எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Sunday, September 5, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!


இங்கே குறத்தி வடிவில் அன்னையவள் அஞ்சனைக்கும், கேசரிக்கும் நல்வாக்குக் கூறி மனதைச் சமாதானம் செய்து வைத்தாள். அங்கே அயோத்தியில் ஈசனோ ஒரு குரங்காட்டியாகி, தான் அனைவரையும் ஆட்டி வைப்பவன் என்பதையும் மறந்தவர் போல் ஆஞ்சநேயனைக் காட்டி மக்களைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டிருந்தார். அரண்மனைச் சிறுவர்களோடு ஸ்ரீராமனும் அங்கே வர அனுமனுக்கும், ராமனுக்கும் முதல் சந்திப்பு நடக்கிறது. ஈசன் பாட ஆஞ்சநேயன் ஆட மறுக்க, ஈசன் ஸ்ரீராமன் பெயரைச் சொல்ல அதனால் மகிழ்ந்த அநுமன் ஒரு குரங்கைப் போலவே ஆடிப் பாடிக் கரணங்கள் போட்டு அனைவரையும் மகிழ்விக்கிறான்.

ராமன் பெயர் கேட்டுக் குரங்கு ஆடுவதைக் கேட்ட அயோத்தி மன்னனும் அங்கே வந்து பார்க்க ஈசனோ, "ராமா" என்ற மந்திரச் சொல்லுக்கு மட்டுமே அநுமன் கட்டுப்படுவான் என்று சொல்கிறார். மன்னனுக்கு ஆச்சரியம், அதோடு இது ஏதோ பூர்வ ஜன்மத்துப் பந்தம் என்றும் தோன்றுகிறது. அனுமனை ஸ்ரீராமனோடு விளையாட அங்கேயே விட்டுப் போகும்படிச் சொல்கிறான் மன்னன். பொருள் எவ்வளவு வேண்டுமானாலும் தருவதாயும் அனுமனை மட்டும் ராமனுக்குத் தோழனாக விட்டுச் செல்லும்படியும் கேட்கிறான். ஆனால் குரங்காட்டி மறுக்கிறான்.

"பொருளை வைத்துக்கொண்டு என்ன செய்வது?? மணி மகுடம் தரித்த மன்னனானாலும் ஒருநாள் மயானம் சென்றே ஆகவேண்டும் அன்றோ? உண்மை அப்படி இருக்கப்பொருள் எதற்கு எனக்கு?" என்று கேட்கிறான் குரங்காட்டியாக வந்த ஈசன். அரண்மனைச் சேவகர்கள் குரங்காட்டியின் இந்தப் பேச்சால் அவனைக் கண்டிக்க, அவர்களைத் தடுத்த மன்னன் மீண்டும் வானரச் சிறுவன் ஆன அநுமனைத் தங்கள் அரண்மனையிலேயே விட்டுச் செல்லும்படிக் கேட்கிறான். ஸ்ரீராமனுக்கும் அது பிடித்திருக்க அவனும் அனுமனைக் குரங்காட்டியிடம் யாசிக்கிறான். அனுமனும் அங்கே ஸ்ரீராமனோடு தங்க விருப்பம் தெரிவிக்கிறான். தன் மனம் இத்தனை நாட்கள் தவித்த தவிப்பு எல்லாம் இதற்குத் தான் என்று புரிவதாயும் கூறினான்.

குரங்காட்டியும் இதற்கு ஒத்துக்கொள்ள, அப்போது அங்கே குறத்தி வடிவில் வந்த அன்னை, அநுமனை அங்கே விட்டுவிட்டுக் குரங்காட்டியை மட்டும் அழைத்துச் செல்கிறாள். சற்று தூரம் சென்றதும் இருவரும் மறைகின்றனர். இங்கே அரண்மனையில் கைகேயியின் அந்தப்புரத்தில் ஸ்ரீராமன் உணவு உண்ண, ராமனோ அனுமனுக்கும் உணவளிக்கச் சொல்கிறான். அப்போது அங்கே வந்த கூனி கைகேயியைக் கண்டிக்கிறாள். ராமன் கூனி சொல்வதை விரும்பவில்லை. இதைக் கண்ட அனுமன் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன. இப்படி அனுமனைக் கண்டாலேயே இல்லாததும், பொல்லாததுமாய்ச் சொன்னாளாம் கூனி.

அனுமன் மேல் அடாப்பழி போட அதை நம்பாத கைகேயி பணிப்பெண்களை விசாரிக்கிறாள். பணிப்பெண்களோ மறுக்கின்றனர். அனுமன் கண்ணியமாகவே இருப்பதாய்ச் சொல்ல மந்தரையான கூனிக்கு மீண்டும் அவமானம் நேரிடுகிறது. அங்கே வைகுந்தத்திலும், கைலையிலும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் விஷ்ணுவும், சிவனும். விஷ்ணுவுக்கு இதில் விருப்பமில்லை. இவை தேவை இல்லை என்றும் ராமனுக்குச் சேவை செய்கிறான் அனுமன் என்பதைக் காட்ட இப்படி எல்லாம் சொல்லவேண்டுமா என்றும் கேட்கிறார். என்ன இருந்தாலும் அனுமன் உங்கள் அம்சம் அன்றோ? அதற்கேற்ற மரியாதையுடன் நடத்தவேண்டும் என்றும் சொல்கிறார். ஈசனும் அதற்கு உடன்பட்டு பின்னால் ஒரு சமயம் இந்த ராமாவதாரத்தில் அவர் ஈசனைப் பூசித்து வழிபாடுகள் நடத்தும் தருணமும் வரும் என்றும் சொல்கிறார்.

வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமனும், சகோதரர்களும் குருகுல வாசத்தில் பாடங்கள் கற்க, அனுமனோ தன் வலிமையால் விண்ணில் பறந்து சென்று சூரியனைத் தனக்குப் பாடங்கள் கற்பிக்கும்படி கேட்கிறான். தான் சஞ்சாரம் செய்வதை நிறுத்த முடியாது என்றும் அனுமன் மட்டும் ஓரிடத்தில் நிலையாக நின்று கேட்கும்படி சூரியன் சொல்ல, அவ்வண்ணமே அனுமன் விஸ்வரூபம் எடுத்து உதயகிரியில் ஒரு காலும் அஸ்தமனகிரியில் மற்றொரு காலையும் வைத்துக்கொண்டு நிற்க, சூரியனும் வேத மந்திரங்களிலிருந்து அனைத்தையும் அனுமனுக்குக் கற்பிக்கிறான். தேவாதி தேவர்களும் வந்து பார்த்து அதிசயிக்கும் வண்ணம் இந்தப் பாடங்கள் நடக்கின்றன.

இந்தக் காட்சி லங்காபுரிக்கும் செல்ல, அங்கே ராவணன் இதைக் கேட்டு ஆச்சரியப் படுகிறான். அடுத்து.........

4 comments:

  1. கீதா ஜி ரொம்ப அருமையா எழுதறிங்க ..

    அடுத்து ன்னு சொல்லி நிர்த்திடிங்க..சீக்ரமா எழுதினா நல்லா இருக்கும் ...நன்றி

    ReplyDelete
  2. தொடர்ந்து படித்து உற்சாகமூட்டுவதற்கு நன்றி சந்தியா, வேறு சில தளங்களுக்கும் எழுதிக் கொடுக்க வேண்டி இருப்பதால் கொஞ்சம் தாமதம் (நிறையவே) ஆகிறது. கூடிய வரையிலும் வாரம் இரண்டாவது போடணும்னு பார்க்கிறேன். நன்றிங்க.

    ReplyDelete
  3. ரொம்ப ஸ்வாரஸ்யமா தெரியாத கதை . எங்கேந்து இந்த கதையெல்லாம்??

    ReplyDelete
  4. வாங்க ஜெயஸ்ரீ, கொஞ்சம் படிச்சது, கொஞ்சம் தொலைக்காட்சியில் பார்த்ததுனு. வட இந்தியாவிலே இது கொஞ்சம் அதிகமாச் சொல்வாங்க. இன்னும் காகபுஜண்டர் என்னும் சித்தர் இமயமலை அடிவாரத்தில் பிரம்மாண்ட காக உருவில் இதைச் சொன்னதாக் கூட ஒரு புத்தகத்தில் படிச்சேன். நினைவில் இல்லை, எந்தப் புத்தகம்னு! ஹிந்திப் புத்தகம்.

    ReplyDelete