எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Friday, July 2, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!

ராகுவின் குற்றச்சாட்டைக் கேட்ட இந்திரன் அநுமன் செய்வதைக் காண வந்தால் அநுமனோ விளையாடுகிறான். இந்திரனோடும் விளையாடும் அநுமன், ராகுவையும் பிடிக்கப் பார்க்கிறான். அலறிக் கொண்டு ஓடும் ராகு இந்திரனைத் தஞ்சம் அடைய ஐராவதத்தைப் பார்த்த அநுமனுக்கு இன்னும் ஆநந்தம் அதிகமாகிறது. எல்லாவற்றையும் ஓடிப் போய்ப் பிடித்து தனக்கு விளையாட்டுப் பொருளாக்க முயலும் அநுமனைத் தன் வஜ்ராயுதத்தால் அடிக்கிறான் இந்திரன். வஜ்ராயுதத்தின் சக்தியால் அநுமன் மயங்கி விழுகிறான். வாயு தேவனின் கோபம் எல்லை மீறுகிறது.

அவன் விட்ட பெருமூச்சு புயல் காற்றுப் போல் அனைவரையும் அலைக்கழிக்கிறது. கீழே ஒரு மலையில் விழுந்து மயக்கமாய்க்கிடக்கும் ஆஞ்சநேயனைத் தன் மடியில் போட்டுக் கொண்டு தன் இயக்கத்தை நிறுத்திவிடுவது என முடிவெடுக்கிறான் வாயுதேவன். ஆஞ்சநேயன் கண் விழித்து எழுந்தால் ஒழியத் தன் இயக்கத்தை ஆரம்பிக்கக் கூடாது என முடிவு எடுக்கிறான். உலக இயக்கமே நின்று போகிறது. மரக்கிளைகள், இலைகள், கண் சிமிட்டிச் சிரிக்கும் பூக்கள், நகர்ந்து கொண்டிருந்த மேகங்கள், அலை வீசி ஆர்ப்பரித்த கடல், ஓடிக்கொண்டிருந்த நதியின் பிரவாகம் என அனைத்துமே நின்று போகிறது. வேள்விகளும், யக்ஞங்களும் செய்து கொண்டிருந்த முனிவர்கள் காற்றே இல்லாமல் அக்னியின் வெப்பம் தாங்காமலும், அக்னி அணைந்துவிட்டதால் மூச்சுத் திணறியும் தவிக்கின்றனர். தேவாதி தேவர்களில் இருந்து அனைவரும் காற்றே இல்லாமல் தவிக்க, தேவேந்திரன் படைப்புக் கடவுளைத் தஞ்சம் அடைந்தான்.

பிரம்மாவும் தேவேந்திரனுடைய தனிப்பட்ட தவறுக்காக அகில உலகமுமே தண்டிக்கப் படுவது நியாயம் அல்ல என எண்ணி வாயுவைச் சென்று சந்திக்கிறார். வாயுகுமாரனைப் பிழைக்க வைக்கும் வழியைப் பார்க்கலாம் என்று கூறுகிறார். வாயுதேவனைக் கண்டு பிரபஞ்ச இயக்கம் நின்றால் உலகம் தோன்றியதின் தத்துவமே அழிந்துவிடும் என்றும், உலக நன்மைக்காக வாயு இயங்க வேண்டும் என்றும் வாயுகுமாரனைத் தாம் எழுப்பித் தருவதாகவும் கூறுகிறார். ஆஞ்சநேயன் உடலை பிரம்மா தன் கைகளால் தடவிக் கொடுக்க ஆஞ்சநேயன் எழுந்திருக்கிறான். வாயுவும் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த மூச்சை மெல்ல மெல்ல வெளியே விடுகிறான். சலனம் திரும்புகிறது.

உலகில் இயக்கம் ஆரம்பிக்க, ராமகாரியத்தை நிறைவேற்றப் பிறந்திருக்கும் சிவாம்சமான இந்த ஆஞ்சநேயனுக்கு நாம் உதவிகளே செய்யவேண்டும் என்ரும் இவனை வாழ்த்தி வரமளிக்க வேண்டியதல்லாமல் இப்படி எல்லாம் நடக்கக் கூடாது எனவும் இந்திரனிடம் கூறுகிறார். இந்திரனும் தன் தவறை உணர்ந்தவனாக கன்னத்தில் அடிபட்டுப் பின் சரியானதால் இன்று முதல் அநுமன் என இவனை அழைக்கலாம் என்றும், எதிரிகள் இவன் மீது இந்திர வஸ்திரத்தை ஏவினால் அந்த அஸ்திரத்தால் இவனுக்குக் கெடுதல் ஏற்படாது என்றும் வரமளிக்கிறான். அடுத்து சூரியன் தோன்றி, தானே குருவாக இருந்து அனைத்து வித்தைகளையும் கற்பிப்பதாகவும், சூரியனின் கரங்களாகிய கதிர்களின் வல்லமையை அநுமனின் கரங்களுக்கு அளிப்பதாகவும் சொல்கிறான். யமனோ அநுமனுக்கு எங்கேயும், எப்போதும், எவர் ஆயுதத்தாலும் மரணம் என்பதே இல்லை என்று சொல்ல, வருணனோ, நீரால் இவனுக்கு ஆபத்து இல்லை என்றும் கொந்தளித்துப் பொங்கி ஆர்ப்பரிக்கும் கடல் இவனை வணங்கும் என்றும் ஆணையிட்டுக்கூறுகிறான்.

குபேரனோ, கோடி கோடி ஐஸ்வர்யங்களை விட மேலான வெற்றித் திருமகள் எப்போதும் இவன் பக்கத்தில் இருப்பாள். தோல்வி என்பதையே இவன் காணமாட்டான் என்று வரமளிக்க விஸ்வகர்மா தன் குண்டலங்களை அநுமனுக்கு அளித்துவிட்டு தேவர் படையானாலும் இந்த அநுமனை வெல்ல முடியாது என்றும் கூறுகிறான். கடைசியாகப்பிரம்மா பிரம்மாஸ்திரத்தாலும் இவனுக்கு அழிவில்லை என்றும், என்றும் சிரஞ்சீவியாக இருப்பான் என்றும் அருளிச் செய்தான். அனைவரும் மகிழும் வண்ணம் ஈசன் அப்போது அங்கே தோன்றி இந்தக் குழந்தை பிறந்ததன் நோக்கம் நன்கு நிறைவேற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று சொல்கிறார்.

9 comments:

 1. ஜெய் ஹனுமான் ...நல்ல பதிவு இன்னும் நிறையை ஹனுமான் லீலைகள் படிக்க ஆவலோடு காத்திரிக்கிறேன் நன்றி கீதா ஜி

  ReplyDelete
 2. வாங்க சந்தியா, ரொம்ப நன்றி. உங்கள் ஆர்வமும் மகிழ்ச்சி அளிக்கிறது. நிறையப் பேருக்கு அநுமன் ஒரு ஹீரோவாக இருப்பதும் தெரிய வருகிறது.

  ReplyDelete
 3. ஹிஹிஹிஹிஹி!

  ReplyDelete
 4. அபி அப்பா, தலைப்பில எ.பி பாருங்க! :P

  ReplyDelete
 5. @தி.வா. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
  அவர் ஒண்ணும் எ.பி.னு தெரிஞ்சுண்டிருக்க மாட்டார். அப்படித் தான் எழுதணுமாக்கும்னு நினைச்சிருப்பார்! :P:P:P:P:P:P:P

  ReplyDelete
 6. திருத்திட்டேனே! :)))))))

  ReplyDelete
 7. ஆ.ஹ்..ஹா !! இங்கேயும் வந்துட்டேன். திவா அவர்களுக்கு நன்றி. எல் கேக்கு வெப் அட் குடுத்ததுல நான் காப்பி பேஸ்ட் பண்ணிட்டேன்.இப்ப செவ்வாய் கிழமை, கார்த்தால 6 மணி இங்க!!ஓபன் பண்ணின உடனே குரு ஆஞ்சனேய ஸ்வாமி தரிசனம்!! வந்து மற்றதை படிக்கிறேன்

  ReplyDelete
 8. வாங்க ஜெயஸ்ரீ, முதல் வரவுக்கு நன்றி. :D

  ReplyDelete