கலைக்கும் மறுபிறவி கிடைக்கிறது. அந்தப் பிறவியிலும் பெண்ணாகவே பிறந்தாலும் அழகற்ற வானரப் பெண்ணாய்ப்பிறக்கிறாள். இவ்விதம் அவள் பிறப்பதற்கு இரு காரணங்கள். அவள் தாய் அகலிகை. அகலிகையோ இந்திரனால் வஞ்சிக்கப் பட்டு அதன் காரணமாய் ஒரு தூசி மாத்திரம் ஒதுங்கி இருந்தவள். பின்னர் ஸ்ரீராமனால் மறு வாழ்வு கிடைக்கப் பெற்றவள். அந்த அகலிகை தன் அழகில் தானே மயங்கி இருந்ததால் தனக்கு நேர்ந்த இழிவை நினைத்து எண்ணி வருந்தி, தனக்குப் பெண் பிறந்தால் அழகே இல்லாத பெண்ணாகப் பிறக்கவேண்டும், என்றும், அந்தப் பெண்ணுக்கு உடல்ரீதியான காமம் என்பது ஒரு பொருட்டாய் இருக்கக் கூடாது எனவும் பிரார்த்தித்துக் கொண்டாள். ஆகவே புஞ்சிதஸ்கலையின் தவத்தின் வேண்டுகோளும், இப்படியே அமையவே அகலிகைக்குப் பெண்ணாய்ப் பிறந்தாள் அஞ்சனை.

அஞ்சனை வளர்ந்து வாநர வீரன் கேசரியை மணந்தாள். இந்தக் கேசரி வனத்தில் வசிக்கும் முனிவர்கள் தவத்திற்கு இடையூறு செய்து வந்த மதயானைகளைக்கொன்றதால் கேசரி என்னும் பெயர் கிடைத்தது. இருவருக்கும் மணவாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். என்றாலும் இடை இடையே தங்கள் பெயர் சொல்ல ஒரு புத்திரன் பிறக்கவில்லை என்ற எண்ணமும் தோன்றியது. உடல்ரீதியான சம்பந்தமே இல்லாமல் புத்திரனாவது, பிறப்பதாவது?? என்றாலும் கேசரியும் சுபாவமாகவே சிவ பக்தன். இப்பிறவியிலும் அஞ்சனை தன் சிவபக்தியைக் கைவிடாமல் பின்பற்றி வந்தாள். ஆகவே இருவருமே தவமியற்ற ஆரம்பித்தனர். அப்போது ஈசனுக்குத் தான் அவதாரம் செய்யவேண்டிய தருணம் நெருங்கிவிட்டது எனத் தோன்றியது. வாயுவின் உதவியோடு தான் செய்யவேண்டிய காரியத்தைச் செய்ய நினைத்தார்.

சுவாசத்துக்கு ஆதாரமான காற்றுக்கு வாயு என்றே பெயரல்லவா? சிவசக்தி சொரூபமான உணர்வு நிலை ஒன்று திரண்டு பேராற்றல் மிக்கதொரு சக்தியாக மாறி வாயுவிடம் கலந்தது. தவம் புரியும் அஞ்சனையை அந்த வாயு நெருங்கவே, அந்தச் சக்தியானது அவள் மூச்சுக் காற்றின் மூலம் உள் புகுந்தும் விட்டது. சிலர் வேறு ஒன்றும் கூறுவர். பிள்ளைப் பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்த தசரதனுக்குக் கொடுக்கவென யாக தேவர்கள் கொண்டு சென்ற பாயாசக் கிண்ணத்தில் இருந்து ஒரு சொட்டுப் பாயாசம் கீழே தவம் செய்த அஞ்சனையின் வாய் உதட்டின் மேல் விழுந்ததாகவும் அவள் அதை நக்கிச் சாப்பிட்டதாகவும் அதன் பயனாக அநுமன் பிறந்ததாகவும் சொல்வார்கள். இன்னும் சிலர் தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனையின் எதிரே வாயுதேவன் தோன்றித் தன் கையிலிருந்த கனியை உண்ணச் செய்ததாகவும் அதன் பலன் ஆஞ்சநேயனாகப்பிறந்தார் என்றும் சொல்வார்கள். எது எப்படியோ சிவ ஸ்வரூபம் விஷ்ணு ஸ்வரூபத்திற்கு உதவவேண்டும் எனத் தானும் அவதாரம் செய்து விட்டது. அடிப்படைக் காரணமே ராவணன்.

ஈசன் வரம் கொடுத்துவிட்டு ராவணனை அவரால் அந்த வரங்களுக்கு மாறாய் அழிக்க முடியாது. ஆனால் வரங்களைத் தவறாய்ப் பயன்படுத்திய ராவணனோ திருந்தவே இல்லை. மேலும் விஷ்ணுவிற்கு பிருகு முனிவரின் சாபமும் இருக்கிறது. பூமியில் மானிடனாய்ப் பிறந்து மனைவியைப் பிரிந்து துக்கம் அநுபவிக்கவேண்டுமென. அதையும் நிறைவேற்ற வேண்டும். கைலை மலையைப் பெயர்க்கச் சென்ற ராவணன் நந்தியைப் பார்த்துக் குரங்கு எனப் பழிக்க, அவரும் குரங்காலேயே உன் வம்சம் அழியும் எனவும் கூறி உள்ளார். அதுவும் நடந்தாகவேண்டும். இத்தனை காரண, காரியங்களை உள்ளடக்கியே அநுமன் விஜயம் ஆரம்பம் ஆனது.

ஜெய் ஆஞ்சநேயா!

Saturday, August 8, 2009

ராம நாம உபதேசம் சாதாரணமானதா???

“ராம” என்ற இரண்டெழுத்து சாதாரணமாய்த் தோன்றலாம். ஆனால் இந்த ராம நாமம் உபதேசம் பெறவேண்டிக் காத்திருந்தவர்களில் கபீர்தாஸரும் ஒருவர். பிறப்பால் முஸ்லீம் என்று சொல்லப் பட்டாலும், (சிலர் பழக்கவழக்கங்களும், சுற்றுச் சூழலுமே காரணம் என்றும் சொல்லுவார்கள்) எப்படியானாலும் கபீரின் மனம் பூராவும் ராம நாமத்திலேயே லயித்தது. அதில் தான் இம்மைக்கும், மறுமைக்கும் வேண்டிய ஆநந்தம் இருக்கிறது என்பதைப் பூரணமாய் உணர்ந்தார் கபீர். ஆனால் இந்த மந்திரத்தைத் தாமாகச் சொல்லுவதை விட குரு மூலம் உபதேசம் பெற்றுச் சொன்னால்?? ஆஹா! அத்தகைய குரு நமக்குக் கிடைப்பாரா?? ஏன் கிடைக்க மாட்டார்? இதோ ராமாநந்தர் இருக்கிறாரே? தினம் தினம் ராமாநந்தரின் வழிபாட்டு சமயத்தில் ராம, லக்ஷ்மணர்கள் நேரிலேயே தோன்றி வழிபாட்டை ஏற்பது வழக்கம். அத்தகையதொரு குரு மட்டும் கிடைத்துவிட்டால்??? தன் நெசவுத் தொழிலைக் கூட மறந்து ராம நாமத்தில் லயித்துப் போயிருந்த கபீருக்கு, ராமாநந்தர் உபதேசம் என்பது சும்மா வெளிப்பார்வைக்கு மட்டுமே. என்றாலும் அந்த ராமன் கபீரின் இந்தச் சின்னஞ்சிறு ஆசை மூலம் வேறே எதையோ யாருக்கோ உணர்த்த விரும்பினானோ?

கபீரும் ராமாநந்தர் உபதேசிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகத்துடனேயே வேறு நபர்களையும் நாடினார். யாருமே கபீருக்கு ராம நாமத்தை உபதேசிக்கவில்லை. ராமாநந்தரிடமே நேரிடையாகச் சென்று வேண்டுகோள் விடுத்தார் கபீர்தாஸர். ராமாநந்தர் மறுத்துவிட்டார். அந்நிய மதத்தைச் சேர்ந்தவனுக்கு ராமநாம உபதேசமா? இகழ்ச்சியுடனேயே ராமாநந்தர் கபீரை அங்கிருந்து போகச் சொன்னார். கிட்டத் தட்ட விரட்டப் பட்டார் கபீர். ராமாநந்தரின் அன்றைய வழிபாடு தொடர்ந்தது . வழிபாடு முடிவதற்குள்ளாக ராம, லக்ஷ்மணர்கள் வந்துவிடுவார்கள். ஆனால்,, ஆனால் இன்று வரவில்லையே?? ஏன்?? என்ன குறை?? பூஜைக்கான பொருட்களில் எதுவும் குறைவில்லை. ஆசார, அனுஷ்டானங்களிலும் குறைவில்லை. என்றாலும் நேரில் வந்து இத்தனை நாட்கள் பூஜையை ஏற்ற ராமன் இன்று வரவில்லையே? ஏன்? என்ன காரணம்? துன்பம் அடைந்தார் ராமானந்தர்.

மெல்ல எழுந்து வெளியே வந்தார். மடத்தின் வாயிலில் நின்று கொண்டு யோசித்தவண்ணம் அங்குமிங்கும் பார்த்தார். சுற்றுமுற்றும் தேடினார். அப்போது அசரீரி போன்ற ஒரு குரல்,” அண்ணா, அண்ணா, என்ன இது?” என்று கேட்டது. யார் பேசுவது?? குரல் மட்டுமே வருகிறதே? ராமாநந்தர் உற்றுக் கவனித்தார். “லக்ஷ்மணா, என்ன விஷயம்?” என்று மறு குரலும் கேட்டது. ஆஹா, ராம, லக்ஷ்மணர்கள் கடைசியில் நம் பூஜைக்கு வந்தே விட்டார்களா??? ராமாநந்தர் உற்சாகத்தில் ஆழப் போகும் சமயம். லக்ஷ்மணன் என்று அழைத்த குரல்” அண்ணா என்ன இது? இன்று ராமாநந்தரின் வழிபாடலில் கலந்து கொள்ளாமல் திரும்பலாம் என்று சொல்லிவிட்டாயே?” ராமாநந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன நம் வழிபாட்டில் ராமன் கலந்து கொள்ளப் போவதில்லையா? ராமன் குரல் கேட்டது அப்போது,” ஆம், தம்பி லக்ஷ்மணா, உத்தம பாகவதன் கபீர், என்னைத் தவிர வேறு யாரையுமே எப்போது நினையாதவன். அவன் என்னுடைய நாமாவைச் சொல்லுவதைக் கேட்கும்போதே எனக்குப் பரவசமாய் இருக்கும். அத்தகையவன் ராமாநந்தரிடம் உபதேசம் பெற வந்தான். அவனை விரட்டி விட்டார்களே! என் பக்தன் விரட்டப் பட்ட இடத்தில் எனக்கு என்ன வேலை? வா, நாம் போகலாம்.” எங்கும் அமைதி. ராமாநந்தர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவர் கண்களால் ராமனும், லக்ஷ்மணனும் அங்கிருந்து திரும்புவதையும் உணரமுடிந்தது.

ஆஹா, ராமனே வந்து கபீருக்கு மந்திர உபதேசம் செய்யாதது என் தவறு எனச் சுட்டிக் காட்டிவிட்டானே? அப்படி எனில் அந்தக் கபீர் எத்தனை பெரிய பாகவதோத்தமனாய் இருக்கவேண்டும்? அவனுடைய தேடுதல், ராமனைப் பற்றிய பக்தி எத்தனை விசாலமாய், ஆழமாய் இருந்திருக்கவேண்டும். நாம் தான் ராமனைப் பற்றிப் பாடுகிறோம், பேசுகிறோம், ராமன் நேரில் வருகின்றான் என நினைத்தது எவ்வளவு பெரிய தவறு? நம்மிலும் பெரிய பரமபாகவதன் கபீரை அவமதித்துவிட்டேனே? ராமாநந்தர் கபீர் எங்கு இருப்பார் என விசாரித்தார். கங்கை நதிக்கரையில் இருப்பார் எனத் தெரிய வந்தது. உடனேயே அங்கே விரைகிறார். தூரத்தில் இருந்தே ராமாநந்தர் வருவதைப் பார்த்துவிடுகிறார் கபீர். குருவானவர் வருகிறார். எதற்கு, என்ன என நமக்குத் தெரியாது. பெரும் பதட்டத்தோடு வேறு வருகிறார். அதை அதிகப்படுத்தும் வண்ணம் நாம் இன்னும் நேரில் அவருக்கு முன்னால் போய் தொந்திரவு செய்யக் கூடாது.

ஒரு க்ஷணம் தான். கபீர் தன் உடம்பைக் குறுக்கிக் கொண்டு கங்கைக் கரையின் படித்துறைப் படிகளில் ஒன்றில் படியோடு படியாகப் படுத்துக் கொண்டார். அந்த வழியாக ராமாநந்தர் வருவார் என்ற நிச்சயத்துடன் காத்திருந்தார். ராமாநந்தரும் வந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கபீரைத் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. படிகளில் இறங்கிப் பார்ப்போம் என இறங்கினால், படியென நினைத்து அவர் மிதித்தது, யாரோ மனிதனை அன்றோ? ஆஹா, என்ன இது? “ராம், ராம்” என்று அலறிக் கொண்டே நகர்ந்தார். கீழே இருந்து பதில் வந்தது. “வந்தனம் குருதேவரே! என்னைக் காலாலும் தீண்டி, மந்திர உபதேசமும் செய்து வைத்தமைக்குப் பலகோடி வந்தனங்கள்” கபீரின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது

Friday, August 7, 2009

ராம என்ற இரண்டெழுத்தின் மகிமை!

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென்றிரண்டெழுத்தினால்.

இந்தப் பாடலில் ராம என்ற இரண்டெழுத்தின் மகிமை பற்றிக் கூறி உள்ளது. ராம என்ற இரண்டெழுத்தை ஜபித்து வந்தால் நன்மையும், செல்வமும் தருவதோடு மட்டுமல்லாமல், நம் பாவங்களும் தொலையும் என்றும், மறு ஜென்மம், அதனால் மரணம் என்றெல்லாம் இல்லாமல் முக்தியை அடைவோம் இந்த இம்மையிலேயே என்றும் சொல்லுகின்றது. இத்தனைக்கும் ராமாயணம் எழுதியது என்னமோ ஒரு கொள்ளைக்காரர் தான். ராமாயணத்திலேயே இந்த ராம என்ற இரண்டெழுத்தின் வல்லமை பற்றி அநேக இடங்களில் சான்றுகள் கூறி உள்ளார் வால்மீகி. அவ்வளவு ஏன்? வால்மீகி இந்தக் காவியத்தை எழுதுமளவுக்கு புலமை பெற்றதே “ராம” என்ற இரண்டெழுத்தை ஜபித்துத் தவம் செய்ததால் அல்லவோ?

ரத்னாகர் என்னும் கொள்ளைக்காரன் தன் குடும்பத்தையே கொள்ளை மூலம் காத்து வந்தான். ஒரு சமயம் சப்தரிஷிகளும் கானகத்தின் வழியே பிரயாணப் படும் போது அவர்களையும் தன்னியல்புப் படி கொள்ளை அடிக்க முயல, அவர்களோ அவனுக்குப் புத்திமதி சொல்லித் திருத்த முயன்றனர். இந்தக் கொள்ளை அடிப்பதால் வரும் பாவமூட்டையை அவன் ஒருவனே சுமக்கவேண்டும் எனவும், அவன் குடும்பம் இதற்கு ஒத்துழைக்காது எனவும் புரிய வைத்தனர். அவனுக்கும் புரிந்துபோனது. “ராம” நாமத்தை உபதேசித்தனர் சப்தரிஷிகளும் அந்தக் கொள்ளைக்காரனுக்கு. இதை உச்சரித்தபடியே தவம் செய்யச் சொன்னார்கள். அவனும் விடாமுயற்சியுடன் ராம நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க மெய்ம்மறந்து, தன்னை மறந்து, பசி, தாகம் என்ற எந்த உணர்வும் இல்லாமல் தவம் செய்ய ஆரம்பித்துவிட்டான். அவனைச் சுற்றி மண் மூடிப் புற்றாக மாறியது. உயரமாய்ப் புற்று வளர்ந்தும் விட்டது. என்றாலும் அவன் விடாமல் ராம நாமத்தை ஜபித்து வந்தான்.

திரும்பிச் சென்ற சப்தரிஷிகள் கானகத்தைக் கடக்கும்போது ரத்னாகரின் நினைவு வந்து அவனை அழைத்தனர். ராம நாம உச்சரிப்பும் அவர்களைக் கவர்ந்தது. ரத்னாகரை அழைக்க அவனோ புற்றிலிருந்து வெளிப்பட சப்தரிஷிகள் மனம் மகிழ்ந்து அவனை வால்மீகி என அழைத்தனர். அவனால் ஒரு பெரிய காரியம் நடக்க இருப்பதையும் குறிப்பால் உணர்த்திச் சென்றனர். வால்மீகியும் ராமாயணத்தைப் படைக்கும் திறனைப் பெற்றார். இது எதனால் நடந்தது? ராம நாமத்தை உச்சரித்ததால் அன்றோ? அதுவும் ராமர் இருக்கும்போதே ராமாயணத்தை அரங்கேற்றமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது வால்மீகி ஒருவருக்குத் தான்.

இத்தகைய மனிதருள் மாணிக்கம் ஆன ராமனைப் பற்றி மஹா பாரதம் என்ன சொல்கிறது? உத்தராயனம் வருவதை எதிர்நோக்கி. பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார் . அப்போது அரசனுக்குரிய தர்மங்களைப் பற்றி யுதிஷ்டிரனுக்கு எடுத்துக் கூறுகின்றார். அப்போது பிறந்ததே விஷ்ணு சஹஸ்ரநாமம். இந்த நாமாவளிகளிலேயே, “ராம” நாமத்தை மட்டும் உயர்வாய்க் கூறுகின்றார். தர்மங்களில் சிறந்தது நாமங்களை உச்சரித்தலே என்று சொல்லும் பீஷ்மர், அதிலும் “ராம” என்னும் இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தல் அதனிலும் உயர்வானது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார் கீழ்க்கண்ட ஸ்லோகம் மூலமாக/

“ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராநனே!!” என்று சொல்லுகின்றார். மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் அந்த வேளையிலும், “ராம” நாமத்தை உச்சரிப்பதைப் பற்றிக் கூறி, அதுவே அனைத்திலும் சிறந்த உயர்வான ஒன்று என்றும் கூறுகின்றார்.

Tuesday, July 21, 2009

ராமனுக்கு யார் நிகர்?

பத்ராசலம் போனதே இல்லை. பத்ராசலம் போய் அங்கே ராமரைப் பார்த்துட்டு வரணும்னு ஓர் ஆசை. இந்தப் பக்கம் வந்து பதிவு போட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. ஒரு பதிவு தயார் செய்திருக்கேன். என்றாலும் திங்களுக்குப் பின்னர் தான் போட முடியும். பின் தொடருகின்றவர்களுக்கு நன்றி. பத்ராசலத்தில் தான் ராமர் லக்ஷ்மணனுடன் தங்கி இருந்ததும், பொன்மானைப் பார்த்து சீதை ஆசை கொண்டதும், ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதும் என்று சொல்லப் படுகிறது. இதற்குப் பின்னர் நடந்த வாலிவதம் நடைபெற்ற குகையை நவபிருந்தாவனம் செல்லும்போது பார்க்க நேர்ந்தது. இந்த பத்ராசலம் பலரையும் கவர்ந்த ஓர் இடம். பத்ரா என்ற மலைக் குழந்தை மேரு மலையான மலையரசனுக்கும், மேனகாவுக்கும் வரத்தின் மூலம் பிறந்த குழந்தை என்று சொல்லப் படுகின்றது.

கோதாவரி நதி தென்முகமாய்ச் சுற்றிக் கொண்டு போகும் இடத்தில் உள்ள பத்ரா மலையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. தண்டகாரண்யம் என ராமாயணத்தில் சொல்லப் பட்டதும் இது தான். பத்ரா பல யுகங்கள் தொடர்ந்து ராமரைக் குறித்து தவம் செய்ததாகவும் சொல்லப் படுகிறது. ராமரைத் தன் தலையில் தாங்கிக் கொண்டு செல்லத் தயாராக இருந்ததாயும், சீதையைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த ராமர், தற்சமயம் அவருடைய ஆவலைப் பூர்த்தி செய்யமுடியாது என்று சொன்னதாகவும், மனைவியைத் தேடிக் கொண்டு செல்வதாகவும் மனைவியைக் கண்டுபிடித்து அவளைத் தூக்கிச் சென்ற ராவணனைக் கொன்று அவனுக்குத் தண்டனை அளித்து தர்மத்தை நிலை நாட்டவேண்டும் என்றும் சொல்லிச் சென்றார்.


சீதையைக் காணாமல் இராமன் திகைத்து நிற்றல் (3574-3575)
3574 ஓடி வந்தனன், சாலையின்
சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூஞ் சுரிக் குழலாள்
தனை காணான்,
கூடு தன்னுடையது பிரிந்தாருயிர்,
குறியா,
நேடி வந்து, அது கண்டிலது என
நின்றான். 158

சீதையைக் காணாத ராமன் இவ்விதம் திகைத்துப் போனான் என்று கம்பர் சொல்லுகின்றார். ராமாயணம் படிப்பதும் சரி, கேட்பதும் சரி மனப்புண்ணை ஆற்றும். அந்தப் பரப்பிரம்மமே மனைவியைத் தொலைத்துவிட்டுக் குலுங்கி அழுதது என்பதை உணரும்போது நாமெல்லாம் என்ன சாமானியம், தூசி மாத்திரம் என்றே தோன்றும். அவனுக்குத் தெரியாதா தான் யார் என?? ஆனால் அவன் அப்போது ஒரு மனிதனாக அல்லவோ வாழ்ந்து காட்டிக் கொண்டிருந்தான். சாமானிய மனிதனுக்கு ஏற்படும் அனைத்துக் கஷ்டங்களும் அவனுக்கும் ஏற்படுத்திக் கொண்டு அதில் இருந்து ஒரு சாமானியன் எவ்வாறு மீள்வானோ, தர்மத்தின் பாதையில் இருந்து சற்றும் பிறழாமல் எவ்வாறு வாழவேண்டுமோ அவ்வாறே வாழ்ந்து காட்டி ஒரு முன்மாதிரியாக அல்லவோ திகழ்ந்தான். ஒரு மனிதனுக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதைத் தாங்கும் வல்லமையை ராமநாமமும், ராமாயணத்தைப் படிப்பதும், ராமன் பெருமையை நினைப்பதும் தரும். ராமனின் பெருமையைச் சொல்லச் சொல்ல நா இனிக்கும், மனம் அமைதி பெறும்.

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே|
வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||

"வேதவேத்யே"- வேதத்தினால் அறியப்பபட வேண்டிய ஒருவன், அவனே பரம்பொருள். அவன் யார்?" பரே பும்ஸி"- பரம புருஷன். வேதத்தினாலே அறியப்பட வேண்டிய பரம
புருஷன். ஜாதே தசரதாத்மஜே=அந்தப் பரம்பொருளே வேதத்தினாலே அறியப்பட வேண்டிய பரம புருஷனே ராமனாக உலகில் அவதாரம் செய்தான். வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா= அவன் தசரதனுடைய குழந்தையாக அவதாரம் செய்தவுடன்,வேதம், ராமாயணமாக அவதாரம் பண்ணுவோம் என்று வால்மீகியின் குழந்தையாக
வந்தது!

ராமாயண காவியத்தில் இல்லாததே கிடையாது. தினம் ஒருமுறை அதில் ஓர் அத்தியாயத்தை மட்டுமாவது படித்தாலே போதும். வேத பாராயணம் பண்ணமுடியலையே எனப் பெண்கள் வருந்தாமல் இதைப் படிச்சாலே போதும். மனம் அமைதி பெறும். ராமநாம மஹிமை தொடரும்.

Sunday, May 31, 2009

ராமா நீ சமானமெவரு!

ராமனுக்கு யாரும் நிகரில்லை. தன்னுடைய தந்தையின் ஒரு சொல்லுக்காகத் தனக்கு உரிமையுள்ள நாட்டையே விட்டு விட்டுக் காட்டிற்குச் சென்றான். காட்டிலும் க்ஷத்ரிய தர்மத்தின்படி அனைவரையும் காப்பது தன் கடமை என ஒரு ரக்ஷகனாய் இருந்தான். மனைவியைப் பறி கொடுத்து அவன் ஒரு அன்பான உண்மைக் கணவனாய் துடிதுடித்து அழுதான். அவன் யார் சாக்ஷாத் ப்ரப்ரும்மமே அவன் தான். என்றாலும் சாக்ஷாத் ப்ரப்ரும்மமாகவே அவன் இருந்தாலும், அந்த ப்ரும்மமே துடிதுடித்து அழுதது மனைவியைக் காணோம் என.

3574 ஓடி வந்தனன், சாலையின்
சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூஞ் சுரிக் குழலாள்
தனை காணான்,
கூடு தன்னுடையது பிரிந்தாருயிர்,
குறியா,
நேடி வந்து, அது கண்டிலது என
நின்றான். 158


3575 கைத்த சிந்தையன், கணம் குழை
அணங்கினைக் காணாது,
உய்த்து வாழ்தர வேறு ஒரு
பொருள் இலான், உதவ
வைத்த மா நிதி, மண்ணொடு
மறைந்தன, வாங்கிப்
பொய்த்து உளோர் கொளத் திகைத்து
நின்றானையும் போன்றான். 159


எதுக்கு? கட்டிய மனைவியின் மேல் ஓர் கணவன் வைக்கும் பாசமும், அன்பும் எத்தகையது என நாம் புரிந்து கொள்வதற்காக. ஓர் சாதாரணக் கணவனைப் போல் அழுது புலம்பினான். ராம நாமத்தின் மஹிமை பற்றிப் பலரும் சொல்கின்றனர். ஆனால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டே, ஓர் அவதார புருஷனாக இருந்து கொண்டே ராமன் அழுகின்றானே? இவன் எப்படிக் கடவுளின் அவதாரம் ஆவான்? சாதாரண மனிதன் போல் அல்லவா மனைவியைக் காணோம், ராக்ஷஸன் தூக்கிப் போனானே எனக் கதறுகின்றானே? தன் மனைவியைக் காக்கத் தெரியாதவன் கடவுளின் அவதாரமா எனக் கேட்கின்றனர்.

3577 “அறத்தைச் சீறுங்கொல்? அருளையே
சீறுங்கொல்? அமரர்
திறத்தைச் சீறுங்கொல்? முனிவரைச்
சீறுங்கொல்? தீயோர்
மறத்தைச் சீறுங்கொல்? ‘என் கொலோ
முடிவு? ‘என்று மறையின்
நிறத்தைச் சீறுங்கொல்? நெடுந்தகையோன் ‘‘
என நடுங்கா. 161


ஆம், அவன் கடவுளின் அவதாரம் தான். ஆனால் இந்த அவதாரத்தில் அவன் ஒரு பூரண மனிதனாக அல்லவோ வாழ்ந்து காட்டினான். மனிதர்கள் அதிலும் ஓர் அரசன் கடைப்பிடிக்க வேண்டிய நீதிநெறிகள், தர்மம் போன்றவற்றை எப்போது எந்த வகையில் கடைப்பிடிக்கணுமோ அப்படியல்லவோ கடைப்பிடித்து வாழ்ந்து வந்தான். அனைவருக்கும் ஓர் முன்மாதிரியாக அல்லவோ வாழ்ந்து காட்டினான். அவன் வாழ்ந்தது என்னமோ சாதாரண அரசகுமாரனின் வாழ்க்கையைத் தானே? ஒரு அரசகுமாரன் வாழ்க்கையில் தோன்றும் காதல், வீரம், சோகம், பெற்றோர் மேல் பாசம், சகோதரர் பாசம், சண்டைகள், குடும்பக் குழப்பங்கள், சமாதானங்கள், அதீத ஆசைகள், காமங்கள் என எல்லாமும் நிரம்பிய ஒன்றே அவன் வாழ்ந்த வாழ்க்கை. அதனாலேயே கடைசிவரையில் தான் யார் எனக் காட்டிக் கொள்ளாமலேயே சாதாரண மனிதனைப் போலவே மனைவியை மாற்றான் தூக்கிச் செல்லக் கொடுத்துவிட்டுத் தேடித் தேடி அலைந்து திரிந்தான். இதெல்லாம் அவன் எதுக்குச் செய்தான்? நம் போன்ற சாமானியர்கள் அதைப் பார்த்து ஓரளவேனும் கற்றுக் கொள்ளவேண்டும் என்றே. ராமனைப் போல் நாம் வாழவேண்டும் என்பதற்காகவே. எத்தனை கஷ்டம் அடைந்தாலும் தன் தர்மம் என எது கடைப்பிடிக்கப் படுகின்றதோ, அதிலிருந்து சற்றும் வழுவாமல், தன் குடிமக்களைத் தன் பெற்ற மக்கள் போல் ஓர் அரசன் நினைக்கவேண்டும் என்பதை சொல்லாலும், செயலாலும் கடைப்பிடித்தான். இன்றைய ஆள்வோருக்கும், இன்றைய நாகரீக வாழ்க்கையை மேற்கொள்வோருக்கும் மட்டுமே ராமன் செய்தது அநியாயம், மனைவியைத் துன்புறுத்தினான் என்று எல்லாம் தோன்றும்.

ஆனால் உற்று நோக்கினால் தன் அன்பு மனைவியுடன் நடத்தும் குடும்ப வாழ்க்கையை விடத் தன் குடிமக்களின் நல்வாழ்வும், தன் ராஜ்ஜியத்தின் மேன்மையுமே அவனுக்கு மிக மிக முக்கியமாய்ப் பட்டது. அதனாலேயே அவன் குடும்ப வாழ்க்கையைத் துறந்தான். மனைவியைப் பிரிந்த அவன் அதனால் உடனேயே வேறு பெண்ணையும் நாடிப் போகவில்லை. மனைவியுடன் கூடி வாழ்ந்த இன்ப நினைவுகளிலேயே காலத்தைக் கழித்தான். எத்தனை பேரால் இது முடியும்? ஓர் ஆதர்ஸ புருஷனாக வாழ்ந்த ராமனைக் குற்றம் சொல்லுபவர்கள், சீதையைத் துன்புறுத்தினான் என்று சொல்லுபவர்கள் வெறும் விவாதத்துக்காகவே சொல்லுகின்றனர். அரசனுடைய, ஆட்சியாளனுடைய தர்மம் எது என்பதைத் தன் நடத்தையின் மூலம் சுட்டிக் காட்டினான். தனக்கென உரிமையானதைக் கூடத் துறந்தான். பதவியைத் தேடி அலையவில்லை. தன் மக்களுக்கெனச் சொத்து, சுகம் சேர்க்கவில்லை. ஆட்சியில் இருந்தும், அனைத்தையும் துறந்து ஓர் துறவி போலவே வாழ்ந்தான். ராமா உனக்கு நிகர் ஏது? நீ மட்டுமே தான். உன்னைப் போல் மீண்டும் ஓர் ராமன் தோன்றுவானோ?

ராமனின் கல்யாண குணங்கள் ஒன்றொன்றாய்ப் பார்க்கலாமா??

Tuesday, May 5, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!


ஸ்ரீராமனையும், அவன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் நினைத்தாலே தன்னை மறந்து அழுதுவிடுவார் ஸ்ரீ ஸ்வாமிகள். பெற்றோர் அவர் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என விரும்ப அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஜானகி என்னும் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். நாடெங்கும் பாத யாத்திரையாகவே சென்று ராமநாமத்தின் மகிமையைப் பாடியும், ஆடியும், பஜனைகள் செய்தும் அற்புதமாய் நடத்தி வந்தார். உஞ்சவிருத்தி, பூஜை, உபந்யாஸம், பஜனை என்று பாகவத தர்மத்தை விடாமல் கடைப்பிடித்தார். ஏராளமான சீடர்கள் இவருடைய யாத்திரையில் இவருடன் பங்கு கொண்டனர். ராமநாம ஜபம் செய்து ஆனந்தத்தை அனுபவித்தனர். ஒரு முறை ராம ஜன்ம பூமியான அயோத்திக்குச் சென்று கொண்டிருந்தபோது, இவருடைய தூக்கத்தில் ஒரு கனவு. அந்தக் கனவில் தோன்றியவர் யார்? ஸ்ரீஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் அவர்களே தான் கனவில் தோன்றினார். ஸ்ரீ சத்குரு ஸ்வாமிகளைத் தென் திசைக்குப் போகச் சொல்லி, அங்கே ஒரு நற்காரியம் இவர் மூலம் நிகழப் போவதாய்ச் சூசகமாய்ச் சொல்லி மறைந்தார்.

குருவின் கட்டளைப்படி தெற்கே வந்த ஸ்வாமிகள் தஞ்சை ஜில்லா மருதாநல்லூர் என்னும் ஊருக்கு வந்தார் . அங்கே வசித்து வந்த வெங்கடராம ஐயர் என்னும் தனவான் ஸ்வாமிகளை அழைத்துத் தம் இல்லத்திலேயே வைத்து உபசரித்தார். அங்கே சில நாட்கள் தங்கிய ஸ்வாமிகள் அந்த ஊரிலேயே தம் தாயாருடனும், மனைவியுடனும் தங்கி உஞ்சவிருத்தி, நாம ஜபம் போன்றவற்றைத் தொடங்கினார். ஆனால் குருநாதர் சொன்ன வேலையைச் செய்ய வில்லையே என்ற தாபமும் இருந்தது. குருநாதர் அதிஷ்டானம் அப்போது காவிரிக்குள் மறைந்து முழுகி இருந்தது. அதைக் கண்டு பிடித்து பக்தர்களுக்குத் தெரியப் படுத்துவதே தம் முதல் கடமை என உணர்ந்த ஸ்ரீஸ்வாமிகள் அப்போதைய தஞ்சை மகாராஜாவின் விருப்பத்தைக் கேட்டறிந்தார். அதன்படி காவிரி நதியைச் சற்றே திசை திருப்பி வடப்பக்கம் திருப்பி, போதேந்திராளின் அதிஷ்டானம் கண்டுபிடிக்கப் பட்டதும் அதற்கு எதிர்காலத்தில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படா வண்ணம் தடுப்பு வேலைகளைத் திறம்படச் செய்து முடித்தார். எல்லாம் சரி, அதிஷ்டானத்தை எப்படிக் கண்டு பிடிப்பது?

காவிரிக்குள் முழுகி இருக்கும் அதிஷ்டானத்தைக் கண்டறிய ஒரு வழியைக் கண்டறிந்தார் ஸ்ரீ சத்குரு ஸ்வாமிகள். தம் கால்களில் துணியைச் சுற்றிக் கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் காவிரி நதியின் மணலில் படுத்து உருண்டு செல்வார். ஏன்? நடந்து சென்று பார்க்கக் கூடாதா? பார்க்கலாம். ஆனால் அதிஷ்டானம் இருக்கும் இடத்தில் தம்முடைய கால்கள் பட்டுவிட்டால்??? அதற்காகவே உருண்டு சென்றார் ஸ்ரீ ஸ்வாமிகள். உருண்டு செல்லும்போதே ஒவ்வொரு இடத்திலும் தம் காதுகளை வைத்து உன்னிப்பாய்க் கவனித்தபடி செல்வார் ஸ்ரீஸ்வாமிகள். ஒருநாள் ஒரு இடம் வந்ததும், “இதோ, ஸ்ரீ போதேந்திராளின் அதிஷ்டானம் இருக்குமிடம். அவருடைய ஜீவன் இங்கே தான் உறங்கிக் கொண்டிருக்கிறது.” என்று சொல்லிவிட்டு ஆனந்தத்தில் குதித்து ஆடிப் பாடினார். சுற்றி நின்றவர்களுக்கும், கூட இருந்தவர்களுக்கும் ஒரே ஆச்சரியம்! இது எங்கனம் நடந்தது?

ஸ்ரீஸ்வாமிகள் சொன்னார்: உருளும்போதே என் காதுகளை வைத்துக் கவனித்துக் கொண்டு வந்தேன் அல்லவா? அப்போது மற்ற இடங்களில் எல்லாம் அமைதி நிலவ, இந்த ஒரு இடத்தில் மட்டும் “ராம” நாமம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே இங்கு தான் அதிஷ்டானம் இருக்கவேண்டும்.” என்று சர்வ நிச்சயமாய்ச் சொன்னார்.
அனைவரும் மகிழ்ந்ததோடு அல்லாமல் சத்குருவின் யோக சக்தியையும் கண்டு வியந்தனர். அனைவரும் அங்கேயே விழுந்து நமஸ்கரிக்க, மன்னனுக்குத் தகவல் சொல்லப் பட்டு, அதிஷ்டானத்துக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் காவிரி திருப்பி விடப் பட்டு, அதிஷ்டானமும் புனர் நிர்மாணம் செய்யப் பட்டது.

அரசன் சத்ரபதி சிவாஜியின் வழித் தோன்றல் ஆவான். இயல்பாகவே இறைவழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன். இப்போது ஸத்குரு ஸ்வாமிகளின் பிரதம சிஷ்யனாகவும் ஆனான். ஸத்குரு ஸ்வாமிகளுக்கு மட்டுமில்லாமல் அவரைப் பின்பற்றும் அவரது சிஷ்யர்கள் அனைவருக்கும் ஏதேனும் செய்ய விரும்பினான் மன்னன். ஸத்குரு ஸ்வாமிகளைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு ராமநாம ஜபம் ஜபிக்கும் இந்த பாகவதர்கள் அனைவரும் நிரந்தரமாய்த் தங்கும் வண்ணம் ஒரு கிராமத்தையே, மான்யம் அளித்தான். ஸத்குரு ஸ்வாமிகள் மனம் மகிழ்ந்து மன்னனிடம் அந்த கிராமத்தை பாகவதர்கள் பெயரிலேயே மான்யம் செய்து கொடுக்கச் சொல்ல திருவிசநல்லூருக்கு அடுத்து இருக்கும் ஒரு கிராமம் ஒன்றையே பாகவதபுரம் என்ற பெயரில் மான்யமாய்க் கொடுத்தான் மன்னன். இன்றும் அந்தக் கிராமம் பாகவதபுரம் என்ற பெயராலேயே வழங்கப் படுகின்றது.

Sunday, May 3, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

வேஷ்டியையும், பணத்தையும் பார்த்து ஒரு கணம் திகைத்தாலும், மனதிற்குள் ஏதோ ஒன்று உத்தரவிட அவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார் வேங்கடராமன். பார்த்தால், அந்தி மயங்க ஆரம்பித்திருந்தது. சூரியன் மறையப் போகின்றான். ஆஹா, போச்சே! அப்பா சிராத்தம் செய்து வைக்க அல்லவோ நம்மை அனுப்பி வைத்தார்? இப்போப் பொழுது சாய்ந்துவிட்டதே. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பார்கள். நாமோ அவருக்குக் கொடுத்த வாக்கை மீறிவிட்டோமே. நாம் வரலைனு அங்கே காத்திருப்பாங்களே? மதியமானாலும் பரவாயில்லை. இந்த மாலையில் சிராத்தம் செய்ய முடியாதே? காலம் கடந்து போச்சே! நம்மால் ஒருத்தர் வீட்டு முக்கியமான காரியத்துக்கு பங்கம் நேரிட்டு விட்டதே? மனக்கலக்கத்துடன் யோசித்த ஸ்வாமிகள் இனிமேல் சிராத்தம் நடக்கும் வீட்டிற்குப் போவதை விடத் தந்தையைப் போய்ப் பார்த்து நடந்ததைச் சொல்லி விடவேண்டியதே முறை என நினைத்தார்.

அவ்வாறே மணஞ்சேரியில் இருந்து திருவிசநல்லூருக்குத் தன் வீடு திரும்பிய அவர் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டு, தாம் ஆஞ்சநேயர் கோயிலில் தியான ஜபம் செய்ததையும், அங்கே பலிபீடத்தில் இந்த ஜோடி வேஷ்டியும், ஐந்து ரூபாய் பணமும் இருந்ததையும் சொல்லிவிட்டுத் தாம் சிராத்தம் செய்து வைக்காமல் கோயிலிலேயே நாம ஜபத்தில் ஈடுபட்டதையும் சொல்லி வருந்தினார் ஸ்வாமிகள். தந்தை என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்பது என்ற மன உறுதியுடனும் காத்திருந்தார். வேங்கட சுப்ரமணிய ஐயருக்கோ இதைக் கேட்டதும், முகம் வாடிவிட்டது. மனம் வருந்திப் போன அவர், தாமே போய் சிராத்தத்தை நிறைவேற்றி இருக்காமல் போனதற்கும் மனம் நொந்து போனார். அந்த அந்தணரும் சிராத்தம் நடத்தி வைக்க யாரும் வராமல் போனதுக்கு நம்மைக் கடிந்து கொள்ளப் போகின்றாரே என்றும் மன வருத்தம் ஏற்பட்டது அவருக்கு. ஒரு கணம் யோசித்த அவர் தாமே நேரில் மணஞ்சேரிக்கே சென்று அந்த அந்தணரிடமே நடந்ததைக் கூறி மன்னிப்பும் கேட்டுவிடலாம் என நினைத்துக் கொண்டு தெருவில் இறங்கினார். வேகமாய் நடைபோட்டு மணஞ்சேரிக்குள் நுழைந்தார். இருட்ட ஆரம்பித்துவிட்டது. சிராத்தம் நடந்திருக்க வேண்டிய வீட்டை அடைந்தார். தயக்கமும், பயமும் முட்டித் தள்ள கொஞ்சம் கலக்கத்துடனேயே அந்த வீட்டை அடைந்தார் வேங்கடசுப்ரமணிய ஐயர் அவர்கள்.

உள்ளே நுழையும் வேங்கட சுப்ரமணிய ஐயரைப் பார்த்ததுமே அந்த அந்தணரோ ஓடோடியும் வந்து வரவேற்றார். அகமும், முகமும் மலர்ந்து இருந்த அவரைக் கண்ட வேங்கடசுப்ரமணிய ஐயர் தயக்கத்துடன் அவரைப் பார்த்து, “ இன்னிக்குக் காலையிலே என் பையன் இங்கே வந்து,” என்று மெதுவாய் ஆரம்பித்தார். அவரோ மிக மிக சந்தோஷத்துடனேயே , “ இருங்க, இருங்க, நான் சொல்றேனே!” என்று ரொம்பக் கண்டிப்பாயும், நிச்சயமாயும் சொல்ல ஆரம்பிக்க வேங்கடசுப்ரமணிய ஐயர் கலங்கியே போனார். என்ன சொல்லப் போகிறாரோ எனக் கதிகலக்கத்துடன் அவர் இருக்க, அந்த அந்தணரோ, “ சொன்ன நேரத்துக்குத் தப்பாமல் உங்க பிள்ளை வந்து சேர்ந்தான். சிராத்தத்தை ரொம்பவும் திருப்தியா நன்னாவும் செய்து வைத்தான். எனக்கும் மனசுக்குத் திருப்தியாவே அமைந்தது. ஒரு ஜோடி வேஷ்டியும், ஐந்து ரூபாய் பணமும் தட்சணையாக் கொடுத்தேனே? கொண்டு வந்து கொடுத்தானா? சொல்றேனேனு தப்பா நினைக்காதீங்க. நீங்க கூட இவ்வளவு திருப்தியா சிராத்தம் செய்து வைத்ததில்லை. உங்க பிள்ளை உங்களை மிஞ்சிவிட்டான். ரொம்ப நன்றி.” என்று இரு கரமும் கூப்பி வணங்கினார் அவர். வேங்கட சுப்ரமணிய ஐயருக்கோ ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துப் போனார். அப்படியே திருவிசநல்லூருக்குத் திரும்பினார்.

வீட்டுக்கு வந்ததும் பையனைப் பார்த்து, “நீ தான் மணஞ்சேரி போய் சிராத்தம் செய்து வைத்தாய்னு அவர் சொல்றாரே? தட்சணையாக் கூட ஐந்து ரூபாயும், ஒரு ஜோடி வேஷ்டியும் கொடுத்தாராமே?” என்று மகனிடம் கேட்க, மகனோ, அதிர்ந்து போய் நின்றார். “என்ன நானா? அங்கே போனேனா? சிராத்தம் செய்து வைத்தேனா? ஆஞ்சநேயர் கோயிலில் உட்கார்ந்து கொண்டு அனுமன் சந்நிதியில் ராமநாமத்தை அல்லவோ ஜபித்துக் கொண்டிருந்தேன். அப்போ, அப்போ, அப்போ எனக்காக அந்த ஸ்ரீராமனே போய் சிராத்தம் செய்து வைச்சிருக்கானா?” என்று விதிர்விதிர்த்துப் போய் நின்றார் ஸ்வாமிகள். ஆஹா, அந்த ராமனே போய் சிராத்தம் பண்ணி வச்சதோடல்லாமல் சம்பாவனையாய்க் கிடைத்த வேஷ்டியையும், பணத்தையுமே தம்மிடமே கொண்டும் சேர்த்துவிட்டானே? என்று உருகிப் போனார் ஸ்வாமிகள். செய்தி ஊரெங்கும் பரவ ஊரே வியந்தது இந்த அற்புதத்தைக் கண்டு.

Saturday, May 2, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

குழந்தையைப் பார்த்த துறவி வேங்கடசுப்ரமணிய ஐயரைப் பார்த்து, “ இவனா ஊமை? இவன் தெய்வாம்சம் பொருந்தியவன். இவன் உங்கள் மகனாய்ப் பிறந்தது நீங்கள் பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம் ஆகும். வருந்தாதீர்கள். இவன் நன்றாய்ப் பேசுவான்.” என்று சொல்லிவிட்டு ஆசிகளை அளித்துவிட்டுச் சென்றார். எனினும் இன்னும் குழந்தை பேச ஆரம்பிக்கவில்லை. அருகில் உள்ள மணஞ்சேரி என்னும் ஊரில் கோபால ஸ்வாமிகள் என்ற பாகவதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சதா சர்வதா ராம நாமத்தையே ஜபிக்கும் இவரின் மகிமையையும், பெருமையையும் உணர்ந்த வேங்கடசுப்ரமணிய ஐயர் மகனை அழைத்துக் கொண்டு அவரைச் சந்தித்தார். குழந்தையின் அழகிலும்,முக காந்தியிலும் மனதைப் பறி கொடுத்தார் கோபால ஸ்வாமிகள் பாகவதர். குழந்தையின் காதில். “ராம” என்னும் நாமத்தை ஓதி, குழந்தையைப் பார்த்து, “எங்கே இதைத் திரும்பச் சொல்லு பார்ப்போம்?” என்று சொன்னார். குழந்தையோ அதுவரையில் பேசாமல் இருந்தவன் அப்போது திடீரென,” ராம, ராம, ராம, “ என இறைவனது திருநாமத்தை உச்சரித்தான். வந்தவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம். பெற்றோரோ மகிழ்ந்தனர். பிள்ளை பேசிவிட்டானே, அதுவும் ராமநாமத்தை உச்சரித்து!

ஏழு வயதில் வேங்கடராமனுக்கு உபநயனம் செய்து வைக்கப் பட்டது. தந்தையாரே குருவாக அனைத்து சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களைப் பிள்ளைக்குக்கற்றுக் கொடுத்தார். ஆன்மீகக் கதைகளையும், அதில் பொதிந்துள்ள அருமையான தத்துவங்களையும் தாயின் மூலம் அறிய வந்தது. பகவானின் நாமாவைப் பாடி ஆட வசதியாக சங்கீதமும் கற்றார். இவ்வாறு பேசவே முடியாமல் இருந்த வேங்கடராமன் சகல கலைகளிலும் வல்லவனாக மாறினார். வேங்கடசுப்ரமணிய ஐயர் பக்கத்து கிராமங்களுக்கு வைதீக காரியங்களுக்கும் சென்று வருவது வழக்கம். திருமணம், உபநயனம் போன்றவை மட்டுமின்றி சிராத்தம் போன்ற காரியங்களுக்கும் சென்று வருவார். ஒருநாள் மணஞ்சேரி கிராமத்தில் ஒருவரது வீட்டில் சிராத்தம் வந்தது. வழக்கம்போல் வேங்கடசுப்ரமணிய ஐயரை அழைத்தார். அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் சிராத்தம் செய்து வைக்க வேங்கடசுப்ரமணிய ஐயரால் செல்ல முடியாமல் ஏதோ நிர்ப்பந்தம் ஏற்படவே தன் குமாரன் வேங்கடராமனை அனுப்பி வைத்தார். சிராத்தம் செய்து வைக்க அதிகப் பழக்கம் இல்லை எனினும் வேங்கடராமன் தந்தை சொல் தட்ட முடியாமல் சிராத்தம் செய்யத் தேவையான ஏற்பாடுகளுடனும், தந்தையை எவ்வாறு என்ன என்ன செய்யவேண்டும் என்று கேட்டறிந்து கொண்டும் புறப்பட்டார்.

கோபாலஸ்வாமி பாகவதாரால் ராம நாமம் உபதேசிக்கப் பட்ட நாளில் இருந்து அன்று வரையிலும் தினமும் ஒரு லக்ஷத்து எட்டாயிரம் முறைகள் ராம நாமம் ஜபிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார் வேங்கடராமன் என்னும் மருதாநல்லூர் ஸ்வாமிகள். அன்றும் அதே போல் ஜபித்துக் கொண்டே மணஞ்சேரியை நோக்கிச் சென்றார். இன்று சிராத்தம் செய்யச் சென்றால் ராம நாமம் ஜபிப்பதில் இடையூறு ஏற்படுமோ என எண்ணிக் கலங்கினார். எனினும் தந்தையாரின் ஆணையையும் மீற முடியாது என்பதால் அவர் நாமஜபம் ஜபித்த வண்ணமே மணஞ்சேரி நோக்கிச் சென்றார். இவர் ஒன்று நினைக்க ராமன் வேறு விதமாய் நினைத்தான். மணஞ்சேரி ஊருக்குள் நுழைந்ததுமே அங்கே இருந்த ஆஞ்சநேயரின் ஆலயத்தைக் கண்ட வேங்கடராமன் உள்ளே நுழைந்து அனுமனைத் தரிசிக்கலாம் என எண்ணிச் சென்றார். ஒரு ஓரமாய்க் கொண்டு வந்த பைகள், சாமான்களை வைத்துவிட்டு அனுமனைத் தரிசிக்கச் சென்றார்ல். வாயுகுமாரன், வானர வீரனைக் கண்டதும் தாம் வந்த பணியை மறந்தார். தந்தையார் தமக்கு இட்ட கட்டளையையும் மறந்தார். அங்கேயே யோக நிஷ்டையில் அமர்ந்தார். ராமநாம ஜபத்தை ஆரம்பித்தார். மெல்ல மெல்ல காலை போய் மதியம் வந்து மாலையும் வந்தது. ஒரு லக்ஷத்து எட்டாயிரம் நாம ஜபமும் பூர்த்தியானது. மெல்லக் கண்களைத் திறந்தார் வேங்கடராமன். என்ன ஆச்சரியம்? அவர் கண்ணெதிரே ஒரு ஜோடி வேஷ்டியும் ஐந்து ரூபாயும் இருந்தது.

ராம நாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகளைப் பற்றிக் கொஞ்ச நாட்கள் முன்னாலே தான் படிக்க நேர்ந்தது. சக்தி விகடனில் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு ஆன்மீகப் பெரியவர்களைப் பற்றி திருவடி தரிசனம் என்ற பெயரில் வருகின்றது. அதிலே படிக்க நேர்ந்தது. கல்யாணத்துக்கு முன்னாலே இப்படி ஒரு ஸ்வாமிகள் இருந்தது தெரியாது. அப்புறமும் அடிக்கடி என் மாமியார் இவரைப் பத்திச் சொல்லுவாங்க. அதுதான் தெரியும் அவ்வளவு விபரமாய்த் தெரியாது. இப்போ திரு தேவ் அவர்கள் ஸ்வாமிகளின் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி எழுத ஆரம்பிச்சதும் மறுபடியும் மருதாநல்லூர் ஸ்வாமிகள் பற்றித் தேடி எடுத்துப் படிச்சேன். இந்தப் பதிவை ராமநவமியை ஒட்டியே போட்டிருக்கணும். முடியலை. இப்போவாவது போட முடிஞ்சதேனு சந்தோஷம் அடைகிறேன்.

நாம சங்கீர்த்தனமும், நாம ஜபமும் மட்டுமே கலியுகத்தில் இறை அருள் பெற்று உய்ய மிகச் சிறந்த வழியாகச் சொல்லப் படுகின்றது. தேவரிஷியான நாரதரில் இருந்து ஆரம்பித்து, இன்றைக்கும் பல்வேறு மஹான்களும், ரிஷி, முனிகளும் நாம ஜபத்தையும் நாம சங்கீர்த்தனத்தையும் நாடெங்கிலும் பரப்பி வந்திருக்கின்றனர். அனைத்திலும் சிறந்த நாமம் “ராம” என்ற தாரக மந்திரமே. அனைவருக்கும் உயிர்நாடியாக விளங்கும் இந்த ராம நாம ஜபத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவர்கள் கோவிந்தபுரத்தில் அதிஷ்டானம் கண்டிருக்கும் ஸ்ரீஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள், திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் போன்றவர்கள் ஆவார்கள். இவர்களில் ஸ்ரீஸ்ரீ போதேந்திரரும், ஸ்ரீதர ஐயாவாள் அவர்களும் சமகாலத்தவர்கள். இவர்களுக்குப் பின்னர் ஏறக் குறைய நூறு வருஷங்கள் சென்ற பின்னர் தோன்றியவரே மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள்.

ராமநாம ஜபத்தின் மகிமையை நாடெங்கும் பரப்பிய இவர் பிறந்ததும் சில வருஷங்கள் பேசவே இல்லை, தெரியுமா? ஸ்வாமிகளின் அவதாரம் பற்றிக் காண்போமா இப்போது? தஞ்சை ஜில்லாவில் திருவிச நல்லூர் கிராமத்தில் கி.பி.1777-ம் ஆண்டில் வேங்கடசுப்ரமணிய ஐயருக்கும் அவர் மனைவிக்கும்(தாயார் பெயர் தெரியவில்லை) மகனாய்ப் பிறந்தார் ஸத்குரு ஸ்வாமிகள். இவருடைய இயற்பெயர் வேங்கடராமன் என்பதாகும். பிறந்து மூன்று வருஷங்கள் ஆகியும் பிள்ளை வாயில் இருந்து ஒரு சொல் முத்துக் கூட உதிரவில்லை. தாயும், தந்தையும் ஏங்கித் தவித்து உருகிப் போனார்கள். வேண்டாத தெய்வம் இல்லை. மணி, மந்திர, ஒளஷதங்கள் அனைத்தும் பலிக்கவில்லை. குழந்தை வாயே திறக்கவில்லை. முத்துப் போல் பேசுவான் என நினைத்திருக்க “அம்மா” என்று கூட அழைக்க மாட்டேன் என்கின்றானே அருமை மகன் எனத் தாயார் மனம் வெதும்பிப் போனாள்.

அப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்திருந்தார். பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று புனித நீராடி, யாத்திரை சென்று வரும் வழியில் அந்த ஊருக்கும் வந்திருந்தார் துறவி. துறவிக்கு பிக்ஷை அளித்து அவரிடம் ஆசிகளைப் பெற விரும்பிய வேங்கடசுப்ரமணிய ஐயரும், அவரின் மனைவியும் அவரைத் தங்கள் இல்லத்துக்கு வந்தருளுமாறு வேண்ட துறவியும் அவ்வாறே வந்தார். இருவரும் துறவியை நமஸ்கரித்துவிட்டுத் தங்கள் பிள்ளையையும் அவருக்குக் காட்டி நமஸ்கரிக்கச் சொன்னார்கள். பிள்ளை சும்மா நின்றது. மனம் வருந்திய பெற்றோர் துறவியிடம் பிள்ளை இன்னும் பேசவே இல்லை என்பதையும் துயரத்துடன் தெரிவித்தார்கள். குழந்தையைக் கூர்ந்து கவனித்தார் துறவி. அவர் முகம் மலர்ந்தது.

ஸ்வாமிகளின் படம் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் மெயிலில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

Friday, April 3, 2009

ராம நாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

இனி மேலும் சில தகவல்களைப் பார்ப்போம். தென் மாநிலங்களை விடவும், வடமாநிலங்களில் ஸ்ரீராமரும், கிருஷ்ணரும் அன்றாட வாழ்க்கையிலேயே வந்து போய்க் கொண்டிருப்பார்கள். வட மாநிலங்களில் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போதும், பிரியும்போதும், “ஜெய் ஸ்ரீராம்” என்றோ, “ராம் ராம்” என்றோ, “ஜெய் ஸ்ரீகிருஷ்ணா” என்றோ தான் சொல்லிக்கொள்வார்கள். அதே ஒருவனின் குணாதிசயம் சரியில்லை என்றால் அவர்கள் சொல்லுவது அவன் நல்லவன் அல்ல என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். உஸ்மே ராம் நஹீம் ஹை! என்றே சொல்கின்றார்கள். அந்த அளவுக்கு ஸ்ரீராமன் ஒரு மரியாதைக்குகந்த புருஷோத்தமனாய் இன்றும் வாழ்ந்து வருகின்றான். ராமாயணம் நிகழ்ந்ததுக்கு அடையாளமாக பூகோளம், தொல்பொருள் ஆராய்ச்சி, சரித்திரச் சான்றுகள், கலாசாரச் சின்னங்கள், காவியத்தின் குறிப்புகள் என்று ஏராளமாய்க் கிடைக்கின்றன. டாக்டர் ராம் அவதார் என்பவர் செய்த ராமாயண ஆராய்ச்சியில் 195 இடங்களை ராமரும், சீதையும் சென்ற இடங்களாய்க் கண்டறிந்துள்ளார். அவற்றில் சிருங்கிவேரபுரி என்றழைக்கப் பட்ட சிருங்கேரி, பாரத்வாஜ ஆசிரமம் (அலஹாபாத்), சித்ரகூடம், பஞ்சவடி, சீதாசரோவர், சீதாமடி, ஜனக்பூர், தர்பங்கா, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், வேதாரண்யம், பட்டீஸ்வரம், ராமநதீஸ்வரம், புள்ளப் பூதங்குடி ஆகிய இடங்களும் இடம் பெறுகின்றன. ஸ்ரீலங்காவில் சீதை சிறை இருந்த அசோக வனம் தற்போது “அசோக் வாடிகா” என்ற பெயரில் அழைக்கப் பட்டு புண்ய ஸ்தலமாகவும், சுற்றுலா மையமாகவும் பாதுகாக்கப் படுகின்றது.

இந்தோனேஷியாவில் ஸ்ரீராமர் மற்றும் சீதையை கலாசார- ஆதர்ஸ தம்பதிகளாய்ப் பார்ப்பதோடு அல்லாமல், ராமாயணத் திருவிழா “உலக ராமாயணத் திருவிழா”வாக சில ஆண்டுகள் முன்பு கொண்டாடியது. ராமாயணம் இந்தோனேஷியாவின் தேசீய இதிஹாசமாய் அறிவிக்கப் பட்டிருக்கின்றது. ஸ்ரீராமன் பிறந்தபோது விண்மீன்களும், கோள்களும் இருந்த நிலை குறித்து ஆய்வாளர்கள் மென்பொருள் மூலம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் ஸ்ரீராமன் சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் சுக்லபட்ச நவமிதிதியில் பிறந்தார் என்னும் வால்மீகியின் குறிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த ஜோதிட அடிப்படையில் ஆராயப் பட்ட இன்னொரு விஷயம் கைகேயி ஜோதிட சாத்திரத்தில் வல்லுநர் எனவும், புனர்பூச நட்சத்திரத்தை சூரியன், செவ்வாய் மற்றும் ராகு ஆகிய கிரஹங்கள் சூழ்ந்திருப்பதால் அரசனுக்கு ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்தே ஸ்ரீராமன் பட்டாபிஷேஹம் நடைபெறுவதைத் தடுத்துத் தன் கணவனே அந்தச் சமயம் ஆட்சியில் இருக்குமாறு செய்தாள் எனவும் சொல்லுவார்கள். பரதனும் பதவி ஏற்க மறுக்கவே அப்போது ஆட்சியில் இருந்த தசரதன் மரணம் அடைந்தான் எனவும் சொல்கின்றனர். நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி ஸ்ரீராமநாமத்தை ஒரு முறை கூறினாலே ஆயிரம் முறை கூறியதற்குச் சமம் என்கின்றனர் ஆன்றோர்கள். துளசிதாசரும், தியாகராஜ ஸ்வாமிகளும் ஒன்பது கோடி முறை ஸ்ரீராம நாமாவைக் கூறி ஜபித்து வந்ததால் ஸ்ரீராமன் நேரிலேயே வந்து அவர்களுக்கு தரிசனம் அளித்திருக்கின்றார். கும்பகோணத்தை அடுத்த கோவிந்த புரத்தில் போதேந்திராள் அதிஷ்டானத்தில் அன்றும், இன்றும், என்றும் ஸ்ரீராமநாமம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அயோத்தியிலும், குஜராத் ஜாம்நகரிலும் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அகண்ட ராமநாம பஜனை கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.

"வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே!
வேத: ப்ராசேதஸாதாஸீத ஸாக்ஷாத் ராமாயணாத்மனா!!"

வேதங்கள் சொல்லுகின்ற பரமபுருஷன் ஸ்ரீராமனே ஆவான் என்பது ஆன்றோர் வாக்கு. அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன என்பது பெரியோர் வாக்கு. மேற்கண்ட ஸ்லோகத்தின் அர்த்தமும் அதுவே. அப்படி என்னதான் அந்த ராமாயணத்தில் சொல்லி இருக்கின்றது? தர்மத்தின் பாதையில் வாழச் சொல்லிக் கொடுக்கின்றது. அந்த தர்மமே மானுட உருவெடுத்து வந்த ஸ்ரீராமன் என்றும் சொல்லுகின்றது.

அதிலும் பகைவன் ஆன வாலி, மாரீசன், ராவணன் போன்றோர் பாராட்டும்படியாக ஸ்ரீராமன் தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுக்க சீலனாக வாழ்ந்து மரியாதைக்கு உரிய புருஷ உத்தமனாய் இருந்து காட்டினான். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ,அங்கெல்லாம் அவன் பக்தன் ஆன ஆஞ்சநேயன் இருப்பான். ஆஞ்சநேயன் இல்லாமல் ராமாயணம் இல்லை. வேதமாக இருக்கும்போது ஞானமார்க்கத்தை உபதேசித்த வேதங்கள், ராமாயணமாக மாறியதில் தர்மத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லுகின்றது. வேதமே தர்மம். தர்மமே வேதம். எத்தனை கஷ்டம் வந்தாலும் தர்மத்தின் வழிசென்றால் அஞ்சனாபுத்திரன் துணையுடன் வெல்லலாம்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்,
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்!

ஸ்ரீராம் ஜயராம், ஜயஜயராம்!

Wednesday, April 1, 2009

ராம நாமமே துதி செய், நாளும் ஒரு தரம்!

இப்போது ராமாயண காவியத்தின் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கலாமா? எந்த ஒரு காரியத்துக்கும், காரணம் இருக்கும் என்பது நாம் ராமாயண காவியம் படிக்கும்போதே பார்த்தோம் அல்லவா? அதிலும் பின்னால் நடக்கப் போகும் விஷயங்களை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்றார்போல் சம்பவங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாமா? முதன் முதல் ஸ்ரீராமர் விஸ்வாமித்திரருடன் காட்டிற்குச் செல்கின்றார். அப்போது தாடகை வதம் நடை பெறுகின்றது. அதன் பின்னர் மாரீசன், சுபாஹூ போன்றவர்கள் தாடகை வதத்திற்குப் பழி வாங்க ஸ்ரீராமனுடன் வந்து போர் செய்கின்றனர். அப்போது ஸ்ரீராமனிடம் விஸ்வாமித்திரர், “மாரீசனைக் கொல்லாதே, அப்படியே அவனை உன் அம்பினால் தூக்கிக் கொண்டு போய் தண்டகாரண்யத்தில் விழும்படிச் செய்” என்று கூற அவ்வாறே தன் அம்பினால் மாரீசனை தண்டகாரண்யத்தில் விழும்படிச் செய்கின்றார் ஸ்ரீராமர். பின்னால் சீதை கடத்தப் படும் நேரம் இந்த மாரீசனே ராவணனுக்கு வந்து உதவி செய்கின்றான்.

ஸ்ரீராமனுக்குப் பட்டாபிஷேஹம் நிச்சயம் செய்தாயிற்று. ஊரில் அனைவரும் கொண்டாட்டங்களைத் துவக்கி விட்டனர். மந்தரைக்குச் செய்தி தெரிகின்றது. உடனேயே கைகேயியிடம் சென்று சொல்கின்றாள் மந்தரை. கைகேயியோ பரிசளிக்க அதைத் தூக்கி எறிந்த மந்தரை ராமன் முடி சூடினால் கைகேயியின் நிலைமை மோசமடையும் எனச் சொல்ல, கைகேயி அதைக் கேட்க மறுத்தாள். ராமன் முடி சூடுவது தனக்குச் சம்மதமே என்கின்றாள். ஆனால் தேவாதிதேவர்களுக்கோ அவதார நோக்கம் நிறைவேற வேண்டுமே? கவலை வந்தது. சரஸ்வதியை வேண்ட அவள் கூனியின் நாவில் புகுந்தாள். கூனியான மந்தரை கைகேயியைப் பார்த்து, “உன் தந்தைக்கும், ஜனக மஹாராஜாவுக்கும் ஜன்மப் பகை என்பதை அறியாயா? தசரதச் சக்கரவர்த்திக்காகவே அந்தப் பகை முற்றாமல் இருக்கிறதையும் அறிவாய் அல்லவா? இப்போது ஸ்ரீராமன் முடி சூட்டிக் கொண்டு அரசன் ஆனால் சீதை பட்டமஹிஷி! அதை நினைவில் வைத்துக் கொள், சீதை நிர்பந்தித்தால் ஜனகன் உன் தந்தையோடு போருக்கு வந்தால்? உன் தந்தை கதி என்ன ஆகும்? யோசி!” எனப் பலவாறு தூண்டுகின்றாள். இத்தனைக்குப் பின்னரே கைகேயி தான் ஏற்கெனவே கேட்ட இரு வரங்களையும் நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்கின்றாள். அப்போது பதினான்கு வருட வனவாசம் செய்யவேண்டும் எனவும் கைகேயி கேட்டாள். அவள் என்னமோ அப்படிக் கேட்டாள் எனினும் அதற்கும் காரணம் இருப்பதாலேயே வாக் தேவி அந்தச் சமயம் கைகேயியின் வாயில் குடி இருந்து கேட்க வைத்தாள். காரணம் பின்னால் வரும்.
வனவாசம் துவங்கியது. ஸ்ரீராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோர் காட்டிற்குள் வருகின்றனர். முதன் முதல் பாரத்வாஜ முனிவரின் ஆசிரமம் கண்ணில் படுகின்றது. முனிவரும் ஸ்ரீராமனை வரவேற்றுச் சில காலம் அங்கேயே பர்ணசாலை அமைத்துத் தங்கச் சொல்லுகின்றார். அப்போது சில நாட்களில் பரதன், மூன்று அன்னையருடனும், முனிவர்கள், மற்ற ஜனங்களோடு அங்கே வந்து ஸ்ரீராமனைக் கண்டு செல்கின்றான். இம்மாதிரி பரதன் வரப்போவதை முன்கூட்டி அறிந்தே பாரத்வாஜர் இவ்வாறு கூறினார்.

அதே போல் பதினான்கு வருடம் வனவாசம் செய்த ராமன் ராவணனோடு போரிட்டபோது இந்திரஜித்தை எவராலும் வெல்ல முடியவில்லை. பல்வேறு விதமான யுக்திகள் கடைப்பிடிக்கப் பட்டன. ஆனாலும் மந்திர, தந்திரத்தில் யாராலும் ஜெயிக்க முடியாத இந்திரஜித்தை வெல்லவே முடியாமல், கடைசியில் மிகக் கஷ்டப் பட்டு லக்ஷ்மணன் இந்திரஜித்தைக் கொன்றான். விபீஷணனுக்கு ஆச்சரியம். வியப்போடு லக்ஷ்மணனைப் பார்த்தான். பாராடினான். ராமன் என்ன காரணம் இப்படித் தனியாய்ப் பாராட்டுகின்றாய்? வியப்புடன் வேறே லக்ஷ்மணனைப் பார்க்கின்றாயே எனக் கேட்டான். அதற்கு இந்திரஜித் சொன்ன பதில் வியப்பூட்டியது.

பல்வேறு தவங்கள் செய்த இந்திரஜித் எவராலும் வெல்லமுடியாத வரத்தை மட்டும் பெறவில்லை. பதினான்கு வருஷங்கள் ஊண், உறக்கம் இன்றி இருப்பவனால் மட்டுமே தான் கொல்லப் படவேண்டும் எனவும் வரம் வாங்கி இருந்தான். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. பதினான்கு வருடங்கள் சாமானியமா? ராமன் ஆச்சரியத்தின் உச்சிக்கே போனான். லக்ஷ்மணனைப் பார்த்தான். லக்ஷ்மணன் கூறினான்” “அண்ணலே, தங்களையும் அண்ணியாரையும், காக்க வேண்டி பகல் பொழுதுகளில் மட்டுமின்றி இரவுகளிலும் நான் தூங்கவில்லை. மேலும் தங்களுடன் நான் காட்டிற்குக் கிளம்பும்போது என் தாய் சுமித்திரை எனக்குச் சொன்ன அறிவுரையாவது: உன் அண்ணனும், அண்ணியும் உணவு அருந்தி முடித்த பின்னர் மிச்சம் இருப்பதை மட்டுமே நீ சாப்பிட வேண்டும் என்பதே. ஆனால் எனக்குச் சிரமம் வைக்காமல் நீங்கள் சாப்பிட்டு விட்டு இலைகளையும் நீங்களே எறிந்து சுத்தம் செய்துவிடுவீர்கள். ஆகவே தாங்கள் உண்ட பிரசாதத்தை உண்ணும் பாக்கியமும் எனக்குக் கிட்டவில்லை.” என்று சொல்லிக் கொண்டே தன் அம்பறாத் தூணியைக் கவிழ்க்க சபரி கொடுத்த உலர்ந்த பழங்கள் அதிலிருந்து கீழே விழுந்தன. பாசுரப் படி ராமாயணம் எழுத நினைச்சு முடியலை, பார்க்கலாம். நாளை ஸ்ரீராமநவமி. ஆகையால் ராமரின் சிறப்புகளும், ராமாயணத்தின் சிறப்புகளுமே முக்கியத்துவம் பெறும். இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரைக்கும் பரவி இருக்கும் ராமாயண மஹாகாவியம் ஒரு நிரந்தர சாட்சி. ராமனைப் போன்ற ஒரு புருஷோத்தமனை நேரில் கண்டு ஆச்சரியப் பட்ட வால்மீகி அதை ஒரு மஹா காவியமாக்கி ஸ்ரீராமரின் பிள்ளைகளாலேயே பாடவும் வைத்து, ஸ்ரீராமரையே அதைக் கேட்கவும் வைத்து,வழிவழியாக நமக்கும் வந்திருக்கின்றது என்றால் அதன் பெருமையை சொல்லவும் முடியுமா?


டிஸ்கி: நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் படங்கள் அல்ல.

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

வால்மீகி ராமாயணம் கிமு 2 அல்லது மூன்றாம் நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்கலாம் என்று சொல்கின்றார்கள். அதைத் தொடர்ந்து வந்தது யோக வாசிஷ்ட ராமாயணம், பிரம்மானந்த தத்துவ சங்கிரஹ ராமாயணம், உத்தர ராம சரிதம் போன்றவையாகும். தமிழில் ஒன்பதாம் நூற்றாண்டில் கம்பர் ராமாயணத்தை எழுதினார். சங்க காலத்திலேயே ராமாயணம் பாடப் பட்டிருக்கின்றது என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையிலும் ராமர் பாதம் பதியாத இடங்களே இல்லை என்னும்படியாகப் பதினான்கு வருஷ வனவாசத்தின் போது ராமர் அனைத்து மாநிலங்களிலும் விஜயம் செய்திருக்கின்றார் என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன.

வடமொழியில் துளசிதாசர் “ராம சரித மானஸ” என்னும் தன்னுடைய ராமாயண நூலை கி.பி. 1513-ம் ஆண்டில் இயற்றினார். மலையாள மொழியில் பதினான்காம் நூற்றாண்டில் ராமாயணம் எழுத்தச்சனால் எழுதப் பட்டது. தெலுங்கில் ரங்கநாதரின் தவிபாதி ராமாயணம், திக்கண்ணா என்பவரின் நிர்லகதா ராமாயணம், பாஸ்கர ராமாயணம் போன்றவை எழுதப் பட்டது. ஒரிய மொழியில் பதினாறாம் நூற்றாண்டில் பலராம்தாஸ் என்பவரால் ராமாயணம் எழுதப் பட்டது. அஸ்ஸாமிய மொழியில் மாதங்குளி என்பவரும், குஜராத்தியில் அஜாஷ்ட மல்லன் ஹரிதாஸ், துர்க்காதாஸ் ஆகியோரும் ராமாயணம் எழுதினார்கள். மராட்டி மொழியில் ஏகநாதரின் பாவிர்த்த ரமாயணம் கிருஷ்ண தாஸ் முத்கல் யுத்தகாண்டம், முத்தேவரின் ராமாயணம், சமர்த்த ராமதாஸரின் லகு ராமாயணம் போன்றவை பதினேழாம் நூற்றாண்டில் எழுதப் பட்டவை.

வங்க மொழியில் கிருதிலாஸ் ஓஜாஸ்ரீராம பாதாஞ்சலி என்ற பெயரிலும் உருது மொழியில் ராமாயண குஷ்டார் என்ற பெயரில் முன்ஷி ஜெகந்நாத குஷ்டார் என்பவரும் எழுதினார்கள். நேபாள மொழியில் பானுபட் என்பவர் அத்யாத்ம ராமாயணம் எழுதினார். ராமரின் புகழ் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும், முக்கியமாய்க்கீழை நாடுகளில் பரவி இருக்கின்றது. தாய்லாந்து நாட்டின் அரசர்கள் தங்களை “ராமா” என அழைத்துக் கொள்ளுகின்றனர். தற்சமயம் இருந்த அரசர் பெயர் “பூமிபால் அதுல்யதேஜ் 9-வது ராமா” ஆவார். மேலும் தாய் மொழியில் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட ராம காவியம் “ராம கீர்த்தி” என்ற பெயரில் பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படுகின்றது. தாய்லாந்து நாட்டு குத்துச் சண்டை விளையாட்டு, அனுமன், வாலி, சுக்ரீவன் முதலிய வான்ர வீரர்களின் சண்டை முறைகளை அடிப்படையாகக்கொண்டது என்று சொல்லுகின்றனர். மேலும் தாய்லாந்து நாட்டின் பெயர் அவர்களது அரசியல் சட்டத்தின் படியாக “ஷ்யாம் தேசம்” அதாவது “விஷ்ணு நாடு” என்ற பெயரில் அழைக்கப் படுகின்றது. அயோத்தி, லவபுரி, காஞ்சனபுரி என்ற பெயர்களில் ஊர்கள் அங்கே உண்டு.

பினாங்கில் உள்ள ஒரு மசூதியில் உள்ள பெயர்ப்பலகையில் “இந்த மசூதி 1974-ம் ஆண்டு ஸ்ரீ ராம பாதுகையின் ஆணைப்படி கட்டப்பட்டது” எனப் பொறித்திருப்பதாய்ச் சொல்லுகின்றார்கள். மலேசிய அதிபரோ தாம் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது, “ஸ்ரீராமதூளி மேல் ஆணையாக” என்று சொல்லித் தான் பதவி ஏற்பார் எனச் சொல்கின்றனர். மலேசியப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கி.பி. 13-ம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட “ஹிகாய்த் செரிராமா” என்ற மலாய் மொழி ராமாயணம் பாடமாகப் பயிற்றுவிக்கப் படுகின்றது. மலேசிய சுலதானை, “ ராஜ பரமேஸ்வர” என்றும் ராணியை “ராஜ பரமேஸ்வரி” என்றும் ராஜகுமாரனை “லக்ஷ்மண” என்றும் அழைக்கின்றனர்.

தொடர்ந்து எழுத முடியாமல் நடுவில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன்.

Saturday, March 28, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

ஸ்ரீராமன் பல்வேறுவிதமான பெயர்களால் அழைக்கப் படுகின்றான் அல்லவா? ஒரு ஆங்கிலப் பழமொழி உள்ளது, "ரோஜாப்பூவை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன" எனும் பொருள்படி, "A ROSE IS A ROSE IS A ROSE" என. அது போல சர்வ ரட்சகனை எந்தப்பெயரிட்டு அழைத்தாலும் என்ன? ஆனாலும் இங்கே பாருங்கள், தசரதன் அவனை அழைப்பதையும், தாயான கோசலை அழைப்பதையும், வசிஷ்டர் போன்ற பிரம்ம ரிஷிகள் அழைப்பதையும், மற்ற ரிஷிமுனிவர்கள் அழைப்பதும், மக்கள் சொல்லும் பெயரும், சீதையின் தோழிகள் அடையாளம் காட்டுவதும் இப்படித் தானாம்.

"ராமாய ராமப்த்ராய ராமசந்த்ராய வேதஸே!
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:"

வசிஷ்டர் போன்ற பிரம்மரிஷிகளால் "ராமா" என்றும், தந்தை தசரதனால் வாஞ்சையுடன் "ராமபத்ரா" எனவும், தாயான கோசலை தன் அன்பை வெளிக்காட்டும் விதமாய் "ராமச்சந்த்ரா" எனவும், மற்ற ரிஷிமுனிவர்களால் "வேதஸ்"(படைக்கும் கடவுள் ஆன பிரம்மதேவனைக் குறிக்கும் சொல்) எனவும், நாட்டுக் குடிமக்களாலும், மற்றவர்களாலும் "ரகுநாதன்" எனவும், ஸீதையின் தோழியர்களால் "ஸீதாபதி" என்றும் ஒவ்வொருவராலும், ஒவ்வொரு விதமாய்ப் போற்றப் படும், "ஹே, ராமசந்த்ரமூர்த்தியே, உமக்கு நமஸ்காரம்."

அடுத்து வருவதைப் பாருங்கள். தசகண்ட ராவணனே தன் சைனியம் யுத்தத்தில் சின்னாபின்னமாக்கப் பட்டதை அறிந்து, வந்திருப்பவன் யார் என உள் மனதிலும் உணருகின்றான். அதைச் சொல்லவும் சொல்கின்றான்.


"யஸ்ய விக்ரம மாஸாத்ய ராக்ஷஸா நிதனம் கதா:!
தம் மன்யே ராகவம் வீரம் நாராயணமனாமயம்!!"

"ஆஹா, நம்முடைய மொத்த சைனியமும் இவனால் அழிக்கப் பட்டுவிட்டதே? எனது சைதன்யமும் அழிக்கப்பட்டுவிட்டது. இவனுடைய வீர, தீர, பராக்கிரமாத்தால் அன்றோ ராக்ஷஸர்கள் அழிந்தனர்! அப்போது இவன் சாமானிய மனுஷன் அல்ல! இவன் அந்த சாட்சாத் ஸ்ரீமந்நாராயணனே ஆவான்." என்று ராவணன் சொல்கின்றான். இப்படிப் பகைவனாலேயே போற்றப் பட்ட ராமனை நினைத்தாலே போதுமே!

அடுத்து ச்யவன மஹரிஷி சொல்லுவது.

"ஸ்ருதி ஸ்ம்ருதி புராணே ஷூ ராமநாம ஸமீரிதம்!
தந்நாம கீர்த்தனம் பூய: தாபத்ரய வினாசனம்!!"

வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லப் பட்டிருக்கின்ற ஸ்ரீராம நாமாவை அடிக்கடி ஜபித்து வந்தால் சகல துக்கங்களும் நசிந்துவிடும் என்று ச்யவன மஹரிஷி சொல்கின்றார். ஆகவே ஸ்ரீராம நாமாவை இடைவிடாது ஜபித்து வருகின்றவர்களுக்கு அனைத்து ஆபத்துகளும் நீங்கும் என்பது உறுதி.

ஸ்ரீராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்.

அடுத்து ஸ்ரீராமனின் சில சிறப்புகள்.

Friday, March 27, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

முதல்லே இதை வேறே எங்கேயும் பப்ளிஷ் பண்ணவேண்டாம்னே நினைச்சேன். ஆனால் நம்பிக்கை குழுவில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அபிப்பிராயங்களைச் சொல்லிக் கொண்டு, விவாதத்தில் இறங்க, கொஞ்சமானும் இதனால் அமைதி அடையட்டுமேனு தோணியது. அதனாலேயே போட்டேன். இப்போப் போட ஆரம்பிச்சாச்சு அதனால் மிச்சம் எழுதறதையும் ஸ்ரீராமநவமி வரை போட்டுடறேன்.
****************************************************************************************
அடுத்த ஸ்லோகம் இது: ராமன் முதன்முதல் தன் வீரத்தைக் காட்டியது விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றபோதே. அப்போதில் இருந்து கடைசியாக ராவணன் வதம் வரையிலும் ஸ்ரீராமன் தன் கடமையான தர்மத்தில் இருந்து தவறவே இல்லை.
துஷ்டர்களை அழிப்பதையும், நல்லவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதையுமே தன் கடமையாகக் கொண்டிருந்தான். ஸ்லோகத்தின் அர்த்தம் இது அல்ல.

"ஆர்த்தானாம் ஆர்த்திஹந்தாரம் பீதானாம் பீதநாஸனம்!
த்விஷதாம் கால்தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்!!"

பீடைகள்=துன்பங்களினால் பாதிக்கப் பட்டவர்களின் துன்பங்களையும் பயந்தவர்களின் பயத்தையும், சத்ருக்களால் துன்பம் அடைவோருக்கு உதவி சத்ருக்களை நாசம் செய்து காலதண்டம் போல் விளங்குபவருமான ஸ்ரீராமசந்த்ரமூர்த்தியை வணங்குகின்றேன்.

ஸந்நத்த: கவசீ கட்கி சாபபாணதரோ யுவா!
கச்சன் மாகம்ரதோ நித்யம் ராம: பாது ஸ ல்க்ஷ்மண!!

யெளவனமாய்க் காட்சி தருபவரும், இளவல் ஆன லக்ஷ்மணனுடன் எப்போதும் இணை பிரியாது இருப்பவரும், கவசம் அணிந்து, வில், அம்பு இவற்றை எப்போதும் தரித்தவரும் ஆன ஸ்ரீராமசந்த்ர மூர்த்தி என்னை எப்போதும் காக்கவேண்டும்.

நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத சராய ச!
கண்டிதாகில தைத்யாய ராமாயா பந்நிவாரிணே:"

கோதண்டம் என்னும் காதளவு நீண்ட நாணை உடைய வில்லைத் தரித்துக் கொண்டு அம்பை அதில் ஏற்றி எப்போதும் தயார் நிலையில் உள்ள பாணத்தை உடையவரும், எல்லா அசுரர்களையும் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்தவரும் ஆன ஸ்ரீராமசந்த்ர மூர்த்திக்கு நமஸ்காரங்கள்.

டிஸ்கி: அர்த்தம் நானாக ஒரு மாதிரியாய் எழுதியது. வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கொடுக்கலை. பொதுவான அர்த்தமே கொடுத்திருக்கேன்.

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

இப்போ ராம நாமம் வரும் ஒவ்வொரு ஸ்லோகமாய்ப் பார்ப்போமா? எனக்குச் சின்ன வயசில் முதலில் பழக்கம் ஆனது இந்த ஸ்லோகம் தான். இந்த ஸ்லோகம் அர்த்தம் அப்போ தெரியாது. இன்னும் சொல்லப் போனால் உச்சரிப்புக் கூடச் சரியா வராது. ஏழு வயதில் கற்ற அந்த ஸ்லோகம் இதுவே:-
"அக்ரத: ப்ருஷ்டதஸ்சைவ பார்ஸ்வதஸ்ச மஹாபலெள!
ஆகர்ண பூர்ண தந்வாநெள ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள!!"
இந்த ஸ்லோகம் பயமில்லாமல் தனிவழி செல்லவும், இரவு படுக்கும்போது சொல்லவும் சொல்லிக் கொடுக்கப் பட்டது. இதைச் சொன்னால் ராம, லக்ஷ்மணர்கள் உங்களுக்குத் தெரியாமல் கையில் வில், அம்போடு வந்து உங்களைக் காப்ப்பார் என்றும் சொல்லிக் கொடுத்தாங்க. அது முதல் எங்கே, என்னவிதமான கஷ்டம் வந்தாலும் இந்த ஸ்லோகம் ஒன்றே தான் திரும்பத் திரும்பத்திரும்ப திரும்பத் திரும்ப மனதில் ஓடும். அதுக்கப்புறம் தினமும் கணக்கில்லாமல் இந்த ஸ்லோகம் மனதிலேயே ஓடுவது வழக்கமாய்ப் போச்சு! இப்போ என் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து அவங்களையும் கஷ்டம் வரும் நேரத்தில் மட்டுமில்லாது எப்போவுமே சொல்லச் சொல்லுவேன். இந்த ஸ்லோகத்தின் அர்த்தமே முன்னாலும், பின்னாலும் அதி பலசாலிகளான ராமனும், லக்ஷ்மணனும், காதளவு நீட்டப் பட்ட நாணை உடைய வில் மற்றும் அம்பைத் தரித்துக் கொண்டு வந்து நம்மை ரக்ஷிக்கட்டும் என்பதே!

அடுத்து ஆபத்துக்களைத் தவிர்க்கும் ராம நாமம் இதோ:-

"ஆபதாரமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்!
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்!!"
சகலவிதமான கஷ்டங்களைப் போக்குபவரும் சகல சம்பத்துக்களையும் அளிப்பவரும் ஆன, உலகிலேயே அழகானவரும் ஆன ஸ்ரீராமனை அடிக்கடித் துதிக்கின்றேன். இதையும் ஆபத்துகள் நேரும்போதெல்லாம் சொல்லலாம்.

அடுத்து ஸ்ரீராமபக்தனும், பரம அடியானும் ஆன ஆஞ்சநேயனே சீதையைக் கண்டு பிடிக்க முடியாமல் மனம் நொந்து தற்கொலை வரைக்கும் போயிருக்கான்னா பார்த்துக்குங்க. நாமெல்லாம் எம்மாத்திரம்! தன் மேலேயே நம்பிக்கை இழந்து உயிரை விடத் தீர்மானித்த அனுமன் கடைசியாகச் சொல்லவேண்டியது எனச் சொன்ன இந்த மந்திரம் ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தில் உள்ளது. 13-ம் ஸர்க்கத்தில் 59-வது ஸ்லோகம் இது! ஸ்ரீராம தாரக மந்திரத்தின் விவரணம் இது என்று ஆன்றோர் வாக்கில் அருளியது.

"நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை ச ஜனகாத் மஜாய
நமோஸ்து ருத்ரேந்த்ர யமானிலேப்யோ நமோஸ்து சந்த்ரார்க்க ம்ருத்கணேப்ய!!"

ஸ்ரீ ராமனையும் லக்ஷ்மணனையும், ஜனகபுத்திரியான சீதையையும் வணங்குகின்றேன். ருத்ரன், இந்திரன், யமன், அக்னி போன்ற சகல தேவர்களையும் வணங்குகின்றேன். சந்திரன் சூரியன் மற்றும் மருத்துக்கள் அனைவரையும் வணங்குகின்றேன்.என்று இந்த ஸ்லோகத்தைச் சொன்ன உடனேயே அசோகவனம் ஆஞ்சநேயன் கண்களில் பட்டது. கண்டான் சீதையை!

தொடரும்!

Thursday, March 26, 2009

ராம நாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

சென்ற வாரம் எங்க வீட்டுக்கு வந்திருந்த ஸ்ரீகாழியூரர் அவர்கள் நாம ஜபத்தின் மகிமை பற்றிச் சொன்னார். ஏற்கெனவே சின்ன வயசிலே இருந்து ஸ்ரீராமஜயம் எழுதும் வழக்கம் உண்டு என்றாலும் அவ்வப்போது இயலாது. ஆகவே வாயால் சொல்ல ஆரம்பிச்சேன். பலவருடங்களாய்த் தனி வழி சென்றாலும் சரி, சேர்ந்து போனாலும் சரி, எங்கே போனாலும், எது செய்ய ஆரம்பிச்சாலும் ஸ்ரீராமஜயம் சொல்லியே ஆரம்பிக்கும் வழக்கம் இன்னும் இருக்கு. மனதுக்குக் கஷ்டமாய் இருக்கும் நேரங்களிலும், அச்சம் ஏற்படும்போதிலும், காரணம் தெரியாத கலக்கம் ஏற்பட்டாலும் ஸ்ரீராமஜயம் சொன்னால் நிச்சயமாய் அது விலகிச் செல்வதையும் கண்கூடாய் உணர்ந்திருக்கிறேன். இனம் புரியாத ஒரு நிம்மதி மனதை ஆக்கிரமிக்கும். இப்போது ராமநாமத்தின் மகிமை பற்றிக் கொஞ்சம் சொல்கின்றேன்.

அனைவருக்கும் தெரிஞ்சது இந்த விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம்:
"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராநனே!"

இந்த ஸ்லோகமானது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அகில உலகுக்கும் அதிபதியான சர்வலோக ரட்சகன் ஆன ஈஸ்வரன், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியான சாட்சாத அம்பாளிடம் சொல்லுகின்றார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலன்களைக் கூறும் சமயம், ஈசன் கூறுவதாவது. "அனைத்திலும் உயர்ந்தது இந்த "ராம" நாமமே! இந்த "ராம" நாமத்தை ஜபித்து வந்தாலே சஹஸ்ரநாமத்தைச் சொன்னதன் அத்தனை பலனும் ஒருவனுக்குக் கிட்டி விடுகின்றது.அத்தனை உயர்வானது இந்த "ராம" நாமம்." என்று சொல்கின்றார்.

ராமநாமம் உருவான விதம்:

எட்டெழுத்து மந்திரமான "ஓம் நமோ நாராயணாயா' வில் உள்ள "ரா" என்னும் எழுத்தும், ஐந்தெழுத்து மந்திரமான "ஓம் நம சிவாயா" வில் உள்ள "ம" என்னும் எழுத்தும் சேர்ந்தே "ராம" என்னும் இரண்டெழுத்து மந்திரமானது. ஓம் நமோ நாராயணாயாவில் உள்ள "ரா" வை எடுத்துவிட்டால் மிச்சம் இருப்பது "ஒம் நமோ நா அயனாயா" என்றாகி விடுகின்றது. அதே போல் "ஓம் நம சிவாயா" வில் உள்ள "ம" வை எடுத்துவிட்டால் "ஓம் ந சிவாயா" என்றாகின்றது. ஓம் நமோ நா அயனாயா என்றால் நா அயனாயா= கண்களே இல்லாத என்ற பொருள் ஆகின்றது அல்லவா? அதே போல் இப்போது ஓம் ந சிவாயா என்றால் ந சிவாயா=சுகமில்லாதவன், மங்களமில்லாதவன் என்ற பொருள் அமைந்து விடுகின்றது அல்லவா? அப்போது இந்த ரா வும், ம வும் இல்லை என்றால் பொருளே மாறியும் விடுகின்றது. இந்த ரா வும் ம வுமே பொருளைக் கொண்டு வருகின்றது. இவை இந்த எட்டெழுத்து, ஐந்தெழுத்து மந்திரச் சொற்களின் ஜீவன் என்றே சொல்லலாம். ஆகவே ராம நாமம் தாரக மந்திரமாகி விடுகின்றது.

பாசுரப் படி ராமாயணம் எழுதணும்னு நினைப்பு. முடிஞ்சால் புத்தகம் கிடைச்சால் நாளையில் இருந்து எழுதறேன். இல்லைனால் என்ன? ஸ்ரீராமர் பற்றி எழுத விஷயமா இல்லை? நாளை பார்ப்போம். ஸ்ரீராமநவமி வரை தினம் ஒரு பதிவாய் வரும். எந்தத் திரட்டியிலும் சேர்க்கப் போவதில்லை. தானாய்த் தெரிந்து கொண்டு பின்னூட்டம் இடுபவர்கள் இடலாம் என்பதற்காக பின்னூட்டப் பக்கம் திறந்தே இருக்கின்றது.

ஸ்ரீராமஜயம்!
ராம ஜயம் ஸ்ரீராம ஜயம்
நம்பின பேருக்கு ஏது பயம்!

Wednesday, March 25, 2009

பிள்ளையார், பிள்ளையார்!

"விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லோன்!

புதிதாய் அறிமுகம் ஆகி இருக்கும் கோமாராஜன் அனுப்பிய முதல் பிள்ளையார் இவர். அவங்களே வரைஞ்சிருக்காங்க. எனக்கும் வரையணும்னு ஆசை தான். ஆனால் முடியலை, பல்வேறு காரணங்களால் பல்வேறு ஆசைகளைத் தொடர முடியலை. இப்போ அது பற்றி நினைக்கவும் கூடாது. பதிவுகள் அது பத்தி இல்லை. முதல் முதல் அறிமுகம் ஆன கடவுள் பிள்ளையார் தான். அதுவும் மேலமாசிவீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் இருக்கும் நேரு பிள்ளையார் தான் ஆத்மார்த்த சிநேகிதர். பள்ளிக்குப் போகும், பள்ளியில் இருந்து வரும் வழி அது தானே. எல்லாத்தையும் அவர் கிட்டேயே சொல்லிடுவேன். அப்பாவோட கட்டுப்பாடுகளாலே அதிகமாய் நண்பர்கள் வீடுகளுக்கும் போகமுடியாது. விளையாட முடியாது. ஆகவே புத்தகங்களும், இம்மாதிரி கோவில்கள், பஜனைகள் என்று அம்மாவோடு போவதும் தான் பொழுது போக்கு.

எப்படி இப்படி திடீர்னு ஆன்மீகமாய் மாறிட்டாயா எனப் பலரும் கேட்கின்றனர். என்னைப் பொறுத்த வரையில் அப்படி இல்லை. குடும்பத்தில் எல்லாருக்குமே பக்தி உணர்வு உண்டு. ஆன்மீகமும் தெரியும். பிறந்த இடம், புகுந்த இடம் இரண்டுமே அப்படியே அமைந்துவ்ம் விட்டது. எப்போவும் பூஜை, வழிபாடு என்று இருந்திருக்கின்றேன். இப்போது அவை குறைந்துள்ளது. உடல்நிலைகாரணமாவும், வேறு காரணங்களாலும். ஆகவே இது புதுசு இல்லை. பல்வேறு ஆன்மீகச் சொற்பொழிவுகள், பஜனைகள், கோயில் வழிபாடுகள், வீட்டிலே பூஜை வழிபாடுகள் என உண்டு. பலரும் சொல்லுவதைப் பார்த்தால் கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர்களாக இருந்துட்டு அப்புறமாத் திடீரென மனம் மாறியவர்களாகவே இருக்கின்றனர். இது தான் எனக்குப் புரியவில்லை. இந்த உலகம் ஒரே நியதியோடு நடந்து வருகின்றது. பருவங்கள் மாறுவது தப்பவில்லை, பூக்கள் மலருவதும், காய்கள் காய்ப்பதும், கனிகள் பழுப்பதும் யார் உதவியினால்? என்னதான் நாம் விவசாயத்தில் பாடுபட்டாலும் அதற்கான பலனை பூமித்தாய் அருள் இருந்தால் அன்றோ கொடுப்பாள்?? சூரியனுக்கு யார் ஆணை இட்டனர் தினமும் உதிக்க? சந்திரனுக்கு யார் ஆணை தினமும் தேய்ந்து வளர? அப்புறம் எதை வைத்து கடவுள் இல்லை என முடிவு பண்ணுகின்றார்கள்? தெரியலை, ஆனால் என்னை பொறுத்த வரையில் ஒவ்வொரு நிமிஷமும் கடவுள் இருப்பதை உணர்ந்து கொண்டிருக்கின்றேன்.

இந்த ஞானம், யோகம், பிரம்மம் பற்றியும் எழுதாமல் ஏன் புராணக் கதைகள், இதிஹாசக் கதைகள்னு தெரிஞ்சதைப் பத்தி எழுதறேனும் சிலர் கேட்கிறாங்க. நமக்குத் தெரிஞ்சிருந்தாலும் இது பற்றிய முழு அறிவு சில பெரியவங்களுக்கே இருக்கிறதில்லை. அதோட இளைய தலைமுறைக்குச் சுத்தமா இந்த அறிவு இல்லை. அவங்களுக்கு மறுக்கப் பட்டே வந்திருக்கின்றது. இப்போது இணையம் மூலமாய்ப் பலருக்கும் இது சென்றடையும். மேலும் பிரம்மம் பற்றி அறியவேண்டுமானால் கொஞ்சமாவது இறை உணர்வு, நம்பிக்கை வேணும். முதலில் அதை வளர்த்துக்கணும் இல்லையா? நான் இப்போது தான் பக்தி என்னும் படியிலேயே நிற்கின்றேன். அந்தப் படியைக் கடந்து மேலே செல்லவேண்டும். ஒருவேளை இந்தப் பிறவியில் அது நடக்குமா, நடக்காதா தெரியலை. எத்தனை பிறவி எடுக்கணுமோ தெரியாது. எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மறவாத உள்ளம் வேண்டும் என்பதே என் ஒரே எண்ணம்.

இலக்கியம் எழுத வா எனத் தோழி ஒருத்தி அழைத்தார். இலக்கியம் எழுத எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். மேலும் இலக்கியம் படைப்பதை விட தெரிந்த ஒரு விஷயத்தை எழுதுவதே எனக்கு சுலபமாய் இருக்கின்றது. வாழ்நாளில் எனக்கு நேர்ந்த அவமானங்களையும், எதிர்ப்புகளையும், சோகங்களையும் எழுத நேர்ந்தால் ஒரு இலக்கியமாய் மாறக் கூடும். ஆனால் சுலபமான வழி எல்லாவற்றையும் மறப்பதே. எதை மறக்கவேண்டும் என முயல்கின்றோமோ அதையே நினைக்க ஆரம்பிப்போம் சாதாரணமாய். ஆனால் எனக்கு ஒரு ஆயுர்வேத மருத்துவர் கூறியது: "உனக்கு ஏற்பட்ட அவமானங்களை நீ மறக்கவேண்டும் என்றால் அந்தக் குறிப்பிட்ட அவமானத்தை 21 முறை ஒரு வெள்ளைத் தாளில் எழுதிவிட்டுப் பின்னர் அதை 21 துண்டுகளாய்க் கிழித்துப் போடு." என்று சொன்னார். என் வாழ்க்கையில் நேர்ந்த சில குறிப்பிட்ட சம்பவங்களை அப்படியே எழுதிக் கிழித்தேன். இப்போது அவற்றின் நினைவு வந்தாலும் என்னிடம் அவற்றின் தாக்கம் குறைந்தே இருக்கின்றது. இன்னும் முயன்றால் சுத்தமாய் மறந்தும் விடுவேன்.

தனியாக இந்த வலைப்பூ ஆரம்பித்ததின் நோக்கமே என் தனிப்பட்ட பக்தி உணர்வுகளை எழுதத் தான். இப்போது ஸ்ரீராமநவமியை முன்னிட்டு சில ராமர் பற்றிய தகவல்கள் எழுதணும்.