எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Sunday, December 4, 2011

சேஷாத்ரி ஸ்வாமிகள் - 3

அங்கிருந்த சேஷாத்ரியும், மரகதமும் பயந்து போனார்கள். மரகதத்தின் மனதில் கவலை புகுந்தது. கணவரிடம் காரணம் கேட்க அவர் ஆனந்தக் கண்ணீர் எனச் சமாளித்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். சேஷாத்ரியும் மேலே எதுவும் பேசாமல் பாடசாலைக்குச் சென்று விட்டார். மகன் சென்ற பின்னர் வரதராஜ ஜோசியர் மனைவியை அருகில் அழைத்து, “மரகதம், நான் சொல்வதைக் கேட்டு உன் மனதைத் திடமாக வைத்துக்கொள். காமாட்சி என்னை அழைக்கிறாள். நாளை சூரியோதயத்திற்கு முன்னர் நான் கிளம்பிவிடுவேன். நம் மகன் சேஷாத்ரி காமாட்சி அருளால் பிறந்தவன் பெரும்புகழோடு வாழப் போகிறான். ஆனால் அதைக் காண நான் இருக்கப் போவதில்லை. நீ இன்னும் சிறிது காலம் இருந்து சேஷாத்ரியின் புகழைக் கண்களால் கண்டு காதுகளால் கேட்டு இன்புற்றுப் பின்னர் வந்து சேர்வாய்.” என்றார். இதைக் கேட்ட மரகதம் மூர்ச்சை அடந்து விழுந்தாள். வரதராஜ ஜோசியர் ஞானம் அதிகம் உள்ளவராகையால் அவருக்கு இதைச் சொல்கையில் எந்தவிதமான வருத்தமும் தெரியவில்லை. ஆனால் மரகதமோ துடிதுடித்துப் போனாள்.

வரதராஜ ஜோசியர் அன்று முழுதும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும், காமாட்சி கோயிலிலும் தியானம் செய்து கொண்டே அமர்ந்திருந்தார். இரவு வெகுநேரம் கழித்தே வீடு வந்தார். உணவே உட்கொள்ளாமல் படுக்கச் சென்றார். இரவு திடீரென அவர் உடல்நலம் குன்றியது. நாடி தளர்ந்து போக விடியற்காலை நேரம், தன் அருமை மகன் சேஷாத்ரியைப் பார்த்து அருகே அழைத்து இறுகத் தழுவிக்கொண்டார். மகனிடம் எத்தனை சாஸ்திரங்கள் கற்றாலும் அனுபவம் ஒன்றே பெரியது என்று வற்புறுத்திக் கூறிவிட்டுத் தன்கண்களை மூடினார். அதன் பின்னர் வரதராஜ ஜோசியர் கண்களைத் திறந்தே பார்க்கவில்லை. மரகதம் மனம் வருந்தி நொந்து போய் அழுது கொண்டே இருந்தாள். நினைவிலும்,கனவிலும் கணவர் நினைவே அவரோடு குடித்தனம் நடத்திய நிகழ்வுகளே முன் வந்து நின்றது. மனவேதனை அதிகமாக அதிகமாக இனி தான் அதிகநாட்கள் உயிரோடு இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு தன் உணவைக் குறைத்துக்கொண்டு சந்நியாசினி போல் எந்நேரமும் தியானமும், ஜபமும் செய்ய ஆரம்பித்தாள். சேஷாத்ரியும், அவர் தம்பியும் தாயின் வேதனையைக் குறைக்க முயல்வார்கள். காமகோடி சாஸ்திரிகள் தாம் அருமையாக வளர்த்த பெண் படும் கஷ்டங்களைக்கண்டு மனம் வருந்தி இடம் மாறினால் சரியாகும் என என்ணிக் காஞ்சீபுரத்திலிருந்தவர்களை வழூர் என்னும் ஊருக்கு அழைத்துச் சென்றார்.

சேஷாத்ரிக்குப் பதினான்கு வயது ஆகிவிட்டபடியால் அவனுக்கு பிரும்ம சூத்திரங்கள், பகவத்கீதை, உபநிடதம் ஆகியவற்றைப் போதித்தார் பாட்டனார் காமகோடி சாஸ்திரிகள். தன் வம்சத்திற்கே உரிய மந்திர உபதேசங்களும் செய்து வைத்தார். தனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். பதினைந்து வயதில் திருவாங்கூர் திவானாக இருந்த சர் சி.பி.ராமசாமி ஐயரின் தாய்வழிப்பாட்டனார் ஆன வெங்கடசுப்பையர் வீட்டில் ஶ்ரீமத் பாகவதமும், ராமாயணமும் பிரவச்னம் செய்தார் சேஷாத்ரி. சிறுவன் இவ்வளவு அழகாய் ஸ்லோகங்களைக் கூறிப் பொருளும் கூறுவதைக் கண்ட அனைவரும் வியந்தனர். இதன் நடுவில் காமகோடி சாஸ்திரிகள் தாம் வயதாகிவிட்டதால் சந்நியாசம் வாங்கிக்கொள்ள நினைத்து சந்நியாசம் வாங்கிக்கொண்டு காஞ்சியிலேயே வரதராஜர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நிதியிலேயே தங்கினார். மரகதம் தினமும் அங்கே பிள்ளைகளுடன் சென்று பிக்ஷை அளித்து வந்தாள். பின்னர் அவரின் சகோதரர் வந்து அவரை அழைத்துச் சென்றுவிட சேஷாத்ரி தம் தாய், தம்பியோடு மீண்டும் காஞ்சிபுரத்தில் சித்தப்பா ராமசுவாமி ஜோசியரின் பாதுகாப்பில் இருந்து வரலாயினார். அப்போது காஞ்சிக்கு மேற்கே இருக்கும் தாமல் என்னும் ஊரில் அவரின் அத்தை வெங்கடலக்ஷ்மி என்பவர் வசித்து வந்தார்.

வெங்கடலக்ஷ்மிக்கு காகினி என்னும் பெயருள்ள பெண் ஒருத்தி கல்யாணத்துக்குத் தயாராக இருந்தாள். அவளை சேஷாத்ரிக்கு மணமுடிக்கவேண்டுமென அத்தையார் எண்ணம். சேஷாத்ரி புத்தி கூர்மையோடு அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்ததோடு, தன் அன்னையிடம் கற்ற சங்கீதப் பயிற்சி மூலம் தன் தாத்தாவான காமகோடி சாஸ்திரிகள் இயற்றிய தேவி கீர்த்தனங்களை நன்கு பாடவும் செய்வார். ஆகவே அவரின் தேஜஸும், அழகும் மனதையும், கவர அத்தையார் தன் சகோதரரிடம் வந்து சேஷாத்ரிக்கும், காகினிக்கும் திருமணம் முடிப்பது குறித்துப் பேச்சைத் தொடங்கினாள். ஆனால் ராமசுவாமி ஐயரோ திட்டவட்டமாக அதை மறுத்தார். வெங்கடலக்ஷ்மிக்கு துக்கம் ஒருபுறம்,கவலை மறுபுறம். அண்ணனிடம் வற்புறுத்திக் கேட்க, ராமசுவாமி ஜோசியர், சேஷாத்ரியின் ஜாதகத்தை அவர் ஆழமாக அலசிப் பார்த்ததாயும், அது சந்நியாச யோக ஜாதகம் எனவும் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதில்லை; குடும்ப வாழ்க்கையே கிட்டையாது என்றும் கூறினார். அண்ணனும், தங்கையும் பேசிக்கொண்டிருந்தது அங்கே ஓரமாக முற்றத்தில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்த மரகதத்தின் காதுகளிலும் விழுந்து அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படியே மயங்கிக் கீழே விழுந்தாள். சேஷாத்ரி பலவிதங்களிலும் தாயைத் தேற்றினார். சகல சாத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவருக்குத் தன் எதிர்காலம் குறித்தும் ஓரளவு தெரியும். அவர் மனமும் அதிலேயே நாட்டத்தைச் செலுத்தி வந்தது. என்றாலும் தாய்க்கு அத்தனை வெளிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டாம் என்றே நினைத்தார்.

மரகதத்துக்கு அன்றிலிருந்து தேக ஆரோக்கியம் குன்றிப் போக ஆரம்பித்தது. தன் அருமை மூத்தமகனை, காமாட்சியின் அனுகிரஹத்தால் பிறந்தவனை சந்நியாசிக் கோலத்தில் எப்படிக் காண்பது எனத் துடித்துப்போனாள். நினைத்து நினைத்து உருகிய மரகதம் படுத்த படுக்கையாகவே ஆனாள். மருந்து உட்கொள்ளவும் திடமாக மறுத்துவிட்டாள். சேஷாத்ரியும் தாயின் அன்பையும் அவளின் தற்போதைய நிலையையும் எண்ணி எண்ணி மனம் வருந்தினார். ஒரு ஏகாதசி தினத்தன்று ஷேசாத்ரியைத் தன்னருகே அழைத்த மரகதம் “அம்ப சிவே” என்னும் தன் பெரியப்பாவும், தன்னை வளர்த்தவருமான காமகோடி சாஸ்திரிகளின் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டாள். இயன்றவரை தானும் பாடினாள். பின்னர் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தில் இருந்து
“ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நிஸ்சலதத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி” என்ற ஸ்லோகத்தை சேஷாத்ரியின் மார்பில் அடித்து மும்முறை கூறினாள். இப்படியாக அன்னை மூலமே சேஷாத்ரி பிரம்ம ஞான தத்துவத்தை உபதேசம் பெற்றார். இதன் பின்னர் அருணாசல, அருணாசல, அருணாசல என்று மும்முறை வாய்விட்டுக் கூறினாள். அருணாசல மகிமையைக்கூறும் ஸ்லோகத்தையும் தன் மைந்தன் நெஞ்சில் கை வைத்துக் கூறினாள். அதோடு அவள் உயிர் பிரிந்தது. தாயும் இன்றித் தகப்பனும் இன்றிச் சித்தப்பாவின் ஆதரவோடு வாழ ஆரம்பித்தனர் சகோதரர் இருவரும். அவர்களுக்கும் குழந்தைகள் இல்லாமையால் அண்ணன் குழந்தைகளைத் தம் கண்மணி போல் பாவித்து வளர்த்து வந்தார் ராமசுவாமி ஜோசியர்.

2 comments:

  1. Hello,
    Glad to see all of Seshadri Swamigal post...I'm just reading thru all.
    Happy new year & happy pongal.

    ReplyDelete
  2. Thank You Sir, Wish you also a belated New Year and Pongal greetings from me. :))))

    ReplyDelete