எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Tuesday, November 30, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!

ஸ்ரீராமன் விருப்பப்படி தன்னிருப்பிடம் திரும்பிய அநுமன் தன் கல்வியைத் தொடருகிறான். அனைவரும் எதிர்கொள்ளப் பயப்படும் சூரியனையே தனக்குக் குருவாய்க்கொண்டு ஹநுமான் தன் பாடங்களைக் கற்று முடிக்கிறான். சூரியனின் வேகத்துக்கு ஈடு கொடுத்துக்கொண்டு அவன் முகத்தையே பார்த்த வண்ணம் பின்னாலேயே நகர்ந்துகொண்டு கற்று முடித்த ஹநுமான் குரு தக்ஷிணை தர விரும்பினான். ஆனால் சூரியனோ அநுமனின் அர்ப்பணிப்பு உணர்வும், பாடம் கேட்டுக்கொள்வதில் இருந்த ஆர்வமும், புரிதலில் காட்டிய அதீதத் திறமையும், இத்தகையதொரு சீடனைத் தனக்குக் கொடுத்ததன் மூலம் அதுவே சிறந்த தக்ஷிணையாக அமைந்தது எனக் கூறுகிறான். ஆனால் அநுமனோ குரு தக்ஷிணை என்று கொடுக்கவேண்டும் என்று பிரியப்பட சூரியன் தன் மானசீக புத்திரன் ஆன சுக்ரீவனுக்கு உதவி செய்யும்படியும், முக்கியமான நேரங்களில் தக்க ஆலோசனைகள் அளிக்குமாறும் கூறுகிறான்.

இதன் பிறகே அநுமன் சுக்ரீவனிடம் கிஷ்கிந்தைக்கு வந்து சேருகிறான். அநுமன் சுக்ரீவனின் உதவிக்கு வரும் சமயம் சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக இருந்தாலும், அவன் அதை அண்ணனைக் கொன்றுவிட்டுப் பெற்றான் என்ற அவப் பெயருக்கு ஆளாகி இருந்தான். வாலியோ திடீரெனக் கிளம்பி வந்து சுக்ரீவனை விரட்டிவிட்டு அவன் மனைவியான ருமையைத் தன்னிடம் இருத்திக்கொண்டு சுக்ரீவனை கிஷ்கிந்தையை விட்டே விரட்டி விடுகிறான். தன்னிடம் நம்பிக்கையும் விசுவாசமும் உள்ள சிலரை மட்டும் அழைத்துக்கொண்டு சுக்ரீவன் வாலியால் வரமுடியாத இடத்தில் ஒளிந்து கொள்ள நினைக்கிறான். வாலியால் ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் வர முடியாது.

அதற்கு ஒரு முனிவரின் சாபம் தான் காரணம். அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் வாலி, சுக்ரீவன் பற்றிய பூர்வ கதையைத் தெரிந்து கொள்வோமா??? அப்போத் தான் பின்னாடி தொடர செளகரியமா இருக்கும். அண்ணன், தம்பிகளான இவர்கள் ஏன் ஒருவரை ஒருவர் கொல்லும் அளவுக்குப் போனார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம். ராமாயணக் கதையே அண்ணன், தம்பி உறவும், அரசபதவியை யார் அநுபவிப்பது, யார் விட்டுக் கொடுப்பது என்பதில் உள்ள பேதங்களையும் குறித்தே. ஸ்ரீராமன் தம்பிக்காகத் தனக்கு உரிமையுள்ள அரசை விட்டுக் கொடுத்துக் காட்டுக்கு வந்தான் எனில் அவன் நண்பராக்கிக்கொள்ளும் சுக்ரீவனோ அண்ணனின் ராஜ்யத்தை அபகரித்துக்கொண்ட பழியுடன் இருக்கிறான். ராவணனோ தன் அண்ணனான குபேரனை விரட்டிவிட்டு லங்காபுரியை அபகரித்துக்கொள்கிறான். தன் சொந்த சகோதரர்களில் அனைவரிலும் இளையவன் ஆன விபீஷணனுக்கும் ராவணனுக்கும் ஒத்தே போகாது. அவன் அண்ணனுக்கு எதிராக ஸ்ரீராமனுடன்சேர்ந்து சண்டையிட்டான். எல்லாவற்றிற்கு ஒரு காரணம் உள்ளது. அது தான் மனிதன் கடைப்பிடிக்கவேண்டிய தர்மம். தர்மத்தை மீறி நடந்தான் என்பதற்காகவே தன் அண்ணன் என்றும் பார்க்காமல் விபீஷணன் ஸ்ரீராமனிடம் சரணடைகிறான். அதே தர்மத்திற்காகவே ஸ்ரீராமன் தன் தந்தையின் வாக்கைக் காக்க வேண்டி தனக்கு உரிய ராஜ்யத்தை துறக்கிறான்.

ஒரே தர்மம், ஆனால் அதன் பாதைகளில் எத்தனை வித்தியாசம்???

Wednesday, October 6, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!

என்ன முயன்றும் கூனியால் கைகேயியின் மனதை மாற்ற முடியவில்லை. அனுமனோ ஸ்ரீராமனோடு நெருங்கிப் பழகி ராமனுக்குச் சேவை செய்வதற்காகவே தான் பிறப்பெடுத்திருப்பதாயும் நம்புகிறான். அப்படியே கூறவும் செய்கிறான். ஸ்ரீராமனுக்கும் தன் மனதில் பொங்கும் சக்தியாக அநுமன் வியாபித்திருப்பதாய்த் தோன்றுகிறது.

அதற்குள் அங்கே பாற்கடலில் மஹாவிஷ்ணுவோ இதெல்லாம் தேவையற்றவை என மனம் வருந்துகிறார். அதற்கு ஈசனோ அநுமன் ராமனுக்குச் சேவை செய்யவென்றே பிறந்துள்ளான் எனவும், அங்கே பூமியில் அவனை அனுமனாகாவே ஒரு வாநரனாகவே பார்க்கவேண்டும் எனவும், சிவனின் அம்சம் தானே தவிர சிவனின் அவதாரமோ, அல்லது சிவனேயோ பிறக்கவில்லை என்றும் தெளிவு செய்கிறார். எனினும் மஹாவிஷ்ணு தாம் பூஜிக்கவேண்டிய ஈசனை இந்த ராமாவதாரத்தில் முறைப்படி பூஜிக்கப் போவதாய்ச் சொல்ல, ஈசனும், அதற்கு ஒரு சந்தர்ப்பம் ராவண வதத்தின் பின்னே அமையும் எனவும் வாக்குக் கொடுக்கிறார்.

வசிஷ்டரின் வேத பாடங்களை ஸ்ரீராமனும், அவன் சகோதரர்களும் கற்றுக்கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் அநுமனும் விண்ணில் பறந்து சென்று சூரியனிடம் பாடம் கற்கின்றான். சூரியனின் பிரயாணத்தோடு கூடவே அந்த வேகத்துக்குத் தானும் ஈடு கொடுத்து சூரியனுக்கு முன்னால் வணக்கத்தோடு நின்றுகொண்டு, தான் பின்னாலேயே பிரயாணம் செய்து கொண்டு பாடங்களைக் கற்றானாம் அநுமன். அநுமன் கற்றுக்கொள்ளும் வேதகோஷங்கள் விண்ணில் மட்டுமின்றி மண்ணிலும், வசிஷ்டரின் ஆசிரமத்தில் எதிரொலிக்க, வசிஷ்டர் அநுமன் சூரியனிடம் பாடம் கேட்பதாயும் அவன் சாதாரணச் சிறுவன் என நினைக்கவேண்டாம் எனவும், கூறுகிறார். அநுமன் தன் வழக்கமான சேஷ்டைகளோடு ரிஷி, முனிவர்களிடம் விளையாட, கோபம் கொண்ட ரிஷிகள், அநுமனுக்குத் தன் பலம் தெரியாமல் போகக் கடவது என சபிக்கின்றனர். அடடா, இப்படி இருந்தால் அப்புறம் ராம காரியம் எப்படி நடக்கும் என சிந்தித்த நாரதர் ரிஷிகளிடம் வேண்ட, அவர்களும் வேறொருவரால் நினைவு செய்யப் படும் வேளையில் அவனுடைய பலமும், வீரமும் அவனுக்கு நினைவில் வரும் என சாப விமோசனத்திற்கு ஒரு வழியையும் கூறுகின்றனர். இப்போது கொஞ்சம் அப்படியே இலங்கையில் என்ன நடக்கிறதுனு ஒரு எட்டுப் போய்ப் பார்த்துடலாம்.

அநுமன் விஸ்வரூபம் எடுத்து சூரியனுக்கு நேரே நின்று பாடம் கேட்பதைப் பார்த்த ராவணனின் வீரர்களில் ஒருவன், ராவணனின் அரண்மனைக்கு ஓடோடிச் சென்று அவனிடம் அநுமன் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு நின்று பாடம் கேட்பதையும், அவன் ஒரு வாநரன் எனவும் கூறுகின்றான். ஒரு வாநரன் வேதம் கேட்கிறானா? அதுவும் சூரியனிடமா? எனில் இதில் ஏதோ சூது உள்ளது! இந்தச் சூரியனுக்கு எவ்வளவு தைரியம்?? எனக்கெதிரே வரவே அஞ்சுவான்! இப்போது எனக்கொரு எதிரியை உருவாக்குகிறானா? ம்ம்ம்ம்ம்??? ஒரு கால், ஒரு கால், அன்றொரு நாள், இமயமலையில் கைலையைத் தாண்டும் போது கைலை தடுக்குகிறது என அதைத் தூக்கி அப்பால் போட எண்ணிய என்னை நந்தி சபித்தானே! அது உண்மையாகிவிடுமோ? இருக்கட்டும், இருக்கட்டும், இதற்கெல்லாம் அஞ்சுபவன் இந்த இலங்கேஸ்வரன் இல்லை. சரிதான் இந்த அநுமனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியதுதான். அவன் எங்கே இருந்தாலும் சரி! தன் வீரனிடம் அந்த வாநரன் எங்கே இருந்தாலும் அவனைக் கொன்று மண்ணில் புதைக்கச் சொல்கிறான் ராவணன்.
பாடம் கற்றுவிட்டு வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஓய்வாக அமர்ந்து ராமநாமத்தை எழுதிக்கொண்டிருக்கும் அநுமன் மேல் ஒரு பாறாங்கல் விண்ணிலிருந்து விழுகிறது. சத்தம் கேட்டு அனைவரும் ஓடோடி வந்து பார்க்க, அநுமன் உருண்டு ஒரு பக்கமாய்க் கிடக்கப் பாறாங்கல் தரையில் மோதிக்கிடக்கிறது. அநுமனுக்கு எதிரி தோன்றி இருப்பதையும், அவன் யார் என்பதையும் தன் திருஷ்டியின் மூலம் உணர்ந்த வசிஷ்டர் அநுமனை அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுமாறு கூறுகிறார். அநுமன் மறுக்கிறான். ராமன் இருக்குமிடமே தான் இருக்குமிடம் எனவும், ராமனின் காலடியே தனக்குச் சொர்க்கம் எனவும் கூறுகிறான். அதற்கு உதவுமாறும் வேண்ட, ஸ்ரீராமனோ, தற்சமயம் அநுமன் அங்கிருந்து செல்வதே சரி எனவும், பின்னர் ஒரு சமயம் நிச்சயம் சந்திப்போம் எனவும் அநுமனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைக்கிறான்.

டிஸ்கி: ப்ளாகர் இன்னிக்குப் படம்லாம் காட்டாதேனு எச்சரிக்கை கொடுத்துடுச்சு! :)))))

Sunday, September 5, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!


இங்கே குறத்தி வடிவில் அன்னையவள் அஞ்சனைக்கும், கேசரிக்கும் நல்வாக்குக் கூறி மனதைச் சமாதானம் செய்து வைத்தாள். அங்கே அயோத்தியில் ஈசனோ ஒரு குரங்காட்டியாகி, தான் அனைவரையும் ஆட்டி வைப்பவன் என்பதையும் மறந்தவர் போல் ஆஞ்சநேயனைக் காட்டி மக்களைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டிருந்தார். அரண்மனைச் சிறுவர்களோடு ஸ்ரீராமனும் அங்கே வர அனுமனுக்கும், ராமனுக்கும் முதல் சந்திப்பு நடக்கிறது. ஈசன் பாட ஆஞ்சநேயன் ஆட மறுக்க, ஈசன் ஸ்ரீராமன் பெயரைச் சொல்ல அதனால் மகிழ்ந்த அநுமன் ஒரு குரங்கைப் போலவே ஆடிப் பாடிக் கரணங்கள் போட்டு அனைவரையும் மகிழ்விக்கிறான்.

ராமன் பெயர் கேட்டுக் குரங்கு ஆடுவதைக் கேட்ட அயோத்தி மன்னனும் அங்கே வந்து பார்க்க ஈசனோ, "ராமா" என்ற மந்திரச் சொல்லுக்கு மட்டுமே அநுமன் கட்டுப்படுவான் என்று சொல்கிறார். மன்னனுக்கு ஆச்சரியம், அதோடு இது ஏதோ பூர்வ ஜன்மத்துப் பந்தம் என்றும் தோன்றுகிறது. அனுமனை ஸ்ரீராமனோடு விளையாட அங்கேயே விட்டுப் போகும்படிச் சொல்கிறான் மன்னன். பொருள் எவ்வளவு வேண்டுமானாலும் தருவதாயும் அனுமனை மட்டும் ராமனுக்குத் தோழனாக விட்டுச் செல்லும்படியும் கேட்கிறான். ஆனால் குரங்காட்டி மறுக்கிறான்.

"பொருளை வைத்துக்கொண்டு என்ன செய்வது?? மணி மகுடம் தரித்த மன்னனானாலும் ஒருநாள் மயானம் சென்றே ஆகவேண்டும் அன்றோ? உண்மை அப்படி இருக்கப்பொருள் எதற்கு எனக்கு?" என்று கேட்கிறான் குரங்காட்டியாக வந்த ஈசன். அரண்மனைச் சேவகர்கள் குரங்காட்டியின் இந்தப் பேச்சால் அவனைக் கண்டிக்க, அவர்களைத் தடுத்த மன்னன் மீண்டும் வானரச் சிறுவன் ஆன அநுமனைத் தங்கள் அரண்மனையிலேயே விட்டுச் செல்லும்படிக் கேட்கிறான். ஸ்ரீராமனுக்கும் அது பிடித்திருக்க அவனும் அனுமனைக் குரங்காட்டியிடம் யாசிக்கிறான். அனுமனும் அங்கே ஸ்ரீராமனோடு தங்க விருப்பம் தெரிவிக்கிறான். தன் மனம் இத்தனை நாட்கள் தவித்த தவிப்பு எல்லாம் இதற்குத் தான் என்று புரிவதாயும் கூறினான்.

குரங்காட்டியும் இதற்கு ஒத்துக்கொள்ள, அப்போது அங்கே குறத்தி வடிவில் வந்த அன்னை, அநுமனை அங்கே விட்டுவிட்டுக் குரங்காட்டியை மட்டும் அழைத்துச் செல்கிறாள். சற்று தூரம் சென்றதும் இருவரும் மறைகின்றனர். இங்கே அரண்மனையில் கைகேயியின் அந்தப்புரத்தில் ஸ்ரீராமன் உணவு உண்ண, ராமனோ அனுமனுக்கும் உணவளிக்கச் சொல்கிறான். அப்போது அங்கே வந்த கூனி கைகேயியைக் கண்டிக்கிறாள். ராமன் கூனி சொல்வதை விரும்பவில்லை. இதைக் கண்ட அனுமன் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன. இப்படி அனுமனைக் கண்டாலேயே இல்லாததும், பொல்லாததுமாய்ச் சொன்னாளாம் கூனி.

அனுமன் மேல் அடாப்பழி போட அதை நம்பாத கைகேயி பணிப்பெண்களை விசாரிக்கிறாள். பணிப்பெண்களோ மறுக்கின்றனர். அனுமன் கண்ணியமாகவே இருப்பதாய்ச் சொல்ல மந்தரையான கூனிக்கு மீண்டும் அவமானம் நேரிடுகிறது. அங்கே வைகுந்தத்திலும், கைலையிலும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் விஷ்ணுவும், சிவனும். விஷ்ணுவுக்கு இதில் விருப்பமில்லை. இவை தேவை இல்லை என்றும் ராமனுக்குச் சேவை செய்கிறான் அனுமன் என்பதைக் காட்ட இப்படி எல்லாம் சொல்லவேண்டுமா என்றும் கேட்கிறார். என்ன இருந்தாலும் அனுமன் உங்கள் அம்சம் அன்றோ? அதற்கேற்ற மரியாதையுடன் நடத்தவேண்டும் என்றும் சொல்கிறார். ஈசனும் அதற்கு உடன்பட்டு பின்னால் ஒரு சமயம் இந்த ராமாவதாரத்தில் அவர் ஈசனைப் பூசித்து வழிபாடுகள் நடத்தும் தருணமும் வரும் என்றும் சொல்கிறார்.

வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமனும், சகோதரர்களும் குருகுல வாசத்தில் பாடங்கள் கற்க, அனுமனோ தன் வலிமையால் விண்ணில் பறந்து சென்று சூரியனைத் தனக்குப் பாடங்கள் கற்பிக்கும்படி கேட்கிறான். தான் சஞ்சாரம் செய்வதை நிறுத்த முடியாது என்றும் அனுமன் மட்டும் ஓரிடத்தில் நிலையாக நின்று கேட்கும்படி சூரியன் சொல்ல, அவ்வண்ணமே அனுமன் விஸ்வரூபம் எடுத்து உதயகிரியில் ஒரு காலும் அஸ்தமனகிரியில் மற்றொரு காலையும் வைத்துக்கொண்டு நிற்க, சூரியனும் வேத மந்திரங்களிலிருந்து அனைத்தையும் அனுமனுக்குக் கற்பிக்கிறான். தேவாதி தேவர்களும் வந்து பார்த்து அதிசயிக்கும் வண்ணம் இந்தப் பாடங்கள் நடக்கின்றன.

இந்தக் காட்சி லங்காபுரிக்கும் செல்ல, அங்கே ராவணன் இதைக் கேட்டு ஆச்சரியப் படுகிறான். அடுத்து.........

Friday, July 30, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!


"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிதமஸ்த காஞ்சநம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ரக்ஷ ஸாந்தகம்!"



மன அமைதியின்றித் தத்தளிக்கும் அஞ்சனையைக் கண்டு குறத்தியான உமை அவளை நோக்கி வருகிறாள்.
அவளைக்கண்டு உன் கணவனும், பிள்ளையும் வீடு திரும்பவில்லை எனக் கவலைப்படுகிறாயா என வினவ, அஞ்சனையும் அதை ஆமோதிக்கிறாள். உமையாள் வாக்கென்று நினைத்துக் கேட்டுக்கொள் என்று உமையாளே அவளுக்குச் சொல்லிவிட்டுக் குறி சொல்ல ஆரம்பிக்கிறாள். அதற்குள்ளாக இங்கே அநுமனைத் தூக்கிச் சென்ற குரங்காட்டியைத் துரத்திச் சென்றான் கேசரி. இவன் உண்மையில் குரங்கல்ல என்றும் தெய்வப் பிறவி என்றும் நீ வித்தை காட்டிப் பிழைக்க வேறு குரங்குகள் வனத்தில் கிடைக்கும் என்றும் அநுமனை விடும்படியும் வேண்டுகிறான். மாபெரும் காரியம் ஒன்றை நிறைவேற்றப் போகிறவருக்குத் துணையாகப் பிறப்பெடுத்திருக்கிறான் இவன் என்றும் தனக்குத் தேவாதி தேவர்கள் கூறியதை அந்தக் குரங்காட்டியான ஈசனிடம் கூறினான் கேசரி. வரம் அளித்தவரிடமே அவர் அளித்த வரத்தைப் பற்றிய விளக்கம். விசித்திரம் தான்.

ஆனால் விஷமக் காரக் குரங்காட்டியோ பல மலைகள் அலைந்து திரிந்து இத்தகையதொரு குரங்குக்காகவே தான் காத்திருந்ததாயும், அதனால் இவனை விடமாட்டேன் என்றும் கூற, தான் அம்மலையின் மன்னன் எனவும், மன்னன் வாக்கை மீறக்கூடாது என்றும் கேசரி ஆணையிடுகிறான்.ஹா, நான் யார் எனத் தெரியாமல் பேசுகிறாயே? மன்னனாய் இருந்தால் என்ன? நீ எனக்குச் சின்னவன் தான்! அதெல்லாம் இவனை விடமுடியாது எனத் திட்டவட்டமாய்த் தெரிவிக்கிறான் குரங்காட்டி. அநுமனோடு ஓடவும் ஆரம்பிக்கிறான், கோபம் கொண்ட கேசரி தன் கதாயுதத்தால் அவன் மார்பில் ஓங்கி அடிக்கிறான். என்ன ஆச்சரியம்? அந்த அடியானது ஒரு அழகான மாலையாக உருமாறி ஈசன் மார்பை அலங்கரிக்கிறது.

தன் சுய உருவில் சடாமகுடதாரியாகக் காட்சி அளித்த ஈசனைக் கண்டு நடுநடுங்கிய கேசரி தன் தவற்றை மன்னிக்கும்படி வேண்டினான். "ஈசனே, உன் அம்சம் அன்றோ இவன்! உன்னுடைய பிம்பமான இவனைத் தூக்கிச் செல்ல நான் எவ்வாறு அநுமதி மறுக்கமுடியும்? தாராளமாய்த் தூக்கிச் செல்வாயாக!" என்று தன் மகனை ஈசன் கைகளில் ஒப்படைத்தான். அப்போது ஈசனிடம் அநுமனைத் தூக்கிச் செல்லும் காரணம் கேட்க, ஈசன் சொல்கிறார்.

"கேசரி, ஒரு மாபெரும் சந்திப்புக்கு இவனை அழைத்துச் செல்கிறேன். இவன் இதயத்திலும் அதற்கான ஏக்கம் கொழுந்து விட்டெரிகிறது. வேறொரு இடத்தில் பிறந்திருக்கும் இளவரசன் ஒருவனுக்கும் இவனைக் காணவேண்டும் என்ற தாபம் அதிகமாய் உள்ளது. இருவரையும் சந்திக்க வைக்கப் போகிறேன். இது இவர்கள் அறியாமலேயே நடக்கப் போகும் முதல் சந்திப்பு. அதன் பின்னர் பல காலம் கழித்தே இவர்களின் சந்திப்பும், அதை ஒட்டிய தர்மத்தின் காவலும் நடைபெறும். ஆகையால் சில நாட்களின் உன் மகனை உன்னிடம் ஒப்படைத்துவிடுவேன். கவலைப்படாதே!" என்று கூறிவிட்டு அநுமனோடு ஈசன் மறைந்தார்.

Thursday, July 15, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!


"அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம் வத
ஸ்ரீராமதூத க்ருபாஸிந்தோ மத்கார்யம் ஸாதய ப்ரபோ"

இப்போ நாம அயோத்தி வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வரணும். அயோத்தியில் தசரதச் சக்கரவர்த்தி புத்ரகாமேஷ்டி யாகம் செய்து நாலு புத்திரர்கள் பிறந்து ராமன், பரதன், லக்ஷ்மணன், சத்ருக்கனன் எனப் பெயர் சூட்டப் பட்டு வளர்ந்து வருகின்றனர். ராமன் செயற்கரிய செயல்களைச் செய்வான் என்றும், அதற்கேற்ற துணைவர்களைப் பெறுவான் என்றும் குலகுரு வசிஷ்டர் உள்பட அனைவரும் ஆரூடம் கூறுகின்றனர். குழந்தையான ராமன் அநுமனின் செயல்களைத் தன் மனக்கண்ணால் கண்டாற்போல் விண்ணில் தோன்றிய சூரியனைப்பார்த்துக் கைகொட்டிச் சிரித்து மகிழ்கின்றான். அனைவருக்கும் சாதாரணமாய்க் குழந்தைகள் நிலவைப் பார்த்துச் சிரித்து விளையாட, இவன் சூரியனைக்கண்டு விளையாடுகிறானே எனத் தோன்றினாலும், சூரிய வம்சத்துக் குழந்தை என்ற உணர்வால் அதன் காரணமாய் இருக்கும் என நினைக்கின்றனர். இங்கே அஞ்சனையோ சூரியனை நோக்கிச் சென்ற அருமை மகன் திரும்பாமல் உளம் வருந்தி உயிரையும் விடும் அளவுக்கு உடல்நலம் குன்றி விடுகிறாள்.

சூரியனுக்கு அருகே சென்ற குமாரன் வெப்பம் தாங்காமல் பொசுங்கிச் செத்திருப்பான் என்று எண்ணுகிறாள். கேசரி அவளைச் சமாதானம் செய்கின்றான். அநுமன் திரும்பிவிடுவான் என முனிவர்களும், ரிஷிகளும் கூறுவதாகவும், அதற்காகவே அவர்கள் யாகங்கள் செய்வதாகவும் கூறுகின்றான். ஆனாலும் அஞ்சனையின் மனம் சமாதானம் ஆகவில்லை. ஆனால் சற்று நேரத்தில் வாயுதேவன் அநுமனைத் தூக்கிக் கொண்டு வந்து சேர்க்க அனைவருக்கும் ஆச்சரியம் மேலிடுகிறது. முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தகவல் தெரிவிக்கப் பட அனைவரும் அநுமனைக் காண வருகின்றனர். வாயுதேவன் நடந்தவற்றை விவரிக்கிறான். இந்திரனின் வஜ்ராயுதம் பட்டு நசுங்கிய மோவாய்க்காக இனி இவன் "அநுமன்" என்று அழைக்கப் படுவான் என்றும் கூறுகின்றான். அந்த வஜ்ராயுதம் பட்டதால் இவன் மேனி புண்ணாகவில்லை, பொன்னாகிவிட்டது என்றும் கூறி, இவனை உங்கள் குமாரன் என்று தனியே சொந்தம் கொண்டாடாதீர்கள். இவன் ஒரு முக்கியமான காரியத்திற்காக, அந்த சேவைக்காகப் பிறந்த பிள்ளை. தர்மம் காக்கப்படவேண்டி அவதாரம் எடுத்திருக்கிறான். இவனால் எப்போதும் நன்மையே ஏற்படும். செல்லும் இடங்களில் எல்லாம் உண்மையும், சத்தியமும், தர்மமும் நியாயமும் செழித்து இருக்கும்.ஆகவே இவனை நீங்கள் உங்கள் அன்புச்சிறையில் வைக்காமல் ஊர் காக்கவென அனுப்பி வையுங்கள். என்று கூறிவிட்டுச் செல்கின்றான். அநுமன் தினமும் மரக்கிளையில் அமர்ந்து யாரையோ தேடுவது போல் பார்ப்பான். அதே போல் அங்கே அயோத்தியில் ஸ்ரீராமனும் விளையாடுகையில் ஒரு குறிப்பிட்ட திக்கிலேயே தேடிப் பார்க்கிறான்.

இருவரின் பெற்றோர்களும் காரணம் புரியாமல் விழிக்க, இருவர் மனதுக்குள்ளும், ஒரு பூரணத்துவம் இல்லாமல் வெறிச்சோடுகிறது. திருக்கைலை. ஈசன் இருவரையும் சேர்த்து வைக்கும் நோக்கில் கிளம்ப, உமையோ அதற்கான காலம் இன்னும் வரவில்லையே என வினவுகிறாள். ஈசனோ ஒரு குரங்காட்டியாகப் போய் அநுமனைத் தூக்கிச் சென்று ராமனுடன் விளையாட விடப் போவதாய்க் கூறிவிட்டுக் குரங்காட்டியாக மாறுகிறார். அஞ்சனையின் வீட்டில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அநுமனைத் தூக்கிச் செல்கிறார். குரங்காட்டி ஒருவர் தன் மகனைத் தூக்கிச் செல்வதைக் கண்ட கேசரி, பின்னாலேயே கூவிக் கொண்டு ஓடுகிறான். கணவனுக்கு உதவியாக அம்மையும் குறத்தி வடிவில் அஞ்சனையிடம் வருகிறாள்.

Friday, July 2, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!

ராகுவின் குற்றச்சாட்டைக் கேட்ட இந்திரன் அநுமன் செய்வதைக் காண வந்தால் அநுமனோ விளையாடுகிறான். இந்திரனோடும் விளையாடும் அநுமன், ராகுவையும் பிடிக்கப் பார்க்கிறான். அலறிக் கொண்டு ஓடும் ராகு இந்திரனைத் தஞ்சம் அடைய ஐராவதத்தைப் பார்த்த அநுமனுக்கு இன்னும் ஆநந்தம் அதிகமாகிறது. எல்லாவற்றையும் ஓடிப் போய்ப் பிடித்து தனக்கு விளையாட்டுப் பொருளாக்க முயலும் அநுமனைத் தன் வஜ்ராயுதத்தால் அடிக்கிறான் இந்திரன். வஜ்ராயுதத்தின் சக்தியால் அநுமன் மயங்கி விழுகிறான். வாயு தேவனின் கோபம் எல்லை மீறுகிறது.

அவன் விட்ட பெருமூச்சு புயல் காற்றுப் போல் அனைவரையும் அலைக்கழிக்கிறது. கீழே ஒரு மலையில் விழுந்து மயக்கமாய்க்கிடக்கும் ஆஞ்சநேயனைத் தன் மடியில் போட்டுக் கொண்டு தன் இயக்கத்தை நிறுத்திவிடுவது என முடிவெடுக்கிறான் வாயுதேவன். ஆஞ்சநேயன் கண் விழித்து எழுந்தால் ஒழியத் தன் இயக்கத்தை ஆரம்பிக்கக் கூடாது என முடிவு எடுக்கிறான். உலக இயக்கமே நின்று போகிறது. மரக்கிளைகள், இலைகள், கண் சிமிட்டிச் சிரிக்கும் பூக்கள், நகர்ந்து கொண்டிருந்த மேகங்கள், அலை வீசி ஆர்ப்பரித்த கடல், ஓடிக்கொண்டிருந்த நதியின் பிரவாகம் என அனைத்துமே நின்று போகிறது. வேள்விகளும், யக்ஞங்களும் செய்து கொண்டிருந்த முனிவர்கள் காற்றே இல்லாமல் அக்னியின் வெப்பம் தாங்காமலும், அக்னி அணைந்துவிட்டதால் மூச்சுத் திணறியும் தவிக்கின்றனர். தேவாதி தேவர்களில் இருந்து அனைவரும் காற்றே இல்லாமல் தவிக்க, தேவேந்திரன் படைப்புக் கடவுளைத் தஞ்சம் அடைந்தான்.

பிரம்மாவும் தேவேந்திரனுடைய தனிப்பட்ட தவறுக்காக அகில உலகமுமே தண்டிக்கப் படுவது நியாயம் அல்ல என எண்ணி வாயுவைச் சென்று சந்திக்கிறார். வாயுகுமாரனைப் பிழைக்க வைக்கும் வழியைப் பார்க்கலாம் என்று கூறுகிறார். வாயுதேவனைக் கண்டு பிரபஞ்ச இயக்கம் நின்றால் உலகம் தோன்றியதின் தத்துவமே அழிந்துவிடும் என்றும், உலக நன்மைக்காக வாயு இயங்க வேண்டும் என்றும் வாயுகுமாரனைத் தாம் எழுப்பித் தருவதாகவும் கூறுகிறார். ஆஞ்சநேயன் உடலை பிரம்மா தன் கைகளால் தடவிக் கொடுக்க ஆஞ்சநேயன் எழுந்திருக்கிறான். வாயுவும் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த மூச்சை மெல்ல மெல்ல வெளியே விடுகிறான். சலனம் திரும்புகிறது.

உலகில் இயக்கம் ஆரம்பிக்க, ராமகாரியத்தை நிறைவேற்றப் பிறந்திருக்கும் சிவாம்சமான இந்த ஆஞ்சநேயனுக்கு நாம் உதவிகளே செய்யவேண்டும் என்ரும் இவனை வாழ்த்தி வரமளிக்க வேண்டியதல்லாமல் இப்படி எல்லாம் நடக்கக் கூடாது எனவும் இந்திரனிடம் கூறுகிறார். இந்திரனும் தன் தவறை உணர்ந்தவனாக கன்னத்தில் அடிபட்டுப் பின் சரியானதால் இன்று முதல் அநுமன் என இவனை அழைக்கலாம் என்றும், எதிரிகள் இவன் மீது இந்திர வஸ்திரத்தை ஏவினால் அந்த அஸ்திரத்தால் இவனுக்குக் கெடுதல் ஏற்படாது என்றும் வரமளிக்கிறான். அடுத்து சூரியன் தோன்றி, தானே குருவாக இருந்து அனைத்து வித்தைகளையும் கற்பிப்பதாகவும், சூரியனின் கரங்களாகிய கதிர்களின் வல்லமையை அநுமனின் கரங்களுக்கு அளிப்பதாகவும் சொல்கிறான். யமனோ அநுமனுக்கு எங்கேயும், எப்போதும், எவர் ஆயுதத்தாலும் மரணம் என்பதே இல்லை என்று சொல்ல, வருணனோ, நீரால் இவனுக்கு ஆபத்து இல்லை என்றும் கொந்தளித்துப் பொங்கி ஆர்ப்பரிக்கும் கடல் இவனை வணங்கும் என்றும் ஆணையிட்டுக்கூறுகிறான்.

குபேரனோ, கோடி கோடி ஐஸ்வர்யங்களை விட மேலான வெற்றித் திருமகள் எப்போதும் இவன் பக்கத்தில் இருப்பாள். தோல்வி என்பதையே இவன் காணமாட்டான் என்று வரமளிக்க விஸ்வகர்மா தன் குண்டலங்களை அநுமனுக்கு அளித்துவிட்டு தேவர் படையானாலும் இந்த அநுமனை வெல்ல முடியாது என்றும் கூறுகிறான். கடைசியாகப்பிரம்மா பிரம்மாஸ்திரத்தாலும் இவனுக்கு அழிவில்லை என்றும், என்றும் சிரஞ்சீவியாக இருப்பான் என்றும் அருளிச் செய்தான். அனைவரும் மகிழும் வண்ணம் ஈசன் அப்போது அங்கே தோன்றி இந்தக் குழந்தை பிறந்ததன் நோக்கம் நன்கு நிறைவேற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று சொல்கிறார்.

Friday, June 18, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!

ராவணன் மிகச் சிறந்த சிவ பக்தன். என்றாலும் அவன் கைலை மலையையே அசைத்துப் பார்த்துச் சிவனாரால் கை நசுக்கப் பட்டு தண்டனை பெற்றான். கைலையில் நுழையும் முன்னர் நந்தியெம்பருமானின் அநுமதி வாங்காமல் அவரைக் கேலி பேசப் போக அவரால், வாநரர்களாலே உனக்கு அழிவு என்னும் சாபத்தைப் பெற்றவன். வேதவதியை பலாத்காரம் செய்ய முயன்ற ராவணனை அவளும் சபிக்கிறாள். எல்லாவற்றுக்கும் மேல் தன்னுடை அண்ணனான குபேரனின் மருமகளும் தனக்குப் பெண் போன்றவளும் ஆன நளகூபரனின் மனைவி ரம்பாவை அவள் சம்மதமில்லாமல் அநுபவிக்க அவளாலும் சாபம் பெற்றவன். இத்தனை கொடுமைகள் செய்தாலும் சிவபக்தனாகத் திருநீறு அணிந்து ஈசனைத் தொழுது கொண்டிருந்தான். ஆகவே அவனை அழிப்பதென்றாலும் ஈசனின் இசைவு முக்கியமே. அதற்கு அவரே வந்தால் தான் உண்டு. ஆனால் மஹாவிஷ்ணு அவதாரங்கள் எடுப்பது போல் ஈசனோ அவதாரங்களை எடுப்பதில்லை. தன் அம்சத்தை மட்டுமே மஹாவிஷ்ணுவிற்குத் துணையாக அனுப்பி வைக்கிறார். அந்த ருத்ராம்சமே ஆஞ்சநேயர்.

இதற்காகவே தேவர்களெல்லாம் ஈசனிடம் வேண்ட, முக்கியமாய் வாயுதேவன் ஈசன் காலடியில் விழ அவன் புத்திரனாகவும் தோன்ற வேண்டி எடுத்த திரு அவதாரம் ஆஞ்சநேயர் அவதாரம். மேலும் ராவண சம்ஹாரத்திற்காகவே ஈசன் இந்த ருத்ராம்சத்தில் நைஷ்டிக பிரம்மசாரியாகவும் தோன்றினார். ஏனெனில் நடக்கவேண்டியது ஸ்ரீராம காரியம். ராமருக்கு சகல உதவிகளையும் செய்யும் பொருட்டுத் தோன்றவேண்டும். ராமநாமமே ஸ்மரணையாக இருக்கவேண்டும். விடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் ராம சப்தமே இருக்கவேண்டும். அம்பாளும் உடன் வந்தால் அது நடக்குமா?? ஆகவே தான் மட்டும் வந்து பிறக்கிறார் ஈசன். அவர் ஆற்றல் அளப்பரியதாக இருக்கும் எனவும் எப்போதுமே தர்மத்தின் வழியிலேயே செல்வான் என்றும் முனிவர்களும், ரிஷிகளும் ஆசி கூறினார்கள். மேரு மலைச் சாரலிலே ஒரு ஸ்வர்ணத்தைப் போன்ற நிறத்திலே பிறந்த இந்தக் குழந்தையை "ஸ்வர்ண மேரு" என்ற பெயரிலே அழைக்கலாம் எனினும் அக்கால வழக்கப்படி அஞ்சனையின் புத்திரனை ஆஞ்சநேயன் என்றே அழைத்தனர். சிறு வயதிலேயே அழும் குழந்தை "ராம" நாமத்தைக் கேட்டால் அழுகையை நிறுத்திவிடுவான் என்றும், ராம நாமத்தைச் சொல்லுபவர்களைக் கை கூப்பி வணங்குவான் என்றும் சொல்கின்றனர்.

குழந்தை விளையாடுகிறது. அப்போது காலைவேளை. தகதகவென ஜொலித்த வண்ணம் விண்ணில் சூரியன் எழும்புகிறான். அன்று சூரிய கிரஹணம் நடக்கவேண்டிய நாள். நவகிரஹங்களில் ஒருவன் ஆன ராகுதேவன் சூரியனின் பாதையை மறைக்க வந்து கொண்டிருந்தான். இங்கே பூமியிலே படுத்துக் கொண்டு சூரியனைப் பார்த்த வண்ணமிருந்த குழந்தை அங்கிருந்து கைகளை நீட்டிக் கொண்டு சூரியனைப்பிடிக்கப்பார்த்தது. அதன் தாய் அதைக் கண்டு சிரிக்கிறாள். வாயுதேவனும் காற்று வடிவில் இதைப் பார்க்கிறான். தன் அருமைப் பிள்ளை விளையாடுவதை இன்னும் கண்டு ரசிக்க எண்ணி குழந்தையை அலாக்காய்த் தூக்கி சூரியன் அருகே கொண்டு செல்கின்றான். தன் திறமையால் சூரியன் குழந்தையைச் சுட்டுப் பொசுக்காவண்ணம் பார்த்துக் கொள்கிறான். இதைக்கவனித்துக் கொண்டே வந்த ராகுவுக்கு நாம் வந்து சூரியனை வழிமறிக்க வேண்டியதிருக்கு யார் இந்த வாநரக்குட்டி??? சூரியனுக்கு அருகே அவனோடு சமமாக அமர்ந்து விளையாடுகிறதே? அதன் ஆட்டங்களுக்கெல்லாம் சூரியனும் ஈடு கொடுக்கிறானே? ம்ம்ம்ம்ம்???? ஒரு கால் இது இந்திரனின் வேலையோ?? ஆம், ஆம் அப்படித் தான் இருக்கும். அவனையே போய்க் கேட்டுவிடுவோமா? உடனே சென்றான் ராகு இந்திரனிடம்.



ரொம்ப மாசங்களாச்சு இந்தப் பதிவிலே எழுதியே. ஒரு வழியா இன்னிக்குத் தான் கொஞ்சம் போட முடிஞ்சது. ஆஞ்சநேயா!