
இந்தோனேஷியாவில் ஸ்ரீராமர் மற்றும் சீதையை கலாசார- ஆதர்ஸ தம்பதிகளாய்ப் பார்ப்பதோடு அல்லாமல், ராமாயணத் திருவிழா “உலக ராமாயணத் திருவிழா”வாக சில ஆண்டுகள் முன்பு கொண்டாடியது. ராமாயணம் இந்தோனேஷியாவின் தேசீய இதிஹாசமாய் அறிவிக்கப் பட்டிருக்கின்றது. ஸ்ரீராமன் பிறந்தபோது விண்மீன்களும், கோள்களும் இருந்த நிலை குறித்து ஆய்வாளர்கள் மென்பொருள் மூலம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் ஸ்ரீராமன் சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் சுக்லபட்ச நவமிதிதியில் பிறந்தார் என்னும் வால்மீகியின் குறிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த ஜோதிட அடிப்படையில் ஆராயப் பட்ட இன்னொரு விஷயம் கைகேயி ஜோதிட சாத்திரத்தில் வல்லுநர் எனவும், புனர்பூச நட்சத்திரத்தை சூரியன், செவ்வாய் மற்றும் ராகு ஆகிய கிரஹங்கள் சூழ்ந்திருப்பதால் அரசனுக்கு ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்தே ஸ்ரீராமன் பட்டாபிஷேஹம் நடைபெறுவதைத் தடுத்துத் தன் கணவனே அந்தச் சமயம் ஆட்சியில் இருக்குமாறு செய்தாள் எனவும் சொல்லுவார்கள். பரதனும் பதவி ஏற்க மறுக்கவே அப்போது ஆட்சியில் இருந்த தசரதன் மரணம் அடைந்தான் எனவும் சொல்கின்றனர். நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி ஸ்ரீராமநாமத்தை ஒரு முறை கூறினாலே ஆயிரம் முறை கூறியதற்குச் சமம் என்கின்றனர் ஆன்றோர்கள். துளசிதாசரும், தியாகராஜ ஸ்வாமிகளும் ஒன்பது கோடி முறை ஸ்ரீராம நாமாவைக் கூறி ஜபித்து வந்ததால் ஸ்ரீராமன் நேரிலேயே வந்து அவர்களுக்கு தரிசனம் அளித்திருக்கின்றார். கும்பகோணத்தை அடுத்த கோவிந்த புரத்தில் போதேந்திராள் அதிஷ்டானத்தில் அன்றும், இன்றும், என்றும் ஸ்ரீராமநாமம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அயோத்தியிலும், குஜராத் ஜாம்நகரிலும் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அகண்ட ராமநாம பஜனை கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.
"வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே!
வேத: ப்ராசேதஸாதாஸீத ஸாக்ஷாத் ராமாயணாத்மனா!!"
வேதங்கள் சொல்லுகின்ற பரமபுருஷன் ஸ்ரீராமனே ஆவான் என்பது ஆன்றோர் வாக்கு. அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன என்பது பெரியோர் வாக்கு. மேற்கண்ட ஸ்லோகத்தின் அர்த்தமும் அதுவே. அப்படி என்னதான் அந்த ராமாயணத்தில் சொல்லி இருக்கின்றது? தர்மத்தின் பாதையில் வாழச் சொல்லிக் கொடுக்கின்றது. அந்த தர்மமே மானுட உருவெடுத்து வந்த ஸ்ரீராமன் என்றும் சொல்லுகின்றது.
அதிலும் பகைவன் ஆன வாலி, மாரீசன், ராவணன் போன்றோர் பாராட்டும்படியாக ஸ்ரீராமன் தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுக்க சீலனாக வாழ்ந்து மரியாதைக்கு உரிய புருஷ உத்தமனாய் இருந்து காட்டினான்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்,
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்!
ஸ்ரீராம் ஜயராம், ஜயஜயராம்!