எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Wednesday, March 25, 2009

பிள்ளையார், பிள்ளையார்!

"விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லோன்!

புதிதாய் அறிமுகம் ஆகி இருக்கும் கோமாராஜன் அனுப்பிய முதல் பிள்ளையார் இவர். அவங்களே வரைஞ்சிருக்காங்க. எனக்கும் வரையணும்னு ஆசை தான். ஆனால் முடியலை, பல்வேறு காரணங்களால் பல்வேறு ஆசைகளைத் தொடர முடியலை. இப்போ அது பற்றி நினைக்கவும் கூடாது. பதிவுகள் அது பத்தி இல்லை. முதல் முதல் அறிமுகம் ஆன கடவுள் பிள்ளையார் தான். அதுவும் மேலமாசிவீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் இருக்கும் நேரு பிள்ளையார் தான் ஆத்மார்த்த சிநேகிதர். பள்ளிக்குப் போகும், பள்ளியில் இருந்து வரும் வழி அது தானே. எல்லாத்தையும் அவர் கிட்டேயே சொல்லிடுவேன். அப்பாவோட கட்டுப்பாடுகளாலே அதிகமாய் நண்பர்கள் வீடுகளுக்கும் போகமுடியாது. விளையாட முடியாது. ஆகவே புத்தகங்களும், இம்மாதிரி கோவில்கள், பஜனைகள் என்று அம்மாவோடு போவதும் தான் பொழுது போக்கு.

எப்படி இப்படி திடீர்னு ஆன்மீகமாய் மாறிட்டாயா எனப் பலரும் கேட்கின்றனர். என்னைப் பொறுத்த வரையில் அப்படி இல்லை. குடும்பத்தில் எல்லாருக்குமே பக்தி உணர்வு உண்டு. ஆன்மீகமும் தெரியும். பிறந்த இடம், புகுந்த இடம் இரண்டுமே அப்படியே அமைந்துவ்ம் விட்டது. எப்போவும் பூஜை, வழிபாடு என்று இருந்திருக்கின்றேன். இப்போது அவை குறைந்துள்ளது. உடல்நிலைகாரணமாவும், வேறு காரணங்களாலும். ஆகவே இது புதுசு இல்லை. பல்வேறு ஆன்மீகச் சொற்பொழிவுகள், பஜனைகள், கோயில் வழிபாடுகள், வீட்டிலே பூஜை வழிபாடுகள் என உண்டு. பலரும் சொல்லுவதைப் பார்த்தால் கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர்களாக இருந்துட்டு அப்புறமாத் திடீரென மனம் மாறியவர்களாகவே இருக்கின்றனர். இது தான் எனக்குப் புரியவில்லை. இந்த உலகம் ஒரே நியதியோடு நடந்து வருகின்றது. பருவங்கள் மாறுவது தப்பவில்லை, பூக்கள் மலருவதும், காய்கள் காய்ப்பதும், கனிகள் பழுப்பதும் யார் உதவியினால்? என்னதான் நாம் விவசாயத்தில் பாடுபட்டாலும் அதற்கான பலனை பூமித்தாய் அருள் இருந்தால் அன்றோ கொடுப்பாள்?? சூரியனுக்கு யார் ஆணை இட்டனர் தினமும் உதிக்க? சந்திரனுக்கு யார் ஆணை தினமும் தேய்ந்து வளர? அப்புறம் எதை வைத்து கடவுள் இல்லை என முடிவு பண்ணுகின்றார்கள்? தெரியலை, ஆனால் என்னை பொறுத்த வரையில் ஒவ்வொரு நிமிஷமும் கடவுள் இருப்பதை உணர்ந்து கொண்டிருக்கின்றேன்.

இந்த ஞானம், யோகம், பிரம்மம் பற்றியும் எழுதாமல் ஏன் புராணக் கதைகள், இதிஹாசக் கதைகள்னு தெரிஞ்சதைப் பத்தி எழுதறேனும் சிலர் கேட்கிறாங்க. நமக்குத் தெரிஞ்சிருந்தாலும் இது பற்றிய முழு அறிவு சில பெரியவங்களுக்கே இருக்கிறதில்லை. அதோட இளைய தலைமுறைக்குச் சுத்தமா இந்த அறிவு இல்லை. அவங்களுக்கு மறுக்கப் பட்டே வந்திருக்கின்றது. இப்போது இணையம் மூலமாய்ப் பலருக்கும் இது சென்றடையும். மேலும் பிரம்மம் பற்றி அறியவேண்டுமானால் கொஞ்சமாவது இறை உணர்வு, நம்பிக்கை வேணும். முதலில் அதை வளர்த்துக்கணும் இல்லையா? நான் இப்போது தான் பக்தி என்னும் படியிலேயே நிற்கின்றேன். அந்தப் படியைக் கடந்து மேலே செல்லவேண்டும். ஒருவேளை இந்தப் பிறவியில் அது நடக்குமா, நடக்காதா தெரியலை. எத்தனை பிறவி எடுக்கணுமோ தெரியாது. எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மறவாத உள்ளம் வேண்டும் என்பதே என் ஒரே எண்ணம்.

இலக்கியம் எழுத வா எனத் தோழி ஒருத்தி அழைத்தார். இலக்கியம் எழுத எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். மேலும் இலக்கியம் படைப்பதை விட தெரிந்த ஒரு விஷயத்தை எழுதுவதே எனக்கு சுலபமாய் இருக்கின்றது. வாழ்நாளில் எனக்கு நேர்ந்த அவமானங்களையும், எதிர்ப்புகளையும், சோகங்களையும் எழுத நேர்ந்தால் ஒரு இலக்கியமாய் மாறக் கூடும். ஆனால் சுலபமான வழி எல்லாவற்றையும் மறப்பதே. எதை மறக்கவேண்டும் என முயல்கின்றோமோ அதையே நினைக்க ஆரம்பிப்போம் சாதாரணமாய். ஆனால் எனக்கு ஒரு ஆயுர்வேத மருத்துவர் கூறியது: "உனக்கு ஏற்பட்ட அவமானங்களை நீ மறக்கவேண்டும் என்றால் அந்தக் குறிப்பிட்ட அவமானத்தை 21 முறை ஒரு வெள்ளைத் தாளில் எழுதிவிட்டுப் பின்னர் அதை 21 துண்டுகளாய்க் கிழித்துப் போடு." என்று சொன்னார். என் வாழ்க்கையில் நேர்ந்த சில குறிப்பிட்ட சம்பவங்களை அப்படியே எழுதிக் கிழித்தேன். இப்போது அவற்றின் நினைவு வந்தாலும் என்னிடம் அவற்றின் தாக்கம் குறைந்தே இருக்கின்றது. இன்னும் முயன்றால் சுத்தமாய் மறந்தும் விடுவேன்.

தனியாக இந்த வலைப்பூ ஆரம்பித்ததின் நோக்கமே என் தனிப்பட்ட பக்தி உணர்வுகளை எழுதத் தான். இப்போது ஸ்ரீராமநவமியை முன்னிட்டு சில ராமர் பற்றிய தகவல்கள் எழுதணும்.

2 comments:

 1. //அதோட இளைய தலைமுறைக்குச் சுத்தமா இந்த அறிவு இல்லை. அவங்களுக்கு மறுக்கப் பட்டே வந்திருக்கின்றது.//
  எதுவும், எப்போதும், எவருக்கும் மறுக்கப் பட்டதே இல்லை, அம்மா.
  Every Truth awaits its time இப்படி இந்தப் பக்கத்திலிருந்து பார்க்கும் போது தெரியும். அதே விஷயத்தை, அந்தப்பக்கத்தில் இருந்து பார்க்கும் போது, உண்மை, நம்க்கு முன்னாலேயே எப்போதும், உள்ளது உள்ளபடி இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பதாகத் தெரியும் என்று பெரியவர்கள் காட்டியிருக்கிறார்கள்.

  எப்படிப் பார்க்க வேண்டும், எப்போது பார்க்க முடியும் என்பதில் தான் ஒரு ஸ்வாரஸ்யமான விளையாட்டை,நம்மைப் படைத்தவனோடு நடத்திக் கொண்டிருக்கிறோம். கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரித் தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
  ஒரு குழந்தை,தெருவில் விளையாட்டு மும்முரத்தில், தன் தாய், பசி எல்லாவற்றையும் மறந்து இருக்கும்..தாய்க்காரியும், கூப்பிட்டு, கூப்பிட்டுப் பார்த்து, சரி குழந்தை, விளையாடி முடித்து விட்டு வரட்டும் என்று காத்திருக்கிறாள் அல்லவா, அது மாதிரி,
  ஸ்ரீராம, ஜய ராம, ஜய ஜய ராம!

  ReplyDelete
 2. அட, கிருஷ்ணமூர்த்தி சார், நல்வரவு, இப்போத் தான் பார்க்கிறேன், இரண்டு மாதங்கள் கழிச்சு இன்னிக்குத் தான் இந்தப் பக்கம் வந்ததால் பார்த்தேன், நீங்கள் சொல்லி இருப்பதும் சரியே. ஆனால் என்னோட கருத்து, இப்போதைய பள்ளிகளில் கடவுள் வாழ்த்தோ, நீதிபோதனைகளோ மறுக்கப் படுவது தான். அதை இன்னும் விபரமாய் எழுதி இருக்கலாமோ????

  ReplyDelete