எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Friday, June 18, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!

ராவணன் மிகச் சிறந்த சிவ பக்தன். என்றாலும் அவன் கைலை மலையையே அசைத்துப் பார்த்துச் சிவனாரால் கை நசுக்கப் பட்டு தண்டனை பெற்றான். கைலையில் நுழையும் முன்னர் நந்தியெம்பருமானின் அநுமதி வாங்காமல் அவரைக் கேலி பேசப் போக அவரால், வாநரர்களாலே உனக்கு அழிவு என்னும் சாபத்தைப் பெற்றவன். வேதவதியை பலாத்காரம் செய்ய முயன்ற ராவணனை அவளும் சபிக்கிறாள். எல்லாவற்றுக்கும் மேல் தன்னுடை அண்ணனான குபேரனின் மருமகளும் தனக்குப் பெண் போன்றவளும் ஆன நளகூபரனின் மனைவி ரம்பாவை அவள் சம்மதமில்லாமல் அநுபவிக்க அவளாலும் சாபம் பெற்றவன். இத்தனை கொடுமைகள் செய்தாலும் சிவபக்தனாகத் திருநீறு அணிந்து ஈசனைத் தொழுது கொண்டிருந்தான். ஆகவே அவனை அழிப்பதென்றாலும் ஈசனின் இசைவு முக்கியமே. அதற்கு அவரே வந்தால் தான் உண்டு. ஆனால் மஹாவிஷ்ணு அவதாரங்கள் எடுப்பது போல் ஈசனோ அவதாரங்களை எடுப்பதில்லை. தன் அம்சத்தை மட்டுமே மஹாவிஷ்ணுவிற்குத் துணையாக அனுப்பி வைக்கிறார். அந்த ருத்ராம்சமே ஆஞ்சநேயர்.

இதற்காகவே தேவர்களெல்லாம் ஈசனிடம் வேண்ட, முக்கியமாய் வாயுதேவன் ஈசன் காலடியில் விழ அவன் புத்திரனாகவும் தோன்ற வேண்டி எடுத்த திரு அவதாரம் ஆஞ்சநேயர் அவதாரம். மேலும் ராவண சம்ஹாரத்திற்காகவே ஈசன் இந்த ருத்ராம்சத்தில் நைஷ்டிக பிரம்மசாரியாகவும் தோன்றினார். ஏனெனில் நடக்கவேண்டியது ஸ்ரீராம காரியம். ராமருக்கு சகல உதவிகளையும் செய்யும் பொருட்டுத் தோன்றவேண்டும். ராமநாமமே ஸ்மரணையாக இருக்கவேண்டும். விடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் ராம சப்தமே இருக்கவேண்டும். அம்பாளும் உடன் வந்தால் அது நடக்குமா?? ஆகவே தான் மட்டும் வந்து பிறக்கிறார் ஈசன். அவர் ஆற்றல் அளப்பரியதாக இருக்கும் எனவும் எப்போதுமே தர்மத்தின் வழியிலேயே செல்வான் என்றும் முனிவர்களும், ரிஷிகளும் ஆசி கூறினார்கள். மேரு மலைச் சாரலிலே ஒரு ஸ்வர்ணத்தைப் போன்ற நிறத்திலே பிறந்த இந்தக் குழந்தையை "ஸ்வர்ண மேரு" என்ற பெயரிலே அழைக்கலாம் எனினும் அக்கால வழக்கப்படி அஞ்சனையின் புத்திரனை ஆஞ்சநேயன் என்றே அழைத்தனர். சிறு வயதிலேயே அழும் குழந்தை "ராம" நாமத்தைக் கேட்டால் அழுகையை நிறுத்திவிடுவான் என்றும், ராம நாமத்தைச் சொல்லுபவர்களைக் கை கூப்பி வணங்குவான் என்றும் சொல்கின்றனர்.

குழந்தை விளையாடுகிறது. அப்போது காலைவேளை. தகதகவென ஜொலித்த வண்ணம் விண்ணில் சூரியன் எழும்புகிறான். அன்று சூரிய கிரஹணம் நடக்கவேண்டிய நாள். நவகிரஹங்களில் ஒருவன் ஆன ராகுதேவன் சூரியனின் பாதையை மறைக்க வந்து கொண்டிருந்தான். இங்கே பூமியிலே படுத்துக் கொண்டு சூரியனைப் பார்த்த வண்ணமிருந்த குழந்தை அங்கிருந்து கைகளை நீட்டிக் கொண்டு சூரியனைப்பிடிக்கப்பார்த்தது. அதன் தாய் அதைக் கண்டு சிரிக்கிறாள். வாயுதேவனும் காற்று வடிவில் இதைப் பார்க்கிறான். தன் அருமைப் பிள்ளை விளையாடுவதை இன்னும் கண்டு ரசிக்க எண்ணி குழந்தையை அலாக்காய்த் தூக்கி சூரியன் அருகே கொண்டு செல்கின்றான். தன் திறமையால் சூரியன் குழந்தையைச் சுட்டுப் பொசுக்காவண்ணம் பார்த்துக் கொள்கிறான். இதைக்கவனித்துக் கொண்டே வந்த ராகுவுக்கு நாம் வந்து சூரியனை வழிமறிக்க வேண்டியதிருக்கு யார் இந்த வாநரக்குட்டி??? சூரியனுக்கு அருகே அவனோடு சமமாக அமர்ந்து விளையாடுகிறதே? அதன் ஆட்டங்களுக்கெல்லாம் சூரியனும் ஈடு கொடுக்கிறானே? ம்ம்ம்ம்ம்???? ஒரு கால் இது இந்திரனின் வேலையோ?? ஆம், ஆம் அப்படித் தான் இருக்கும். அவனையே போய்க் கேட்டுவிடுவோமா? உடனே சென்றான் ராகு இந்திரனிடம்.ரொம்ப மாசங்களாச்சு இந்தப் பதிவிலே எழுதியே. ஒரு வழியா இன்னிக்குத் தான் கொஞ்சம் போட முடிஞ்சது. ஆஞ்சநேயா!

2 comments:

  1. கீதா ஜி உங்க எழுத்து எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ...ஸ்ரீ ஹனுமான் பத்தி நான் படிச்சிருக்கேன் ஆனா இங்கே நீங்க சொன்னதெல்லாம் எனக்கு புதுசு ...அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி சந்தியா, உங்களோட பதிவுக்கும் போய்ப் பார்த்தேன். அறிமுகத்துக்கும், முதல்வரவுக்கும் ரொம்ப நன்றி. அதிகம் தெரியாத இந்தப் பதிவுக்கு வந்ததும் ஆச்சரியமா இருக்கு. :D

    ReplyDelete