எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Thursday, July 15, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!


"அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம் வத
ஸ்ரீராமதூத க்ருபாஸிந்தோ மத்கார்யம் ஸாதய ப்ரபோ"

இப்போ நாம அயோத்தி வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வரணும். அயோத்தியில் தசரதச் சக்கரவர்த்தி புத்ரகாமேஷ்டி யாகம் செய்து நாலு புத்திரர்கள் பிறந்து ராமன், பரதன், லக்ஷ்மணன், சத்ருக்கனன் எனப் பெயர் சூட்டப் பட்டு வளர்ந்து வருகின்றனர். ராமன் செயற்கரிய செயல்களைச் செய்வான் என்றும், அதற்கேற்ற துணைவர்களைப் பெறுவான் என்றும் குலகுரு வசிஷ்டர் உள்பட அனைவரும் ஆரூடம் கூறுகின்றனர். குழந்தையான ராமன் அநுமனின் செயல்களைத் தன் மனக்கண்ணால் கண்டாற்போல் விண்ணில் தோன்றிய சூரியனைப்பார்த்துக் கைகொட்டிச் சிரித்து மகிழ்கின்றான். அனைவருக்கும் சாதாரணமாய்க் குழந்தைகள் நிலவைப் பார்த்துச் சிரித்து விளையாட, இவன் சூரியனைக்கண்டு விளையாடுகிறானே எனத் தோன்றினாலும், சூரிய வம்சத்துக் குழந்தை என்ற உணர்வால் அதன் காரணமாய் இருக்கும் என நினைக்கின்றனர். இங்கே அஞ்சனையோ சூரியனை நோக்கிச் சென்ற அருமை மகன் திரும்பாமல் உளம் வருந்தி உயிரையும் விடும் அளவுக்கு உடல்நலம் குன்றி விடுகிறாள்.

சூரியனுக்கு அருகே சென்ற குமாரன் வெப்பம் தாங்காமல் பொசுங்கிச் செத்திருப்பான் என்று எண்ணுகிறாள். கேசரி அவளைச் சமாதானம் செய்கின்றான். அநுமன் திரும்பிவிடுவான் என முனிவர்களும், ரிஷிகளும் கூறுவதாகவும், அதற்காகவே அவர்கள் யாகங்கள் செய்வதாகவும் கூறுகின்றான். ஆனாலும் அஞ்சனையின் மனம் சமாதானம் ஆகவில்லை. ஆனால் சற்று நேரத்தில் வாயுதேவன் அநுமனைத் தூக்கிக் கொண்டு வந்து சேர்க்க அனைவருக்கும் ஆச்சரியம் மேலிடுகிறது. முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தகவல் தெரிவிக்கப் பட அனைவரும் அநுமனைக் காண வருகின்றனர். வாயுதேவன் நடந்தவற்றை விவரிக்கிறான். இந்திரனின் வஜ்ராயுதம் பட்டு நசுங்கிய மோவாய்க்காக இனி இவன் "அநுமன்" என்று அழைக்கப் படுவான் என்றும் கூறுகின்றான். அந்த வஜ்ராயுதம் பட்டதால் இவன் மேனி புண்ணாகவில்லை, பொன்னாகிவிட்டது என்றும் கூறி, இவனை உங்கள் குமாரன் என்று தனியே சொந்தம் கொண்டாடாதீர்கள். இவன் ஒரு முக்கியமான காரியத்திற்காக, அந்த சேவைக்காகப் பிறந்த பிள்ளை. தர்மம் காக்கப்படவேண்டி அவதாரம் எடுத்திருக்கிறான். இவனால் எப்போதும் நன்மையே ஏற்படும். செல்லும் இடங்களில் எல்லாம் உண்மையும், சத்தியமும், தர்மமும் நியாயமும் செழித்து இருக்கும்.ஆகவே இவனை நீங்கள் உங்கள் அன்புச்சிறையில் வைக்காமல் ஊர் காக்கவென அனுப்பி வையுங்கள். என்று கூறிவிட்டுச் செல்கின்றான். அநுமன் தினமும் மரக்கிளையில் அமர்ந்து யாரையோ தேடுவது போல் பார்ப்பான். அதே போல் அங்கே அயோத்தியில் ஸ்ரீராமனும் விளையாடுகையில் ஒரு குறிப்பிட்ட திக்கிலேயே தேடிப் பார்க்கிறான்.

இருவரின் பெற்றோர்களும் காரணம் புரியாமல் விழிக்க, இருவர் மனதுக்குள்ளும், ஒரு பூரணத்துவம் இல்லாமல் வெறிச்சோடுகிறது. திருக்கைலை. ஈசன் இருவரையும் சேர்த்து வைக்கும் நோக்கில் கிளம்ப, உமையோ அதற்கான காலம் இன்னும் வரவில்லையே என வினவுகிறாள். ஈசனோ ஒரு குரங்காட்டியாகப் போய் அநுமனைத் தூக்கிச் சென்று ராமனுடன் விளையாட விடப் போவதாய்க் கூறிவிட்டுக் குரங்காட்டியாக மாறுகிறார். அஞ்சனையின் வீட்டில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அநுமனைத் தூக்கிச் செல்கிறார். குரங்காட்டி ஒருவர் தன் மகனைத் தூக்கிச் செல்வதைக் கண்ட கேசரி, பின்னாலேயே கூவிக் கொண்டு ஓடுகிறான். கணவனுக்கு உதவியாக அம்மையும் குறத்தி வடிவில் அஞ்சனையிடம் வருகிறாள்.

4 comments:

 1. ஜெய் ஹனுமான் ...அருமையா ஹனுமான் பத்தி எழுதறிங்க ...மீதி எப்போ எழுதுவிங்க படிக்க ஆவலோட காத்திடிருப்பேன்...பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. வாங்க சந்தியா. படிச்சதுக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றிம்மா.

  ReplyDelete
 3. இந்த குரங்காட்டி, குறத்தி எல்லாம் புதுசா இருக்கே!!

  ReplyDelete
 4. ஆமாம், இது கொஞ்சம் புதுசுதான். அநுமன் சிவாம்சம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் எழுத ஆரம்பிச்சேன். :)))))))))

  ReplyDelete