எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Wednesday, February 15, 2012

செளந்தர்ய லஹரியின் எளிய விளக்கம் 12

त्वदीयं सौन्दर्यं तुहिनागीरिकन्ये तुलयितुम
कवीन्द्रा: कल्पन्ते कथमपि विरिंची -प्रभ्रुतय:
यदालोकौत्सुक्या - दमरललना यन्ति मनसा
तपोभी -र्दुष्प्रापमापी गिरीश -सायुज्य -पदवीम

த்₁வதீ₃யம்ʼ ஸௌந்த₃ர்யம்ʼ து₁ஹினாகீ₃ரிக₁ன்யே து₁லயிது₁ம
க₁வீந்த்₃ரா: க₁ல்ப₁ந்தே₁ க₁த₂மபி₁ விரிஞ்சீ₁ -ப்₁ரப்₄ருத₁ய:
யதா₃லோகௌ₁த்₁ஸுக்₁யா - த₃மரலலனா யந்தி₁ மனஸா
த₁போ₁பீ₄ -ர்து₃ஷ்ப்₁ராப₁மாபீ₁ கி₃ரீஶ -ஸாயுஜ்₁ய -ப₁த₃வீம

வீரைக் கவிராஜரின் செளந்தர்ய லஹரி தமிழாக்கம்:

ஆதி சுந்தரி வடிவினை யயன் முதற்புலவோர்
ஏது கண்டு அளவிடுவது தமை இகழ் இமையோர்
மாதர் இங்கு இவள் மகிழ்நரோடு உறைகுவன் எனின் ஓர்
பேதை கொங்கைகள் பெறுகுவம் என மருகுவரால்.

இங்கே அம்பிகையின் செளந்தரியத்தின் சக்தியைப் பற்றிக் கூறப்படுகிறது. அம்பாளின் செளந்தர்யத்தை எவராலும் விவரிக்க முடியவில்லையாம். விரிஞ்சீ ப்ரப்ருதய: அதாவது பிரம்மா முதலானோர்களால் கூட விவரிக்கவொண்ணா அழகு படைத்தவள் அம்பிகை. அவர்கள் அம்பிகையைப் பார்க்கவில்லையா என்ன? பார்த்திருக்கிறார்கள்; பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனாலும் அம்பிகையின் செளந்தர்யத்தை விவரித்துச் சொல்லும்படியான திறமை அவர்களிடம் இல்லை. முழுமதி போன்ற முகம், முத்துப் போன்ற பற்கள், ஒளிவீசும் கண்கள், என்றெல்லாம் உவமைகளைச் சுட்டுவது எல்லாம் அம்பிகையின் முழு அழகையும் நமக்குக் காட்டுவதில்லை. அவை வெறும் உவமைகளே. அவ்வளவு அழகு வாய்ந்த அம்பிகை தன் முழு அழகையும் ஈசனிடம் மட்டுமே காட்டுகிறாள்.

மற்றப் பேர் அவளின் அழகில் ஒரு துளியைத் தான் காணமுடிகிறது. அப்படி மின்னலைப் போல அவள் ஒளிவீசிப் பிரகாசித்துவிட்டு முகச் சந்திரமண்டலத்தைக் காட்டிவிட்டு மறைந்துவிடுகிறாள். அந்தப் பிரகாசத்தையே எவராலும் தாங்க முடியவில்லை. இன்னும் தன் முழு அழகைக் காட்டிவிட்டாள் எனில்! நாம் தாங்கமாட்டோம் என்பதாலேயே அம்பிகை தன் அழகை முழுதும் ஈசனிடம் மட்டுமே காட்டுகிறாள். இங்கே ஒரு சின்ன உதாரணம் சொல்லலாம். எந்தக் குழந்தையும் தன் அன்னையிடம் அவள் அழகா, கறுப்பா, சிவப்பா, வெளுப்பா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அவளுடைய அன்பும், கருணையும், பாசமுமே தெரியும்; புரியும். வேறெதுவும் தெரியாது. மேலும் குழந்தை கண்களுக்குத் தான் அழகாய்த் தெரியவேண்டும் என எந்தத் தாயும் நினைக்கவும் மாட்டாள். ஆகவே அம்பாளின் குழந்தைகளான நமக்கு அவளுடைய கருணைப் பிரவாஹமே கண்களுக்குத் தெரிகிறதே தவிர அவளுடைய பூரண செளந்தரியம் நம் கண்களில் தெரியவருவதில்லை. ஆனால் துளிப் போல் தெரிகிற அந்த செளந்தர்யத்தையே நம்மால் வர்ணிக்க முடியவில்லை; வார்த்தைகள் கிடைப்பதில்லை.

இங்கே ஆசாரியரும் அம்பாளின் குழந்தையான தனக்கு அவளுடைய பரிபூரண அழகை வர்ணித்துப் பாடும் அளவுக்குச் சொற்கள் கிடைக்கவில்லை என்கிறார். ஆனாலும் அம்பாளின் அதி தேவதைகள் அம்பாளின் சொரூப லக்ஷணத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஈசனோடு தாங்களும் எவ்வாறு ஐக்கியமடைகின்றனரோ, அவ்வாறே நாமும் சிவ சாயுஜ்யத்தைப் பெற்றால் அம்பாளின் செளந்தர்யத்தைத் தெரிந்து கொள்வதோடு அல்லாமல், நம்முடைய முடிவான லக்ஷ்யத்தையும் அடைவோம் என்கிறார். நாம் ஒவ்வொருவரும் அடைய நினைப்பது சச்சிதானந்தமே ஆகும்; சிவலோக சாயுஜ்யப் பதவியை அடையவே நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். அதன் மூலம் அம்பாளின் கருணா கடாக்ஷத்துக்குப் பாத்திரமாவதோடு அவளின் திவ்ய செளந்தரியத்தையும் கண்டு அனுபவித்து இன்புறலாம்.

இதையே அபிராமி பட்டர்,

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!

அழகுக்கு ஒருவரும் உவமை சொல்ல முடியாத அளவுக்குச் சிறந்தவள் என்கிறார். நம் மனத்தில் ஆயிரம் குறைகள், குற்றங்கள், துன்பங்கள். இத்தனை இருந்தாலும் வேறு எவராலும் உவமை சொல்லமுடியாத அளவுக்கு அழகும், கருணையும் நிரம்பி இருக்கும் அம்பிகை இருக்கையில் நமக்கு என்ன குறை வந்துவிடும் என்கிறார். மேலும் அருமறைகளான வேதங்கள் நான்கும் அம்பிகையின் திருப்பாதங்களில் அடி, முடி, நடு என எங்கும் காணப்பட்டதாலும் அவள் திருவடிகளும் கன்றிச் சிவந்து தாமரை மலரின் நிறத்தை ஒத்திருந்ததாம். பாத அம்புயத்தாள் என்கிறார் பட்டர். யாமளையாகிய இந்தக் கற்பகவல்லி ஒரு பூங்கொம்பைப் போல் காட்சி அளிக்கிறாள். இவள் இருக்கையில் நமக்கு என்ன குறைதான் வந்துவிடும்? ஒரு குறையும் வராது. அம்பிகையின் கருணை நம்மைக் காத்து ரக்ஷிக்கும்.

2 comments: