எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Wednesday, April 13, 2011

ஜெய் ஆஞ்சநேயா, ஆஞ்சநேயப் பிரபாவம், வாலி, சுக்ரீவர்கள்!

வால்மீகியின் ராமாயணத்திலே இந்த வாநரர்கள் பற்றிய வர்ணனையைப்பார்த்தால் அவர்கள் சாதாரணக் குரங்கினம் அல்ல என்பது நன்கு புலனாகும். அப்படி ஒரு வாநரன் ஆன அநுமனின் வீரதீரம் பற்றியே பார்க்கிறோம். அந்த அநுமன் எப்படிக் கிஷ்கிந்தை வந்து சேர்ந்தான் என்பதையும் பார்த்தோம். தன்னுடைய அம்சத்தின் மூலம் பிறந்த தன் மகன் ஆன சுக்ரீவனுக்குத் தக்க துணையாக அநுமன் இருப்பான் என நம்பியே அவனை சுக்ரீவன் இருக்குமிடம் அனுப்புகிறான் சூரியன். இதுவே அநுமன் தனக்குத் தரும் குரு தக்ஷிணை எனவும் கூறுகிறான் அல்லவா? சுக்ரீவனுக்கு அப்படி என்ன கஷ்டம் நேர்ந்தது என்று பார்க்கும் முன்னர் வாலியைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அருணி என்னும் வாநர ஸ்த்ரீக்குப் பிறந்த வாலியும், சுக்ரீவனும் ரிக்ஷரஜஸ் என்னும் வாநர அரசனால் வளர்க்கப் பட்டனர். மூத்தவன் ஆன வாலிக்குப் பட்டம் கட்டினான் ரிக்ஷரஜஸ். சுக்ரீவன் அவனுக்கு இளையவன் ஆதலால் அண்ணனுடன் கூட உதவிகள் செய்து கொண்டு வந்தான். வாநரர்களின் அரண்மனைகள் கூட பிரமிப்பூட்டும்படியாக அமைந்திருந்ததாக வால்மீகி வர்ணிக்கிறார். அழகான வாநரப் பெண்கள் இருந்ததோடு அற்புதமான ஆடை ஆபரணங்கள் பூண்டும் இருந்திருக்கின்றனர். நடத்தை, அறிவு, பழக்க வழக்கம் போன்றவற்றில் மனிதர்களை ஒத்திருந்தாலும் உணர்ச்சி வசப்பட்டு கோபத்திலோ, மகிழ்ச்சியிலோ அறிவை இழப்பவர்களாக இருந்தனர். ஆகவே இவர்களை வெறும் வாநரங்களாக நினக்காமல் மேலே படிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

வாலி மிகுந்த புத்திசாலியாகவும் திறமை உள்ளவனாகவும் இருந்ததோடு வீரனாகவும் இருந்தான். அவனுக்கும் மாயாவி என்னும் ஒரு அரக்கனுக்கும் ஒரு பெண்ணின் காரணமாகச் சண்டை மூண்டது. மாயாவி ஒரு நாள் நள்ளிரவில் கிஷ்கிந்தை வந்து வாலியைச் சண்டைக்கு அழைத்தான். வாலியும் உடனே சண்டைக்குப் போனான். அவன் மனைவிமார்களும், சுக்ரீவனும் எவ்வளவோ முயற்சி எடுத்துத் தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. வாலியை அவர்களால் தடுக்க முடியவில்லை. வாலியின் பலம் அசாத்தியமானது. அனைவரையும் உதறித் தள்ளிவிட்டு விட்டு மாயவியுடன் சண்டைக்குப் போனான் வாலி.

உக்கிரமாகச் சண்டை நடக்கப்போகிறது என்ற கவலையோடு சுக்ரீவன் அண்ணனைத் தொடர்ந்தான். அண்ணனும், தம்பியும் வருவதைக் கண்ட மாயாவியோ ஓட்டமாக ஓடினான். வாலி தொடர்ந்தான். பின்னாலேயே சுக்ரீவனும் தொடர, அந்த அசுரன் பூமிக்குள் இருந்த ஒரு பெரும் பள்ளத்தில் இறங்க, வாலியும் இறங்க யத்தனித்தான். சுக்ரீவன் தடுக்க, வாலி விடாப்பிடியாக, " நான் உள்ளே இறங்கிச் சென்று அவனைக் கொன்றுவிட்டுத் திரும்பி வருகிறேன். நீ இங்கே காவலுக்கு இருப்பாயாக." என்று கூறி சுக்ரீவனைக் காவலுக்கு வைத்துவிட்டுப் பள்ளத்தில் இறங்கி மறைந்து போனான். வாலி உள்ளே நுழைந்ததுமே மறைந்திருந்ஹ மாயாவி பள்ளத்தையும் மூடிவிடவே, சுக்ரீவனுக்குக் கலக்கம் ஆரம்பமாயிற்று. அப்படியும் ஒரு வருஷத்துக்கும் மேல் அங்கேயே சுக்ரீவன் காத்திருந்தான். வாலி என்ன ஆனான் என்றே தெரியவில்லை. அப்போது அந்தப் பள்ளத்திலிருந்து ஓர் அசுர கர்ஜனை கேட்க, ரத்தமும் பிரவாகமாகப் பொங்கிக்கொண்டு வெளிவரலாயிற்று.

2 comments:

  1. அஞ்சனை மைந்தன் குறித்து
    அரிய செய்திகளைத் தொடர்ந்து தந்துவரும்
    அருமையான ஆக்கங்கள் கண்டு மகிழ்ந்தோம்..

    அவனருளால் அவன்தாள் தொடர்வோம்..

    அன்பன் சிவ.சி.மா.ஜா.
    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  2. வணக்கம்,

    ஒரு வேண்டுகோள்..

    நமது ஆக்கங்களைக் கண்டு மகிழ்வோடு
    பின் ஊட்டமிட வரும் அன்பர்களுக்கு
    தொந்தரவாக இருக்கக் கூடிய
    WORD VERIFICATION OPTION ஐ நீக்கினால்
    வருகை தந்து பின் ஊட்டமிடும் அன்பர்களுக்கு உதவியாக இருக்கும்..

    நன்றி...

    அன்பன் சிவ.சி.மா.ஜா.
    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete