எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Sunday, May 3, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

வேஷ்டியையும், பணத்தையும் பார்த்து ஒரு கணம் திகைத்தாலும், மனதிற்குள் ஏதோ ஒன்று உத்தரவிட அவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார் வேங்கடராமன். பார்த்தால், அந்தி மயங்க ஆரம்பித்திருந்தது. சூரியன் மறையப் போகின்றான். ஆஹா, போச்சே! அப்பா சிராத்தம் செய்து வைக்க அல்லவோ நம்மை அனுப்பி வைத்தார்? இப்போப் பொழுது சாய்ந்துவிட்டதே. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பார்கள். நாமோ அவருக்குக் கொடுத்த வாக்கை மீறிவிட்டோமே. நாம் வரலைனு அங்கே காத்திருப்பாங்களே? மதியமானாலும் பரவாயில்லை. இந்த மாலையில் சிராத்தம் செய்ய முடியாதே? காலம் கடந்து போச்சே! நம்மால் ஒருத்தர் வீட்டு முக்கியமான காரியத்துக்கு பங்கம் நேரிட்டு விட்டதே? மனக்கலக்கத்துடன் யோசித்த ஸ்வாமிகள் இனிமேல் சிராத்தம் நடக்கும் வீட்டிற்குப் போவதை விடத் தந்தையைப் போய்ப் பார்த்து நடந்ததைச் சொல்லி விடவேண்டியதே முறை என நினைத்தார்.

அவ்வாறே மணஞ்சேரியில் இருந்து திருவிசநல்லூருக்குத் தன் வீடு திரும்பிய அவர் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டு, தாம் ஆஞ்சநேயர் கோயிலில் தியான ஜபம் செய்ததையும், அங்கே பலிபீடத்தில் இந்த ஜோடி வேஷ்டியும், ஐந்து ரூபாய் பணமும் இருந்ததையும் சொல்லிவிட்டுத் தாம் சிராத்தம் செய்து வைக்காமல் கோயிலிலேயே நாம ஜபத்தில் ஈடுபட்டதையும் சொல்லி வருந்தினார் ஸ்வாமிகள். தந்தை என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்பது என்ற மன உறுதியுடனும் காத்திருந்தார். வேங்கட சுப்ரமணிய ஐயருக்கோ இதைக் கேட்டதும், முகம் வாடிவிட்டது. மனம் வருந்திப் போன அவர், தாமே போய் சிராத்தத்தை நிறைவேற்றி இருக்காமல் போனதற்கும் மனம் நொந்து போனார். அந்த அந்தணரும் சிராத்தம் நடத்தி வைக்க யாரும் வராமல் போனதுக்கு நம்மைக் கடிந்து கொள்ளப் போகின்றாரே என்றும் மன வருத்தம் ஏற்பட்டது அவருக்கு. ஒரு கணம் யோசித்த அவர் தாமே நேரில் மணஞ்சேரிக்கே சென்று அந்த அந்தணரிடமே நடந்ததைக் கூறி மன்னிப்பும் கேட்டுவிடலாம் என நினைத்துக் கொண்டு தெருவில் இறங்கினார். வேகமாய் நடைபோட்டு மணஞ்சேரிக்குள் நுழைந்தார். இருட்ட ஆரம்பித்துவிட்டது. சிராத்தம் நடந்திருக்க வேண்டிய வீட்டை அடைந்தார். தயக்கமும், பயமும் முட்டித் தள்ள கொஞ்சம் கலக்கத்துடனேயே அந்த வீட்டை அடைந்தார் வேங்கடசுப்ரமணிய ஐயர் அவர்கள்.

உள்ளே நுழையும் வேங்கட சுப்ரமணிய ஐயரைப் பார்த்ததுமே அந்த அந்தணரோ ஓடோடியும் வந்து வரவேற்றார். அகமும், முகமும் மலர்ந்து இருந்த அவரைக் கண்ட வேங்கடசுப்ரமணிய ஐயர் தயக்கத்துடன் அவரைப் பார்த்து, “ இன்னிக்குக் காலையிலே என் பையன் இங்கே வந்து,” என்று மெதுவாய் ஆரம்பித்தார். அவரோ மிக மிக சந்தோஷத்துடனேயே , “ இருங்க, இருங்க, நான் சொல்றேனே!” என்று ரொம்பக் கண்டிப்பாயும், நிச்சயமாயும் சொல்ல ஆரம்பிக்க வேங்கடசுப்ரமணிய ஐயர் கலங்கியே போனார். என்ன சொல்லப் போகிறாரோ எனக் கதிகலக்கத்துடன் அவர் இருக்க, அந்த அந்தணரோ, “ சொன்ன நேரத்துக்குத் தப்பாமல் உங்க பிள்ளை வந்து சேர்ந்தான். சிராத்தத்தை ரொம்பவும் திருப்தியா நன்னாவும் செய்து வைத்தான். எனக்கும் மனசுக்குத் திருப்தியாவே அமைந்தது. ஒரு ஜோடி வேஷ்டியும், ஐந்து ரூபாய் பணமும் தட்சணையாக் கொடுத்தேனே? கொண்டு வந்து கொடுத்தானா? சொல்றேனேனு தப்பா நினைக்காதீங்க. நீங்க கூட இவ்வளவு திருப்தியா சிராத்தம் செய்து வைத்ததில்லை. உங்க பிள்ளை உங்களை மிஞ்சிவிட்டான். ரொம்ப நன்றி.” என்று இரு கரமும் கூப்பி வணங்கினார் அவர். வேங்கட சுப்ரமணிய ஐயருக்கோ ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துப் போனார். அப்படியே திருவிசநல்லூருக்குத் திரும்பினார்.

வீட்டுக்கு வந்ததும் பையனைப் பார்த்து, “நீ தான் மணஞ்சேரி போய் சிராத்தம் செய்து வைத்தாய்னு அவர் சொல்றாரே? தட்சணையாக் கூட ஐந்து ரூபாயும், ஒரு ஜோடி வேஷ்டியும் கொடுத்தாராமே?” என்று மகனிடம் கேட்க, மகனோ, அதிர்ந்து போய் நின்றார். “என்ன நானா? அங்கே போனேனா? சிராத்தம் செய்து வைத்தேனா? ஆஞ்சநேயர் கோயிலில் உட்கார்ந்து கொண்டு அனுமன் சந்நிதியில் ராமநாமத்தை அல்லவோ ஜபித்துக் கொண்டிருந்தேன். அப்போ, அப்போ, அப்போ எனக்காக அந்த ஸ்ரீராமனே போய் சிராத்தம் செய்து வைச்சிருக்கானா?” என்று விதிர்விதிர்த்துப் போய் நின்றார் ஸ்வாமிகள். ஆஹா, அந்த ராமனே போய் சிராத்தம் பண்ணி வச்சதோடல்லாமல் சம்பாவனையாய்க் கிடைத்த வேஷ்டியையும், பணத்தையுமே தம்மிடமே கொண்டும் சேர்த்துவிட்டானே? என்று உருகிப் போனார் ஸ்வாமிகள். செய்தி ஊரெங்கும் பரவ ஊரே வியந்தது இந்த அற்புதத்தைக் கண்டு.

No comments:

Post a Comment