

குரு தக்ஷிணையாக எதைத் தருவது என்று சூரியனிடமே கேட்டான் அநுமன். சூரியனோ இப்படி ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடும் குரு பக்தியும் நிறைந்த சீடனுக்குக் கற்றுக்கொடுத்ததே தனக்குக் கிடைத்த மாபெரும் தக்ஷிணை என மறுத்தான். ஆனால் அநுமன் சமாதானம் அடையவில்லை. வெகு நேரம் யோசித்த சூரியன் தன்னுடைய மானஸ புத்திரன் ஆன சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தை சென்று உதவிகள் செய்யுமாறும், ஆலோசனைகள் கூறுமாறும் அநுமனிடம் கேட்க அநுமனும் அதற்கு ஒத்துக்கொண்டு கிஷ்கிந்தை நோக்கிப் பிரயாணமாகிறான். இவ்வளவு படித்தும்,, இத்தனை வித்தைகள் கற்றுக்கொண்டும் அநுமனுக்கு அவை எதுவும் நினைவில் இல்லாதவாறு தன் பலம் தனக்கே தெரியாதவாறு ஒரு சாபம் இருந்து கொண்டிருந்தது. சின்ன வயதுக் குறும்போடு அநுமன் காட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை தவத்தைத் கலைத்து விளையாட, கோபம் கொண்ட ரிஷிகள் அனைவரும் சேர்ந்து அநுமனின் இந்தச் செயலைத் தடுக்க நினைத்தனர். அவன் அதீத பலம் அவர்களுக்குத் தயக்கத்தை அளித்தது. அப்போது முக்காலமும் உணர்ந்த ஞாநியான அகத்தியர் தாம் இதற்கு ஒரு முடிவு கட்டுவதாய்க் கூறினார். ஒரு நாள் தங்கள் வழிபாட்டுக்கு வேண்டிய மலர்கள், கனிகளைப் பறித்து வரும்படி அநுமனிடம் கூற அவனோ மலர்ச்செடிகளையும், கொடிகளையும், பழமரங்களையும் வேரோடு கொண்டுவந்துவிட்டான். இது தான் சமயம் என்று நினைத்த அகத்தியர்அநுமனுக்கு அவன் கற்ற வித்தைகள் மறந்து போகக்கடவது என்று சாபம் கொடுத்தார். என்றாலும் அநுமன் அவதரித்த முக்கிய காரியம் பூர்த்தி அடையவேண்டும் என்பதையும் மனதில் எண்ணி ராமகாரியத்திற்காக அநுமன் பிறப்பெடுத்ததைக் கூறி சாபத்தைத் திரும்ப வாங்கச் சொல்ல, இட்ட சாபம் திரும்ப வாங்க இயலாது என்பதால் சாபத்தை அநுமன் அநுபவித்தே ஆகவேண்டும் எனவும், சரியான நேரம் வருகையில் ஒரு மூத்த வயோதிகரால் அவர் பலம் அவருக்கு எடுத்துச் சொல்லப் படும் எனவும் விமோசனமும் கொடுத்தார். அவ்வளவிலேயே அநுமன் கிஷ்கிந்தை நோக்கி வருகிறான்.
இங்கே கிஷ்கிந்தையிலே வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இடையிலே கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள். வாலியின் பலம் மிக அளவிடமுடியாமல் இருந்தது. அந்த பலத்தை வைத்து அவன் அனைவரையும் வென்றான். கிஷ்கிந்தையை ஆண்டு வந்தான். அவன் மனைவி தாரை இருக்கையிலேயே தம்பி மனைவியான ருமையையும் பலவந்தம் செய்தான். தடுத்துக் கேட்ட சுக்ரீவனை மதிக்கவில்லை. அவனைக் கண்டு லங்காபுரி அரசன் ஆன ராவணனும் பயந்தான். அவனோடு சமரசம் செய்து கொண்டு சமாதானமாகப் போகவே நினைத்து அப்படியே வாலியைத் தனது நண்பனாகவும் ஆக்கிக்கொண்டான். அப்படிப் பட்ட வாலியின் கதை அடுத்துப் பார்க்கலாம்.