
ஏழு வயதில் வேங்கடராமனுக்கு உபநயனம் செய்து வைக்கப் பட்டது. தந்தையாரே குருவாக அனைத்து சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களைப் பிள்ளைக்குக்கற்றுக் கொடுத்தார். ஆன்மீகக் கதைகளையும், அதில் பொதிந்துள்ள அருமையான தத்துவங்களையும் தாயின் மூலம் அறிய வந்தது. பகவானின் நாமாவைப் பாடி ஆட வசதியாக சங்கீதமும் கற்றார். இவ்வாறு பேசவே முடியாமல் இருந்த வேங்கடராமன் சகல கலைகளிலும் வல்லவனாக மாறினார். வேங்கடசுப்ரமணிய ஐயர் பக்கத்து கிராமங்களுக்கு வைதீக காரியங்களுக்கும் சென்று வருவது வழக்கம். திருமணம், உபநயனம் போன்றவை மட்டுமின்றி சிராத்தம் போன்ற காரியங்களுக்கும் சென்று வருவார். ஒருநாள் மணஞ்சேரி கிராமத்தில் ஒருவரது வீட்டில் சிராத்தம் வந்தது. வழக்கம்போல் வேங்கடசுப்ரமணிய ஐயரை அழைத்தார். அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் சிராத்தம் செய்து வைக்க வேங்கடசுப்ரமணிய ஐயரால் செல்ல முடியாமல் ஏதோ நிர்ப்பந்தம் ஏற்படவே தன் குமாரன் வேங்கடராமனை அனுப்பி வைத்தார். சிராத்தம் செய்து வைக்க அதிகப் பழக்கம் இல்லை எனினும் வேங்கடராமன் தந்தை சொல் தட்ட முடியாமல் சிராத்தம் செய்யத் தேவையான ஏற்பாடுகளுடனும், தந்தையை எவ்வாறு என்ன என்ன செய்யவேண்டும் என்று கேட்டறிந்து கொண்டும் புறப்பட்டார்.
கோபாலஸ்வாமி பாகவதாரால் ராம நாமம் உபதேசிக்கப் பட்ட நாளில் இருந்து அன்று வரையிலும் தினமும் ஒரு லக்ஷத்து எட்டாயிரம் முறைகள் ராம நாமம் ஜபிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார் வேங்கடராமன் என்னும் மருதாநல்லூர் ஸ்வாமிகள். அன்றும் அதே போல் ஜபித்துக் கொண்டே மணஞ்சேரியை நோக்கிச் சென்றார். இன்று சிராத்தம் செய்யச் சென்றால் ராம நாமம் ஜபிப்பதில் இடையூறு ஏற்படுமோ என எண்ணிக் கலங்கினார். எனினும் தந்தையாரின் ஆணையையும் மீற முடியாது என்பதால் அவர் நாமஜபம் ஜபித்த வண்ணமே மணஞ்சேரி நோக்கிச் சென்றார். இவர் ஒன்று நினைக்க ராமன் வேறு விதமாய் நினைத்தான். மணஞ்சேரி ஊருக்குள் நுழைந்ததுமே அங்கே இருந்த ஆஞ்சநேயரின் ஆலயத்தைக் கண்ட வேங்கடராமன் உள்ளே நுழைந்து அனுமனைத் தரிசிக்கலாம் என எண்ணிச் சென்றார். ஒரு ஓரமாய்க் கொண்டு வந்த பைகள், சாமான்களை வைத்துவிட்டு அனுமனைத் தரிசிக்கச் சென்றார்ல்.

No comments:
Post a Comment