
"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிதமஸ்த காஞ்சநம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ரக்ஷ ஸாந்தகம்!"
மன அமைதியின்றித் தத்தளிக்கும் அஞ்சனையைக் கண்டு குறத்தியான உமை அவளை நோக்கி வருகிறாள்.
அவளைக்கண்டு உன் கணவனும், பிள்ளையும் வீடு திரும்பவில்லை எனக் கவலைப்படுகிறாயா என வினவ, அஞ்சனையும் அதை ஆமோதிக்கிறாள். உமையாள் வாக்கென்று நினைத்துக் கேட்டுக்கொள் என்று உமையாளே அவளுக்குச் சொல்லிவிட்டுக் குறி சொல்ல ஆரம்பிக்கிறாள். அதற்குள்ளாக இங்கே அநுமனைத் தூக்கிச் சென்ற குரங்காட்டியைத் துரத்திச் சென்றான் கேசரி. இவன் உண்மையில் குரங்கல்ல என்றும் தெய்வப் பிறவி என்றும் நீ வித்தை காட்டிப் பிழைக்க வேறு குரங்குகள் வனத்தில் கிடைக்கும் என்றும் அநுமனை விடும்படியும் வேண்டுகிறான். மாபெரும் காரியம் ஒன்றை நிறைவேற்றப் போகிறவருக்குத் துணையாகப் பிறப்பெடுத்திருக்கிறான் இவன் என்றும் தனக்குத் தேவாதி தேவர்கள் கூறியதை அந்தக் குரங்காட்டியான ஈசனிடம் கூறினான் கேசரி. வரம் அளித்தவரிடமே அவர் அளித்த வரத்தைப் பற்றிய விளக்கம். விசித்திரம் தான்.
ஆனால் விஷமக் காரக் குரங்காட்டியோ பல மலைகள் அலைந்து திரிந்து இத்தகையதொரு குரங்குக்காகவே தான் காத்திருந்ததாயும், அதனால் இவனை விடமாட்டேன் என்றும் கூற, தான் அம்மலையின் மன்னன் எனவும், மன்னன் வாக்கை மீறக்கூடாது என்றும் கேசரி ஆணையிடுகிறான்.ஹா, நான் யார் எனத் தெரியாமல் பேசுகிறாயே? மன்னனாய் இருந்தால் என்ன? நீ எனக்குச் சின்னவன் தான்! அதெல்லாம் இவனை விடமுடியாது எனத் திட்டவட்டமாய்த் தெரிவிக்கிறான் குரங்காட்டி. அநுமனோடு ஓடவும் ஆரம்பிக்கிறான், கோபம் கொண்ட கேசரி தன் கதாயுதத்தால் அவன் மார்பில் ஓங்கி அடிக்கிறான். என்ன ஆச்சரியம்? அந்த அடியானது ஒரு அழகான மாலையாக உருமாறி ஈசன் மார்பை அலங்கரிக்கிறது.
தன் சுய உருவில் சடாமகுடதாரியாகக் காட்சி அளித்த ஈசனைக் கண்டு நடுநடுங்கிய கேசரி தன் தவற்றை மன்னிக்கும்படி வேண்டினான். "ஈசனே, உன் அம்சம் அன்றோ இவன்! உன்னுடைய பிம்பமான இவனைத் தூக்கிச் செல்ல நான் எவ்வாறு அநுமதி மறுக்கமுடியும்? தாராளமாய்த் தூக்கிச் செல்வாயாக!" என்று தன் மகனை ஈசன் கைகளில் ஒப்படைத்தான். அப்போது ஈசனிடம் அநுமனைத் தூக்கிச் செல்லும் காரணம் கேட்க, ஈசன் சொல்கிறார்.
"கேசரி, ஒரு மாபெரும் சந்திப்புக்கு இவனை அழைத்துச் செல்கிறேன். இவன் இதயத்திலும் அதற்கான ஏக்கம் கொழுந்து விட்டெரிகிறது. வேறொரு இடத்தில் பிறந்திருக்கும் இளவரசன் ஒருவனுக்கும் இவனைக் காணவேண்டும் என்ற தாபம் அதிகமாய் உள்ளது. இருவரையும் சந்திக்க வைக்கப் போகிறேன். இது இவர்கள் அறியாமலேயே நடக்கப் போகும் முதல் சந்திப்பு. அதன் பின்னர் பல காலம் கழித்தே இவர்களின் சந்திப்பும், அதை ஒட்டிய தர்மத்தின் காவலும் நடைபெறும். ஆகையால் சில நாட்களின் உன் மகனை உன்னிடம் ஒப்படைத்துவிடுவேன். கவலைப்படாதே!" என்று கூறிவிட்டு அநுமனோடு ஈசன் மறைந்தார்.