எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Tuesday, December 20, 2011

சேஷாத்ரி ஸ்வாமிகள் இறுதிப் பகுதி!

வேறொரு சமயம் வள்ளிமலை சுவாமிகளிடம் வயதானவர் உருவில் வந்து பசிக்கு உணவு கேட்டார சேஷாத்ரி சுவாமிகள். உணவும் அளித்தார் சுவாமிகள். பசியால் வாடிய வயதானவர் ஒரே மூச்சில் மூன்றுபடிக் கஞ்சியையும் குடித்துவிட்டார். அன்றுமுதல் தினமும் பெரியவருக்காக உணவு காத்திருக்கும். ஆனால் அந்த உணவை ஒரு கீரிப்பிள்ளை வந்து சாப்பிட்டுவிட்டுப் போய்விடும். சில நாட்களில் கீரிப்பிள்ளையும், பெரியவர் உருவில் வந்தவரும் சேஷாத்ரி சுவாமிகள் எனப் புரிந்துகொண்டார் வள்ளிமலை சுவாமிகள். திருவண்ணாமலையில் இருந்தபோது மயானத்திலேயே பொழுதைக்கழிக்கும் வழக்கம் உள்ள சேஷாத்ரி சுவாமிகளுக்கு அங்கிருந்த வெட்டியான் பழக்கம் ஆனான். அவன் சுவாமிகளிடம் மிகவும் மரியாதை காட்டுவான். சுவாமிகளும் அவனிடம் அன்போடு இருப்பார். தனக்குக்கொடுக்கும் புதுத்துணிகளை வெட்டியானுக்குக் கொடுத்துவிட்டு அவனுடைய கந்தல் துணிகளைத் தான் அணிந்து செல்வார். சுவாமிகள் மகாசமாதியடைந்த போது பிரிவு தாங்காமல் துயரமடைந்த வெட்டியான் மிகவும் வருத்தமாய் இருந்தான்.

அவன் கனவில் ஒருநாள் சுவாமிகள் தோன்றி வள்ளிமலைக்குச் செல்லுமாறும் அங்கே தான் தரிசனம் தருவதாகவும் கூறினார். வெட்டியானும் வள்ளிமலை கிளம்பிச் சென்று வள்ளிமலை சுவாமிகளிடம் தான் வந்த காரியத்தைச் சொன்னான். சேஷாத்ரி சுவாமிகளுக்காகக் காத்திருந்தான். மாலையில் பாறையின் மீது பெரியவருக்கு உணவு வைப்பதைப் பார்த்தான். அப்போது அங்கே வந்த ஒரு கீரிப் பிள்ளை அந்த அன்னத்தை ருசித்துச் சாப்பிட்டது. அடுத்த கணம் வெட்டியான் கண்களில் கீரிப்பிள்ளை மறைந்து சேஷாத்ரி சுவாமிகள் காட்சி அளித்தார். வெட்டியான் பக்திப் பரவசத்தில் உடல் நடுங்க அவரை வழிபட்டுத் தனக்காக அவர் தரிசனம் கொடுத்ததை நினைத்து நினைத்து பூரித்துப் போனான். சேஷாத்ரி சுவாமிகள் திருவண்ணாமலை வந்துகிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிவிட்டன. சுவாமிகளுக்குத் தான் வந்த வேலை முடிந்துவிட்டது எனத் தோன்றியது போலும். 1928-ஆம் வருடம் கார்த்திகை மாதம் ஒருநாள் தன் பக்தையான சுப்பலக்ஷ்மியிடம் “இந்த வீட்டை விட்டுவிட்டுப் புதியதோர் வீட்டிற்குப் போக நினைக்கிறேன்,” என்று கூறினாராம். அந்த அம்மா முதலில்மிகவும் குழம்பிப் போய்விட்டார். சுவாமிகள் ஏதோ விளையாட்டாய்ப் பேசுவதாய் நினைத்துள்ளார். ஆனால் திரும்பத் திரும்ப சுவாமிகள் இந்தக் கேள்வியையே கேட்கவும், “ஆம், புதியதோர் வீடுகட்டி அங்கே யோகப் பயிற்சிகள் செய்யலாம்.” என்றாராம். சுப்புலக்ஷ்மி அம்மாவின் வார்த்தைகளைப் பராசக்தியின் கட்டளையாக ஏற்றார் சுவாமிகள். “சரி. சரி, அப்படியே செய்வோம்.” என்றார். சில நாட்களில் அவரின் சில பக்தர்களுக்கு சேஷாத்ரி சுவாமிகளை ஃபோட்டோப் படம் பிடித்து வைக்கவேண்டும் எனத் தோன்றியது. ஆகவே துணி மாற்றாமல், குளிக்காமல் அழுக்கோடு இருந்த சுவாமிகளை எப்பாடு பட்டாவது குளிக்க வைத்துப் புதுத்துணி உடுத்த வைக்கவேண்டும் என அவருடைய சில சீடர்கள் நினைத்தனர். தலையில் எண்ணெய் வைத்துத் தேய்த்துக் குளிப்பாட்டினார்கள்.

சுவாமிகள் வேண்டாம் என மறுத்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. எண்ணெய் தேய்த்துக்குளிப்பாட்டி, புதுத் துணி அணிவித்து, மாலைகள் போட்டுப் படமும் பிடித்தார்கள். ஆனால் சேஷாத்ரி சுவாமிகளுக்கு அதன் பின்னர் உடல்நலம் மொத்தமாய்க் கெட்டுப் போய் நல்ல காய்ச்சல் வந்துவிட்டது. கிட்டத்தட்ட 40 நாட்கள் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்தது. 41-ஆம் நாள் அருணாசலேஸ்வரரைத் தரிசிக்கச் சென்றார் சுவாமிகள். அதுவே அவருடைய கடைசி தரிசனமாகும். திரும்பும்போது தேங்கி இருந்த நீரில் அப்படியே உட்கார்ந்து கொண்டு வீட்டுக்குள் வர மறுத்தார். மெல்ல மெல்ல உடல்நிலை மேலும் மோசமாகி 1929-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 4-ஆம் தேதி சேஷாத்ரி சுவாமிகளின் உடலில் இருந்து உயிர்ப்பறவை பறந்து சென்றது. திருவண்ணாமலையே சோகத்தில் ஆழ்ந்தது. மக்கள் கூட்டம் தாங்கமுடியாமல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. திருவண்ணாமலைக் கடைகளில் இருந்த கற்பூரம் அனைத்தும் வாங்கப்பட்டு எரிக்கப்பட்டுக் காணக்கிடைத்த ஜோதியில் இரவே பகலாய் மாறிவிட்டது. வெளியூர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் கடைசி தரிசனத்திற்கு வந்து குவிந்தார்கள்.

அனைவரும் ஸ்லோகங்களைப் பாடிக்கொண்டும், பஜனைப்பாடல்களைப் பாடிக்கொண்டும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அக்னி தீர்த்தக்கரையில் ஶ்ரீரமண பகவானும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். சிறிது தூரத்தில் ஒரு சமாதிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதிக்கோயிலும் கட்டப்பட்டு, திருவண்ணாமலை, செங்கம் ரோடில் தற்போது சேஷாத்ரி சுவாமிகளின் ஆசிரமமாக நிலவி வருகிறது. அருணாசல மலையை அவர் எவ்வளவு ஆழமாக நேசித்தார் என்பதும், அதன் தத்துவத்தைப் புரிந்து கொண்டார் என்பதும் கீழ்க்கண்ட வரிகளின் மூலம் தெரிய வருகிறது.

“ஏ, ஜீவன்களே, இந்த மலையின் காந்த சக்தியைப் புரிந்துகொள்ளுங்கள். இது இவ்வுலகின் அனைத்து ஜீவராசிகளையும் கவர்ந்து இழுக்கிறது. இதை நினைக்கும் அந்தக் கணத்திலேயே நம்முடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, காம, க்ரோத, மத, மாச்சரியங்களை வெல்லும் வல்லமை ஒருவனுக்கு வருகிறது. இந்த மலையை நோக்கி அவன் இழுக்கப்படுகிறான். இது மனிதனைத் தன் பக்கம் இழுப்பது மட்டுமில்லை; அவனை நிர்குணம் படைத்தவனாகவும் ஆக்குகிறது. இதனுடைய சக்தி அளப்பரியது. இது யுகம் யுகமாக இங்கே நின்று கொண்டு பலருடைய ஒப்பற்ற தியாகங்களையும் பார்த்துக்கொண்டு ஒரு மெளன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. ஏ, மானுடர்களே, இதன் உண்மையான தத்துவத்தைப் புரிந்து கொண்டு இதனோடு ஐக்கியமாகி விடுதலை பெறுங்கள்.

7 comments:

  1. சீக்கிரமே முடிஞ்சு போச்சே.

    மகான்கள் வாழ்கின்ற காலத்தில் ஏன் அறியாமை வந்து கண்ணை கட்டுகிறது. மறைந்த பின் அவர்களைப் பற்றி படித்து மகான் என்று ஒப்புக் கொள்ளும் மனம் அவர்கள் உயிரோடு இருக்கையிலே, கண் முன் நடமாடும் போது ஏன் தயங்குகிறது ? இன்னும் எத்தனை பெரியவர்கள் நம் மத்தியில் நடமாடுகின்றனரோ !! அவர்களை அறிந்து கொள்ளாமலேயே இந்த பிறவியும் கழிந்து போகுமா :(

    சேஷாத்ரி சுவாமிகள் வரலாறுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  2. வாங்க, கபீரன்பன், கேட்டது எதுக்கும் பதிலே சொல்லலை! தாயகம் திரும்பியாச்சா??

    வரவுக்கு நன்றி. லீலைகளை இன்னும் எழுதி இருக்கலாமோ?? கொஞ்சம் அவசரம்! கொஞ்சம் வேலை; குறிப்புக்கள் சரியாக் கிடைக்கலை! எல்லாம் சேர்ந்து! :)))))))

    ReplyDelete
  3. //கேட்டது எதுக்கும் பதிலே சொல்லலை! தாயகம் திரும்பியாச்சா??//

    மன்னிக்கணும். தாயகத்திலேயே இருந்தாலும் ஊரை விட்டு தள்ளி இருக்கேன். டாடா ஃபோடான் வாங்கினதாலே அப்பப்ப வலைப்பக்கம் எட்டிப்பார்க்கிறேன்.படிக்க வேண்டிய புத்தகமெல்லாம் ஊரிலே இருக்கு. அப்படியே இருந்தாலும் படிக்க எழுத நேரம் மிகக்குறைவு. எல்லாம் அவனிச்சைப்படி நடக்கிறது என்று சும்மா இருக்கிறேன். :))

    ReplyDelete
  4. இன்னமும் மும்பை தானா?? :( உங்க பதிவுகளைக் காணோமேனு தான் கேட்டேன். சீக்கிரம் இணையத்துக்கு வரப் பிரார்த்திக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  5. கற்கை நன்றே -ல் அப்பப்போ ஒண்ணு ரெண்டு பதிவுகள் போடறேனே. அதையும் உங்க லிஸ்ட் டில் சேர்த்துக்கோங்கோ :-)

    ReplyDelete
  6. excellent life history of seshadri swamigal... As kabiranban said, there are so many mahan's in our day to day life, purely MAYA which doesnt make individual to realize...

    By the way, is there any information about conversation or dialogue or talks between ramana maharishi & seshadri swamigal...? They should be very informative...
    Your writing was very nice....

    ReplyDelete
  7. நன்றி ஆணி பிடுங்கணும், உங்க தனி மடலும் கிடைத்தது. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி நான் படித்து அறிந்ததே தவிர அதிகம் தெரியாது;நேரிலும் பார்த்தது இல்லை. சேஷாத்ரி ஸ்வாமிகளும், ரமணரும் பேசியவை குறித்து நானும் தேடுகிறேன். கிடைத்தால் ரமணர் சரித்திரம் எழுதுகையில் பகிர்ந்து கொள்ள எண்ணம். இறை அருள் கூட்டவேண்டும். படித்ததுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete